Sunday 29 November 2015

எபிசோடா யு சிவோத்து பெராக்கா ஜெலேயா (போஸ்னியா)

பார்க்கும் எவரையும், அவர் மனதின் ஏதாவது ஒரு மூலையில் கொஞ்சமேனும் மனிதாபிமானம் ஒட்டியிருப்பின் போதும், கவரும் சிறந்த ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க என்ன தேவை?

சிக்கலான கதை. அசத்தலான க்ளைமாக்ஸ்? ‘ம்ஹூம் ஒரு சம்பவம் போதும்’

மாஸ் நடிகர்கள்? ‘எதற்கு சம்பவத்தில் பங்கு கொண்ட சாதரணர்கள் போதும்’

விலையுயர்ந்த காமிராக்கள்? ‘ஏன், 2.5லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் கானன் 5Dக்கு என்ன குறைச்சல்’

இசை? ‘அதுதான் ஓடும் காரிலும், குழந்தைகளின் கூச்சலிலும்தான் இசையிருக்கே. தனியாக ஏன் இசையமைக்க வேண்டும்’

என்று கேட்பது போல Epizoda u zivotu beraca zeljeza (2013) என்ற போஸ்னிய படத்தை எடுத்து விருதுகளை அள்ளிக்குவித்துள்ளர் அதன் இயக்குஞர் டானிஸ் டனோவிச். இப்படி படம் எடுத்துள்ளார் என்றவுடன் ஏதோ கடைநிலை இயக்குஞர் என்று நினைத்துவிட வேண்டாம். பலரும் நன்கு அறிந்த ‘நோ மேன்ஸ் லாண்ட்’ மற்றும் நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டுள்ள ‘ட்ரையேஜ்’ ஆகிய படங்களை இயக்கிய உலகப் புகழ் பெற்ற இயக்குஞர்.

துரதிஷ்டம் பிடித்த ரோமா, ஜிப்ஸிஸ் என்றால் அனைவருக்கும் தெரிந்த இனத்தைச் சேர்ந்த நஸீபும் அவன் மனைவி செனாடாவும் அவர்கள் இரு பெண் குழந்தைகளோடு வசிப்பது போஸ்னியாவின் புறநகரில். பழைய இரும்புகளை பொறுக்கி விற்பதுதான் அவன் தினப்படி வருமானம். ‘ஏதாவது நோய் வந்து அவன் படுத்து விட்டால் அந்த குடும்பம் என்ன செய்யும்’ என்று நினைத்து முடிக்க வில்லை, செனாடாவுக்கு வயிற்று வலி. உதிரப்போக்கு.

நகர்புற மருத்துவமனைக்குச் சென்றால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை இறந்து போனதாகவும், மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டுமென்கிறார்கள். அவனிடம் பணமுமில்லை. அவளுக்கு மருத்துவ காப்பும் இல்லை. இரண்டு முறை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கஷ்டப்பட்டு சென்றாலும் பலனில்லை. பின்னர் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து அழைத்தாலும், சோர்விலும் வெறுப்பிலும் செனாடா அவர்களுடன் செல்ல மறுத்து விடுகிறாள். இறுதியில் அவளது தம்பி மனைவியின் காப்பீட்டைக் காண்பித்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினால், கரண்டு பில் கட்டாததால் வீட்டில் மின்சாரம் கட்!


நஸீப் அவனது பழைய காரை உடைத்து அதை விற்ற பணத்தில் மனைவிக்கு மருந்தும், கரண்ட் பில்லும் கட்ட மீண்டும் வீட்டில் உற்சாகம் பொங்குவதோடு படம் முடிகிறது.

