Saturday 23 May 2015

செல்மா (2014)

‘பார்ப்பதற்கு ஏதாவது ஹாலிவுட் படம் சொல்லுங்க, சார்’ என்று இளம் வழக்குரைஞர்கள் என்னை கேட்கும் போது எல்லாம், ‘தி க்ரேட் டிபேட்டர்ஸ்’ என்பதுதான் எனது முதல் பதிலாக இருக்கும்.

பலதடவை பார்த்து விட்டாலும், இன்னமும் அந்த இறுதிக் காட்சியின் பேச்சுப் போட்டியில் டென்ஸில் விட்டேகர் தனது உரையினை முடிக்கும் பொழுது உறைந்து போய் விடுவேன்.

அடுத்த படம் டென்ஸில் வாஷிங்டன்’னின் ‘மால்கம் எக்ஸ்’. இன்றிலிருந்து நேற்றுப் பார்த்த ‘செல்மா’வையும் சேர்த்துக் கொள்வேன். இந்தப் படங்களை பரிந்துரைப்பதற்கு ஏதோ ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் போராட்டத்தின் தார்மீக நெறி காரணமல்ல.

மாறாக, இப்படங்களின் பாத்திரங்கள் தங்களது மேடைப் பேச்சுகளில் எப்படி பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, எளிய வாக்கியங்களாக அவற்றை அழகுற கோர்க்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் காரணம். முக்கியமாக, அப்படி கோர்க்கப்பட்ட வாக்கியங்களை ஏற்ற இறக்கமாக பேசுவதன் மூலம் தம்முன் இருப்பவர்களை அவர்களால் வசியப்படுத்தவும், கிளர்ந்தெழவும் செய்ய முடிகிறது என்பதை தெரிந்து கொள்ளவும்தான்.

மால்கம் எக்ஸும் சரி, மார்ட்டின் லூதர் கிங்’கும் சரி தங்களது மேடைப்பேச்சுகளை தங்களுக்குள்ளாவது ஒரு முறை பேசிப் பார்க்காமல் மேடையில் பேசுவதில்லை என்பது அவர்களது மேடைப் பேச்சுகளை கேட்டால் புரியும். இந்தப் படத்தில் கூட சில காட்சிகளில், எப்படி கிங்’ தனது முக்கியமான பேச்சுகளுக்கு முன்னிரவே, அதற்காக மெனக்கெடுகிறார் என்பது தெரியும்.

சிறிய கல்லானது கவணைச் சுழற்ற சுழற்ற வேகம் பிடிப்பதைப் போல போல சாதாரணமாக இருக்கும் வாக்கியத்தினை மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி தங்களது உரையில் பயன்படுத்துவதன் மூலம் முழுச்சக்தியுடன் அந்த வார்த்தைகளை கூட்டத்தில் அவர்களால் பிரயோகிக்க முடிந்தது.
ரஜினிகாந்த்’தின் பஞ்ச் டயாலாக்’குகளுக்கும் ஏறக்குறைய இதே அடிப்படைதான்.

கலைஞர் கருணாநிதி கூட தனது உரைகளுக்காக தன்னை முன்பாகவே தயார் செய்து கொள்வார் என்று படித்திருக்கிறேன். ஆனால், ஜவகர்லால் நேரு தனது சுதந்திர தின உரையை எவ்வித தயாரிப்பும் இல்லாமல் பேசினார் என்று யாரோ கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேடைப்பேச்சுகளை மட்டுமல்ல நீதிமன்ற வாதுரைகளையும் பேசிப்பார்த்துக் கொள்வதும், தயார் செய்து கொள்வதும் நீதிமன்றத்தில் நீதிபதியை என்பதை விட சக வழக்குரைஞர்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் பொது மக்களையும் கவர மிக்க உதவியாக இருக்கும்.

படங்களைப் பார்க்க இயலாதவர்கள், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் உரைகளை யூ ட்யூபில் ஹெட்ஃபோன் உதவியுடன் கேட்டுப் பார்க்கலாம்...

Tuesday 19 May 2015

மின் அதிர்ச்சியை தரவல்ல சின்ன நிலா

'சடக் சாந்தினி'. அருணாவை பார்க்கும் போதெல்லாம் தனக்கு இந்த வார்த்தைகளே ஞாபகத்துக்கு வந்ததாக மும்பை கேஇஎம் மருத்துவமனையில் (King Edward VII Memorial Hospital) அவருடன் பணியாற்றிய மூத்த செவிலி துர்கா மேத்தா குறிப்பிடுகிறார். 'தனது கிரகணங்களால் மின் அதிர்ச்சியை தரவல்ல சிறிய நிலா என்பதுதான்' குஜராத்தியில் அதன் அர்த்தம்.

கொங்கன் பிரதேசத்தைச் சார்ந்தவர் அருணா ஷன்பாக். கொடுமையான அந்த சம்பவம் நிகழ்ந்த போது 25 வயது நிரம்பிய அழகிய பெண். கேஇஎம் மருத்துவமனையில் அவரது பிரபலத்துக்கு அழகு மற்றும் திறமை மட்டுமன்றி விதிகளை கடைபிடிப்பதில் அவர் காட்டிய உறுதியும் எதையும் துணிச்சலாக எதிர் கொள்ளும் சுபாவமுமே காரணமாக இருந்தது.

