Showing posts with label Court. Show all posts
Showing posts with label Court. Show all posts

Wednesday, 28 October 2015

கோர்ட் (மராத்தி) 2014

“கோர்ட்’னு ஒரு மராத்திப் படம் வந்துருக்கு. அதப் பாரேன்”


மாவட்ட நீதிபதி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்தான் இப்படிக் குறிப்பிட்டேன். நமது நீதிபதிகள் இந்த மாதிரி படங்களைப் பார்த்தால் எப்படி உணர்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.


“பார்த்து விட்டேன். (ஜுடீசியல்) அகாடெமியில் போட்டார்கள்”


“அகாடெமியிலா, சினிமாவா?” சந்தேகமாயிருந்தது. இருவருடங்களுக்கு முன்னர் அகாடெமி சென்றிருந்த பொழுது இயக்குஞரிடம் ‘இப்படி மதிய நேரத்திலும் க்ளாஸ் என்றால் யார் கவனிப்பார்கள்?, ஏதாவது கேம்ஸ் அல்லது சினிமா போடுங்களேன்’ என்று கூறியது நினைக்கு வந்தது.


தொடர்ந்து படம் குறித்து பேசவில்லை என்றாலும், இந்த சினிமாவைப் பார்க்க வைத்த பின் நீதிபதிகளை படம் சொல்லும் கதையைக் குறித்து விவாதிக்க வைத்தால் விவாதம் படத்தை விட சுவராசியமாக இருக்கலாம் என்று ஏனோ மனதுக்குள் நினைத்தேன்.


எழுச்சிப் பாடல்களால் விளிம்புநிலை மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் போராளி ஒருவர் மீது அரசு வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ந்து வழக்கு தொடர்வதும், அவற்றை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக கையாளுவதையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மெல்ல நகரும் திரைக்கதை.


போரடிக்காதா, என்று நினைத்தால் தவறு. மிகவும் சுவராசியமான படம்.


இந்திய நீதித்துறை குறைபாடுகளைச் சுற்றியே படம் முழுக்கவும் பின்னப்பட்டுள்ளதான தோற்றம் தந்தாலும், அதன் மற்ற சில காட்சிகளின் பின்னுள்ள கதை என்ன என்று படம் பார்த்த சில நாட்களுக்கு நம் மனதில் அசை போட வைக்கும்.


அந்த வகையில் சிறந்த சினிமாவை தனது முதல் படத்திலேயே தந்துள்ள இளம் இயக்குஞரான சைதன்ய தம்ஹானே நீதிமன்ற நடவடிக்கைகளை, முக்கியமாக நீதிபதி, வழக்குரைஞர்கள், வழக்காடிகளின் உடல்மொழியினைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்திருந்தாலும், குற்றவியல் நடைமுறைகளில் முழுக்கவும் கோட்டை விட்டுள்ளார். நமது தமிழ் திரைப்படங்களின் ‘கோர்ட் சீன்’களைப் போலவே நினைத்த நேரத்தில், இஷ்டத்திற்கு ஆளாளுக்கு சாட்சிகளை விசாரிப்பதும், அவ்வளவுக்கு பின்னரும் பெயிலுக்குத்தான் இத்தனை மெனக்கெடல் என்பதும் வழக்குரைஞர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.


‘இது ஒரு ‘ப்ளாக் காமெடி’ ரகம். இப்படியெல்லாமா ஆராய்வது?’ என்பவர்களுக்கு நான் பரிந்துரைக்க விரும்புவது ஹாலிவுட்டின் ‘மை கசின் வின்னி’ மற்றும் ‘சிக்காகோ’. இரண்டுமே கொலை வழக்கினைப் பற்றிய படம் என்றாலும் முன்னது முழுக்கவும் ‘அக்மார்க்’ காமெடி பின்னது பாதி வசனத்தை பாட்டாகவே பாடும் ம்யூசிகல்.


மாயாஜாலக் கதை போல இவ்விரு படங்களிலும் எப்படி வேண்டுமானாலும் நீதிமன்ற நடைமுறைகளை அமைத்திருக்கலாம் என்றாலும், இரு படத்திலும் குற்றவியல் நடைமுறை அத்தனை ‘ஆத்தென்டிக்’காக இருக்கும்.


படத்தை நமது நீதிபதிகள் பார்த்துள்ளார்களா என்பது தெரியவில்லை. ஆனால், உத்தர பிரதேச நீதிபதி ஒருவர் பார்த்துள்ளார். ‘நீங்க என்னடா எதுக்கெடுத்தாலும் ஏழைங்க மேல மட்டும் செடிஷன் கேஸ் போடுவது. நான் போடுறேன் பார்’னு ‘டைரானி ஆஃப் த அன் எலக்டட்’னு சொன்ன ஒத்த வரிக்காக பைனான்ஸ் மினிஸ்டர் மேலேயே தேசத் துரோக வழக்குப் போட்டுட்டார்.

