Sunday 16 October 2016

மாநில முதலமைச்சரின் தகுதிக்குறைவு...

r
நீங்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால், வேற்று நாட்டவர் அல்லது பதினெட்டு வயது கூட நிரம்பாத மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர் ஒருவரை மாநில முதல்வராக பெரும்பான்மை கட்சியினர் தேர்ந்தெடுத்தால், ஆளுநர் அவரை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமா?’

ஆளுஞருக்கு வேறு வழியில்லை. ஒருவர் முதல்வராக பதவி வகுக்க தகுதி உள்ளவரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இல்லை. சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியே அப்படிப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய இயலும்

மேற்கண்ட கேள்வியை கேட்டது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு. பதில் கூறியது, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர்களில் ஒருவர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மிக முக்கியமான வழக்கு அது..

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2001ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், ஜெயலலிதா அந்த தேர்தலில் போட்டியிட இயலவில்லை. இரு குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று அவருக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டிருந்ததால், அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

எனினும், அதிமுக சட்டமன்ற கட்சி அவரையே முதல்வராக தேர்ந்தெடுத்தது. முதலமைச்சராக தேர்ந்து எடுக்கப்படும் நாளில் எம் எல் ஏவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் போதுமானது.

ஆளுஞரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட ஜெயலலிதாவிற்குள்ள தகுதிக்குறைவை மனதில் கொள்ளாமலும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமலும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு முதல்வராக பதவி வகிக்க தகுதி இல்லை என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு (writ of quo warranto) உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட பொழுதுதான் மேற்கண்ட பதில் அளிக்கப்பட்டது.

அரசியல் அமைப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்திலும், முதலமைச்சருக்கான தகுதி/ தகுதியிழப்பு என்னவென்று கூறப்படவில்லை. மந்திரியாக இருப்பவர் ஆறு மாத காலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் பதவியிழப்பார் என்றுதான் உள்ளது.

இதன் அடிப்படையில்தான், பதினெட்டு வயது நிரம்பாதவர் கூட முதல் மந்திரியாக பணியாற்ற இயலும் என்று ஜெயலலிதாவின் வழக்குரைஞரால் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது. நிகழப்போகும் அனைத்துபிரச்னைகளையும் எதிர்நோக்கி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட முடியாதுஎன்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றாலும் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் அன்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு தேவையான தகுதி இருக்க வேண்டும்/ தகுதியிழப்பு ஏதும் இருத்தல் கூடாது என்று அரசியலமைப்பு சட்ட பிரிவினை புரிந்து கொள்ள வேண்டும்என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் காரணமாகத்தான் ஜெயலலிதா பதவி விலகி .பன்னீர் செல்வம் முதன்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்..

ஒருவேளை மாநில முதல்வர் அல்லது நாட்டின் பிரதமர் மற்றவர்களுடன் பேச்சு, எழுத்து அல்லது செய்கை மூலமாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் நிலையில் இல்லை என்றால் அதன் காரணமாக அவர் பதவி வகிக்க தகுதியில்லாதவர் என்று கூறப்பட முடியுமா?

சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கான தகுதியிழப்புகள் (Disqualifications) என்னவென்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. அவற்றில் ஒன்று அவர் சிறந்த மனநிலையில் இல்லாமல் (unsound mind) மற்றும் அவ்வாறாக நீதிமன்றத்தால் விளம்புகை செய்யப்படுவது என்று உள்ளது.

பொதுவாகசிறந்த மனநிலையில் இல்லை என்று நீதிமன்றத்தால் விளம்புகை செய்யப்படுவதுஎன்பது இந்திய லூனசி சட்டத்தில் உயர்நீதிமன்றத்தாலோ அல்லது மாவட்ட நீதிமன்றத்தாலோ அறிவிக்கப்படுவதைத்தான் குறிக்கும். ஆனால், அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்படும்அன் சவுண்ட் மைண்ட்என்பது மனநிலை பிறழ்ந்த நிலையை மட்டுமல்லாமல் மற்றவர்களோடு எவ்வகையிலாவது கருத்துப் பரிமாற்றம் செய்ய இயலாத நிலையையும் உள்ளடக்கியதாகும் என்று நீதிமன்றங்கள் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, அவசரமான சூழலில் கருத்துப்பரிமாற்ற திறமையை இழந்தவரின் தகுதியிழப்பை ஆராயும் நீதிமன்றமே அவ்வாறு விளம்புகை செய்து அவர் பதவி வகுக்க தகுதி உள்ளவரா இல்லையா என்று நீதிப்பேராணை மனுவில் தீர்மானிக்க முடியுமா?

அவ்வாறான நிலையில், மாநில ஆளுநரே தலையிட்டு நடவடிக்கை எடுப்பதும் சாத்தியம்தான்


"The Constitution prevails over the will of the people as expressed through the majority party. The will of the people as expressed through the majority party prevails only if it is in accord with the Constitution. The Governor is a functionary under the Constitution and is sworn to preserve, protect and defend the Constitution and the laws. The Governor cannot, in the exercise of his discretion or otherwise, do anything that is contrary to the Constitution and the laws"
பி.ஆர்.கபூர் எதிர் தமிழக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம்

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....