படபடப்பாக அருணா பேசும் வார்த்தைகள் சிலறால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய சுந்தீப் சர்தேசாயை கவர்ந்ததில் அதிக ஆச்சர்யம் இல்லை. அருணா-சுந்தீப் காதல் அந்த மருத்துவமனை முழுவதும் அறியப்பட்டு, 'அருணாவுக்கு என்ன கவலை? அதிஷ்டசாலி அவள்' என்றுதான் அவளுடன் பணியாற்றிய அனைத்து செவிலிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர்.


அருணா பணியாற்றி வந்தது 'நாய்கள் அறுவை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவி'ல். சில நாட்களாக அடிக்கடி நாய்களுக்கான இறைச்சி காணாமல் போய் வந்தது. அருணாவின் சந்தேகம் அந்தப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிய சோகன்லால் பாரத வால்மீகி மீதுதான்.

காணாமல் போன நாய் உணவுகளைப் பற்றி கேட்டதற்கு, 'சிஸ்டர், எப்படியும் மருத்துவர்கள் கையால் சாகப் போகிற நாய்களைப் பற்றி ஏன் எப்போதும் கவலைப்படுகிறீர்கள். அவற்றிற்கு வலித்தால் என்ன? பட்டினி கிடந்தால் என்ன?' என்று திமிராக பதிலளித்தான். அதற்காக அருணா, 'மறு முறை இவ்வாறு நடந்தால், அவன் வேலை உடனடியாக போய் விடும்' என்று எச்சரித்தாள்.

'அவன் ரொம்ப முரடன். நான் அவனை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால், அவனைப்பற்றி கண்டிப்பாக முறையிடப் போகிறேன்' அருணா சோகன்லலைப் பற்றி தனது தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருக்க அங்கே அவனோ, ' அருணாவை மானபங்கப் படுத்தி பழி தீர்க்கப் போகிறேன்' என்று கறுவிக்கொண்டு இருந்தான்.

அருணாவின் தோழிகள் பயந்த மாதிரியே ஒரு நாள் நடந்தது. அருணா இரவுப் பணியில் இருக்கும் போது ஒரு தனியறையில் சோகன்லால் அருணாவை பலாத்காரப்படுத்திவிட்டான். அருணாவின் வாழ்க்கையையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்த அந்த சம்பவம் நடைபெற்றது நவம்பர் மாதம் 1973ம் ஆண்டு.

ஆனால் நடந்தது என்ன என்று விவரிக்கும் சக்தி அருணாவிடம் இல்லை. அருணா கத்தி யாரையும் உதவிக்கு கூப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக, சோகன்லால் நாய்களைக் கட்டிப்போடும் சங்கிலியால் அவளது கழுத்தை நெரித்து இருந்ததில் அவளது மூளைக்குப் போகும் ஆக்ஸிஜன் தட்டுப்பட்டு மூளையின் பல பாகங்கள் செயலிழந்து அருணா ஏறக்குறைய கோமா நிலையிலிருந்தார். பேசும் திறன் முற்றிலும் இல்லை.

முதலில் மறைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம், 'தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டி' மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு அடைந்தது. அருணா தாக்குதலுக்காக 1973ம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற் வேலை நிறுத்தம்தான் இந்தியாவின் செவிலியர்கள் நடத்திய முதல் வேலை நிறுத்தம். விஷயம் முதல்வர் வரை சென்று சோகன்லால் கைது செய்யப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்காக அல்லாமல் தாக்குதல் மற்றும் வன்திருட்டு ஆகிய குற்றங்களுக்காகத்தான் 7 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டான்.

ஏனெனில் அருணாவோ எந்தவித உணர்வும் செயல் திறனும் இன்றி நீதிமன்றம் செல்லவோ அல்லது சாட்சி எதுவும் சொல்வதற்கான நிலையிலோ இல்லை. தொடர்ந்த சிகிச்சைகளினாலும், மழிக்கப்பட்ட தலையினாலும் 'சின்ன நிலா' என்று வர்ணிக்கப்பட்ட அருணா கசக்கி எறியப்பட்ட குப்பைக் காகிதம் போல உருக்குலைந்து போனார்.

அருணா தாக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்து விட்டன. இப்போதும் மும்பை கேஇஎம் மருத்துவமனைக்கு நீங்கள் சென்றால் அதே வார்டில் அருணாவின் கதறல்களை நீங்கள் கேட்கலாம்.