உதிரப் போக்கோடு மருத்துவத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் காட்சிகள் இல்லையென்றால், நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடிக்கிறார்கள் என்றுதான் நினைத்திருப்பேன். போருக்குப் பின்னதான போஸ்னியாவில், ரோம இன மக்கள் உதாசீனப்படுத்தப்படுவதை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்காக நஸீப்-செனாடா தம்பதியினரின் அனுபவத்தை அப்படியே திரைப்படத்திற்கான எவ்வித அழகியலும் இன்றி, நாமும் அவர்களின் குடும்பத்தின் ஒருவராக நின்று நடப்பவைகளை பார்ப்பது போல இயக்கப்பட்டுள்ளது.

அதுவும் படம் முழுவதும் அந்த இரட்டைப் பெண் குழந்தைகளின் குதியாட்டமும், கொண்டாட்டமும், கூச்சலும்; சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

பிற திரைப்படங்களின் போஸ்டரைக் கூட காப்பியடிக்கும் அளவிற்கு அறிவு வறட்சியில் தவிக்கும் நம்மவர்கள்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, இப்படியெல்லாம் கூடவா திரைப்படங்களை இயக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

Monday 23 November 2015

ஸோசைட் சீச்சி நி நாரு (ஜப்பான்) 2014

“நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அப்பாதான் பட்டம் செய்வார். மூங்கில் குச்சிகளை வெட்டி, அவற்றை கயிற்றால் கட்டி அதன் மீது காகிதத்தை ஒட்டுவார். செய்தித்தாளின் காகிதத்தைத்தான் வெட்டி வாலாக வைப்பார். அந்தப் பட்டங்களை பறக்க விடுவதே சிரமம். இப்போது பட்டங்கள் அப்படியே கிடைக்கிறது. உடனடியாக பறக்கவும் செய்கிறது”

நேற்றுப் பார்த்த ஸோசைட் சீச்சி நி நாரு (Like Father, Like Son) என்ற ஜப்பானியப் படத்தில் இயல்பாக நடக்கும் இந்த உரையாடல், சின்ன வயதில் அண்ணன் செய்த பட்டங்களைப் பற்றி நானே பேசியது போல இருந்தது. ஏதோ தேர்ந்த சர்ஜன் போல அண்ணன் கையை நீட்டும் போதெல்லாம் அதில் கோந்தும் கயிறும் பிளேடும் வைப்பது மட்டும்தான் என் வேலை என்பதால், பட்டம் செய்யும் நுணுக்கம் தெரியாமலே போய் விட்டது.

இன்னமும் இரு நாட்கள் தங்கிப் போக முடியாதா? என்று கேட்கும் மகளிடம், “இங்கு இருப்பது ஏதோ ஹோட்டலில் இருப்பது போல இருக்கிறது” என்று நகரின் முக்கியப் பகுதியில் அமைந்த மருமகனின் நவீன ப்ளாட்’ பற்றி மாமியார் கூறுவதும் சென்னையில் தங்க நேரிடும் உறவினரின் குடியிருப்பைப் பற்றி நான் கூறியது போலவே இருந்தது.

மற்றபடி படம், தங்களது மகன்கள் பிறந்தவுடன் மருத்துவமனையில் மாறிப் போனது, ஆறு வருடங்கள் கழித்து தெரியவரும் இரு பெற்றோர்களைப் பற்றியது. பெர்பக்ஷனுக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்களின் மருத்துவமனையில் குழந்தைகள் மாறிப் போவதா, என்றால் இறுதியில் நீதிமன்றத்தில் மருத்துவமனை செவிலி தனது கணவருடனான சண்டையின் வெறுப்பில் குழந்தைகளை வேண்டுமென்றே மாற்றி வைத்து விட்டதாக சாட்சி சொல்வதும் நடக்கிறது.

பாடல்கள் இல்லை, மெல்ல நகரும் கதை என்பதை தவிர்த்து விட்டால் மணிரத்தினம், வஸந்த் படம் பார்ப்பது போல இருக்கலாம். வணிகச் சமாச்சாரங்களைத் எடிட் செய்து ‘விருது’க்காக தனியே ஒரு வெர்ஷன் தயாரிக்க முனைந்திருந்தால் மகேந்திரன், பாலுமகேந்திராவிலிருந்து தொண்ணூறுகளின் மற்ற சில தமிழ்ப்பட இயக்குஞர்கள் உலக அளவில் பெயர் வாங்கியிருக்கலாம்.

