Saturday 29 August 2015

மண்டல் கமிஷன் தீர்ப்பு குறித்தான விவாதமும் ஆர்ப்பாட்டங்களும்



இந்திரா சஹானி (மண்டல் கமிஷன்) வழக்கை எடுத்துக் கொண்டோமென்றால் இடஒதுக்கீடு அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்ததை அதற்கான வாத பிரதிவாதங்களுக்குட்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமென்றாலும், கிரீமி லேயரைப் பற்றி அவ்வாறு கூற முடியாதென்பது என்பதே எனது கருத்து. எனெனில் அரசியலமைப்புச் சட்டத்திலுமின்றி, அதனை வடிவமைத்தவர்களின் விவாதத்திலும் அப்படி ஒரு பதமே இடம் பெறவில்லை. அப்படியிருப்பினும் அந்த வழக்கில் க்ரீமி லேயர் என்ற தேவையற்ற கேள்வியினை உச்ச நீதிமன்றம் எழுப்பி தீர்வு காண முயன்றது, கிரீமி லேயர் குறித்து பொதுவில் விவாதிக்கப்பட்டு வந்ததன் தாக்கம்தான் அன்றி வேறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மண்டல் கமிஷன் வழக்கு என்பது விபிசிங் தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் 27% பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று 13.08.90 தேதியிட்ட குறிப்பாணையினை (Office Memorandum) எதிர்த்து தொடரப்பட்ட வழக்காகும். நரசிம்ஹராவ் தலைமையிலான அரசு 25.09.91 தேதியிட்ட பிறிதொரு குறிப்பாணை மூலம் இரு மாறுதல்களை விபி சிங் அரசு ஆணையில் கொண்ர்ந்தது. முதலாவது திருத்தம், ‘27% ஒதுக்கீட்டில் பிற்ப்படுத்தப்பட்டவர்களிலும் ‘poorer section’களுக்கு முன்னுரிமை (preference) அளிக்கப்படும். தகுந்த நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலியிடங்கள் மற்ற பிற்ப்படுத்தப்பட்டவர்களால் நிரப்பப்படும்’ என்பது. இரண்டாவது, ‘மற்ற ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்பதாகும்.

வழக்கானது இவ்விரு குறிப்பாணைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது எனற வாதத்தினை முன் வைத்து. ஆக, நீதிமன்றத்தின் முன் தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் எந்த ஒரு இட ஒதுக்கீட்டிலும் இடமே பெறாதவர்கள். அவர்களது வாதம் இட ஒதுக்கீடு யார் யாருக்கு என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதுதான்.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது. அடுத்த மாறுதலான பிற்ப்படுத்தப்பட்டவர்களிடையே poorer section என்பதை பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறியது. அதாவது பிற்ப்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே, அதனை.

மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்றும் கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்த்தது.

நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த திருத்தத்தின் அர்த்தம் படிப்பவர்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தாலும் ‘poorer section’ மற்றும் ‘preference’ ஆகிய வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் அவ்வாறாக புதிய அர்த்தத்தினை அளிக்கவில்லையெனில் அந்த திருத்தத்தினையும் செல்லாது என்று தள்ளுபடி செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.


மண்டல் கமிஷன் வழக்கு வரை, ஏன் இந்த நாள் வரை பிற்ப்படுத்தப்பட்டவர்கள் சார்பான சக்தி வாய்ந்த பொதுக்கருத்து பரந்துபட்ட அளவில் இந்தியா முழுவதும் ஏற்ப்படவில்லை என்பது எனது அனுமானம். ஏதோ தமிழகத்தில் மட்டுமே பெரிய பிரச்னையாக எடுத்து வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்ற அளவில் ஒரு பொதுவான கருத்தாக இருக்கையில், அகில இந்திய ஊடகங்களை கவனித்தால் இட ஒதுக்கீட்டினை சலுகை என்ற அளவிலேயே அணுகுவதை பார்க்கலாம்.

ஆயினும் மண்டல் கமிஷன் என்ற பூதம் விபி சிங் தயவால் கிளப்பி விடப்பட்ட பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் அதனை எதிர்க்க முடியாமல், ஊடகங்களின் கருத்தும் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தின் அடிப்படையில் உருப்பெற்றன.

ஆயினும் இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்திற்கு விரோதமானது என்ற வகையில் தயக்கத்துடனே அணுகப்படுகையில் ‘அதிகபட்சம் 50%’ மற்றும் ‘சரத் யாதவின் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவையா?’ என்ற வாதங்கள் எடுத்து வைக்கப்படுகையில் அதனை எதிர் கொள்ள யாருமின்றி ஊடகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக்கருத்தாக நிலவுகிறது. இன்று கூட தமிழகத்திலேயே பிரபலமாக உள்ள பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், துக்ளக், குங்குமம், கல்கி போன்றவற்றில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்து, கதை, துணுக்கு, செய்திகளை அரிதாகவே பார்க்க வாய்ப்புண்டு. ஆனால், க்ரீமி லேயர் என்பது தேவையில்லை என்ற ஒரு கருத்தினை நான் அறிந்த வரையில் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வாறான ஒரு நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கும் மண்டல் கமிஷன் வழக்கில் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%த்திற்கு மிக கூடாது என்றும் க்ரீமி லேயர் என்று ஒரு வகுப்பிற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் கூறுவது இலகுவான ஒரு காரியம் என்பது எதிர்பார்த்ததுதான்.

அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஏதும் அதிகபட்சம் வரையறுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூற முடியுமா? என்ற கேள்வியினை சிலர் எழுப்பினாலும், சட்டப்படி அது இயலக்கூடிய காரியமே! உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பு சட்டங்களிலும் நமது சட்டம் மிகவும் பெரியது எனினும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் எதிர்நோக்கி அதனை வடிப்பது என்பது இயலாத காரியம். அவ்வாறான நேரங்களில், அரசியலமைப்பு சட்டகுழு ஒவ்வொரு பிரிவினையும் பற்றி நடத்திய விவாதங்களை அலசிப்பார்ப்பது இவ்வாறு சட்டமியற்றியவர்களின் நோக்கத்தினை அறிய உதவும்.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வழிகோலும் அரசியலமைப்பு சட்டத்தின் 16(4) வது பிரிவு குறித்து 30.11.48 அன்று நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு.அம்பேத்கர் கூறுவதை கவனியுங்கள்.

Let me give an illustration. Supposing, for instance, reservations were made for a community or a collection of communities, the total of which came to something like 70 per cent of the total posts under the State and only 30 per cent are retained as unreserved. Could anybody say that the reservation of 30 per cent as open to general competition would be satisfactory from the point of view of given effect to the first principle, namely, that there shall be equality of opportunity? It cannot be in my judgment. Therefore the seats to be reserved, if the reservation is to be consistent with sub-clause (1) of Article 10, must be confined to a minority of seats...........”

அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் பல உறுப்பினர்களின் இட ஒதுக்கீடு குறித்து மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் திரு.அம்பேத்கார் ஏறக்குறைய உறுதிமொழி போல பேசிய வாக்கியங்கள் இவை.


எனவே, இட ஒதுக்கீடானது பாதிக்கும் மேலாக இருத்தல் இயலாது என்று மண்டல் கமிஷன் வழக்கில் கூறியதற்கு திரு.அம்பேத்கரின் உரையும் காரணம். ஆயினும் மண்டல் கமிஷன் வழக்கில் எந்த சந்தர்ப்பத்திலும் 50% அதிகமாக இருத்தல் இயலாது என்றும் கூறவில்லை. சில அசந்தர்ப்பமான நிலைகளில் 50% வரையறையினை மீறலாம் என்று அனுமதியளிக்கிறது. எந்த மாதிரியான நிலைகள் என்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரிகளுக்குள் தமிழகத்தினை கொணர முடியுமா? என்பதை அறிய இனி பொறுத்திருக்க வேண்டும்.

ஆனால் க்ரீமி லேயர்?

அரசியலமைப்பு குழு அப்படி ஒரு வகுப்பினைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. பங்கு பெற்ற யாரும், ‘உங்களது மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று அம்பேத்கரைப் பற்றி வினா எழுப்பவில்லை. எனவே அரசியலமைப்புச் சட்டத்திலும் அவ்வாறான ஒரு பிரிவினரைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பின்னர் ஏன் உச்ச நீதிமன்றம், முக்கியமாக மண்டல் கமிஷன் வழக்கில் க்ரீமி லேயரைப் பற்றி கேள்வி எழுப்பி அதற்கு விடை காண முயன்றது? ஒரு வேளை இந்த விவாதம் நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த இரண்டாவது குறிப்பாணையால் எழுந்திருக்கலாம். ஏனெனில் அந்த குறிப்பாணையின் மூலம் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ‘poorer section’கு முன்னுரிமை (preference) அளிக்கப்பட்டது. இது க்ரீமி லேயரைப் பற்றியே குறிப்பிடுவதாக இதனைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள்.

ஆனால், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட இரு ஆங்கில பதங்களுக்கும் புதிய அர்த்தம் கூறி குறிப்பாணை சரியே என ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் அரசு குறிப்பாணையும் க்ரீமி லேயரைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாகிவிட்டது. இனியும் நீதிமன்றம் க்ரீமி லேயர் என்ற கேள்வியினை எழுப்பியது என்றால், நீதிமன்ற சுவர்களை தாண்டி வெளியே நடந்த வாத பிரதிவாதங்களை தனது கருத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது என்றுதான் அனுமானிக்க முடியும்.

