Saturday 3 September 2016

தேச துரோகி

குற்றச் செயலை தூண்டுவதும் குற்றம் என்று இதுவரை பார்த்தோம். அவ்வாறு என்றால், இங்கிருக்கும் நாம் அனைவரும் குற்றமிழைத்தவர்கள் ஆகிறோம். எவ்வாறு என்று யாராவது கூற முடியுமா?”

பதினைந்து நிமிடங்கள்அபெட்மெண்ட்பற்றி அதுவும் ஆங்கிலத்தில் ஒருவழியாக பேசி முடித்து விட்டதில் திருப்தியாக உணர்ந்தேன். விரிவுரையாளர் வேலு, ஆம் மாவட்ட நீதிபதியாக இருக்கையிலேயே அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பதவியிழந்த அதே வேலுதான், உட்படஅனைவரும் கேள்விக்கு பதில் என்ன என்று என் முகத்தைப் பார்த்தவாறு இருந்ததில் மேலும் பெருமிதமாக இருந்தது.

பயத்தில் அதுவரை சங்கடப்படுத்திக் கொண்டிருந்த கை நடுக்கமெல்லாம் நின்று போய், முகத்தில் சிரிப்பு பொங்க இந்தியாவுடன் அமைதியுறவு கொண்டுள்ள நாட்டின் மீது போர் புரிவதோ அல்லது அழிம்பு செய்வதோ ஐபிசி பிரிவு 125 மற்றும் 126ன் கீழ் குற்றம். நாம் அனைவரும் இலங்கையுடன் போர் அல்லது அங்கு அழிம்பு புரியும் விடுதலை இயக்கங்களுக்கு உதவி செய்து வருகிறோம். என்ன இருந்தாலும் இலங்கை நம்முடன் டெக்னிகலாக அமைதியுறவு கொண்டுள்ள நாடுதானே, நாம் செய்வது குற்றமில்லையா? என்று நான் கூறிய பதிலை அந்த மூன்றாவது வருட வகுப்புத் தோழர்கள் ரசிக்கவே செய்தார்கள்.

-oOo-

ஆனால் நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறி ஏற்றப்பட்டு பலர் தங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன என்பதை அறியாமல் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ரசிக்க மாட்டார்கள் போல.

எனக்கு அந்தப் பெண்மணியை மிகவும் பிடித்து விட்டது. பாகிஸ்தான் ஒன்றும் நரகமல்ல. அங்கிருப்பவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தாம் என்று சொன்னதற்காக மட்டும் அல்ல.

அவ்வாறு சொன்னதை வைத்து அவரைச் சுற்றி எழுப்பப்படும் வெறிக் கூச்சலைக் கண்டு பயப்படாமல், அதுவும் அவர் தேசியக் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர், போங்கடா, எனது கருத்தைக் கூற எனக்கு உரிமையிருக்கு என்ற மன உறுதியால் பிடித்து விட்டது.

பாகிஸ்தான் ஒரு நரகமல்ல என்று சொல்வது எல்லாம் ஐபிசி பிரிவு 124 கூறும் தேச துரோக குற்றம் என்று வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு, தேசிய விவாதமாகவும் மாறுகிறது என்றால் அந்த நாட்டு மக்களின் சட்ட அறிவை(யாமையை) கண்டு மற்றவர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட நகைத்துக் கொண்டிருக்கலாம்.

புஜத்தை திரட்டி முஷ்டியை உயர்த்தி பஞ்ச் வசனம் பேசும் நமது காதாநாயகர்கள் யாருக்கும், இவ்வாறு பேசுவதற்கான தைரியம்; இல்லை பொது அறிவு இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

நாளை ஒருவேளை நீதிபதி, தேச துரோகத்திற்கான முதல்நிலை வழக்கு இருப்பதாகக் கருதி ரம்யாவுக்கு அழைப்பாணையும் அனுப்பினாலும் ஆச்சரியமில்லை.

பொதுவாய் சொன்ன கருத்தை பிரிவு 499 கூறும் அவதூறு என்று குஷ்புவுக்கும் அழைப்பாணை அனுப்பிய சட்ட வல்லுநர்கள் அல்லவா நாம்!


No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....