Saturday, 10 October 2015

'முழி' பெயர்ப்பு!

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்கு பார் கவுன்ஸில் அளித்துள்ள ஆவணத் தொகுப்பினை ஆய்ந்து கொண்டிருந்தேன் அப்போது கண்ணில்பட்ட ‘Oh Central Government Oh Supreme Court’ என்ற வாசகத்தைப் படித்ததில் முதலில் ஒன்றும் புரிபடவில்லை.

முழுவதும் அந்த ஆவணத்தைப் படித்தால், குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய சில வழக்குரைஞர்கள் எழுப்பிய கோஷங்களைக் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை அது.

அப்படியும் கொஞ்ச நேரம் பிடித்தது.

‘மத்திய அர’சே’ உச்ச நீதிமன்ற’மே’ என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் அது என்று புரிய.

‘கோர்ட் இங்கு சீரியஸாக நடந்து கொண்டிருக்கையில் என்னத்தை அங்கு படித்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்’ என்று நீதிபதி நினைத்திருப்பார்.
நீதிமன்றப் பதிவாளர் என்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

நீதிபதி வேலை கூட அப்படித்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் விபத்து இழப்பீடு வழக்கு. மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று தீர்ப்பினை படித்துக் கொண்டிருந்தேன்.
‘இறந்தவர் உலோகம் முதலான கடினப்பொருட்களுக்கான பட்டயப்படிப்பை படித்திருந்தார்’ என்ற வாசகம் என்னைக் குழப்பியது. ‘என்னடா இது, தென்காசியில் மெட்டாலர்ஜியெல்லாம் படிக்கிறார்களா?’ என்று நினைத்தேன். ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர்தான் புரிந்தது,

Diplomo in Hardware Technology!

விபத்தில் எலும்பு முறிவு ஏற்ப்படும் வழக்குகளீன் தீர்ப்புகள் அனைத்திலும் தவறாமல் ‘காயமடைந்தவர் ‘இயற்பியல் சிகிச்சை’ செய்த வகைக்கு உண்டான செலவு…..’ என்ற வாக்கியம் இடம் பெறும். எலும்பு முறிவுக்கும் பிஸிக்ஸுக்கும் ஏதும் சம்பந்தமில்லையே என்று நினைக்க வேண்டாம்.

இது Physiotherapy!

வழக்குரைஞர்களும் விதிவிலக்கல்ல...

இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் உணவருந்திய சடங்கினை கிறிஸ்தவர்கள், தங்களது பிரார்த்தனையின் பொழுது பின் பற்றி வருகிறார்கள். சி எஸ் ஐ பிரிவினை சேர்ந்தவர்கள் எப்போது நடைபெற்றாலும் இந்த சடங்கினை ‘இராப்போஜனம்’ என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ‘Holy Communion’

அவசரமாக பிராது எழுத முயன்ற, கிறிஸ்தவரல்லாத அந்த சீனியர் வக்கீலுக்கு ‘இராப்போஜனத்’தை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்று புலப்படவில்லை. ‘The Defendant did not participate in ‘Night Meals’ என்று எளிதில் முடித்து விட்டார்.

அந்த சீனியருக்கே சீனியரான என் சீனியரின் கையில் அந்தப் பிராது வந்தது. ‘போன போடுறா அவனுக்கு’ என்று கூப்பிட்டு விளாசித் தள்ளிவிட்டார். டெல்லிக்கே ராஜாவானாலும் அம்மைக்கு பிள்ளைதானே...

கடந்த வாரம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரரின் விபரம் அதிர்ச்சியாக இருந்தது.

Fr.Francis Xavier
Shareholder
St.Assisi Roman Catholic Church

‘அட, வெளிப்படையாவே கோவில் சொத்தை பங்கு வச்சு பிரிச்சுக்கிட்டாங்களா’ என்று நினைத்தேன். சம்பந்தப்பட்டவரிடம் கேட்டால், ‘பங்குத் தந்தை’யை கிளார்க் அப்படி அடித்து விட்டதாக கூறினார்.

என்ன ஒரு தீர்க்க தரிசனம்!

Saturday, 3 October 2015

நீதிமன்றத்திற்குள்ளான ஆர்ப்பாட்டங்கள்


ஏப்ரல்’1 2015.