ஏனெனில், தமிழக, கேரள, பீகார் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதாடிய அனைவருமே க்ரீமி லேயர் என்ற பாகுபாட்டினை வெகுவாக எதிர்த்தனர். வினோதமாக, ‘பிற்ப்படுத்தப்பட்டவர்களில் சிலர் வெகுவாக முன்னேறி விட்டதாகவும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அபகரித்துக் கொள்வதாகவும்’ என்ற க்ரீமி லேயர் வாதம் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டினால் திறமைக்குறைவு ஏற்ப்படும் என்ற அவர்களது வாதம் உண்மையெனில், மேலும் திறமைக்குறைவினை ஏற்ப்படுத்தும் க்ரீமி லேயர் வாதம் அவர்களாலேயே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முரணாகும். மேலும் இட ஒதுக்கீடு ‘அனைவரும் சமம்’ என்ற உரிமைக்கு எதிரானது என்பது வழக்கின் அடி நாதமாக இருக்கையில் க்ரீமி லேயர் எந்த விதத்திலும் அந்த வாதத்திற்கு துணை புரியப் போவதில்லை என்ற பொழுதிலும், அந்த வாதம் வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்த பிரச்னையும் இட ஒதுக்கீடு குறிப்பாணை சம உரிமையினை பாதிக்கிறதா என்பதுதான். உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு மொத்தமாக 50%க்குள் இருக்கையில் சம உரிமையினை பாதிப்பதாகாது என்று கூறியது சட்டத்தினை பரிசீலனை செய்யும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான்.

ஆனால், தானாக முன் வந்து க்ரீமி லேயர் என்று பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஒரு புது வகுப்பினை வரையறுக்க முயன்றது, நீதிமன்றம் அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எண்ணம்.


சமீப காலமாக, ‘இட ஒதுக்கீடு அல்ல, இடப் பங்கீடு என்பதே சரியான வார்த்தை, என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. கவர்ச்சிகரமாக இருக்கிறது என்ற அளவிலேயே, இவ்வாதத்தினை கண்ணுற்ற நான் பின்னர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசியலமைப்பு சட்டக்குழுவில் நடைபெற்ற விவாதத்தினை படிக்கையில் இடப்பங்கீடு என்ற கருத்தில் மிகவும் வலு இருப்பதாக உணருகிறேன். இந்த வகையான ஒரு விவாதம் துரதிஷ்டவசமாக இது வரை உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த எந்த வழக்கிலும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில், கிரீமி லேயர் குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எவற்றிலும் இவ்வகையான வாதம் பற்றி குறிப்பு இல்லை.

கிரீமி லேயர் பாகுபாட்டினை உச்ச நீதிமன்றம் வகுத்ததில், எனது சிற்றறிவிற்கு பட்ட வகையில் சட்ட ரீதியிலான காரணம் இல்லை என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையினை நம்மிடையே நிலவும் ‘இட ஒதுக்கீட்டின் பலன்களையெல்லாம், பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களே எடுத்துக் கொண்டு கீழ் மட்டத்தின் அதன் பலன்கள் சென்று சேராமல் தடுக்கிறார்கள்’ என்ற சாதாரண நடுத்தர வர்க்கத்து பொதுக்கருத்தினை வைத்தே அணுகியுள்ளது. இந்த ஒரு காரணத்தினை தவிர வேறு வலுவான காரணங்கள் எதுவும் இது வரை க்ரீமி லேயர் குறித்தான தீர்ப்புகளில் இல்லை.


இந்த பொதுக்கருத்திற்கு ஒரு சட்ட முலாம் பூசும் வண்ணம், மண்டல் கமிஷன் வழக்கில் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களான ‘க்ரீமி லேயர்’ ஒரு தனி வகுப்பாக கருத்தப்பட்டு அந்த வகுப்பு ‘சமூக மற்றும் கல்வியில் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பதின் விளக்கத்திற்குள் வராத வகுப்பாக கருதப்பட வேண்டும் என்று விளக்கம் மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்படுகிறது.


‘இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக பிற்ப்படுத்தி வைக்கப்பட்டவர்களை உயர்த்தும் ஒரு முறை அல்லது முற்ப்படுத்தப்பட்டவர்களுடன் போட்டியிட முடியாத வகுப்பினரை கை தூக்கி விடும் ஒரு கருவி’ என்ற பரவலான கருத்து சரியாக இருக்குமிடத்து இவ்வாறு ‘க்ரீமி லேயரையுமா கை தூக்கி விட வேண்டும்?’ என்ற கேள்வி எழுவது இயல்பே! ஆனால், இட ஒதுக்கீடு என்பது இவ்வாறு ‘கை தூக்கி விடும்’ கருவி அல்ல. மாறாக இந்த நாட்டில் வசிக்கும் பல்வேறு மக்கள் குழுக்கள் அனைத்தும், போதுமான அளவில் அரசின் அதிகாரத்தில் பங்கேற்க வைக்கும் ஒரு ‘இடப் பங்கீடு’ என்று கூறப்பட முடியுமானால் அவ்வாறான ஒரு கேள்வி எழாது.


அரசியலமைப்பு சட்டக்குழு உறுப்பினர்களில் சிலர் ‘இட ஒதுக்கீடு’ என்ற அளவிலேயே இந்தப் பிரிவினை உணர்ந்து தங்களது கருத்தினை வைத்தாலும் அனைவரும் அவ்வாறு கருதவில்லை. உதாரணமாக மதறாஸ் இஸ்லாமிய உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாகிப் தனது உரையின் இறுதியில் கூறுவது கவனிக்கத்தக்கது,

Reservation in services is one of the measures we can adopt to bring about contentment among people. You can then say to the people, “Look here, you have your proper share in the services and you have nothing to complain” When people themselves find that they are given as good an opportunity as others, harmony will be there and so called communalism will not come at all ..... Therefore, I say that one of the ways of removing disharmony and producing harmony, is to make provision for the people’s representation in the services and to make them feel that they have got a real share and an effective share in the governance of the country

குழுவில் உரையாற்றிய அனைவருமே, அரசுத்துறையில் போதுமான அளவில் அனைத்து வகுப்பினரும் பிரநிதித்துவம் பெற வேண்டும் என்ற அளவிலேயே இப்பிரச்னையினை அணுகியுள்ளதாக தெரிகிறது. இட ஒதுக்கீட்டிற்கு வழிகோலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4) கூறுவதும் அவ்வாறானதாகவே உள்ளது. அதாவது,

Nothing in this article shall prevent the state from making any provision for the reservation of the appointments or posts in favour of any backward class of citizen, which in the opinion of state, is not adequately represented in the services of the state

எனவே இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பும் அரசு துறைகளில் போதுமான பிரநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காகவே தவிர தகுதி குறைந்தவர்களை தூக்கி விடும் செயலல்ல என்ற கருத்து வலுவானதாகவே படுகிறது.

பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு (backward class) என்றால் என்ன என்ற கேள்வி குழுவின் விவாதங்களில் முக்கியமாக எழுப்பப்பட்டாலும், அதனை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவில்லை. ஏனெனில், சிறுபான்மையினர் இவற்றில் வருவார்களா என்ற சந்தேகம், சிறுபான்மை இன உறுப்பினர்களுக்கு இருந்தாலும், அவர்களையும் இந்த வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமென்பதாற்கவே ஜாதி (caste) என்று கூறாமல் வகுப்பு (class) என்று கூறப்பட்டதாக மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்பட்டது. மேலும், மார்க்சிய சிந்தனையிலான பொருளாதர அடிப்படையிலான வர்க்கம் என்று அர்த்தப்படவே படாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

எனவே ஒரு வகுப்பினை முன்னேற்றுவது என்பதனை விட அனைத்து வகுப்பிற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்தப் பிரிவின் நோக்கம் என்றே நான் நினைக்கிறேன். எனெனில், விவாதத்தின் இறுதியில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், விவாதத்தினை முடித்து வைக்கும் வகையிலும் அம்பேத்கர் அவர்கள் பேசியது முக்கியமானதாகும்.

firstly, that there shall be equality of oppertunity, secondly that there shall be reservation in favour of certain communities which have not so far had a ‘proper look in’ so to say into the administration ..............................we had to reconcile this formula with the demand made by certain communities that the administration which has now- for historical reasons-been controlled by one community or a few communities, that situation must disappear and that the others also must have an opportunity of getting into public services

இந்த விளக்கத்திற்கு பின்னரே அம்பேத்கர், மண்டல் கமிஷன் வழக்கில் பயன்படுத்தப்பட்ட 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட முடியுமா என்ற கருத்தினை எடுத்து வைத்து, எது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை அரசே தீர்மானிக்கட்டும் என்று கூறி விவாதத்தினை முடித்து வைத்தார். அம்பேத்கரின் இந்த விளக்கத்திற்கு பின்னரே இந்தப் பிரிவு அரசியலமைப்பு சட்டக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, நமது நாட்டில் ஜாதி ரீதியிலாகவோ, மத ரீதியிலாகவோ அல்லது மொழி ரீதியிலாகவோ தனித் தனி மக்கள் குழுக்கள் உள்ளன. காரணம் எதுவாக இருப்பினும், அரசு அதிகாரத்தில் ஒரு குழுவின் பங்கு மொத்த மக்கள் தொகையில் அதன் சதவிகிதத்திற்கு வெகுவான அளவில் குறைவாக இருக்கையில், அரசு அதிகாரத்தில் தமக்கு பங்கில்லை என்று கருத வாய்ப்பிருக்கிறது. அவ்வகையான பிளவினை தவிர்க்கவே இட ஒதுக்கீடு. இவ்வாறான நிலையில், ஒரு மக்கள் குழுவினை மொத்தமாக கணக்கில் எடுத்தல் மட்டுமே அரசியலமைப்பின் நோக்கத்தினை செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.


