Saturday 29 October 2016

தலாக்?

நான் ஒரு வழக்குரைஞராவேன்என்பதை அறிந்திராத நேரம் அது. அப்பாவின் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது அந்தப் புத்தகம்.

மேரேஜ் அண்ட் மாரல்ஸ்என்ற தலைப்பை விடபெட்ரண்ட் ரஸ்ஸல்என்ற பெயர் என்னை வாசிக்க வைத்தது.

புத்தகத்தில் படித்த ஒரு செய்தி பல வருடங்கள் கழித்து வழக்குரைஞரான பின்னர் நினைவுக்கு வந்தது.

அதாவதுஇங்கிலாந்தில் மனநோய், உடலுறவுக்கு தகுதியின்மை, வேற்று நபருடனான உடலுறவு போன்ற கடினமான காரணங்களுக்காக மட்டுமே கிறிஸ்தவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுவதால், திருமண பந்தத்திலிருந்து விடுபட விரும்பும் தம்பதிகள் மேற்கண்ட காரணங்களை பொய்யாக நீதிமன்றத்தில் கூறி விவாகரத்து பெற வேண்டிய நிலையில் இருப்பதாககூறும் ரஸ்ஸல்மதகட்டுப்பாடுகள் நேர்மையுடன் நடக்க விரும்புவர்களைக் கூட எப்படி பொய்யர்களாக மாற்றுகிறதுஎன்று குற்றம் சாட்டியிருந்தார்.

நான் வழக்குரைஞராக பணியேற்ற காலகட்டத்தில் மேலை நாடுகளில்திருமண பந்தத்தை முறிக்க விரும்பும் நபர் காரணம் ஏதும் கூறாமலேயே விவாகரத்து பெற உரிமை அளித்துசட்டங்கள் இயற்றப்பட்டு விட்டது என்றாலும், இங்கு கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை பெட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய நிலை நிலவி வந்தது.

இந்து திருமண சட்டத்தில் தம்பதிகள் இருவரும் இசைந்தால் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் (Divorce by mutual consent) உரிமை சட்டமாறுதல் மூலம் சேர்க்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவ சட்டத்தில் இல்லை. கிறிஸ்தவ மதத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் கூடசின்ன மெளனத்துடன் மேற்கண்ட பொய்யான காரணங்களைக் கூறி விவாகரத்து பெற்று வந்தது எனக்கு ரஸ்ஸலை நினைவுபடுத்தியது.

ரஸ்ஸல் கூறியது போல இங்கும் சிலர், ‘மனநிலை பிறழ்ந்தவள்’ ‘உடலுறவுக்கு தகுதியில்லாதவன்என்ற நீதிமன்ற ஆணை மூலம் கிடைத்த பட்டங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் ஆனால் வாழ்நாட்கள் முழுவதும் சுமந்து திரிய வேண்டியிருந்தது.

பலத்த எதிர்ப்புகள், விவாதங்களைத் தாண்டி கிறிஸ்தவ சட்டத்திலும் தற்போது இருவரும் இசைந்து விவாகரத்து பெற்றுக் கொள்வது சாத்தியமாகி உள்ளது.

ஆயினும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் நீதிமன்ற தாழ்வாரங்களில் தங்களின் இளமையையும் தாம்பத்ய வாழ்க்கையையும் தொலைக்க நேரிடுகிறது. ஏதாவது காரணத்தால் முப்பது வயதில் பிரிய நேரிடும் தம்பதிகளின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று விவாகரத்து பெற்று அடுத்த திருமணத்தைப் பற்றி சிந்திப்பதற்குள் குறைந்தது ஐம்பது வயது பூர்த்தியடைந்து விடுகிறது.

