Tuesday 27 September 2016

உலகின் அரிய வகை ஆலயம்!

உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், ஒரே ஆலயத்தை இரண்டாகப் பிரித்து கட்டப்பட்ட வடக்கன்குளம் ஆலயத்தைப் போலவே தமிழகத்தில் உள்ள மற்றொரு ஆலயத்திற்கும் ஒரு பெருமை உண்டு.

ஆனால் உலகப் பெருமைக்காக தனக்கிருக்கும்  தகுதி பற்றிய எவ்வித ஆர்ப்பாட்ட உணர்வுமின்றி எளிமையாக படத்திலிருக்கும் அந்த ஆலயம், தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள புனித யோவான் ஆலயம்.

வடக்கன்குளம் ஆலயத்திற்கு நேர்மாறாக இரண்டு ஆலயங்களைச் சேர்த்து ஒன்றாகக் கட்டப்பட்டுள்ள தனித்துவம்.

அதாவது கத்தோலிக்க, புரட்டஸ்டாண்ட் பிரிவினர் இருவரது ஆலயங்களும் ஒன்றாகக் கட்ட்டப்பட்டு ஆனால் தனித்தனி நேரங்களில் வழிபாடு நடத்தப்பட்டு வருவது.

காரணம், அது கட்டப்பட்ட கோவில் அல்ல கட்டித்தரப்பட்ட கோவில்.

தூத்துக்குடி ஸ்பிக் நகர்!

அது ஒரு உடோபியன் நகரம்.

அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி நகரத்தை சில ஏக்கர் நிலப்பரப்பில் குறுக்கி பொம்மை போல அமைத்தால் எப்படியிருக்கும். அதுதான் ஸ்பிக் நகர். இந்திரா காந்தியோ அல்லது வேறு ஏதோ பெரிய தலைவர், ‘ஜப்பான் மாதிரியிருக்குஎன்றாராம்.

அவ்வப்போது சென்று வருகையில் மிகக் கவர்ச்சிகரமாக இருந்தாலும் பின் தங்க நேரிட்ட சில நாட்களில்ட்ரூமன் ஷோபட நகரத்திலிருப்பதைப் போல உணர்ந்தது வியப்பல்ல. ஆனால் அதெல்லாம் கால் நூற்றாண்டுக்கு முன்பு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்பிக் நகர்கோஸ்ட் டவுன்போலவும் சாலையில் கண்ட ஒன்றிரண்டு நபர்கள்ஜோம்பிக்கள்போலவும் தோன்றியதை காணச்சகிக்காமல் உடனடியாக வெளியேறி விட்டேன்.

அதெல்லாம் முடியாது இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என ஆளாளுக்கு ஒரு வழிப்பாட்டுத் தலம்தான் என்று ஸ்பிக் நிறுவனம் கூறினால் அடித்துப் பிடித்து அங்கு வேலைக்குச் சேர்ந்தவர்களால் மறுக்கவா முடியும்.

எனவே இருவருக்கும் ஒரே கோவில்.

இணையத்தில் தேடினால் புரட்டஸ்டாண்ட் பிரிவினரினரின் ஆதிக்கத்தால் எழுந்த பிரச்னைகளால், ஜெர்மனி நாட்டின் சில இடங்களில் இதே போல இரு பிரிவினரும் ஒன்றாக பகிர்ந்து கொள்ளும்சைமல்டேனியம்என்று அழைக்கப்படும் ஆலயங்கள் இருக்கின்றன.

சைமல்டேனியம் ஆலயங்கள் அவற்றின் தனிச்சிறப்புக்காக சுற்றுலா மையங்களாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டு ஸ்பிக் நகர் ஆலயம் பற்றிய குறிப்பு கூட எங்கும் இல்லை.

ஸ்பிக் நகர் ஆலயத்தும் எனது குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது அண்ணன் மற்றும் தங்கையின் திருமணம் இந்த ஆலயத்தில் நடத்தி வைக்கப்பட்டது.

ஆலயத்தின் சிறப்பு போலவே அண்ணனின் திருமணம் புரட்டஸ்டாண்ட் முறைப்படியும் தங்கையின் திருமணம் கத்தோலிக்க முறையிலும் நடந்ததும் ஒரு தனி குடும்ப டிசைன்!