எனவே க்ரீமி லேயர் கொள்கை என்பது, சட்ட ரீதியிலானது அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. இட ஒதுக்கீட்டினை மேற்போக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே, இது ஏதோ வலுமிக்க ஒரு கருத்து போல தோற்றமளிக்கும். உச்ச நீதிமன்றம் எவ்வாறு பொதுக்கருத்தினை ஒட்டி தனது க்ரீமி லேயர் சட்டத்தினை வகுத்துள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களை கூற முடியும்.

பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு, க்ரீமி லேயர் என்ற வகையில் உச்ச நீதிமன்றமானது எவ்வித விமர்சனத்துக்கும் ஆளாகாமல் தப்பித்துக் கொண்டது. ஏனெனில், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதே, நான் ஏற்கனவே கூறியபடி தமிழகத்தினை தவிர பிற மாநிலங்களில் ஏதோ குற்ற உணர்வுடனே ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாக உள்ள நிலையில் க்ரீமி லேயர் கொள்கையினை எதிர்த்து யாரும் வாயை திறக்கக் காணோம்.

ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அட்டவணைப் பிரிவினரிடையும் க்ரீமி லேயர் கொள்கையினை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டதுமே, க்ரீமி லேயர் கொள்கைக்கு எதிரான கருத்துகள் வைக்கப்பட்டன. எதிர்வினைகள் பலமாக இருந்தது. உடனடியாக அட்டார்னி ஜெனரல் மிலன் பானர்ஜி ‘நாகராஜ் வழக்கின் முடிவு இந்திரா சஹானி வழக்கிற்கு மாறாக உள்ளது, எனவே அது ஏற்றுக்கொள்ளப்படாது’ என்கிறார் (இதனை எடுத்துக்காட்டி திரு.பத்ரி நாராயணன் தனது வலைப்பதிவில் பிரச்னை முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். பத்ரி அவர்களை இவ்விதமான கருத்தாங்களுக்கு ஒரு அடையாளமாக கொண்டால், ‘அப்பாடா, இதை இனி யாரும் கிளற வேண்டாம்’ என்ற தொனி புரியும்).

இந்துவில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஸ்வநாதன், நாகராஜ் வழக்கில் அட்டவணைப்பிரிவினருக்கு க்ரீமி லேயர் என்பதாக கூறப்படவில்லை என்று எழுதுகிறார். உடனே ‘ அட்டவணைப் பிரிவினருக்கு ஆபத்தில்லை. யாரும் கலவரப்படத் தேவையில்லை’ என்ற வகையில் இது குறித்த விவாதத்தினை அமர்த்தும் வண்ணம் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆந்திர அரசு அட்டவணைப் பிரிவினருக்குள் ‘உள் இட ஒதுக்கீட்டினை’ அமுல்படுத்தும் ஒரு சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றம், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்குள் BC, MBC என்று பிரிப்பதைப் போல அட்டவணைப்பிரிவினரை பிரிக்க இயலாது என்று கூறிய தீர்ப்பினை எடுத்துக் காட்டி பிற்ப்படுத்தப்பட்டவர்களைப் போல அட்டவணைப்பிரிவினரை கருதுதல் இயலாது என்றும் கூறப்பட்டது. இப்போது இந்த பிரச்னை எங்கும் பேசப்படுவதேயில்லை.


ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகவே க்ரீமி லேயரை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், அந்த வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்னை அட்டவணைப் பிரிவினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தினைப் பற்றியது. அந்த திருத்தத்தினை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கூறுகிறது

These impugned amendments are confined only to SCs and STs. They do not obliterate any of the constitutional requirements, namely, ceiling-limit of 50% (quantitative limitation), the concept of creamy layer ...................................We reiterate that the ceiling-limit of 50%, the concept of creamy layer ................... are allconstitutional requirements

உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும், நான் கூற வருவது என்னவென்றால், அட்டவணைப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடானது நாடு தழுவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றான கருத்தாக இருக்கையில், க்ரீமி லேயர் குறித்தும் வலுவான எதிர் கருத்து இல்லை. எனவே, பத்திரிக்கைகள் நாகராஜ் வழக்கில் க்ரீமி லேயர் பற்றிக் கூறப்பட்டதை பெரிய அளவில் செய்தியாக்க தேன் கூட்டினை கலைத்தது போல ஆவேசமான எதிர்ப்புகள் எழுந்தன. அதனை மட்டுப்படுத்தும் வண்ணமே, ஏற்கனவே கூறிய சப்பைக்கட்டுகள்.


இக்கட்டுரை முழுவதும் நான் எடுத்து வைத்த எனது அனுமானங்கள் சரியாக இருப்பின், அட்டவணைப் பிரிவினருக்கும் க்ரீமி லேயர் கொள்கை பொருந்தும் என்று தெளிவாக ஒரு தீர்ப்பினை தர உச்ச நீதிமன்றம் தயங்கும். தொடர்ந்து நடக்கும் செய்திகள் எனது அனுமானம் சரியே என உணர்த்துகிறது.


இறுதியாக, பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே க்ரீமி லேயர், தாழ்த்தப்பட்டவர்களுக்கல்ல. க்ரீமி லேயர் கொள்கையினை வரையறுத்த மண்டல் கமிஷன் வழக்கு அட்டவணைப் பிரிவினருக்கல்ல என்று பிரச்னையினை தணிக்கும் எவருமே, ஏன் அவ்வாறு பொருந்தாது என்று கூறுவதில்லை.

ஏனெனில், க்ரீமி லேயருக்கு ஏன் இட ஒதுக்கீடு கூடாது என்ற பொதுக்கருத்தினை சட்டக் கருத்தாக வைத்த உச்ச நீதிமன்றத்தின் காரணங்கள் அப்படியே அட்டவணைப் பிரிவினருக்கும் பொருந்தும். பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு க்ரீமி லேயர் என்றால், அட்டவணைப் பிரிவினருக்கும் அப்படியே!

ஆனால், அவ்வாறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறுமானால், ‘பொதுக்கருத்துகளும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பாதிக்கும் ஒரு காரணி’ என்ற எனது அனுமானம் உண்மையாகும். அப்படி ஒரு நிலையில் அது அப்சல் வழக்கானாலும் சரி, இட ஒதுக்கீடு பிரச்னையானாலும் சரி, நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து ஆர்ப்பாட்டங்கள் கூடாது என்று கூறுவதில் நியாயம் இல்லை, ஏனெனில் ஆர்ப்பாட்டம் என்பது பொதுக்கருத்தினை உருவாக்கும் முக்கியமான கருவிகளில் ஒன்றுதானே.

(இட ஒதுக்கீடு க்ரீமி லேயர் மற்றும் அப்சல் குரு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து 28/10/06 அன்று எழுதப்பட்ட கட்டுரையின் இரண்டாம் பகுதி)

தீர்ப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

உச்ச நீதிமன்றத்திற்கு இது போறாத காலம் போல. பின்னர் இப்படியா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அதன் மூன்று தீர்ப்புகள் நாடு தழுவிய அளவில் விவாதத்தினை ஏற்ப்படுத்தும்?

சமீப காலங்களில் நீதிமன்ற தீர்ப்பானது இவ்விதம் மக்களிடையே விவாதத்திற்குள்ளாவது பெருகி வருகிறது. மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையினை குலைக்கும் வண்ணம் மோசமான விளைவுகளுக்கு இவ்விதமான விவாதங்கள் இட்டுச் செல்லலாம் என்று கூறப்பட்டாலும், இது ஒரு நல்ல சமிக்கையே என்றே நான் கருதுகிறேன்.

நீதிமன்ற தீர்ப்பினைk குறித்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், விமர்சனங்களை வைப்பது நீதி பரிபாலன முறையின் முன்னேற்றத்திற்குதான் வழிகோலுமே தவிர வீழ்ச்சிக்கல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் பல குறைபாடுகளை மீறியும், மக்களுக்கு நமது நாட்டில் நம்பிக்கையளிக்கும் வெகு சில அரசு துறைகளில் நீதித்துறையும் ஒன்று. மோசடித்தனமான பழிகூறுதல்கள் (malafide or frivolous allegations) கேட்பவர்களாலேயே நிராகரிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

உதாரணமாக அப்சல் வழக்கினை எடுத்துக் கொண்டால், அப்சலை குற்றவாளி என்றது தவறு என்ற விமர்சனம் ஏதும் வைக்கப்படவில்லை. அவ்வாறான விமர்சனங்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கே இயலும். அவற்றின் பலன் ஒரு சட்ட மாணவருக்காகத்தானேயொழிய (academic interest) மற்றவர்களுக்கல்ல. விவாதங்கள் அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்தே.

இங்கு நாம் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நீதிபதி தனிப்பட்ட வகையில் மரண தண்டனையினை எதிர்ப்பவராக இருக்கலாம். ஆனால், சட்டம் மரண தண்டனை அளிக்கக் கூறும் ஒரு வழக்கில் அவர் மரண தண்டனையினை அளித்தலே சரியான தீர்ப்பாக இருக்க முடியும். மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது பாராளுமன்றத்தின் பணி. அவற்றில் நீதிபதி தனது சொந்தக் கருத்தினை நுழைத்தல், நீதித்துறையின் சமநிலையினை (consistency) பாதிக்கும் என்பது எனது எண்ணப்பாடு.

சொந்தக் கருத்து என்பது பொதுக்கருத்தினை உள்வாங்கி உருவாக்கப்படும் உணர்வு. பொதுக்கருத்து (Public Opinion) என்பதனை மக்களாட்சியின் ஒரு தூணாகவே அரசியல் வல்லுஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பொதுக்கருத்து என்பது பத்திரிக்கைகளில் ‘ஆசிரியருக்கு கடிதம்’ கூறப்படும் கருத்துகளின் தொகுப்பு என்பதாகவே ஒரு தோற்றம் எடுத்து வைக்கப்படுகிறது. அதாவது படித்த நடுத்தர வர்க்க மக்களின் பொதுவான எண்ணப்பாடு. ஆனால் இதையும் கடந்து மக்கள் சமுத்திரத்தின் ஆழத்தில் யாரும் அறியாமலேயே பொதுவான கருத்து பல சமயங்களில் உருப்பெறுகிறது. இது வெளித்தெரிவதில்லை. ஆனால் பல அரசாங்கள் வீழ்ந்ததற்கும், எழுந்ததற்கும் இவ்வகையான பொதுக்கருத்துகளே காரணமாக இருந்துள்ளன.

