Showing posts with label Exploitation. Show all posts
Showing posts with label Exploitation. Show all posts

Friday, 11 September 2015

தி ட்ரூ காஸ்ட் 2015

கிறிஸ்துமஸ் புதுவருடம் என்று இரு பண்டிகைகள் தொடர்ந்து வந்தாலும் புதுத் துணி என்னவோ பள்ளிப்பிராயம் முடியும் வரை ஒன்றுதான். ஏதோ ஒன்றிரண்டு தடவை புதுவருடத்திற்கு என்று தனியாக மேலும் ஒரு சட்டை கிடைத்திருக்கலாம்.

இப்போது சட்டை வேண்டுமென்று வீட்டில் கேட்டால், பையில் குறைந்தது நாலு சட்டை கூடவே இரண்டு டி-சர்டுகளும் இருக்கிறது. மூன்று வாங்கினால் இரண்டு இலவசமாம்.

இவ்வாறு புதிய புதிய டிசைன்களை மேலும் மேலும் குறைந்த விலைக்கு வேகவேகமாக விற்பதன் வணிக உத்தியை ‘பாஸ்ட் பேஷன்’ என்று அழைக்கிறார்கள். ஏறக்குறைய கடந்த இருபது ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் இப்பொருளாதாரத்தின் பின்னணியில் இருக்கும் வேதனைகளை பல்வேறு ஊடகவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இணைந்து ‘ட்ரூ காஸ்ட்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கியிருக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் ‘ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது, மாண்டியில் கூலி கேட்டுப் போராடி மாண்ட கட்டிடத் தொழிலாளர்கள்தாம்’ என்று நான் கூறிய அதே கருத்துதான்.

தேவைக்கு ஒரு சட்டை வாங்கிய நாம் இன்று நான்கு சட்டை வாங்குவதற்குக் காரணம், வசதி கூடியுள்ளது என்பதை விட விலை குறைந்துள்ளது என்பதுதான் உண்மை என்கிறது படம்.

‘நீங்கள் அணியும் உடைகளில் எங்களது ரத்தம் இருக்கிறது’ என்று பங்களா தேச பெண் தொழிலாளி கூறுவது இதைப் படிக்கும் உங்களுக்கு வெற்றுக் கோஷமாகக் தோன்றாலாம். ஆனால் இப்படத்தைப் பார்க்கும் எவரையும் நாம் அணியும் நவீன ஆடைகள்தாம் இந்திய விவசாயிகளின் தற்கொலைகளிலிருந்து, பருத்தி விவசாயத்தை ஏதோ தொழிற்சாலை உற்பத்தி போல பூச்சிக் கொல்லிகளாலும், ரசாயண உரங்களாலும் மாற்றுவதன் விளைவாக அமெரிக்க விவசாயிக்கு ஏற்ப்பட்ட புற்று நோய் வரை காரணம் என்பதை எவ்வித கேள்வியும் கேட்க முடியாமல் நம்ப வைக்கிறார் இயக்குஞர்.

என் ஜி ஓக்களிடமும், வரையற்ற கார்ப்பரேட் எதிர்ப்பாளர்களிடமும் இதுதான் பிரச்னை. அவர்களது வாதத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று பட்டால் கூட அவர்கள் பேசி முடிக்கும் வரை தலையாட்டுவதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது.

அதுவும் இப்படத்தில் தோன்றும் நம் வந்தனா ஷிவா?

தேர்ந்த நடனக் கலைஞரைப் போல பேசும் கருத்திற்கு இசைந்து அவரது கண்களும் கைகளும் அபிநயம் பிடிக்கும் அழகு அவரது வாதத்திற்கு பலமடங்கு பலம் கொடுக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் ஆங்கில வார்த்தைகளும் வாக்கியங்களில் அவற்றை பொருத்தமாக அவர் கோர்ப்பதும் அழகுதான்.

