Friday 12 May 2017

சட்ட விரோதம், நீதிமன்ற அவமதிப்பு, மோசடி...


உத்தர பிரதேச காவல்துறை உதவி ஆய்வாளர் பணி காலியிடத்திற்கான தேர்வில் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர் கலந்து கொள்ள முடியுமா?


தமிழக மாவட்ட நீதிபதி பணியிடத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட முடியுமா?


உதவி ஆய்வாளர், நீதிபதி பதவி என்ன, எந்த ஒரு அரசு பணியிடத்திற்கான தேர்விலும் இந்தியாவின் எந்தப் பகுதியை சேர்ந்தவரும் கலந்து கொள்ளும் உரிமையை அரசியலமைப்பு சட்டம் ஆர்ட்டிகிள் 16(2) வழங்குகிறது.
 

அவ்வாறு என்றால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உத்தரபிரதேச காவலராக பணியமர்த்தப்பட்டால், இந்தி தெரியாமல் அவரால் அங்கு பணியாற்ற இயலுமா?


இயலாது.


பின்னர் இந்த மொழிப் பிரச்னை எவ்வாறு அரசுப்பணிகளில் சமாளிக்கப்படுகிறது?


உதவி ஆய்வாளராக நியமிக்கப்படுவதற்கான கல்வித் தகுதி என்னவோ, ஏதாவது ஒரு இளங்கலை பட்டம்தான். ஆனால் பிற உடற் தகுதிகளோடு ஹிந்தி மொழியில் எழுத பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியும் குறிப்பிடப்படும்.


அதே போல பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் அவரது பதிவை பஞ்சாப் பார் கவுன்ஸிலிருந்து தமிழ்நாடு பார் கவுன்ஸிலுக்கு மாற்றிக் கொண்டால் தமிழக நீதித்துறை பணிக்கு மற்ற தமிழர்களோடு போட்டியிட முடியும்.


ஆனால் ஏன் அவ்வாறு போட்டியிடுவதில்லை?


ஏனெனில் மாவட்ட நீதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுதல் வேண்டும் என்று தமிழ்நாடு மாநில நீதித்துறை பணி (பணியமர்த்தல்) விதிகள் 2007ல் 2ம் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 500, நேர்முகத் தேர்வுக்கு 60.


எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்கள் ஆவணங்கள், சாட்சி விசாரணை மற்றும் தீர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்ப்பு செய்யும் திறமைக்கு வழங்கப்படுகிறது. எனவே, நீதிபதி தேர்வில் தமிழில் தேர்ச்சி என்பது முக்கியத் தகுதி. அந்த தகுதி இல்லை என்றால் ஒருவர் இங்கு நீதிபதியாக பணியாற்ற தகுதி இல்லாதவராக கருதப்படுவார்.


அவ்வாறு இருக்கையில், தமிழில் தேர்ச்சி உண்டு என்று கூறிக்கொண்டு நீதிபதியாக பதவியில் அமர்ந்தவர் பின்னர்எனது தாய் மொழி தமிழ் இல்லை. தமிழில் எனக்கு தேர்ச்சி கிடையாது. எனவே நான் ஆங்கிலத்தில் தீர்ப்புகளை எழுத அனுமதிக்க வேண்டும்என்று கோரினால் அதைமோசடிஎன்ற ஒற்றை வார்த்தையில் கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.


முக்கியமாகதமிழில்தான் தீர்ப்புகள் பகரப்பட வேண்டும்என்று தமிழக சட்டமன்றம் சட்டமியற்றிய பின்னரும்; ‘நீதிமன்றங்கள் நடத்தப்படுவது மக்களுடைய நலனுக்குஎன்ற காரணத்தைக் கூறி தமிழக சட்டத்தை நமது உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்றுக் கொண்ட பின்னரும் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற மோசடி வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?


தமிழில்தான் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நாள் 01/07/14. மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்புக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளது.


கடந்த மூன்றாண்டுகளாக, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பினை சில கீழமை நீதிமன்ற நீதிபதிகள்குப்பைக் காகிதம்என கசக்கி எறிந்து தங்களது தீர்ப்பினை ஆங்கிலத்திலேயே எழுதியது சட்ட விரோதம் மட்டுமல்ல. மிகப் பெரிய நீதிமன்றா அவமதிப்பு. ஆனால் யாருக்கும் அதில் வெட்கமில்லை.


வேலைக்கு சேரும் முன், ‘தமிழிலா, பொளந்து கட்டி விடுவேன்என்று உறுதியளித்து விட்டு நீதிபதியாக பணியேற்ற பின்சாரி, தமிழ் அவ்வளவாக வராதுஎன்று ஆங்கிலத்தில் தீர்ப்பு கூறும் மோசடி மூன்று ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது


உயர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று கேட்டது போய் இப்போது கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழை கோட்டை விட்ட அவமானம்தான் மிச்சம். 



ஆயினும் மீண்டும் சொல்வேன் நடந்து கொண்டிருப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல மிகப் பெரிய மோசடி...

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....