அவசரநிலைக்குப் பிறகு இந்திரா காந்தி தோற்றதற்கும், எண்பதில் எம்ஜிஆர் ஜெயித்ததற்கும், இந்தியா ஒளிர்ந்ததற்கு பிறகும் வாஜ்பாய் வீட்டுக்கு போனதற்கும் வெளித்தெரியா பொதுக்கருத்தே காரணம்.

ஆக, ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் கருத்துகளையும் மீறி யாரும் உணராமலேயே சமுதாயத்தின் ஆழத்தில் உருப்பெரும் கருத்தும் இருக்கலாம். நீதிபதிகள் ‘படித்த நடுத்தர வர்க்கத்தை’ (educated middle class) சேர்ந்தவர்கள். எனவே ‘நடுத்தர வர்க்கத்து கருத்தோடு’ இசைவான அவர்களும் கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறான நிலையில் தங்களது சொந்தக் கருத்தினை பொதுக்கருத்து என்று அவர்கள் நம்புவதே தவறான ஒரு முடிவு. அதனை அடிப்படையாக வைத்து வழக்கினை தீர்க்க நினைத்தால், அது சரியான நீதிபரிபாலன முறையாக இருக்காது.

அப்சல் வழக்கில், ‘அப்சலுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவது மூலமே சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மனவோட்டத்தினை திருப்திப்படுத்த இயலும்’ என்று நீதிபதிகள் கூறியது தீர்ப்பினை விமர்சிக்க விரும்பும் எவரும் அடிக்கக்கூடிய ‘weak link’. தீர்ப்பானது சட்ட வினாக்களுக்கு உட்பட்டு அமைந்திர்ந்தால், அதில் தவறிருந்தாலும் சட்ட புத்தகங்களில் மட்டுமே விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்திருக்கும். அப்சலுக்கு மரணதண்டனை கூடாது என்ற ஆர்ப்பாட்டங்களும் அரசினை நோக்கிய குரலாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் மரண தண்டனையின தளர்த்துவது அரசுக்கு இயலக்கூடிய காரியம். ஆனால், நீதிபதிகள் பொதுக்கருத்தினை தங்களது தீர்ப்புக்கு துணையாக அழைத்துள்ளதால், சட்ட வல்லுஞர்களையும் தாண்டி பொது மக்களும் தங்களது விமர்சனத்தினை எடுத்து வைக்க முன் வருவது இயற்கையே!

அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம், பொதுக்கூட்டம் போன்றவை பொதுக்கருத்தினை உருவாக்கும் கருவிகள். பல்வேறு வகையான பொதுக்கருத்தினை உருவாக்க இயலும் பல்வேறு மக்கள் குழுக்களைப் போலவே, மரண தண்டனை எதிர்ப்பு என்ற பொதுக்கருத்தும் உருவாக்கப்பட இவ்வகையான சாதனங்கள் கூடாது என்று கூறுதல் இயலாது.


இந்திய மக்கள் தொகை 100 கோடி! இதில் எத்தனை நபர்களுடைய எண்ணப்பாட்டினை நீதிபதிகள் தங்களது ‘collective conscience’ கருத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது மக்களுடைய ஒருங்கிணைந்த கருத்து அப்சலுக்கு மரணதண்டனை அளிக்க விரும்புகிறது என்பதற்கு நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியம் என்ன?

எனவே, நீதிமன்றத்திற்கு வெளியில் நடப்பதை தங்கள் கருத்தில் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள முயலுகையில், வெவ்வேறு எண்ணம் கொண்ட மக்கள் குழுக்கள் தங்களது கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று ஆர்ப்பாட்டம். அவ்வளவே!

-oOo-

பொதுக்கருத்து தங்களது தீர்ப்பினை வழிநடத்தி விடக்கூடாது என்பதற்கு சில நீதிபதிகள் செய்தித்தாள்களை படிப்பதை கூட நீதிபதிகளாக இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்தனராம். சமுதாய நிகழ்வுகள் மீது தன்னுடைய தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு ஒரு முற்றும் துறந்த முனிவரின் (heretic) மனநிலையில் வாழ்ந்த நீதிபதிகளுமுண்டு. ஆனால், உலகம் சுருங்கி வரும் விஞ்ஞான யுகத்தில் இவ்வாறான வாழ்க்கை சாத்தியமல்ல. எனவே நீதிபதிகள் முற்றிலும் சார்பற்ற நிலை கொண்டவர்களாக இருத்தல் என்பது இயலாத ஒன்று.

இயற்பியல் விதிகளின் படியே முழுமையான ஒரு நிலை (absolute state) என்பது சாத்தியமல்லாதிருக்கும் பொழுது, ஒர் கட்டுக்குள் அடக்க முடியாத (unpredictable) மனித மனங்களை ஆராயும் நீதி பரிபாலனம் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றில்லாமல் அதன் பயணம் அவ்வாறான நிலையினை நோக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அளவோடு நமது எதிர்பார்ப்புகள் திருப்தியுற வேண்டும்.

ஆனால் அந்த பயணத்தை வழிநடத்துவதற்கு பொதுக்கருத்துகள் பயன்படுகையில், பொதுக்கருத்தின் பல்வேறு வகையான வெளிப்பாடுகள் தேவையான ஒன்றுதான்.

நீதிமன்றங்கள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகளில் தீர்ப்பு கூறுகின்றன. மிக அரிதான தீர்ப்புகளைத் தவிர மற்றவை இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாவதில்லை. நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் முன் வைக்கப்படும் பொருட்களையும் தாண்டி வெளியில் நடப்பதையும் நீதிபதிகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ கவனத்தில் கொள்கையில் விவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தவிர்க்கப்பட முடியாதவை.

உதாரணமாக, டெல்லியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நாளிதழ் செய்தியினை ஒரு பொது நல வழக்கின் மனுவாக ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை (summons) அனுப்புகிறது. புதிதாக உருவாகியுள்ள சட்டவியலில் இது முறையான ஒன்றுதான். ஏனெனில் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் மறுக்கப்படுவது அவர்கள் ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life) என்ற அடிப்படை உரிமையினை மீறியதாகும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன. பின்னர் அரசு எந்த எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகையில், அரசுப் பணியினை (executive functions) நீதிமன்றம் மறைமுகமாக கையிலெடுக்கிறது. அவ்வாறான நிலையில் அந்த தீர்ப்பின் மீதான விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுவதை தேவையில்லை என்று கூற இயலாது.

ஏனெனில் அரசியல்வாதிகளைப் போலன்றி பிரச்னையின் அனைத்து பரிமாணங்களையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளுதல் இயலாது. ஒருவேளை பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது நோய் பரவ காரணம் என்று கூறப்பட்டு, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். டெல்லியிலுள்ள குடிசைவாசிகள், கழிப்பிடமே இல்லாத பொழுது நாங்கள் எங்கே செல்லுவோம் என்று ஆர்ப்பாட்டம்தான் நடத்த இயலும். செய்தித்தாளின் செய்தியினைப் போல ஆர்ப்பாட்டமும் நீதிமன்றத்திற்கு ஒரு செய்திதான்.

மீண்டும் கூறுவதனானால், அப்சல் வழக்கில் கூட அவர் குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பெழுத வேண்டும் என்று கூறுவது சரியானதாயிருக்காது. யார் யாரோ நகர்த்திய காய்களில், வேறு வழியின்றி பங்கு கொண்ட பகடைக்காயாக அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக மரண தண்டனை அளித்திருக்க வேண்டுமா என்பது ஒரு விவாதம். தீர்ப்பில் மரண தண்டனைக்கான காரணங்களை நீதிபதிகள் அடுக்கியதில் பொதுக்கருத்தினை கருத்தில் கொண்டதில் இவ்வகையான விவாதம் எழுவது இயல்பே!

அடுத்த விவாதம் மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து. இதற்கு பதில் கூற வேண்டியது அரசாங்கமே தவிர நீதிமன்றங்கள் இல்லை.

நீதிபதிகள், தங்கள் முன் வைக்கப்படும் வழக்குரைஞர்களின் வாதங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே வழக்குகளை, முக்கியமாக பொது நலன் சார்ந்த வழக்குகளை தீர்ப்பது இல்லை என்பது, ஏதாவதொரு பிரச்னையில் பல்வேறு காலகட்டங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் புரியும்.

உதாரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னையில் 1972, 1996, 2002 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை ஆராய்ந்தால் எப்படி கால ஓட்டத்திற்கு ஏற்ப நீதிபதிகளும் தங்களது கருத்துகளை வடிவமைத்துக் கொள்கின்றனர் என்பதை உணரலாம். கவனிக்க வேண்டியது இந்த மூன்று தீர்ப்புகளுக்கும் அடிப்படையான அரசியலமைப்பு சட்டபிரிவுகளில் ஏதும் மாற்றமில்லை. மாறியது நீதிபதிகளின் மனப்போக்கு, அதாவது பொது மக்களின் மனப்போக்கு!