காலை சரியாக மணி பத்து. தலைமை நீதிபதியின் மன்றம். நீதிபதிகள் அனைவரும் அமர்ந்த பின்னர் மற்றவர்களும் தங்கள் இருக்கையில் அமர்கின்றனர். முதல் வழக்கு அழைக்கப்படும் அதே நேரத்தில், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒருவர் எழுகிறார். பதாகை ஒன்றை உயர்த்தியபடி ‘ நம் நாட்டின் மக்களாட்சி மாண்பினைக் காக்க இங்கு நான் எழுகிறேன். ஒருவரு ஒரு ஓட்டு’ என்று உரத்த குரலில் கத்தவும், காவலர்கள் பாய்ந்து வந்து அவரை மடக்கி வெளியே அழைத்துச் செல்கின்றனர்.

தலைமை நீதிபதி சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு விசாரிக்கப்படவுள்ள இன்ஸால்வன்ஸி வழக்குக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்று கிண்டலடிக்கவும், அனைவரும் சிரிக்க நீதிமன்றம் சகஜமாகியது.

ஆனால் அந்த அமைதி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. சில நிமிடங்களில் வேறு ஒருவர் எழுந்து வேறு ஒரு முழக்கத்தை எழுப்பவும், அவரும் குண்டுக்கட்டாக தூக்கப்படுகிறார்.
தொடர்ந்து மற்றொருவர். இப்படியாக பெண்கள் உட்பட ஏழு நபர்கள். அதில் ஒருவர் தனது முழக்கத்தை பாட்டாகப் பாடியது இன்னமும் வேடிக்கை.

ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர்.

நீதிபதிகளுக்கும் இது புது அனுபவமல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டில் இதே 99rise இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு முழக்கத்தை எழுப்பியதற்கு கைது செய்யப்பட்டனர். மீண்டும் பிப்ரவரி 2015ல் மீண்டும் முழக்கங்கள். கைது.

இதெல்லாம் எங்கு?

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்.

தேர்தலில் கட்டுக்கடங்காமல் பணம் செலவழிப்பதை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எதித்துதான் இந்தப் போராட்டங்கள்.

முதலிருமுறையும் போராட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து வெளியிட்டதை தடுக்கும் வண்ணம் மார்ச்’2015ல் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டாலும் மூன்றாம் முறையும் பேனா கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே அதன் நீதிமன்ற அறை வீடியோ எடுக்கப்பட்டது இந்த மூன்று முறைதான்.

முதலிரண்டு முறையும் கீழமை நீதிமன்றங்களில் சாதாரண கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டாலும், இம்முறை நீதிபதிகளின் கோபம் உக்கிரமடைந்துள்ளதால் முழக்கமிட்டவர்கள் மீது கிரிமினல் கண்டெம்ட் வழக்கு தொடரலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.

போராட்டவாதிகளின் வழக்குரைஞரும் சாமான்யப்பட்டவர் இல்லை. நீதிமன்றத்திற்குள் முழக்கமிடக்கூடாது என்பது பேச்சுரிமையைப் பாதிப்பது இல்லையா என்ற ரீதியில் தாக்கல் செய்துள்ள எதிர்வாதவுரையை பாருங்களேன்.

Even as to a nonpublic forum, a restriction on speech must still be reasonable. A ban on ‘loud … language,’ which is entirely untethered to the need to maintain the order and decorum of the court, is unreasonable. It is not reasonable to prohibit loud language regardless of whether the loudness is necessary; regardless of whether the speech is disruptive; regardless of whether the speech is raucous; regardless of whether the volume of the speech is intended to communicate a message rather to interfere with official proceedings; regardless of the time of day; regardless of whether the loudness of the speech presents a clear and present danger of imminent violence; regardless of whether the speech is amplified; regardless of the location of the speaker within the forum; and regardless of the actual volume of the speech

அபார துணிச்சல்தான்...

நீதிமன்றம், ஆர்ப்பாட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள்...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு இருப்பதாக நினைவு. ஆயினும் ஊர்வலம், போராட்டம் என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது, சமீப காலம் வரை.

ஆனால், இது வரை பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அமெரிக்காவில் நடத்துவார்கள்.

அவற்றைத் தடுப்பதற்காக 1949ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்ற கட்டிடம், வளாகம், மற்றும் சுற்றுப் பாதைகளில் மக்கள் கூடுவதோ, ஊர்வலம் நடத்துவதோ, ஆர்ப்பாட்டம் செய்வதோ, பதாகைகளை பிடிப்பதோ, பிரசுரங்களை விநியோகிப்பதோ குற்றம் என்று தடை செய்தது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, ‘நீதிமன்றத்தின் மாண்பினைக் குலைத்து விடும் என்பதோடு, வழக்கின் போக்கினை இவ்வகையான போராட்டங்களும் தீர்மானிக்கும் என்ற எண்ணப்பாட்டினை மக்கள் மனதில் உருவாக்கலாம்’ என்பதும் காரணம்.

