Wednesday, 28 October 2015

கோர்ட் (மராத்தி) 2014

“கோர்ட்’னு ஒரு மராத்திப் படம் வந்துருக்கு. அதப் பாரேன்”


மாவட்ட நீதிபதி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்தான் இப்படிக் குறிப்பிட்டேன். நமது நீதிபதிகள் இந்த மாதிரி படங்களைப் பார்த்தால் எப்படி உணர்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.


“பார்த்து விட்டேன். (ஜுடீசியல்) அகாடெமியில் போட்டார்கள்”


“அகாடெமியிலா, சினிமாவா?” சந்தேகமாயிருந்தது. இருவருடங்களுக்கு முன்னர் அகாடெமி சென்றிருந்த பொழுது இயக்குஞரிடம் ‘இப்படி மதிய நேரத்திலும் க்ளாஸ் என்றால் யார் கவனிப்பார்கள்?, ஏதாவது கேம்ஸ் அல்லது சினிமா போடுங்களேன்’ என்று கூறியது நினைக்கு வந்தது.


தொடர்ந்து படம் குறித்து பேசவில்லை என்றாலும், இந்த சினிமாவைப் பார்க்க வைத்த பின் நீதிபதிகளை படம் சொல்லும் கதையைக் குறித்து விவாதிக்க வைத்தால் விவாதம் படத்தை விட சுவராசியமாக இருக்கலாம் என்று ஏனோ மனதுக்குள் நினைத்தேன்.


எழுச்சிப் பாடல்களால் விளிம்புநிலை மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் போராளி ஒருவர் மீது அரசு வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ந்து வழக்கு தொடர்வதும், அவற்றை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக கையாளுவதையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மெல்ல நகரும் திரைக்கதை.


போரடிக்காதா, என்று நினைத்தால் தவறு. மிகவும் சுவராசியமான படம்.


இந்திய நீதித்துறை குறைபாடுகளைச் சுற்றியே படம் முழுக்கவும் பின்னப்பட்டுள்ளதான தோற்றம் தந்தாலும், அதன் மற்ற சில காட்சிகளின் பின்னுள்ள கதை என்ன என்று படம் பார்த்த சில நாட்களுக்கு நம் மனதில் அசை போட வைக்கும்.


அந்த வகையில் சிறந்த சினிமாவை தனது முதல் படத்திலேயே தந்துள்ள இளம் இயக்குஞரான சைதன்ய தம்ஹானே நீதிமன்ற நடவடிக்கைகளை, முக்கியமாக நீதிபதி, வழக்குரைஞர்கள், வழக்காடிகளின் உடல்மொழியினைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்திருந்தாலும், குற்றவியல் நடைமுறைகளில் முழுக்கவும் கோட்டை விட்டுள்ளார். நமது தமிழ் திரைப்படங்களின் ‘கோர்ட் சீன்’களைப் போலவே நினைத்த நேரத்தில், இஷ்டத்திற்கு ஆளாளுக்கு சாட்சிகளை விசாரிப்பதும், அவ்வளவுக்கு பின்னரும் பெயிலுக்குத்தான் இத்தனை மெனக்கெடல் என்பதும் வழக்குரைஞர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.


‘இது ஒரு ‘ப்ளாக் காமெடி’ ரகம். இப்படியெல்லாமா ஆராய்வது?’ என்பவர்களுக்கு நான் பரிந்துரைக்க விரும்புவது ஹாலிவுட்டின் ‘மை கசின் வின்னி’ மற்றும் ‘சிக்காகோ’. இரண்டுமே கொலை வழக்கினைப் பற்றிய படம் என்றாலும் முன்னது முழுக்கவும் ‘அக்மார்க்’ காமெடி பின்னது பாதி வசனத்தை பாட்டாகவே பாடும் ம்யூசிகல்.


மாயாஜாலக் கதை போல இவ்விரு படங்களிலும் எப்படி வேண்டுமானாலும் நீதிமன்ற நடைமுறைகளை அமைத்திருக்கலாம் என்றாலும், இரு படத்திலும் குற்றவியல் நடைமுறை அத்தனை ‘ஆத்தென்டிக்’காக இருக்கும்.


படத்தை நமது நீதிபதிகள் பார்த்துள்ளார்களா என்பது தெரியவில்லை. ஆனால், உத்தர பிரதேச நீதிபதி ஒருவர் பார்த்துள்ளார். ‘நீங்க என்னடா எதுக்கெடுத்தாலும் ஏழைங்க மேல மட்டும் செடிஷன் கேஸ் போடுவது. நான் போடுறேன் பார்’னு ‘டைரானி ஆஃப் த அன் எலக்டட்’னு சொன்ன ஒத்த வரிக்காக பைனான்ஸ் மினிஸ்டர் மேலேயே தேசத் துரோக வழக்குப் போட்டுட்டார்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...