எனவே, இட ஒதுக்கீடு பிரச்னையிலும் நீதிபதிகள் நீதிமன்றத்தில் வைக்கப்படும் வாதங்களையும் தாண்டி தாங்களறியாமலேயே, பொதுக்கருத்துகளாலும் தங்களை வசப்படுத்திக் கொள்வது எதிர்பார்த்ததுதான். நீதிபதி திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் மண்டல் கமிஷன் வழக்கு என்று அழைக்கப்படும் இந்திரா சஹானி வழக்கில் (Indra Sawhney Vs Union of India AIR 1993 SC 477) ‘இட ஒதுக்கீடு 100% அளவிற்கு இருக்க இயலாது எனினும் அதிகபட்சம் 50%தான் என்ற கட்டுப்பாடும் விதிக்க இயலாது என்றும் ‘க்ரீமி லேயர்’ என்ற பெயரில் நீதிமன்றம் சமூக கொள்கை முடிவில் தலையிடுதல் கூடாது என்றும்’ தனியே தீர்ப்பு எழுதியதற்கு அவர், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகிய தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாயிருக்குமா என்று ஒரு கேள்வியினை எழுப்பினால், இல்லை என்று ஆணித்தரமாக மறுப்பது கடினமான காரியம்.

(இட ஒதுக்கீடு க்ரீமி லேயர் மற்றும் அப்சல் குரு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து 28/10/06 அன்று எழுதப்பட்ட கட்டுரையின் முதல் பகுதி)

Thursday 27 August 2015

“மரிய ‘லூஸ்’ அந்தோணி”


“மரிய ‘லூஸ்’ அந்தோணி”

என்ற டவாலியின் சத்தமான குரலில் நீதிமன்றத்தில் தலையைக் குனிந்து படித்துக் கொண்டிருந்தவன் சற்று திடுக்கிட்டுப் போனேன். அதுவரை இறுக்கமாக ‘காலிங் ஒர்க்’ நடந்து கொண்டிருந்த அந்த தாம்பரம் நீதிமன்றத்தில், ஏதோ பார்ட்டி’யை டவாலி இப்படி அழைத்ததில் ஆங்காங்கே புன்னகைக் கீற்றுகள்.

நல்லவேளை சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.


 பெஞ்ச் க்ளார்க், எதுவும் நடவாதது போல முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, ‘திரும்ப கூப்பிடுங்க. மரிய க்ரூஸ் அந்தோணி’

டவாலி இன்னமும் சத்தமாக, ‘மரிய லூஸ் அந்தோணி’ என்றதும் நீதிபதி ‘இது கதைக்காகாது’ என்ற பாவனையில் குனிந்து மரிய அந்தோனியை எக்ஸ்பார்ட்டியாக்கி உத்தரவு எழுத ஆரம்பித்து விட்டார்.

இருபது வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், ‘இந்திரா காந்தி’ என்று சத்தமாக அக்யூஸ்ட் ஒருவரை கூப்பிட்டது வேடிக்கையாக இருந்தது. அங்கே ‘ஐகோர்ட் துரை’ என்று கூட ஒரு வழக்காடி உண்டு.

ஆனால் என் பெயரே ஒருமுறை அப்படிக் கூப்பிடப்படுவதைக் கேட்கையில் வெட்கமாகி விட்டது.

மாஜிஸ்டிரேட்டாக வேலை கிடைத்து வெளியூர் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடந்து கொண்டிந்தது.

சாதாரண உடையில் பெஞ்சில் அமர்ந்திருந்தவனைப் கவனித்த நண்பர் டவாலியைக் கூப்பிட்டு ஏதோ சொல்ல, அவர் நேராக வாசலுக்குச் சென்று, ‘பிரபு ராஜதுரை’ பிரபு ராஜதுரை’ என்று சத்தமாக கூப்பிடவும் நடப்பது என்னவென்று எனக்கு புரியும் முன்னரே மாஜிட்டிரேட் நண்பர் பதறியபடி, ‘யோவ் இங்க வாய்யா இங்க வாய்யா' என்று டவாலியை சத்தமாக அதட்டியபடியே என்னையும் பார்த்து அசட்டுத்தனமாக சிரித்தார்.

‘இல்லடா, பிரபு ராஜதுரைன்னு அங்க ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவரைக் கூப்பிட்டு என் ரூமுல இருக்கச் சொல்லுன்னுதான் சொன்னேன்’ என்றார் பின்னர்.

‘நான் நம்பமாட்டேன். பழைய கடுப்பையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கிட்டே’ என்றேன்.

Monday 24 August 2015

யானை மலையை விட்டு விடுங்கள், தயவு செய்து...

பத்து வருடங்களுக்கு முன்னர் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் திறப்பு விழாவிற்கு வந்திருந்தவன், புதிதாய் கிடைத்திருந்த டிஜிட்டல் காமிராவால் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாக எதிரேயிருந்த யானை மலையையும் சில படங்கள் எடுத்தேன். பின்னர் வீட்டிலிருந்த மேசைக் கணணியில் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, யானை மலை படத்தைக் கடந்து என்னால் செல்ல முடியவில்லை. அப்படியே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கம்பீரம், அழகு என்பதை எல்லாம் கடந்து ஏதோ ஒரு வசீகரம் என்னை யானை மலை படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது.

‘ஐந்து ஆண்டுகள் இங்கு கல்லூரியில் படித்திருக்கிறோம். பின்னர் எத்தனையோ தடவை வந்து போயிருக்கிறோம். சென்னையிலிருந்து வருகையில் மதுரை வந்து விட்டது என்பதற்கு அடையாளமாக, விடிகாலை வெளிச்சத்தில் மங்கலாக தெரியும் என்பதை விட இதன் அழகை நாம் கவனித்ததில்லையே’ என்றிருந்தது.

தொடர்ந்து யானை மலையைப் பற்றி இணையத்தில் மேய்கையில் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகப் பிரச்சித்தி வாய்ந்த ஆயிர்ஸ் மலைக்கு அடுத்தபடியாக யானை மலைதான் ஒரே பாறையில் (monolithic rock) அமைந்த இரண்டாவது பெரிய மலை என்று தெரிய வந்த பொழுது, எவ்வளவு பெரிய பொக்கிஷ்த்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே இருந்திருக்கிறோம் என்று வெட்கமாகி விட்டது.

பின்னர் மதுரை வந்த பொழுது, ஒத்தகடையில் உள்ள அனைத்து கடைகளிலும் யானை மலை படம் இருப்பதும், ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு ஆயிர்ஸ் மலை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதே போல இவர்களுக்கும் யானை மலையும் புனிதம் வாய்ந்தது என்பதும் புரிந்தது.

புனிதம் என்பதையும் மீறி அதன் அழகு! புகைப்படம் எடுக்கையில் ஒவ்வொரு பக்கமும் எந்த ஒரு வெளிச்ச நிலையிலும் வித்தியாசமாக இருக்கும்.

நண்பர் ஒருவர் யானை மலை முழுவதும் சுற்றிக் காண்பித்து மகாவீரர் சிற்பத்தைக் காட்டிய பொழுது, நபிகள் இயேசு பிறந்த காலத்திற்கும் முற்காலத்திற்கு சென்று அந்த சிற்பம் முன் நிற்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு தோன்றியது.

சில வருடங்களுக்கு முன்னர் எனது நண்பர், திமுக கட்சியைச் சேர்ந்தவர்தாம் ‘யானை மலையை கிரானைட் கல்லுக்காக உடைக்கப் போவதாக சொல்கிறார்கள். ஏதாவது செய்’ என்றதற்கு ‘அரக்கத்தனமான எண்ணம் கொண்ட மனதால்தான் அப்படி ஒரு காரியத்தை நினைத்துக் கூட பார்க்க முடியும். அதெல்லாம் ஒத்தக் கடைக்காரர்கள் விடுவார்களா’ என்று அலட்சியப் படுத்தினாலும், வேறு வடிவில் அப்படி ஒரு முயற்சி நடந்ததும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உடனடி நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டதும் வரலாறு.

ஏன், இன்று திடீரென யானை மலை புராணம் என்றால் மாலை உலகனேரிப் பக்கம் சென்ற பொழுது, ‘அங்கே பாருங்கள் யாரோ யானை மலை மீது நாமத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள்’ என்று மனைவி சுட்டிக் காட்டியதில் இருவரும் சற்று திகைத்துப் போனோம்.

2002ம் ஆண்டில் ஹிமாலய மலைப் பாறைகளில் விளம்பரங்கள் எழுதியதற்காக உச்ச நீதிமன்றம் பெப்ஸி கோக் போன்ற பல நிறுவனங்களுக்கு பெரும் தண்டத் தொகை விதித்த உத்தரவை மீறும் வண்ணம் இந்த நாமமும் யானை மலையின் முக்கியமான இடத்தில் தீட்டப்பட்டுள்ளது. Rape of the Rock என்று அந்தச் செயலை உச்ச நீதிமன்றம் வருணித்தது.

எந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் நாமம் தீட்டுவதை புனிதமாக கருதுபவர்கள் கூட எனது ஆதங்கத்தைப் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். இது இத்துடன் நிற்கப் போவதில்லை.

தயவு செய்து, யானை மலையில் வேண்டாமே!

Monday 17 August 2015

சுகர் ஃபிலிம்

நல்ல வேளை இந்தப் படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. தமிழர்கள் இதைப் பார்க்க நேரிட்டால் டாஸ்மாக் கடைகளை விட்டு விட்டு பல்பொருள் அங்காடிகளையும், ஸ்வீட் ஸ்டால்களையும் மூடக் கிளம்பி விடுவார்கள்.

