Saturday 10 October 2015

குப்பைக் காகிதமாகும் தீர்ப்புகள்

எவ்வளவுதான் மூளையை கசக்கிக் கொண்டு படித்தாலும், கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் தாக்கல் செய்வதற்கு ஒரு பாயிண்ட் கூட அகப்படவில்லையா?

கவலை வேண்டாம். அந்த தீர்ப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படியெனில் அந்த ஒரு பாயிண்ட் போதும், அதை ‘குப்பைக் காகிதம்’ என்று முழுமையாக தள்ளுபடி செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்கலாம்.

தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக கீழமை நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை ‘த ஜட்ஜ்மெண்ட் இன் தமிழ் இஸ் நோ ஜட்ஜ்மெண்ட் அட் ஆல், இட் ஈஸ் ஸோ மச் வேஸ்ட் பேப்பர்’ என்று நமது நீதிமன்றம் 1978ம் ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. (Ramayee v. Muniyandi Konar (1978)2 MLJ 442)

தமிழில் எழுதினால்தானே, குப்பைக் காகிதம்?

அந்த கீழமை நீதிமன்ற தீர்ப்பு எழுதப்பட்ட ஆண்டு 1970. அதனால் அப்படி.

1976ல் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் உரிமையியல் நீதிமன்றங்களைப் பொறுத்து 01/02/82 முதல் அமல்படுத்தப்பட்டது.

உடனடியாக தமிழில் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து பல நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை யாவும் 1994ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், நமது உயர் நீதிமன்றம் வெளியிட்ட துறைரீதியிலான உத்தரவு மூலம் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் கூறப்பட்டு வந்தன.

‘ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம்’ என்ற துறைரீதியிலான உத்தரவானது சட்டத்திற்கு புறம்பானது என்று சோலை சுப்பிரமணியம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கானது முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் விரைவிலேயே அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது தவறு என்று  திரு.பொ.ரத்தினம் என்ற வழக்குரைஞர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.இராமசுப்பிரமணியம் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் துறைரீதியிலான உத்தரவானது சட்ட விரோதமானது என்று 01/07/14 அன்று தீர்ப்பளித்துள்ளனர்.

இதனை எதிர்த்து வி.வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார். ஆயினும் இடைக்காலத் தடை ஏதும் வழங்கப்படவில்லை...

எனவே சமீபகாலமாக பெருவாரியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் அவை 01/07/14க்கு பின் எழுதப்படின் சட்டத்திற்கு விரோதமானது.

சட்டத்திற்கு புறம்பானது என்பது மட்டுமல்ல. கீழமை நீதிமன்றங்கள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதுவது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் செயலுமாகும்.

4 comments:

  1. சோலை சுப்பிரமணியம் வழக்கின் மறு ஆய்வு தீர்ப்பு http://indiankanoon.org/doc/112965714/

    ReplyDelete
  2. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மேல்முறையீடு http://courtnic.nic.in/supremecourt/temp/pc%20458415p.txt

    ReplyDelete
  3. http://www.deccanchronicle.com/current-affairs/290116/can-t-declare-as-void-judgment-in-english-madras-high-court.html

    ReplyDelete
  4. உச்ச நீதிமன்றம் 2017ல் இடைக்கால தடை விதித்துள்ளது. அது குறித்த பதிவு https://prabhuadvocate.blogspot.in/2017/05/blog-post.html

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....