விருதுகளால் பலன் என்னவா, இந்தப் படத்தைப் பார்த்த ஸ்பீல்பெர்க்கின் பரிந்துரையில் ட்ரீம்வொர்க்ஸ் இதன் ஹாலிவுட் உருமாற்ற உரிமைகளை வாங்கியுள்ளது.

Sunday 22 November 2015

கர் வாப்ஸி...

இன்று காலை கோர்ட்டுக்கு போனவன், போன இடம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்.

சீனியர் யாரிடமோ கோவிலுக்குப் போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். சில நாட்களாகவே ஏதோ சஞ்சலமாக உணர்ந்து கொண்டிந்ததால் ஒரு மாறுதலுக்கு, ‘சார், நான் கூட்டிப் போகிறேன்’ என்று கிளம்பி விட்டேன்.

கோவில்களுக்கு போவதிலோ அல்லது பூஜைகளில் கலந்து கொள்வதிலோ எனக்குள்ள பிரச்னை, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமலிருப்பதுதான்.

கடந்த மாதம் தெருமுனை ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய ஆயுத பூஜையில் கலந்து கொண்ட போதும் அப்படித்தான், எதையாவது தவறுதலாக செய்து அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தி விடுவேனோ என்றிருந்தது.

ஆனால் சீனியர் கூட செல்லும் போது பிரச்னையிருக்காது. நம் கையைப் பிடித்தபடி அப்படியே கூட்டிப் போய்விடுவார். அப்படியும் ஒரு கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே வரும் போது வெண்கல தகடு வேய்ந்த படி மீது ஏறியிறங்கியதில் ஏற்ப்பட்ட சத்தத்தில் ‘படி மீது ஏறாமல் தாண்டி வர வேண்டுமோ’ என்று பயந்து கொண்டிருந்தேன். சீனியர் அருகிலிருந்ததாலோ அல்லது கெத்’தாக தீபாராதனை தட்டில் நான் போட்ட நூறு ரூபாயாலோ குருக்கள் ஏதும் சொல்லவில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு சந்நியாகப் போய் அங்கும் பூஜை தட்டில் பணம் என்று சீனியர் போட்ட போதுதான் ‘அடடே மொத்தமாகப் ஒரே இடத்தில் போட்டு விட்டோமோ’ என்றிருந்தது. ஆனால், பூஜை செய்த மாலை, பூக்கள் நிரம்பிய தட்டினை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டதால் கைகளை எப்படி வைத்துக் கொள்வது என்ற பிரச்னையும் இல்லை. இவன் காசும் எடுக்க மாட்டான் என்று அவர்களாகவே புரிந்து கொண்டது போலவும் இருந்தது.

அடுத்த சங்கடம் சீனியர் அவருடைய நட்சத்திரம் எல்லாம் சொல்லி மந்திரம் சொன்ன பின்னர் என்னுடைய நட்சத்திரம் என்ன என்று கேட்டு நான் தயங்கும் அந்த ஒரு வினாடி நேரம். சீனியரின் கண்களிலேயே புரிந்து கொண்டது போல தொடர்ந்து எனக்கும் நடந்த பிரார்த்தனையில் ‘சுப மங்களம் உண்டாகட்டும்’ என்ற வார்த்தையில் சற்று குழம்பிப் போனேன். ஏனெனில், எங்களுக்கு முன்னதாக வந்த சின்னப் பெண்ணை ‘சீக்கிரம் விவாகம் நடக்கும்’ என்ற முறையில் வாழ்த்தி பிரகாரத்தை 12 முறை சுற்றி வாருங்கள் என்று சொன்னதில் அந்த பெண்ணின் முகத்தின் தோன்றியிருந்த வெட்கத்தையும் புன்னகையையும் காண கண் கோடி வேணடியிருந்தது
.
சார், ‘மங்களம் உண்டாகட்டும் என்றால், எல்லாம் சுபமாக நடக்கும் என்று அர்த்தம்’ என்றார்.