அந்த அளவிற்கு வெள்ளைச் சீனி அல்லது சர்க்கரை அப்புறம் அது என்ன, ஆங்…அஸ்கா’வை வில்லனாக்கியிருக்கிறார்கள்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எழுந்த திகிலில், ‘இன்றோடு சீனிக்கு முழுக்கு. நாளை முதல் காப்பி கூட சீனியில்லாமல்தான்’ என்று உறுதி கொண்டு ப்ரிட்ஜில் மீதியிருந்த கால் கிலோ பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீமையும் தின்று விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

2004ம் ஆண்டில் இதே போன்று ‘மார்கன் ஸ்பர்லாக்’ என்ற அமெரிக்கர் முப்பது நாட்களுக்கு வெறும் மெக்டோனால்ட் உணவுகளை மட்டும் சாப்பிட்டு அதனால் அவரது உடல் எடை மற்றும் ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தலோடு மோசமான மனநிலையும் ஏற்ப்படுவதை ‘சூப்பர் ஸைஸ் மீ’ என்ற பெயரில் எடுத்த ஆவணப்படத்தைப் பலர் பார்த்திருக்கலாம். அந்தப் படத்தின் பாதிப்பிலேயே மெக்டோனால்ட் சூப்பர் ஸைஸ் பர்கர்களை கைவிட்டது என்றும் கூறப்பட்டது.

தற்பொழுது அதே டெம்ப்ளேட்டில் ‘டேமன் கேமியூ’ என்ற ஆஸ்திரேலிய நடிகர் அறுபது நாட்களுக்கு நாம் சாதாரணமாக தரமான உணவுகள் என்று நினைக்கும் உணவுகளை உண்டு அவற்றிலுள்ள சர்க்கரையின் அளவினால் அவரது உடல் எடை, ஈரலில் கொழுப்பு அதன் காரணமாக இடுப்பளவு கணிசமாக கூடுவதாக ‘த சுகர் ஃபிலிம்’ என்ற படத்தை எடுத்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.

முக்கியமாக கோக், பெப்ஸி போன்ற குளிர்பான நிறுவன நிர்வாகிகள் ஏறக்குறைய ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன்கள் போல சதி செய்து அவற்றின் மீதான அடிக்ஷனை ஏற்ப்படுத்தி உலகத்தை பெரும் சுகாதாரக் கேட்டில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று சட்டச் சிக்கல்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிப்படையாகவே படம் பேசுகிறது, ஆனால் சுவராசியமாக...

மது, புகையிலை, எல் டி எல் கொழுப்பை விடவும் சீனி மனித குலத்துக்கு அதிகக் கேடுள்ளது போலவும் சீனி தயாரிப்பு நிறுவனங்கள் மக்களிடமிருந்து அதை மறைப்பதாகவும் பார்க்கும் யாரையும் இப்படம் நம்ப வைப்பதில் வெற்றியடைகிறது என்பதுதான் உண்மை.

முக்கியமாக, ‘சீனியில்லாமல் வாழ்ந்து பார்த்தால், அவை ஏற்ப்படுத்தும் மந்த நிலையிலிருந்து மீண்டு புத்துணர்வை உணர்வீர்கள்’ என்று முடிக்கையில் ‘சே! இந்தப் பாழாப் போன காப்பியால கூகுள் சி இ ஓ ஒருத்தன் இப்படி பட்டர் ஸ்காட்சை தின்னுகிட்டு டிவிடியில படம் பார்த்துக்கிட்டு இருக்கானே’ன்னு நொந்து கொண்டேன்.

Sunday 16 August 2015

சோளகர் தொட்டி

‘கோர்ட்டில் கதையெல்லாம் படிக்கக் கூடாது’ என்ற குரல் கேட்டு தலையைத் தூக்கினால், பார் கவுன்ஸில் சேர்மன் செல்வம். அவருக்கே உரிய வசீகரமான புன்னகையுடன் இன்று காலை என் அருகே வந்து அமர்ந்தார்.

கையிலிருந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து, ‘தமிழில் குறிப்பிடத்தக்க நாவல் இது. எழுதியவர் ஒரு வழக்குரைஞர். தற்பொழுது கோவையில் பணியாற்றுகிறார்’ என்றேன்.

புத்தகத்தை வாங்கிப் பார்த்தவரிடம், ‘திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்குரைஞர் செல்வராஜ், ‘தோல்’ என்ற நாவல் எழுதியதற்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்’. அவரைப் பாராட்டி எங்களது சங்கத்தில் கூட்டம் நடத்தியுள்ளோம். வழக்குரைஞர் தொழிலுக்கு வெளியேயும் சாதித்துள்ள இவர்களைப் போன்றவர்களை அழைத்து ஏன் பார் கவுன்ஸில் கவுரவிக்கக் கூடாது’ என்றதற்கு ‘ஆமாமா, கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்’

நேற்று வரை நம்மைப் போல வழக்குரைஞராக பணியாற்றி இன்று நீதிபதியாக பதிவியேற்றுள்ள ஒரே காரணத்தை வைத்து ஒருவரை அழைத்து பேச வைத்து கவுரவிக்கும் பார் கவுன்ஸில், கடின ஆராய்ச்சி மூலம் சமூகத்தின் முக்கியமான நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள சாதனையாளர்களைப் பாராட்டுவதால் தனக்கு பெரும் கவுரவம் தேடிக் கொள்ளலாம்.

வழக்குரைஞர் பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையால், மலையக பழங்குடி மக்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பாதிப்புகளையும் அதன் அவலங்களையும் ஆவணப்படுத்தும் முக்கியமான புதினம். வீரப்பன் இல்லை என்றாலும், காடுகளுக்குள் நகரத்து மக்களின் ஊடுருவலால் இன்றில்லாவிட்டாலும் எப்படியும் ஒரு நாள் சிதிலமடைந்துப் போகப் போகும் சோளகர்களின் கொண்டாட்டமான வாழ்க்கை முறையை உறையச் செய்து படிப்பவர் அனைவரையும் கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்லும் கால யந்திரமாக, பாலமுருகன் தனது புதினத்தைப் படைத்துள்ளார்.

இரு பாகங்களாக அமைந்த நாவலின் முதல் பகுதியில் நிகழும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் நம்மை உற்சாகப்படுத்தும் அதே சமயம் அடுத்து நிகழப்போகும் பயங்கரங்களுக்கான அச்சத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றன. இரண்டாம் பகுதி செல்லச் செல்ல தொடர்ந்து படிப்பதற்கு கடுமையான் நெஞ்சுரமும் இரக்கமற்ற மனசும் வேண்டும்.

வாழ்வதற்கான உரிமை, மனித உரிமை, பேச்சுரிமை என்று உரத்த குரலில் பேசிப் புளங்காகிதம் அடையும் நாமும், நமது ஊடகங்களும் நீதிமன்றங்களும் சிவண்ணாவின் பெண்டாட்டி மாதி அவள் மகள் சித்தி இன்ன பிற சோளகப் பெண்டுகளின் முன்னால் நிர்வாணமாக நிற்பது போல ஒரு அருவருப்பு அதிரடிப்படை காவலர்கள் முன் அவர்கள் அடைந்த அருவருப்பையும் விடவும் அதிகமாக படிக்கும் நம்மை படர்கிறது.

அந்த உணர்வு ஒன்றுதான் பாதிக்கப்பட்டவர்களிடம் நாம் வேண்டும் பாவமன்னிப்பாக இருக்குமென்றால், பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ அதை நன்றாகவே ஊட்டுகிறது.

Monday 10 August 2015

நிகழ்காலத்திலேயே நின்று விடுவதன் அச்சம்!

பத்லாபூர். ஹிந்தி திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் என்ற தமிழர் இயக்கியது. அதனாலோ என்னவோ தமிழில் பேசும் பாத்திரமும் உண்டு. சிறந்த திரைப்பட ரசிகர் ஒருவரின் சிபாரிசால் பார்த்தாலும் திரைக்கதை பல திசைகளிலும் பயணித்ததால் கொஞ்சம் இழுவையாகி விட்டது.

ஆனால், நவாசுத்தீன் சித்திக் என்று ஒருவர் வில்லனாக வருகிறார். செய்த தவறுகளுக்கு கடைசி வரை மனம் திருந்தாமலிருப்பதைத் தவிர பெரிய வில்லத்தனம் ஏதும் செய்யவில்லை என்றாலும், அவர் வரும் காட்சிகளில் ஏறக்குறைய ஹன்னிபல் லெக்டர் அளவிற்கு நம் மனதை ஏதோ விரும்பத்தகாத உணர்வில் சில்லிட வைக்கிறார். அந்தக் காலத்தில் நம்பியார் எதற்கு கைகளைப் போட்டு அப்படி பிசைந்தார் என்றிருக்கிறது. வடநாட்டு பிரகாஷ்ராஜான நானா பட்டேகர் கூட சிறந்த ‘நடிகர்’தான்.

நான் சொல்ல வந்தது கதாநாயகனான வருண் தவானைப் பற்றி. பெரிதாக ஒன்றும் இல்லை. அடிக்கடி லேசாக தலையை வலப்பக்கம் சாய்த்து கூர்மையாகப் பார்க்கும் போதெல்லாம், வேறு யாரையோ நினைவு படுத்தினார். இறுதியில் கண்டு பிடித்து விட்டேன். க்யானு ரீவ்ஸ்.

அது என்னமோ அடிக்கடி இப்படி நடக்கிறது. இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை சுவராசியமான திரைக்கதையாக்கியுள்ள ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ என்ற அருமையான படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ள ஃபெலிஸிடி ஜோன்ஸ் திவ்யஸ்ரீயை ஞாபகப்படுத்தினார்.

ஹாக்கிங்’கின் வாழ்க்கை கற்பனைக் கதையை விட அதிக உணர்வலைகளால் நிரம்பியிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதுவும் ஹாக்கின்ஸாக நடித்துள்ள எட்டி ரெட்மெய்னின் நடிப்பும் ஒப்பனையும், பார்த்து அனுபவிக்க வேண்டும்.

நேற்றுப் பார்த்த ‘த ஏஜ் ஆஃப் அடலைன்’ என்ற படத்தில் ‘யார் இது அமிதாப் பச்சன் மாதிரி’ என்று பார்த்தால் கல்லூரிக் கால ஹீரோ ஹாரிஸன் ஃபோர்ட்.

