Sunday, 4 February 2018

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி. ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைகிறது என்ற செய்தியில் திராவிட லெமூரிய பெருமிதங்களைச் சற்றுத் தள்ளி வைத்து தமிழர்கள் கவலைப்பட நிறைய இருக்கிறது.

இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி அதுவும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலேயே தோற்றிருக்கிறது என்பதை பலர் மறந்திருக்கலாம்.

ஆனந்த விகடனின் காலப்பெட்டகத்தை தோண்டினால் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் தேர்தல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயேவோட்போடுவதற்கு பிரஜைகளுக்கு அபேட்சகர்கள் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவருகிறது. என்றாலும் இடைத் தேர்தலில் மொத்த தொகுதியையும் முழுக் குத்தகைக்கு எடுப்பதும் சாத்தியம்தான் என்ற சூத்திரத்தை எந்தக் கணித மேதையோனானப்பட்டவருக்கு போட்டுக் கொடுக்க திருமங்கலம் ஃபார்முலாவிலிருந்து நாம் இன்னமும் விடுபட முடியவில்லை.

-oOo-

சட்டமன்ற தேர்தலை விடுங்கள், பார் கவுன்ஸில் தேர்தலுக்கு ஓட்டுக்கு ஒரு பட்டாயா ட்ரிப் அல்லது 30000 ரூபாய் செலவழிக்கிறார்கள் என்று அட்வகேட் ஜெனரல் கூறிய செய்தியில் கொஞ்சம் அதிர்ந்து, ‘புறநானூற்றுப் பரம்பரைகளின் உயர்வு நவிற்சிக்கும் ஒரு அளவில்லையா?’ என்று நினைத்தேன்.

ஆனால் பார் கவுன்ஸிலுக்கு செல்வதற்கு ஆயிரம் முதல் வாக்குகள் தேவைப்படும் என்கிறார்கள். முப்பதாயிரத்தோடு பெருக்கிப் பார்த்தால் சாத்தியப்படும் போலத் தோன்றியதில் அதிர்ச்சியின் வீரியம் கொஞ்சம் குறைந்தது.

-oOo-

கணிதம்தான் எதை எல்லாம் சாத்தியப்படுத்துகிறது. பிரபஞ்சத்தின் வடிவம் முதல் மலர்களின் இதழ்கள் வரை கணித சூத்திரத்திற்குள் அடக்கி விடலாம் என்று யு டியுப்பில் பார்த்த டாக்குமெண்டரியில் சுவராசியமாக விளக்கினார்கள்.

வளைந்து வளைந்து செல்லும் ஒரு நதியின் உண்மையான நீளத்தை அதன் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையிலான நேர்கோட்டிலான நீளத்தால் வகுத்தால் கிடைக்கும் பொதுவான விடை ஏறக்குறைய 3.1 அதாவது இங்கு எப்படித் தட்டசுவது என்று தெரியாமல் இப்போது நான் தவித்துக் கொண்டிருக்கும்பை’!

வைகை இந்த சூத்திரத்தில் அடங்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. கேட்டால் வைகையை நதி என்று யார் சொன்னது அது ஒரு பெரியநாச்சுரல் ஸ்ட்ராம் வாட்டர் ட்ரயினெஜ்என்கிறான் ஒரு ஆண்டி மதுரையன்.

-oOo-

ஆனால் பார் கவுன்ஸில் தேர்தலில் ஸ்டேக் ஹோல்டர்ஸ் ஒவ்வொருவரும் போட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளை எந்த ஒரு ஐன்ஸ்டைன் சூத்திரத்திற்குள்ளும் அடக்க முடியாது.

அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது. சரி. அது என்ன அரசியல் கட்சியை ஆரம்பித்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூடுதலாக ஒன்று?

கட்சியை ஆரம்பித்தவர் அந்தக் கட்சியில் உறுப்பினராகக் கூடவா இருக்க மாட்டார்; என்று கேள்வி கேட்டால், புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொள்ள இயலாத மட்டு என்று அர்த்தம்.

சம்பந்தப்பட்டவர் உருவாக்கியதை ஒரு கட்சி என்று சொன்னால், கட்சியின் லெட்டர் பேடே நம்பாது.

கட்சியை கலைத்து விட்டு தேர்தலுக்கு மனு போட்டு விடுவாரோ என்ற பயத்தில் மற்ற விதி உருவாகியிருக்கலாம்.