எவ்வளவு முயன்றும், படத்தைப் பற்றிய எனது இந்த அறிமுகம் வறட்டுத்தனமாகவே செல்கிறது. ஆனால், படம் அப்படியல்ல. ஏறக்குறைய ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் பார்க்கும் அதே சுவராசியத்துடன் பார்க்கும்படி காட்சிகளும், இசையும், ஒளிப்பதிவும் அப்புறம் ஏதோ சொல்வார்களே ‘மேக்கிங்’ அதுவும் இருக்கிறது.

‘அமெரிக்காவில் எதையும் விமர்சிக்கலாம். ஆனால் முதலாளித்துவத்தை முடியாது’ என்று மார்க்ஸீய பொருளாதாரவாதியான ரிச்சர்ட் உல்ஃப் படத்தில் கூறினாலும், அமெரிக்க சந்தைப் பொருளாதாரம் வங்க தேச தொழிலாளர்களையும் இந்திய விவசாயிகளையும் சுரண்டுவதை விமர்சிக்கும் படம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு பார்க்கக் கூட இயலுவதில்லை.

Monday, 7 September 2015

அரபு மனிதாபிமானம்?

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னர் அதுவும் செய்தித்தாளின் ஏதோ ஒரு மூலையில் படித்தது. சிறிய சம்பவம்தான், ஆனாலும் இரு நாட்களாக உலகின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் படம் அதை மீண்டும் நினைவூட்டியது.

அரபு நாடு ஒன்றில் வேலை பார்த்து வந்த கேரள வாலிபர் திருமணத்திற்காக இந்தியா வந்திருந்தார். திருமணமாகி, விடுமுறையும் முடிந்து வேலைக்குத் திரும்ப வேண்டும். அப்போது இன்று போல இணையும் கிடையாது. தொலைபேசியும் அதீத கட்டணம்.

விமானம் ஏறினால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு திரும்ப முடியாது.

வழியனுப்ப வந்த மனைவிக்கும் துயரம். தாங்கவொண்ணா மன எழுச்சியில் இருவரும் நிற்பது திருவனந்தபுரம் பேருந்து நிலையம் என்றும் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டனர். இவர்களது செயலின் வேதனை புரியாத மற்ற பயணிகள் காவலரிடம் புகார் செய்ய இருவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தம்பதிகளை விசாரித்த காவலர்கள் அவர்களை வெறுமே எச்சரித்து அனுப்பினாலும், இருவரும் சென்ற இடம் விமான நிலையம் அல்ல.
நேராக ஒரு லாட்ஜுக்கு சென்று, அங்கே தற்கொலை செய்து கொண்டனர்.

-oOo-

அவ்வப்போது, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை நிமித்தமாக இளம் வயதிலேயே குடும்பங்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழ நேரிடும் தொழிலாளர்களைப் பற்றி படிக்கையில் எல்லாம் இந்த சம்பவம் நினைவுக்கு வரும்.

தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் அனுமதி அளிக்காமல், அவர்களது உழைப்பைச் சுரண்டி மாட மாளிகைகளைக் கட்டி வாழ்வதிலும் அதில் பெருமைப்படுவதிலும் என்ன நிம்மதி இருக்க முடியும் என்று அரபு நாட்டு ட்ரில்லியனர்கள் மீதும் கோபமும் வரும்.

அதி தீவிரமாக பின்பற்றுவதாக இவர்கள் கூறிக் கொள்ளும் இஸ்லாம் மதம் தொழிலாள தம்பதிகளை மாதக்கணக்கில் பிரித்துப் போடுவதற்கு அனுமதிக்கிறதா என்ற கேள்வியும் இறுதியில் எழும்.
மத்திய கிழக்கு அரசியல் நிலவரம் பற்றி முழுமையாக அறிந்ததில்லை என்றாலும், பாலஸ்தீனம் தவிர பிற நாட்டு அகதிகளை, அவர்கள் முஸ்லீமாக இருந்தாலுமே ஏற்றுக் கொள்வதில்லை என்றே தெரிகிறது.

ஐரோப்பியர்களுக்கு பின் மன ரீதியில் அழுத்தம் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

மதுரை
05/09/15

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....