ஏதோ அசந்தர்ப்பமான நிலையில் விபத்துக்குள்ளாகும் கதாநாயகி அடலைன் மொண்ணையான விஞ்ஞான விளக்கத்தில் வயதாகும் தன்மையை இழந்து 29 வயதிலேயே அவரது 107ம் வயது வரை நின்று விடுகிறார். அதனால் ஏற்ப்படும் பிரச்னையை அழகிய காதல் கதையாக்கியிருக்கிறார்கள். வயதாகாமல் போவதில் என்ன பிரச்னை என்று ‘If I had your looks and energy, I’d fall in love tomorrow’ என்று கூறும் அடலைனின் அறுபது வயது மகளைப் போல நினைக்கலாம்.

ஆனால் ‘It’s not the same when there’s no future’ என்று தனது காதலுணர்வைப் பற்றி அடலைன் கூறுவதில் பிரச்னை புரியும். இனிமையாக முடியும் சாதாரண காதல் கதைதான். அசாதாரண பிரச்னையால் வித்தியாசமாக இருந்தது.

எதிர்காலத்திற்குள் பயணிப்பது அச்சமூட்டுவதாயிருப்பினும் நிகழ்காலத்திலே நின்று விடும் உணர்வுதான் உண்மையிலேயே அச்சமூட்டுகிறது. ஹாக்கிங்’கிடம் அடைக்கலம் தேடினாலும், எதிர்காலம் என்ற ஒன்றே ஒருநாள் இல்லாமல் போகப் போகிறது என்று விஞ்ஞானத்தாலும் அச்சமூட்டுகிறார்.

Saturday 8 August 2015

SUPREME COURT DOES IT AGAIN; BUT IN OPPOSITE DIRECTION

SC CALLS FOR NEW LAW TO REGULATE SOCIAL MEDIA : TIMES OF INDIA

What went up has come down or one may add the pendulum has swung into other direction; hardly five months passed since the netizens rejoiced and celebrated the brilliance exhibited by Justice R.F. Nariman in striking down Sec 66A of the Information Technology Act. I was however skeptical and warned in my blog that still it was possible to harass a common man for what he would express in social media, if the state machinery was so determined.

I put down my fears that it was not the law but the criminal procedure, particularly the powers available with the state to arrest and incarcerate any person even before securing a conviction; those hailing the Judgment and the legal brains discussing the niceties of the law involved, I thought were totally alienated from the ground situation.

I did not feel happy when I was proved right in my apprehension by our police two days back; they could arrest and send a young laboratory owner to jail who without knowing what was to come posted a gossip on the health condition of Chief Minister, in his WhatsApp account.

The Supreme Court yesterday, feeling the heat from what spread through the social media on the conduct of Senior Lawyers and Judges turned to the government for rescue; but how? Alas, pleading the Parliament to bring a new law to curb social media!

I restate, it is not the substantive law but the procedure which requires attention, if we really want to curb this menace. We have had enough of laws to meet this situation and a new legislation is the last thing we need to think of. The legal pundits who discuss and think over this are oblivious of a painful reality that our budgetary constraints would keep our infrastructure awfully short of what is actually required to meet the demands of a county of one billion; either it is the law enforcing authority or the justice delivery system.

It takes more than a decade to prosecute and punish a corrupt or even a terrorist, whose crimes are to be given utmost priority. New legislation means giving birth to new crimes or rechristening existing crimes, which consequently bring additional pressure upon the system, which already is bursting in its seams; about judiciary less said the better, it looks as if we are witnessing a star collapsing on its own weight.

That brings into focus, the evil of quick justice; arrest, remand and be satisfied that the accused is harassed enough with the incarceration and running forever through the maze of judicial complexities; the problem is the possibility of dragging innocents into this mess without any accountability as this process does not require the adherence to the natural justice principle of audi alteram partem.

Chilling effect is already there, irrespective of the striking down of Section 66A and any new legislation may help in freezing the ideas of a free mind with more severity.

Legally speaking, what best that could be done at present is to carry forward the directions of the Supreme Court in Arnesh Kumar (2014) 3 MLJ (Crl) (SC) and to hone it to perfection by experience. It is unfortunate the directions remain a dead letter and no Court is taking serious note of such blatant contempt of the Supreme Court.

If we leave aside law, I would like to conclude that it is time we must realise that we are living in digital age which has changed the rules of life; earlier gossips spread by words of mouth with little reach and lesser shelf value but social media has made it possible with a click of mouse it to reach every corner of the world and worse with permanency; no law or court can curb slander anymore as social media has no physical borders and with an additional insulation of anonymity. We need to realize this and learn to accept slander in our stride and to ignore; most politicians have evolved, judges are following and lawyers have no option.


Thursday 6 August 2015

ஆல் அபவுட் மை மதர் 1999

எழுத்தாளர் சுஜாதா மூலமாக அறிந்த ஜென் கதை.

‘குருவே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எது?’

‘தந்தை இறக்கிறான். மகன் இறக்கிறான். பேரன் இறக்கிறான்’

கேள்வி கேட்டவனைப் போலவே எனக்கும் முதலில் குழப்பம், ‘அது எப்படி இறப்பது மகிழ்ச்சியாகும்’ என்று. அண்ணன் விளக்கியதற்குப் பின் புரிந்தது.

“There are people who think that children are made in a day. But it takes a long time, a very long time. That's why it's so awful to see your child's blood on the ground. A stream that flows for a minute yet costs us years”

நேற்று முன்னிரவு பார்த்த ‘ஆல் அபவுட் மை மதர்’ (1999) என்ற ஸ்பானிய படத்தில் கண் முன்னே நடக்கும் சாலை விபத்தில் மகனைப் பறிகொடுக்கும் மானுவேலாவின் மேற்கண்ட புலம்பலில் ‘புத்திரசோக’த்தின் வலி மேலும் புரிய வந்தது. இத்தனைக்கும் மானுவேலா மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் பெறுவதற்காக உறவினர்களை மனரீதியில் தயார்படுத்தும் பணியிலிருக்கும் செவிலி. அவருக்கே அப்படி ஒரு நிலை ஏற்ப்படுகையில் அதன் வேதனையிலிருது விடுபட தனது மகனின் தந்தையைத் தேடி பார்ஸிலோனா செல்கிறாள்

தந்தை லோலா உடல்ரீதியில் ஆண் என்றாலும் மனரீதியில் பெண்ணாக வாழும் டிரான்வெஸ்டைட். பார்ஸிலோனா’வில் மானுவேலா சந்திக்கும் நபர்களும் கிடைக்கும் அனுபவங்களும் இயல்பாகவே நம்மையும் உள்ளிழுத்து இறுதியில் படம் முடிகையில் அதன் ஆழமான பாதிப்பு நம்மிலும் ஏற்ப்படுவதை அழுத்தமாகவே இயக்குஞரான ‘பெத்ரோ அல்மதோவார்’ உணர வைக்கிறார்.

ஹாலிவுட்டில் அழகு தேவதையாக மட்டுமே வலம் வந்த பெனிலோப் க்ரூஸ் ஒரு நேர்த்தியான நடிகையும் கூட என்பது ஸ்பானிஷ் படங்களைப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது. ‘லோலா’வுடனான பழக்கத்தில் ஒரு குழந்தை மட்டுமல்லாது, எய்ட்ஸ் நோயை’யும் பெறும் இளம் சமூக ஊழியராக வரும் பெனிலோப் க்ரூஸுக்கு அடைக்கலம் தந்து பிறக்கும் குழந்தைக்கும் மானுவேலாவே தாயாகும் நம்பிக்கைக் கீற்றோடு படம் நிறைவடைகிறது.

மானுவேலா’வின் உற்ற தோழியான திருநங்கை ‘அக்ரடோ’ படத்தின் பின்னணி இசை போலவே மறக்க முடியாத மற்றொரு பாத்திரம்.

இயக்குஞர் படத்தை தனது அம்மாவுக்கும் ‘To all women who act. To men who act and become women. To all the people who want to be mothers’க்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

Sunday 2 August 2015

பேகாஸ் (2012)


குர்திஸ்தான்; உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் துயரங்களில் பாலஸ்தீனத்தையும் விட அவலம் மிகுந்தது. அந்த அவலத்தையும் சுவையாக்கி தொடர்ந்து திரைப்படங்கள் உருவாக்கப்படுவதுதான் அதிசயம்.

இயலாமையின் ஒரே ஆறுதல் கலைதான் போல.

சதாம் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி ஸ்வீடனில் வசித்து வரும் கர்ஸான் காதர் என்ற குர்திஸ் இளைஞர் இயக்கிய பேகாஸ் (2012) என்ற குர்திஸ் படத்தை நேற்று இருமுறை தொடர்ந்து பார்க்க நேரிட்டதில் வருத்தமில்லை. இரண்டாம் முறை அதன் ஆழமான ஒளிப்பதிவை நிதானமாக ரசிக்க முடிந்தது. எந்தக் காட்சியை நிறுத்தினாலும், நேஷனல் ஜியாக்கிரபிக் புத்தகத்தை புரட்டுவது போல அப்படியொரு காட்சியமைப்பு.

நிதானமா? 1990ல் குர்திஸ் நகரமொன்றில் நிகழுவதாக சொல்லப்படும் திரைக்கதை முதல் காட்சியிலேயே ஜெட் வேகத்தில் கிளம்பி ஒரு காப்பி குடிக்கலாமா என்று நாம் நினைப்பதற்குள்ளாகவே முடிந்து விடுகிறது.

