Friday 7 April 2017

ஹிட்டன் பிகர்ஸ் (ஹாலிவுட்) 2017

விஞ்ஞானம், தொழிற்நுட்பம் சார்ந்த அதி உயரிய மைய அரசு அமைப்பு ஒன்றில் பணிபுரியும் பள்ளி நண்பனை சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் முதுகலை, முனைவர் பட்டங்கள் அவன் பெற்ற விபரங்களை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

சாதாராண கிராம பள்ளியில் தனது கல்வியைத் துவக்கியவன்.

புகழ்வாய்ந்த அவனது நிறுவனத்தை சுற்றிக் காண்பித்தான். பெரிய பதவியிலிருந்தான். ஆனாலும், பேச்சினூடாக சாதி காரணமாக அவனது தகுதிக்குத் தக்க வாய்ப்புகள் மறுக்கப்படுவதான மெல்லிய வருத்தம் இருப்பதை உணர்ந்தேன்.

நேற்று ஹிட்டன் பிகர்ஸ் என்ற இப்படத்தைப் பார்த்த பொழுது அவனை நினைத்தேன்.

நண்பனுக்காவது சாதி மட்டுமே. ஆனால் கறுப்பினம், பாலினம் என்ற இரண்டு தடைகளை அதுவும் இனவெறி அமெரிக்க தென் மாநிலங்களில் கொழுந்து விட்டெரிந்த காலகட்டத்தில் அதை உடைத்து நொறுக்கிய மூன்று பெண்மணிகளின் உண்மைக் கதை.

முஷ்டி உயர்த்தி கோஷமிடும் போராட்டம் அல்ல. உயர் அறிவுத்திறனாலும், கல்வி வேட்கையாலும் வென்ற போராட்டம் அது.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவில், அறுபதுகளிலேயே கறுப்பின பெண்கள் கணித வல்லுஞர்களாலும், பொறியாளர்களாகவும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற விபரம் இந்தப் படத்தைப் பார்த்த பின்னர்தான் நான் அறியத் தெரிகிறேன் என்பதே போதும், கறுப்பினத்தவர்/ பெண்கள் மீது எவ்வளவு தூரம் நாம் முன்முடிவு (prejudice) கொண்டுள்ளோம் என்பது புரியவரும்.

மூன்று பெண்களும் சாதித்தவர்கள் என்றாலும் முக்கியமானவர் காத்தரீன் ஜான்சன். இளம் கணித மேதை. கணணிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் விண்கலப் பாதையை கணிக்க நியமிக்கப்படுகிறார். பெண்களுக்கே அங்கு பணியில்லை. காத்தரீனோ கறுப்பினப் பெண்.

கறுப்பினத்தவருக்கு தனி காப்பி கோப்பை இருப்பதைக் கூட பொறுக்கலாம். தனிக் கழிப்பறைக்கு ஒவ்வொரு முறையும் அரை கிலோ மீட்டர் ஓட வேண்டும்.

நாசாவில் பின்னர் கணணி வந்த பின்னரும் விண்வெளியில் உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கரான ஜான் க்ளென், விண்கலப் பாதையை காத்தரீன் கணித்துத் தராமல் பறக்க மாட்டேன் என்று கணனி கணக்குகளை காத்தரீன் உறுதிப் படுத்திய பின்னர்தாம் கிளம்பினாராம்.

கணனி மொழியில் சிறந்தவரான டாரத்தி வாகனுக்கு, தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வு கிடைக்காமலிருப்பது, பொறியாளரான மேரி ஜாக்ஸனுக்கு திறமை இருப்பினும், கறுப்பினத்தவருக்கு கல்லூரியில் இடம் இல்லாததால் நழுவிப் போகும் பதவி என்று மூன்று நண்பிகளும் நாசாவில் ஒரே காலகட்டத்தில் போராடி வென்றிருக்கிறார்கள் என்ற உண்மைக் கதை இங்குள்ள ஒவ்வொரு கல்லூரி மாணவிகளும் அறிய வேண்டியது.


முக்கியமான என்னுடைய நண்பன் அறிந்திருந்தால், தான் அதிஷ்டசாலி என்று மகிழ்ந்திருப்பான்.

மதுரை
02/04/17

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....