சொன்னது மாதிரி ‘இன்று என்னை வறுத்து எடுக்கப் போகிறார்’ என்று நினைத்துக் கொண்டிருந்த வழக்கில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மத்தியானம் எதுவுமே கேட்காமல் ஸ்டே கொடுத்து விட்டார்.

ஆஞ்சநேயர் சந்நிதியில் தமிழிலேயே விளக்கமெல்லாம் கூறி தமிழிலிலேயே அர்ச்சனை செய்தது கேட்க நன்றாக இருந்தது. பூஜை செய்த மாலையை சார் எனக்கு போடச் சொன்னார். அப்பவும் மாலையை போட்டுக்கணுமா, அல்லது அரசியல்வாதிங்க மாதிரி போடுறதுக்கு முன்னாலேயே லாவகமா கையில வாங்கிக்கணுமாங்கற குழப்பம். கண்ணப்ப நாயனாரை மனசுல நினைச்சுகிட்டு அப்படியே போட்டுக்கிட்டேன்.

கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரிருவரைத் தவிர வேறு பக்தர்கள் இல்லை. கோவிலும் அவ்வளவு சுத்தம். அதுவும் வெளியே இருந்த தெப்பக்குளமும் அதற்கு அப்பால் தெரிந்த யானை மலையும் கொள்ளை அழகு.

கோர்ட்டிலிருந்து பத்து நிமிட தூரத்தில் இவ்வளவு ரம்மியமும் அழகும் முக்கியமாக அமைதியும். இந்து நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.

சாருக்கு க்ளாஸ் மேட் இல்லாத ஊரே இருக்காது. ‘இங்க ஒரு ப்ரண்ட் இருக்காண்டா, இந்தக் கோவில் பேஷ்கர். பாத்துட்டு போயிருவோம்’ என்றதால் அவரை வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டு காரை திருப்பிக் கொண்டு வந்து நிறுத்தினேன்.

மிகவும் பலவீனமாக இருந்த நண்பனிடம் சார் சத்தமாக ‘டேய் எதாவது வேணுமாடா……நான், ஏதாவது உனக்கு பண்ணணுமாடா’ என்று கேட்டுக் கொண்டிருந்தது வெளியே தெரு வரை கேட்டது.

‘எனக்கு என்னடா வேணும். உன் அன்பு இருந்தா போதும்டா’

ஆமா, இல்ல...

Sunday 15 November 2015

வாவியன் (துருக்கி) 2009

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். ‘ரோட் டு அனடோலியா’ என்ற படம் பார்த்த பிறகு திரைப்படங்கள் மீதான காதலை ஈரானிலிருந்து துருக்கிக்கு மாற்றிக் கொண்டேன். இரானிய இயக்குஞர்களுக்கு இல்லாத சுதந்திரம் துருக்கியில் இருப்பதால், அவர்களது படங்களில், காட்சிகளில் அவ்வளவு இல்லையென்றாலும் கதையில் சற்றுத் துணிச்சல் இருக்கும்.

‘வாவியன்’ என்றால் மின் விளக்கு விசிறி போன்றவற்றை இரு சுவிட்சுகளால் இயக்கும் வசதி’ என்கிறான் கதைநாயகன்/வில்லன் என்கிய்ன் குனாதின். கதைக்கும் நாயகன் அவர்தாம். ஆம். கதாசிரியரும் அவர்தாம்.