துடிப்பான குட்டிப்பையன் ஸ்சானாவும் (Zana) பொறுப்பான அண்ணன் டானாவும் (Dana) போரில் பெற்றோர்களை இழந்தவர்கள். அம்மா நினைவுகள் மிச்சமிருப்பினும் அதற்காகவெல்லாம் வருந்த நேரமின்றி ஷூ பாலிஷ் செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். உள்ளூர் திரையரங்கில் பார்த்த சூப்பர்மேன் அவர்களைக் கவர அமெரிக்காவிற்கு சென்று சூப்பர்மேனைப் பார்த்து விட்டால் சதாமின் வீரர்களைப் புரட்டியெடுத்து தங்களது கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்று அதற்காக பணம் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். இடையே அவர்களது ஒரே துணையாக இருக்கும் தாத்தாவின் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்கா நோக்கிய அவர்களது பயணம் தொடங்குகிறது.

இதற்குள் ‘காக்கா முட்டை’ படம் உங்கள் நினைவுக்கு வந்தால், எது காப்பி எது இன்ஸ்பையர் என்று இங்கே பெரிய பட்டிமன்றமே நடக்கிறது இல்லையா, எது இன்ஸ்பையர் என்பதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால், பேகாஸைப் பாருங்கள்.

காக்கா முட்டையில் கதை வேறு. வேறு காட்சியமைப்பு. ஆயினும் இதன் பாதிப்பிலேயே காக்கா முட்டை கருக்கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு ஸ்சானா டானாவை நொடிக்கு முன்னூறு தடவை ‘காக்கா’ (அண்ணன்) என்று அழைப்பதை, தாத்தாவின் மரணத்தைப் போலவே ஆதாரமாகக் கூறலாம்.
இல்லை இறுதியில் 'சூப்பர்மேனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்' என்று கதறுவதையும் கூடக் கூறலாம்.

பேகாஸ் இயக்குஞர் ‘காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி’ இரண்டாம் பாகத்தினால் ஒரு வேளை இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம். பிரிந்த சகோதரர்கள் உணர்ச்சிகரமாக இணையும் காட்சியை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்.

பேகாஸ் என்றால் வீடில்லாதவன் என்று பொருளாம். மொத்த குர்திஸ் மக்களையும் குறிக்கும் குறியீடு என்பதாகவே புரிகிறது. இன்னார்தான் என்றில்லாமல் அனைவரிடம் மானாவாரியாக ஸ்சானா அடிபடுவதிலும் அதையே உணர்த்தப்படுகிறோம்.

குறியீட்டையெல்லாம் விடுவோம். நிமிடத்து நிமிடம் முகத்தில் மாறும் உணர்ச்சிகளாலும் தொணதொணவென்ற பேச்சாலும் ஸ்சானா, ஏற்கனவே நம் மனதில் நிறைந்துள்ள சின்ன காக்கா முட்டையை ‘கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்’ என்று சொல்லி தானும் நெருக்கி உட்கார்ந்து கொள்கிறான்.

ஸ்சானாவை உதறுவதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும்...

Saturday 1 August 2015

பறவை மனிதர் பால்பாண்டி

“நா யாருன்னு தெரியுதாய்யா’ன்னு போனில் கேட்டார். மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயாவைத் தவிர வேறு யாருக்கு இப்படி குரல் வரும்,ன்னேன். ‘ஹாஹ்ஹா’ன்னு சிரிச்சிட்டு ‘இந்த அன்றில் பறவை’ன்னா என்னய்யா’ன்னார். ‘ஐபிஸ் வெரைட்டிங்க. இணை தவறிப்போச்சுன்னா துணையும் வாழாது’ன்னேன். ‘வார்ரே வாஹ்’ன்னாரு”

“தங்கம் தென்னரசு ரொம்ப அக்கறையா விசாரிப்பார். கனிமொழி நல்லாத் தெரியும் ஆனா இந்தப் பிரச்னைக்கு அப்புறம் நான் அவங்களை தொடர்பு கொள்ள விரும்புறதில்லை”

“அப்ப ஏழாவது படிச்சுட்டிருந்தேன். அப்பா ஏதோ சொல்லிட்டாருன்னு மரத்தடியில் வந்து உட்கார்ந்திருந்தேன். அங்கே கூட்டிலிருந்து விழுந்த மூனு பறவைக் குஞ்சுங்க கீழே கிடந்த மீன்களை சாப்பிடப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு குஞ்சுக்கு இறக்கை ஒடைஞ்சு இருந்தது. இன்னொன்னுக்கு ஒரு கால் ஒடைஞ்சு இருந்தது. அந்த ரெண்டும் எப்படியோ தத்தி தத்திப் போய் மீனை எடுத்துச்சு. இன்னொரு குஞ்சுக்கு ரெண்டு காலும் ஒடைஞ்சு போய் எடுக்க முடியல”

“உடனே கடைக்கு போய் ஒரு தூண்டில வாங்கி மீனைப் புடிச்சு மூனுக்கும் கொடுத்தேன். அடுத்த நால் ரெண்டு மட்டய வச்சு அதோடு ஒடைஞ்ச கால சுத்தி கட்டி கொஞ்சம் நல்லெண்ணய் போட்டேன். கொஞ்சநாள்ல ஏதோ இழுத்து நடக்கற மாதிரி கால் சரியாயிட்டு. அப்புறம் இப்படியே மீனைப் புடிக்குறதும். கீழே விழுற குஞ்சுகளுக்கு இரை போடுறதுமா பழக்கமாயிருச்சு”

“குஜராத்தில் நிர்மா கம்பெனியில் வேலை பார்த்தாலும், மனசு கூந்தன்குளத்திலேயே இருந்தது. எம் பொண்டாட்டி உம் மனசு பறவை மேலேயே இருந்தா அவளுக்கும் அதுதான்னு சொல்லிட்டு ஊருக்கே வரச் சொல்லிட்டா. அவ நகை நட்டெல்லாம் வித்து மீன் வாங்கிப் போட்டு குஞ்சுகளைப் பாத்துக்கிட்டா”

“சலீம் அலி ஐயா கூந்தன்குளம் வந்தப்ப, போய் வணக்கம் சொன்னேன். வணக்கம்னாரு. அவருக்கு பதினைந்து மொழி தெரியும். நான் பேசுறதைக் கேட்டுட்டு இந்தியா முழுவதும் சலீம் அலின்னு என்னைத் தேடுறாங்க. எனக்கும் பெரிய சலீம் அலி இங்க இருக்கார்’ என்றார்”

சலீம் அலியை கூந்தங்குளம் பால்பாண்டி பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் சுற்றிலும் பல நூறு ஏக்கர் பரப்பில் பரந்து கிடந்த விஜயநாராயணம் ஏரியின் நடுவே வறண்டிருந்த தரையில் படுத்தபடியே பால்பாண்டியின் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.

ஆங்காங்கே திட்டுத் திட்டாயிருந்த நீர்ப்பரப்பில் நின்று கொண்டிருந்த பறவைகளை சற்று அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டு வண்டியை ஏரிக்கு நடுவே செலுத்தியதற்கு பலன், திரும்ப வண்டியை எடுக்க முடியவில்லை. டிராக்டர் வந்து சேர இரவு பத்து மணி ஆகி விட்டது என்றாலும், பால்பாண்டி அவரே இயற்றி பாடும் பாடல்கள் எங்களை உற்சாகமாக வைத்திருந்தன. பெளர்ணமி நிலா வெளிச்சம் கூட அந்த சந்தர்ப்பத்திற்கு சற்று இடையூறாக இருந்தது.

‘கண்ணதாசன் செத்துப் போகலய்யா, இங்க இருக்கார்’னாரு பாரதிராஜா' என்று சுவராசியமான அந்த சம்பத்தை பால்பாண்டி விவரிப்பது உட்பட அவர் கூறும் கதைகளில் எது உண்மை எது மிகை என்று பிரித்துப் பார்க்க இயலாது என்றாலும், கூந்தங்குளத்திற்கு உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் வந்து தங்கும் பறவைகளின் பால் அவருக்கு உள்ள கனிவும், பாசமும் உண்மை. கூட்டிலிருந்து தவறிப் போகும் குஞ்சுகளை பாதுகாத்து வளர்த்து மீண்டும் அதன் கூட்டத்தில் சேர்க்க அவரும் அவரது மனைவியும் செய்த தியாகங்கள் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த அன்பின் மிகுதியால் பறவைக் காய்ச்சலுக்கு அவர் மனைவியை பலி கொடுத்தும் பால்பாண்டியின் சேவை தொடர்வதும் உண்மை.

கூந்தக்குளம் மற்றும் அதன் அருகே உள்ள குளங்களுக்கு வரும் பறவைகளைப் பற்றியும் அவை குஞ்சு பொறிப்பது பற்றியும் பள்ளிப்படிப்பைத் தாண்டாத பால்பாண்டி அறிந்து வைத்துள்ள விபரங்கள், ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கூட இருக்காது. அதற்காக பல்வேறு விருதுகளை அவர் பெற்றாலும், பரவலாக அறியப்படும் ‘பறவை மனிதர்’ (Bird Man) என்ற பட்டமே அவருக்கு பிடித்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, மற்ற நாடுகளிலிருந்தும் பறவைகளைக் காணவும் புகைப்படம் எடுக்கவும் பால்பாண்டியை தொடர்பு கொள்ளுகிறார்கள். அவரவர் விருப்பப்படி பாண்டியும் அவர்களை தொடர்பு கொள்கிறார். தரையில் அடைகாத்துக் கொண்டிருக்கும் அரிய பறவைகளை காண பாண்டி எங்களை அழைத்திருந்தார்.




நீங்களும் கூந்தங்குளம் போனால் பாண்டியை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை சுவராசியமாக வைத்திருக்க பாண்டியிடம் பறவைகள் மட்டுமல்லாமல் நிறைய கதைகளும் பாடல்களும் இருக்கிறது.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....