Saturday 17 September 2016

உலகப் 'புகழ்' பெற்ற கோவில்

நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம்.

“என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க”

கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திருப்தியில் அருகில் வந்த நண்பரிடம் கிண்டலாக கேட்டேன்.

“ஐயா வழியில இப்படியா சொல்லியிருக்கு” என்று அடுத்து கேட்டவுடன் நண்பர், “நோ, நோ…. நாங்கள் ரோமன் காத்தலிக்” முகத்தில் விளையாட்டுத்தனமிக்க பெருமிதம் பொங்க கூறினார்

மனைவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘வா, சொல்கிறேன் என்று அழைத்துப் போன இடம், அருகிலேயே இருந்த மாதா கோவில்.

ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த வடக்கன்குளம் கிறிஸ்தவ கோவில் எனது எதிர்பார்ப்புகளை மீறி பிரமாண்டமாக இருந்தது.

கோவிலுக்குள் நுழைந்து ‘புகழ்’ பெற்ற அந்தச் சுவர் இருந்த அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று கண்கள் தேடிய சில நிமிட நேரத்திற்குள்ளாகவே கிடைத்து விட்டது. வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத வகையில் அதன் பிரதான கதவுக்கு நேராக ‘ஆல்டரை’ மறைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக இரு பெரிய தூண்கள். இரண்டு தூண்களிலும் அதன் நடுப்பகுதி குடையப்பட்டு அதன் வழியாக நேராகப் பார்த்தால் ஆல்டரின் மையத்தில் உள்ள இயேசு படம் முழுவதுமாகத் தெரிந்தது.

ஆல்டரும் வித்தியாசமாக ஆங்கில ‘வி’வடிவில் அந்த நடுத்தூணுக்கு இரண்டு புறமும் விரிந்திருக்க கொஞ்சம் கொஞ்சமாக கோவிலின் வடிவம் புலப்பட்டது.

ஒரே கோவிலை இரண்டாக அல்லது இரண்டு கோவில்களை ஒன்றாக கட்டியிருக்கிறார்கள்.

கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1872.

“வடக்கன்குளத்தில் பெருவாரியாக இருந்தாலும் கீழ்சாதியாக கருதப்பட்ட நாடார்களுடன் கோவிலில் பிள்ளைமார் வகுப்பினர் அமர விரும்பவில்லை. நாடார்களுக்கு கோவிலில் பாடல்களைப் பாடுவதற்கு கூட உரிமை கிடையாது. அதனால் ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக நடுவில் ஒரு சுவற்றுடன் கட்டப்பட்ட கோவில் அந்த விநோதமான வடிவத்திற்காக ‘டவுசர் கோவில்’ என்ற பட்டப்பெயரை பெற்றது”

“சுவருக்கும் உங்க ஃப்ரண்ட் சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”

“நாடார்கள் பெருவாரியாக இருந்ததால் அவர்கள் பகுதி நிரம்பி வழிந்தாலும் காலியாக இருக்கும் பிள்ளைமார் பகுதியில் நுழைய அவர்களுக்கு அனுமதியில்லை. எனவே, போங்கடா நீங்களும் உங்க கிறிஸ்துவும் என்று சொல்லிவிட்டு நாடார்களில் சிலர் திரும்பவும் இந்து மதத்திற்குப் போய் கட்டியதுதான் இப்ப கல்யாணம் நடந்த கோவில்”

“அந்தச் சுவர்?”

“திருச்சபைக்கு அந்தச் சுவர் பெரிய அவமானமாக இருந்தது. ஒவ்வொன்றாக முயன்று 1910ல் பிஷப் உத்தரவில் அந்தச் சுவர் உடைக்கப்பட்டது. சுவர் உடைக்கப்பட்டதை எதிர்த்து பிள்ளைமார்கள் போட்ட கேஸ் கீழ் கோர்ட்டில் அவர்களுக்கு சாதகமானது. ஆனால் அப்பீலிலும் பின்னர் உயர்நீதிமன்றத்திலும் ‘சுவர் உடைக்கப்பட்டது தவறல்ல’ என்று தீர்ப்பு வர பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28

Thursday 15 September 2016

மீண்டும் மீண்டும் சூடு!