மனைவியின் பணத்துக்காக ஆசைப்பட்டு அவளை கொலை செய்ய முயலும் த்ரில்லிங்'கான கதையை எழுதியதால் பாக்யராஜ் அவரே நடிக்கவில்லையா, அது போல ஒரு கதையை எழுதி விட்டு இவரும் தானே நடிக்கவில்லை என்றால் எப்படி?

படத்தின் தொடக்கத்தில் அவனது காரில், ஓட்டுநர் சுவிட்ச் போட்டால் பக்கவாட்டில் தானாகவே திறந்து மூடும் கதவை பொருத்துகிறான். எனக்கு கூட ‘அட இப்படி ஆட்டோமேட்டிக் கதவு உள்ள கார்கள் ஏன் இங்கு இல்லை’ என்று தோன்றியது. படத்தைப் பார்த்ததும்தான் ஏன் இல்லை என்று புரிந்தது.

கதாநாயகன் எப்படியாவது மனைவியை தீர்த்துக் கட்ட வழி பார்த்து அதை நிறைவேற்றினாலும், மனைவி இரண்டு நாட்களில் தப்பித்து வருகிறார் என்றாலும் அநியாயத்துக்கு எண்பதுகளின் தமிழ்ப்பட கதாநாயகிகளைப் போல கணவன் மேல் பாசமோ பாசமாக பொறுத்துப் போகிறார். ஒரு கட்டத்தில் நாமே திரைக்குள் போய் அவனை நாலு சாத்து சாத்தி விட்டு வரலாமா என்றிருக்கிறது.

இதற்கு தமிழ்ப்படமே பார்க்கலாமே என்றால், பார்க்கலாம்தான். ஆனால், தமிழ்ப்படங்களில் இத்தனை கொடுமைகள் செய்யும் கணவன் ‘தடா’லென திருந்தி விடுவான் அல்லது செத்து விடுவான். அப்படியில்லாமல், கணவனது பொருளாதார பிரச்னைகள் மனைவி மூலமாகத் தீர்கையில், எவ்வித மன்னிப்புமின்றி கண்ணீருமின்றி அன்பான தந்தையாகவும் சற்று அனுசரணையான கணவனாகவும் இயல்பாக குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.

இயக்குஞர்கள் இருவர், சகோதரர்கள். ஹாலிவுட்டின் கோயன் சகோதரர்கள் போன்று துருக்கியில் டேலான் சகோதரர்களாம். (ப்ளாக்) காமெடி ரகப் படமென்றாலும், கோயர் சகோதரர்களின் படம் போன்றே ஏதோ சில்லிட வைக்கும் அமானுஷ்யமான பய உணர்வை படம் நெடுக இவர்களாலும் ஊட்ட முடிகிறது.

தமிழ்ப்படங்கள் பிடிக்கும் எவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்...

Wednesday 11 November 2015

LIGHT A LIGHT FOR THE UNSEEN


The concerns of the High Court, in directing the gates of the subordinate courts to be closed by 7PM is understandable, in the light of the complaints that few of the Advocates are misusing their chambers by indulging in activities, which are not purely professional. But aren’t our forefathers left us a message, tested by experience that one cannot throw the baby with the bathwater; we have a Tamil equivalent in mocking the one attempting to burn down the house for the fear of bugs.

I have never been within the court complex beyond court timings barring an odd exception, when I had to wait for an urgent order copy; it was decades ago and the Madras High court building was in its innocence best.

I am fortunate. I don’t have to depend upon the chamber facility to carryon my profession. I was able to find Seniors, who had offices of their own having enough room to spread our furniture, books and case bundles. Our clients felt at ease in able to sit before us for briefing. Even when I came out of my Senior’s house, I did not find wanting as I could rent an office of my own.

But I see many advocates, particularly in subordinate courts who are not so fortunate. They don’t have an uncle who could put them in some office of repute as mine did. Not only their parents, even their teachers could not teach or train them enough in English to impress a Senior on their own. Whom they could end up last is a person, who would not be in a position to sustain a Junior’s needs; even the bare minimum.