முன்பு தில்லி எய்ம்ஸில் டாக்டர் வேணுகோபால் என்பவர் இயக்குஞராக இருந்தார். தமிழ் தெரிந்திருந்தால் அதில் அவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தைஇட ஒதுக்கீடு’. அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்ற ஆசையில் அமைச்சரான அன்புமணி ராமதாஸ் இயக்குஞர் தகுதிக்கான விதியில் ஒரு மாற்றம் கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றத்தில் வேணுகோபாலுக்காக அருண் ஜெட்லி வைத்த வாதம், ‘இப்படி தனி ஒரு நபரை மட்டும் பாதிக்கும் விதி முறையற்றதுஎன்பதாகும்.

தனி மனித விதி தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பை (2008) 5 SCC 1ல் காணலாம்.

-oOo-

காலையில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கையில்நினைவோ ஒரு பறவைஅமேசான் அலெக்ஸாவிலிருந்து உருகி வழிந்து எழுத்துக்களை மறைத்தது.

சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் ஸ்ரீதேவி எல்லாம் பள்ளி நாட்களில் நம்மிடம் உறவாடி பின் எப்போதோ செத்துப் போய் விட்ட உறவினர்களைப் போல தூரத்து நினைவிலிரு்ப்பதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று பேப்பரை மடித்து வைத்து நினைத்துக் கொண்டிருந்தேன்

மதுரை
04/02/18

Sunday, 17 December 2017

சோத்துக்கு மாள்பவர்கள்....

தமிழ்நாடு போலீஸ் போர்ஸ்’. அரசு முத்திரையுடன் இயங்கும் முகநூல். காவல்துறை பெருமைகளைப் பேச உருவாக்கப்பட்டுள்ள சுவர் என்றாலும், அங்கு எழுதப்படுபவை சமயங்களில்பகீர்என்றிருக்கிறது.


இதை தடுக்க ஒரே வழி காவல் துறை சார்பில் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்கவுண்டர் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். அதற்கு நான் மேலே சொன்ன அமைப்புகள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்போதும் நிலைநாட்டபடும்


சக ஊழியர் கொல்லப்படுகையில் எவருக்கும் எழும் இயல்பான கோபம்தான் இந்த வரிகள் என்றாலும், எந்த சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்படுவதற்காக என்கவுண்டர்தான் தண்டனை என்கிறார்களோ, அதே சட்டத்தில்தான் அந்த வகை தண்டனை அதாவது எக்ஸிகியூஷன்திட்டமிட்ட கொலைக் குற்றம் என்று கூறப்படுகிறது.


காவல்துறைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்விகளாக அடுக்கப்படுகிறது. ஆய்வாளர் பெரியபாண்டிக்கு தமிழகத்தின் அனைத்து ஊடகங்களிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசு மரியாதை குறைவில்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை, கல்வி உதவி என ஒரு அரசால் அளிக்கப்படக்கூடிய உயர்ந்தபட்ச உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இவைகளுக்குப் பின்னரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் காவல்துறை ஊழியர்கள் அறியாத சில அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் திரைப்பட நாயகர்களாக பேசப்படுவதில்லை.


கடந்த பத்தாண்டுகளில் பணி நிமித்தம் இறந்த காவல்துறை ஊழியர்களை விட அதிகமான எண்ணிக்கையில் துப்புரவுத் தொழிலாளிகள் இறந்திருக்கிறார்கள். இன்றும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.


தமிழர்களுக்கு நீர் தரும் அணைக்கட்டுகள் எதுவும் உயிர்ச்சேதமின்றி கட்டப்பட்டதில்லை. அது அனலோ அல்லது புனலோ தொழிலாளர் தொடங்கி பொறியாளர்கள் வரை உயிர்ப்பலி கேட்காமல் எந்த ஒரு மின்சார நிலையமும் எழுப்பப்பட்டதில்லை.


டெங்கு எய்ட்ஸ் எதுவானாலும் சரி, உறவினர்களே ஒதுங்கிச் சென்றாலும், ஒதுங்கிப் போக வழியின்றி அவர்களோடிருக்கும் அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்தான் ஆபத்து இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஆபத்து.


கண்ணுக்குள் திகிலூட்டும் ஆபத்து என்றால் அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து எட்டு மணி நேரம் பயணித்தால் தெரியும்.


தினமும் காலையில் ஃபோன் பண்ணி பிள்ளைங்க ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களான்னு கேப்பாரு. அன்னைக்கு ஃபோன் வரலபெரியபாண்டி மனைவியின் கண்ணீலிருந்த அதே இயலாமைதான்சொத்துக்கூட்டவா போனாவ, சோத்துக்கு போனாங்க என்று நேற்று தொலைக்காட்சியில் கேட்ட நீரோடி கிராம மீனவப் பெண்ணின் கதறலிலும் இருந்தது.சோத்துக்குப் போனவன் இன்னமும் புதைக்கப்படக் கூட இல்லை….

மதுரை
17/12/17

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...