எனவேதிருமண பந்தம் எவ்விதத்திலும் சேர்க்கவியலாத வண்ணம் முறிந்து போதல்’ (irretrievably broken down) என்பதையும் விவாக ரத்திற்கு காரணமாக சேர்ப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை ஓரிரு தடவை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தற்பொழுது உள்ள நிலையில் விவாகரத்து பெறும் வரை காத்திருக்க இயலாதவர்கள் தங்கள் விரும்பிய நபரோடு திருமணமில்லா வாழ்க்கை (Long term relationship) வாழும் முறைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட முறையால் பிற்காலத்தில் எழும் சட்டச்சிக்கல்கள் பலரையும் பாதிக்கும் நிலை வருகையில் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக் கோரும் சேர்க்கவியலா வண்ணம் முறிந்து போதலும் விவாகரத்திற்கான காரணமாக சேர்க்கப்படும் நிலை உருவாகும்.

சரி, அப்படிப்பட்ட சட்ட மாறுதலுக்குப் பின்னர், சட்டத்தின் பயணத்தில் அடுத்த அடியாக எது இருக்க முடியும்?

வேறு என்ன, திருமண வாழ்க்கை என்பதே தம்பதிகளுக்கிடையேயான மன எழுச்சியைப் பொறுத்தது. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவருக்கு மற்றவர் மீதான ஒவ்வாமையை, நீதிமன்ற ஆணையா நீக்கப் போகிறது. எனவே, பிரிந்து செல்ல விரும்பும் நபர் மற்ற அனைத்து தனிநபர் சார்ந்த ஒப்பந்தங்களைப் ( Contract of personal service) போல திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளலாம் என்ற சட்ட மாற்றம்தான்.

அதாவது விவாகரத்து என்பது, வேண்டியவுடன் எவ்விதமாக காரணமும் கேட்காமல் நீதிமன்றம் அளித்து விடுவது.

நடைமுறைக்கு ஏற்றது, முற்போக்கானது (practical and progressive) என்ற காரணங்கள் கூறப்பட்டு அடுத்த இருபது ஆண்டுகளில் இது நிகழலாம்.

இப்போது?


ஒருவேளை பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், ‘விவாகரத்திற்கு இஸ்லாமியர்களின்தலாக்போன்ற எளிதான சிக்கலில்லாத நடைமுறைதான் முற்போக்கானதுஎன்று அனைத்து மதத்தினருக்கும் பொதுவான வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சாத்தியப்படலாம்.

Friday 28 October 2016

சிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 2

பதினைந்து ஆண்டுகள் இருக்கும். வலைக்குழும விவாதம் ஒன்றில் குறுக்கிட்ட நண்பர் ஒருவர், ‘மைனாரிட்டிகளுக்குத்தான் நம் நாட்டில் அதிக உரிமைகள் அளிக்கப்படுகின்றனஎன்றார்.


இப்படித்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தவர் யாரைப் பார்த்தாலும்சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்று. கரூர்-திண்டுக்கல் அகல ரயில்பாதையை செயலாக்கு. சேலத்தில் உருக்காலை உருவாக்குஎன்பார்கள்.


இந்துத்வா நண்பர்களும் தங்கள் பங்குக்குஅணு ஆயுத சோதனை, அயோத்தியில் ராமர் கோவில் என்பதோடு சிறுபான்மையினர் அப்பீஸ்மெண்டு என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள்


நான் அந்த நண்பரிடம், ‘மைனாரிட்டிகளுக்கு இந்தியாவில் அப்படி என்ன அதிகப்படியான உரிமைகள் அளிக்கப்படுகின்றன என்று சொல்ல முடியுமா?’ என்றேன்.


உடனடியாக அவர், ‘மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். நான் இதைப் பற்றி படித்து விட்டு வந்து சொல்கிறேன்என்றதோடு சரி, பின்னர் அது பற்றி பேசவில்லை.


ஆனால் சில வருடங்கள் காத்திருந்தால், நண்பருக்கு ஒரு பாயிண்ட் கிடைத்திருக்கும். 2005ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆர்ட்டிகிள் 15(5)!