ஆனால் பிரச்னை, ‘அமெரிக்க சட்டமன்ற கட்டிடத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடை செய்த சட்டமானது செல்லாது’ என்று 1972ம் ஆண்டு கூறப்பட்ட தீர்ப்பில் ஆரம்பித்தது.
சில வருடங்களில் உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள நடைபாதை (sidewalk) யில் நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இருவர் தடுக்கப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்றம் 1949ம் வருட சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கூறினாலும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சுற்றுப்பாதையில் ஆர்ப்பாட்டம் செய்வதை தடை விதிப்பது செல்லத்தக்கதல்ல என்று கூறி சுற்றுப் பாதையில் ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தது.

சுற்றுப் பாதையோடு திருப்தி அடையாத போராளிகள், உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அவ்வப்போது நுழைந்து போராட மீண்டும் வழக்கு.

மாவட்ட நீதிமன்றம் (Circuit Court) இந்த முறை சுற்றுப் பாதையில் என்ன உள்ளேயும் போராட்டம் நடத்துவதை தடை செய்வது செல்லாது என்று கூறவும் உயர்நீதிமன்றத்தில் (Court of Appeals) மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அப்படியெல்லாம் உள்ளே வர முடியாது, சுற்றுப்பாதையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நின்று விட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இனி வழக்கு உச்ச நீதிமன்றம் போகலாம். ஆனால் தீர்ப்பு எழுதியவர் யார் என்று தெரிந்தால், ‘ஆர்ப்பாட்டமாவது மண்ணாவது, தீர்ப்பு முழுக்கவும் சரிதான்’ என்று கூறத் தோன்றும்.

பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவரும், உச்ச நீதிமன்றம் செல்வார் என்று நம்பப்படுபவருமானவரும், நம்மவருமானவருமான நீதிபதி சீனிவாசன்!

Thursday, 27 August 2015

“மரிய ‘லூஸ்’ அந்தோணி”


“மரிய ‘லூஸ்’ அந்தோணி”

என்ற டவாலியின் சத்தமான குரலில் நீதிமன்றத்தில் தலையைக் குனிந்து படித்துக் கொண்டிருந்தவன் சற்று திடுக்கிட்டுப் போனேன். அதுவரை இறுக்கமாக ‘காலிங் ஒர்க்’ நடந்து கொண்டிருந்த அந்த தாம்பரம் நீதிமன்றத்தில், ஏதோ பார்ட்டி’யை டவாலி இப்படி அழைத்ததில் ஆங்காங்கே புன்னகைக் கீற்றுகள்.

நல்லவேளை சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.


 பெஞ்ச் க்ளார்க், எதுவும் நடவாதது போல முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, ‘திரும்ப கூப்பிடுங்க. மரிய க்ரூஸ் அந்தோணி’

டவாலி இன்னமும் சத்தமாக, ‘மரிய லூஸ் அந்தோணி’ என்றதும் நீதிபதி ‘இது கதைக்காகாது’ என்ற பாவனையில் குனிந்து மரிய அந்தோனியை எக்ஸ்பார்ட்டியாக்கி உத்தரவு எழுத ஆரம்பித்து விட்டார்.

இருபது வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், ‘இந்திரா காந்தி’ என்று சத்தமாக அக்யூஸ்ட் ஒருவரை கூப்பிட்டது வேடிக்கையாக இருந்தது. அங்கே ‘ஐகோர்ட் துரை’ என்று கூட ஒரு வழக்காடி உண்டு.

ஆனால் என் பெயரே ஒருமுறை அப்படிக் கூப்பிடப்படுவதைக் கேட்கையில் வெட்கமாகி விட்டது.

மாஜிஸ்டிரேட்டாக வேலை கிடைத்து வெளியூர் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடந்து கொண்டிந்தது.

சாதாரண உடையில் பெஞ்சில் அமர்ந்திருந்தவனைப் கவனித்த நண்பர் டவாலியைக் கூப்பிட்டு ஏதோ சொல்ல, அவர் நேராக வாசலுக்குச் சென்று, ‘பிரபு ராஜதுரை’ பிரபு ராஜதுரை’ என்று சத்தமாக கூப்பிடவும் நடப்பது என்னவென்று எனக்கு புரியும் முன்னரே மாஜிட்டிரேட் நண்பர் பதறியபடி, ‘யோவ் இங்க வாய்யா இங்க வாய்யா' என்று டவாலியை சத்தமாக அதட்டியபடியே என்னையும் பார்த்து அசட்டுத்தனமாக சிரித்தார்.

‘இல்லடா, பிரபு ராஜதுரைன்னு அங்க ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவரைக் கூப்பிட்டு என் ரூமுல இருக்கச் சொல்லுன்னுதான் சொன்னேன்’ என்றார் பின்னர்.

‘நான் நம்பமாட்டேன். பழைய கடுப்பையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கிட்டே’ என்றேன்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....