அருணா இன்றும் உயிரோடு இருக்கிறார். எந்தவித உணர்வும் இன்றி பற்கள் உட்பட அவயவங்களில் எவ்வித பயனுமின்றி! அவருக்கு கண்பார்வை கிடையாது. நினைவு கிடையாது. பேச முடியாது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த கொடூரம் அவர் மனதின் ஆழத்திலிருந்து சகிக்க முடியாத அலறல்களாகவும் கதறல்களாவும் சில சமயங்களில் இதயத்தை சில்லிட வைக்கும் சிரிப்பாகவும் வெளிவருகிறது. அவர் மனதின் ஆளத்தில் உணர்வுகள் மிஞ்சி இருக்கின்றனவா? இல்லை ஆழ் மௌனம்தானா? என்பது யாருக்கும் தெரியாது.

அருணாவின் கணவனாக வேண்டிய சுந்தீப் சர்தேசாய் அருணாவுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்து நம்பிக்கை இழந்த நிலையில் இன்று வேறு எங்கோ மனைவி மக்களுடன் இருக்கிறார். சோகன்லால் தண்டனைக் காலம் முடித்து தில்லியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.

அருணாவின் உறவினர்களும் நண்பிகளும் கொஞ்சங் கொஞ்சமாக கரைந்து போய் இன்று அருணாவின் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் மும்பை கேஇஎம் மருத்துவமனையில் அடுத்தடுத்து வேலைக்கு வந்து சேரும் மருத்துவர்களும், செவிலிகளும், பணியாளர்களும்தான்.

அவர்கள்தாம் இன்று அருணாவை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். மும்பை கேஇஎம் மருத்துவமனையில் பயாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் அருணா ஒரு காவல் தெய்வம் போல. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக அருணா ஷன்பாக் இந்த 53 வயதில், தாய் வயிற்றில் இருக்கும் கருவினைப் போல சுருங்கி இன்றும் மும்பை கேஇஎம் மருத்துவமனை வார்டில் படுத்திருக்கிறார்....

அருணாவுக்கு வேண்டியது வாழ்வா? இல்லை நற்கொலையா? என்பது மும்பையில் சிலசமயம் எழுந்து அடங்கும் ஒரு கேள்வி.

(இணைய குழுமத்திற்காக இக்கட்டுரை எழுதப்பட்ட 12 ஆண்டுகள் கழித்து அருணா நேற்று இயற்கை மரணம் எய்தியுள்ளார்)

Compliments to:-
Aruna's Story: The true account of a rape and its aftermath by Pinki Virani; Viking Penguin India, 1998

Monday 18 May 2015

வீலாத் எலா'ஆம் (எகிப்து)


பாக்கிஸ்தான் உளவாளிகளை இஸ்லாமாபாத்திற்கே சென்று பந்தாடி விட்டு வரும் விஜயகாந்த் படம்தான். 

எகிப்திலிருந்து இஸ்ரயீலுக்குள் கடத்தப்பட்ட எகிப்திய பெண்ணையும் அவளது குழந்தைகளையும் டெல் அவிவ்’விற்கே சென்று சண்டையிட்டு மீட்டு வருகிறார் எகிப்திய உளவாளி முஸ்தஃபா. அந்த முயற்சியில் மொசாத் கையில் பிடிபட்ட முஸ்தஃபாவை எகிப்திய உளவாளிகள் டெல் அவிவ் வீதிகளில் ஆர்பிஜி முதற்கொண்டு நவீன ஆயுதங்களால் தாக்கி மீட்கும் நம்ப முடியாத சண்டைக் காட்சி கூட உண்டு.

ஆனாலும், நமது விஜயகாந்த் அர்ஜுன் இன்ன பிற சூப்பர் ஹீரோக்கள் படத்திலிருக்கும் அபத்தம், பள்ளிக்காலத்திலிருந்து நாம் கற்ற அறிவியலை கேலிக்கூத்தாக்கும் காட்சியமைப்புகள், கிளைமாக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலும் திணிக்கப்படும் டூயட் என்று ஏதுமின்றி பரபரப்பாக ஹாலிவுட் த்ரில்லர் போலவே நகர்கிறது.




சாகசப்படமாக இருப்பினும், இஸ்ரயீல் பாலஸ்தீனப் பிரச்னை, பாலஸ்தீனர்கள் ஆழ்மனதில் எகிப்தியர்களை சந்தேகித்தாலும், எகிப்தியர்களுக்கு பாலஸ்தீனத்தின் மீதான அக்கறை, இஸ்ரயீலர்கள் என்னதான் தங்களை நாகரீகமடைந்த, லஞ்சலாவண்யம் இல்லாத இனவேற்றுமை பாராட்டாத சமுதாயம் என்று சொல்லிக் கொண்டாலும் அப்படியல்ல என்ற கிண்டல் என்று திரைக்கதையோடு பயணிக்கும் அரசியல் நெடி என்று வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது Welad ela am (Cousins or Escaping Tel Aviv) என்ற இந்த எகிப்திய படம்.

உலகின் எந்த மூலைக்கும் சென்று சாகசம் புரியும் அமெரிக்க இஸ்ரயீல் உளவாளிகளை ஹாலிவுட் படங்களில் பார்த்து, ‘இவனுங்கதான் பெரிய கொம்பனுங்களா?’ என்ற ஆதங்கம் இருப்பவர்களுக்கு இந்தப் படம் பெரிய ஆறுதலாக இருக்கும்…

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....