‘முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்ட 48 மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த வாரத்தின் ஏதோ ஒரு நாளில் பத்திரிக்கைகளிலும், காட்சி ஊடகங்களிலும் இப்படி ஒரு தலைப்புச் செய்தி சூடு பறந்தது. இரு நாட்களுக்கு முன்னர் சிபிஐ முன்னாள் இயக்குஞர் ஆர்.கே.ராகவன் மற்றும் மஹாராஷ்டிர முன்னாள் டிஜிபி டி.சிவானந்தன் ஆகியோர் இந்த உத்தரவு பற்றி கூட்டாக ‘தி இந்து’வில் கட்டுரை ஒன்று கூட எழுதியிருந்தார்கள்.

ஊடகங்கள் பெரிதாக பரபரத்தாலும், இந்த உத்தரவால் பெரிதும் பயனடைய இருக்கும் வழக்குரைஞர்களிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் இல்லை. உற்சாகமும் இல்லை.

இவ்வாறு ஒரு உத்தரவு கூறப்பட்டுள்ளது என்ற பிரக்னை கூட யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம், ஜெனரல் இன்ஸூரன்ஸ் கவுன்ஸில் எதிர் ஸ்டேட் ஆஃப் ஆந்திர பிரதேசம் (2007 ACJ 2006) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு!

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 158(6) மற்றும் மத்திய அரசு விதி 150 ஆகியவற்றின் அடிப்படையில் ‘மோட்டார் வாகன விபத்தினை புலனாய்வு செய்யும் காவல் நிலைய அதிகாரி விபத்து பற்றிய அனைத்து விபரங்களையும் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயம் மற்றும் காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் விபத்தில் இழப்பீடு பெறத் தகுதியான நபர்கள் வேண்டினால் அவர்களுக்கும் வழங்க வேண்டும்’ என்று 2007ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

வழக்கம் போலவே ‘இந்த உத்தரவானது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு அவை தொடர்ந்து நிறைவேற்றப்படுவது கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வண்ணம் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்’ என்றும் எச்சரிக்கப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகன தீர்ப்பாய விதி 4Aல் இதை விடவும் விரிவான கடமைகள் காவலர்களுக்கு உண்டு.

அவை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏனோ கொண்டு வரப்படவில்லை. முக்கியமாக இந்த விதியின் அடிப்படையில் 2003ம் ஆண்டிலேயே யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி எதிர் ஆர்.வெங்கடேசன் (2003 (1) MLJ 268) என்ற வழக்கில் நமது உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தமிழக அரசின் உள்துறைக்கு ‘விபத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் காவலர்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதும் எடுத்துக் காட்டப்படவில்லை.

அப்படி எடுத்துரைக்கப்பட்டிருந்தால் உச்ச நீதிமன்றம் மீண்டும் இப்படி உத்தரவிடுவது கதைக்காகாது என்று தனது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்.

ஏனெனில் உயர்நீதிமன்ற உத்தரவு கூறப்பட்டு 12 ஆண்டுகளும் உச்ச நீதிமன்ற உத்தரவு கூறப்பட்டு 9 ஆண்டுகளும் கடந்து போனாலும், இன்று வரை நான் அறிந்த வரை ஒரு விபத்தில் கூட விபத்து விபரங்கள் காவலர்களால் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில்லை.

உச்ச நீதிமன்றம் கடந்த வார உத்தரவு மூலம் பழைய வரலாறு தெரியாமல் மீண்டும் விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளது. அதன் மானம் காப்பாற்றப்படுமா அல்லது கப்பலேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘பல்வேறு பிராந்தியங்களிலுள்ள காவல்துறை அதிகாரிகளுடன் பேசியதில் இந்த உத்தரவை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிய அவநம்பிக்கை இருப்பதை உணரமுடிந்தது’ என்று ஆர்.கே.ராகவனும் டி.சிவானந்தனும் தங்களது கட்டுரையில் கூறியிருப்பதை வைத்து முடிவை என்னால் ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது.