இந்த ஆர்ட்டிகிளானது, அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் கூட மாணவர் சேர்க்கையில் சமூக-கல்வி நிலையில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசு சட்டமியற்றலாம் என்று கூறுகிறது.


நண்பர் குற்றம் சாட்டியபடி இந்த ஆர்ட்டிகிளில் சிறுபான்மை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது,


அவை அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாக இருப்பினும் விலக்கு உண்டு.

ஆகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்த முடியாது.


-oOo-


2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் (Right of Children to Free and Compulsory Education Act’2009) இயற்றப்பட்ட பொழுது, தனியார் பள்ளி நிறுவனங்கள் அதிகம் அஞ்சியது, மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற பிரிவு 12(1)(c) என்று பார்த்தோம்.


அந்த பிரிவானது செல்லும் என்று Society for Un-aided Private Schools of Rajasthan Vs Union of India (2012 (3) MLJ 993 SC) வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையும் அறிவோம்.


அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிகிள் 15(5) செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் பிரிவும் செல்லாததாக மாறிவிடும் என்பதால் ஆர்ட்டிகிள் 15(5) செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை உச்ச நீதிமன்றத்தால் பரமத்தி (Pramati Educational & Cultural Trust Vs Union of India (2014) 8 SCC 1) என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.


அரசியலமைப்பு சட்டப்பிரிவு சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு இந்த வழக்கினை விசாரித்து ஆர்ட்டிகிள் 15(5) செல்லும் என்று தீர்ப்பு கூறியது.


ஆனால், சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை அவை, அரசு உதவி பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி, 2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் செல்லாது என்று ஒரேடியாக அறிவித்து விட்டது. முதலில் கூறப்பட்ட 2012ம் ஆண்டு வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் செல்லாது என்று கூறியது, தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்டது என்று முன்பு கூறியிருந்தேன்.


மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு 12(1)(c) சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை ஆர்ட்டிகிள் 15(5)படி செல்லாது என்பது புரிந்து கொள்ளக் கூடியது.


சிறுபான்மை நிறுவனங்களுக்கு கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது அடிப்படை உரிமையாக ஆர்ட்டிகிள் 30(1)படி ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், சிறுபான்மை கல்வி நிர்வாகத்தில் தலையிடும் வண்ணம் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள மற்ற சில பிரிவுகளும் சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்து செல்லாது என்று கூறுவதில் கூட பிரச்னை இல்லை.


வழக்கில், சிறுபான்மை நிறுவனங்களுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞரும் எனது நண்பருமாகிய அஜ்மல்கான் தாக்கல் செய்த எழுத்துபூர்வமான வாதவுரையில் கூட கல்வி உரிமை சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகள் மட்டுமே ஆர்ட்டிகிள் 30(1) மற்றும் 15(5)க்கு விரோதமானவை என்று குறிப்பிடப்படுகிறது. அனைத்து தரப்பும் தாக்கல் செய்த வாதவுரைகள் தீர்ப்போடு இணைக்கப்பட்டுள்ளது.


சட்டம் முழுமையும் செல்லாது என்பது வாதவுரையில் வேண்டப்படவில்லை.


ஆனால், உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பிரிவு சட்டம் மொத்தமும் சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்து செல்லாது என்று எந்த எந்த பிரிவுகள் செல்லாது என்பதைப் பற்றிய எவ்வித விவாதமும் இல்லாமல் தீர்ப்புக் கூறியது பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.


கல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் தகுதி பற்றி கல்வி உரிமை சட்டம் விதிக்கும் கட்டுப்பாடுகள் எவ்விதம் ஆர்ட்டிகிள் 30(1) அளிக்கும் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பது கேள்விக்குறி.



அவ்வகை கேள்விக்குறிகள் உச்ச நீதிமன்றத்தின் முன் விரைவில் தோன்றும்; மீண்டும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யலாம்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....