Tuesday 31 March 2015

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

அவ்வப்பொழுது தமிழ் படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாலும், தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லையா என்று கேட்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் சுஜாதா குரோம்பேட்டையிலுள்ள எம் ஐ டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவர் தொழில்நுட்பம் படித்தது அங்குதான். மதிய உணவுக்குப் பின்னர் மாணவர்கள் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். ‘மாணவர்களுக்கு அவரது அறிவுரை என்ன’ என்று ஒரு மாணவர் கேட்க, ‘இந்தப் பாரதிராஜா, பாக்கியராஜான்னு சினிமா பாத்துக்கிட்டு இருக்காம ஒழுங்கா படிங்க. அது போதும்’ என்றாராம்.

அதுமாதிரி இந்தக் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு இப்போ புதுசு புதுசா இளைஞர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு வழி விட்டால் நானும் தொடர்ந்து தமிழ் சினிமா பார்க்கத் தயார்.

போன வாரம் தற்செயலாக பார்க்க நேர்ந்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இடையே எவ்வித தொய்வும் இன்றி முக்கியமாக பாடலின் குறுக்கீடு இல்லாமல் இறுதி வரை வேகமாக நகர்ந்த திரைக்கதை. டாக்ஸி ஓட்டுநராக நடித்தவரின் இயல்பான நடிப்பு. ஏன், அந்த நகுல்? டிவியில் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், ‘சுண்டெலி மாதிரி இருக்கிறான், இவன் எல்லாம் நடிக்க வந்திருக்கான்’ என்று நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவரை மிகவும் பிடித்து விட்டது. அவரைக் காதலிக்கும் கல்லூரிப் பெண் உட்பட சினிமாத்தனம் இல்லாத இயல்பான முகங்கள். பார்ப்பவர்களை கஷ்டப்படுத்தாத மிகையில்லாத நடிப்பு. இம்மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தமிழ்ப்படம் உருப்படலாம்.

படத்தில் வரும் கல்லூரி முதல்வரைப் பார்த்தவுடன், தனது பொறியியற் கல்லூரி மாணவர்களுடனும், அவர்களது புதிய புதிய ‘கண்டுபிடிப்பு’களுடனும் அடிக்கடி பத்திரிக்கைகளில் பெருமை பொங்க போஸ் கொடுக்கும் தென்மாவட்ட பல்கலைக்கழக தாளாளர் ஒருவர்தாம் நினைவுக்கு வந்தார்...

ரயிலின் கூரையில் விசிறியை பொருத்தி, ரயில் ஓடும் பொழுது சுற்றும் விசிறியிலிருந்து மின்சாரம் தயாரித்து ரயில் விளக்குகளை எரியச் செய்யலாம் என்ற ‘அதி’புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளை எல்லாம் நமது மாணவர்கள் பத்திரிக்கைகளில் நிகழ்த்துகிறார்கள். நோபல் பரிசு கொடுக்கத்தான் ஆளில்லை!

மதுரை
19/03/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....