அந்த யூகம் அவ்வளவு நம்பிக்கை தருவதாயில்லை……

Saturday 3 September 2016

தேச துரோகி

குற்றச் செயலை தூண்டுவதும் குற்றம் என்று இதுவரை பார்த்தோம். அவ்வாறு என்றால், இங்கிருக்கும் நாம் அனைவரும் குற்றமிழைத்தவர்கள் ஆகிறோம். எவ்வாறு என்று யாராவது கூற முடியுமா?”

பதினைந்து நிமிடங்கள்அபெட்மெண்ட்பற்றி அதுவும் ஆங்கிலத்தில் ஒருவழியாக பேசி முடித்து விட்டதில் திருப்தியாக உணர்ந்தேன். விரிவுரையாளர் வேலு, ஆம் மாவட்ட நீதிபதியாக இருக்கையிலேயே அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பதவியிழந்த அதே வேலுதான், உட்படஅனைவரும் கேள்விக்கு பதில் என்ன என்று என் முகத்தைப் பார்த்தவாறு இருந்ததில் மேலும் பெருமிதமாக இருந்தது.

பயத்தில் அதுவரை சங்கடப்படுத்திக் கொண்டிருந்த கை நடுக்கமெல்லாம் நின்று போய், முகத்தில் சிரிப்பு பொங்க இந்தியாவுடன் அமைதியுறவு கொண்டுள்ள நாட்டின் மீது போர் புரிவதோ அல்லது அழிம்பு செய்வதோ ஐபிசி பிரிவு 125 மற்றும் 126ன் கீழ் குற்றம். நாம் அனைவரும் இலங்கையுடன் போர் அல்லது அங்கு அழிம்பு புரியும் விடுதலை இயக்கங்களுக்கு உதவி செய்து வருகிறோம். என்ன இருந்தாலும் இலங்கை நம்முடன் டெக்னிகலாக அமைதியுறவு கொண்டுள்ள நாடுதானே, நாம் செய்வது குற்றமில்லையா? என்று நான் கூறிய பதிலை அந்த மூன்றாவது வருட வகுப்புத் தோழர்கள் ரசிக்கவே செய்தார்கள்.

-oOo-

ஆனால் நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறி ஏற்றப்பட்டு பலர் தங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன என்பதை அறியாமல் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ரசிக்க மாட்டார்கள் போல.

எனக்கு அந்தப் பெண்மணியை மிகவும் பிடித்து விட்டது. பாகிஸ்தான் ஒன்றும் நரகமல்ல. அங்கிருப்பவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தாம் என்று சொன்னதற்காக மட்டும் அல்ல.

அவ்வாறு சொன்னதை வைத்து அவரைச் சுற்றி எழுப்பப்படும் வெறிக் கூச்சலைக் கண்டு பயப்படாமல், அதுவும் அவர் தேசியக் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர், போங்கடா, எனது கருத்தைக் கூற எனக்கு உரிமையிருக்கு என்ற மன உறுதியால் பிடித்து விட்டது.

பாகிஸ்தான் ஒரு நரகமல்ல என்று சொல்வது எல்லாம் ஐபிசி பிரிவு 124 கூறும் தேச துரோக குற்றம் என்று வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு, தேசிய விவாதமாகவும் மாறுகிறது என்றால் அந்த நாட்டு மக்களின் சட்ட அறிவை(யாமையை) கண்டு மற்றவர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட நகைத்துக் கொண்டிருக்கலாம்.

புஜத்தை திரட்டி முஷ்டியை உயர்த்தி பஞ்ச் வசனம் பேசும் நமது காதாநாயகர்கள் யாருக்கும், இவ்வாறு பேசுவதற்கான தைரியம்; இல்லை பொது அறிவு இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

நாளை ஒருவேளை நீதிபதி, தேச துரோகத்திற்கான முதல்நிலை வழக்கு இருப்பதாகக் கருதி ரம்யாவுக்கு அழைப்பாணையும் அனுப்பினாலும் ஆச்சரியமில்லை.

பொதுவாய் சொன்ன கருத்தை பிரிவு 499 கூறும் அவதூறு என்று குஷ்புவுக்கும் அழைப்பாணை அனுப்பிய சட்ட வல்லுநர்கள் அல்லவா நாம்!


PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....