They have to come out within few years into their own practice as their parents, living in some village or at best a small town nearby would be resting their hopes on them to earn something. The motorbikes, mobile phones and internet are of great help but still they need a place with a chair to sit and a stool at least for their client; a shelf even if it is a shared one to keep the bundles. These are luxuries in the room or the house they have rented to live.
I see many such Advocates, with an urge to come up and make a decent life for themselves; though the odds keeping them chained at the bottom are many. Chambers, constructed by the Government is their only hope to shed some of those chains.

We, the fortunate see chambers as a place to rest in between the cases; they see it as their office. This measure of driving them out of their chambers after 7 is in effect deprives them of their livelihood; their clients’ too.

Secondly I sincerely feel, with all due respects to those who have taken this decision that this measure of squeezing all life from the court campus beyond court hours will not help in curbing the menace as they intend.

As long as the chambers are allowed to function at night hours, they would present a lively place with Advocates, Clerks, Typists and litigants everywhere. If Advocates are encouraged to run their offices with better facilities, particularly by lighting the place bright, they themselves would guard it against getting out of control. On the other hand close it down into dark, there are people still looking for an opportunity to exploit the darkness within the campus; mark my words the day is not far off for an embarrassing scandal to break out.

I studied law in Madurai 25 years ago, when anyone can walk through Madurai city at any hour in the night without having any fear in mind. In places like Simmakkal or Periyar Bus-stand even woman don’t feel alone. Thanks to effective steps taken by the Police in the name of curbing crimes, Madurai is successfully snuffed out of its night life; gone are the days we enjoyed masala tea and butter bun in any roadside tea-shop with Illayaraaja playing for us in the middle of the night and well into early morning.

It was not few years ago, the bar and bench were into a debate as to the establishment of Evening Courts. Gujarat pioneered and few States followed by framing necessary Rules. It is my fervent appeal, this is the best time to bring in any novel idea and by making use of the situation, the High Court may seriously think of establishing Evening Courts in District Headquarters; the experiences in other States may help.

If not otherwise, at least in the name of establishing Evening Courts the High Court can help so many less fortunate Advocates, who could not find or rent an office of their own but only to depend upon the Chambers provided by the Government to build their legal practice.

Light a Light for the Unseen
Bring them back into their livelihood.

தீபாவளி வாழ்த்து...

முப்பது வருடங்களுக்கு முன்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி காவலர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற செய்தி நகர மக்கள் அனைவரையும் உலுக்கியது என்பதில் வியப்பிருக்காது. மேலும் நகரம் என்றாலும் அது சிறிய ஊர்தான். பேருந்து நிலையமும் மிகச்சிறியது. ஆனால் அதன் அளவிற்கு சம்பந்தமேயில்லாது தினமும் காலையும் மாலையும் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அங்கு கூடுவதை வைத்து மக்களின் அதிர்ச்சியை புரிந்து கொள்ளலாம்.


நகரின் ஒட்டு மொத்த வெறுப்பும் கைது செய்யப்பட்டவர் மீது இருக்க, அவருக்காக பிணை மனு தாக்கல் செய்தார் அந்த வக்கீல். ஏற்கனவே ‘பாரி’ல் அவரை யாருக்கும் பிடிக்காது. அனைவரின் கவனமும் பிணை மனு மீதான விசாரணையில்


நீதிபதி வக்கீலைப் பார்த்தார், இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல...


’த பிராஸிக்யூரிக்ஸ் கேர்ல் இஸ் ஆஃப் இம்மாரல் கேரக்டர் யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்தார். நீதிபதி புருவத்தை உயர்த்த,


‘எப் ஐ ஆரிலேயே அப்படித்தான் இருக்கிறது’ என்று முதல் தகவல் அறிக்கையை கையிலெடுக்க நீதிபதி இப்போது போலீஸை முறைத்தார்.


’இதோ வாசிக்கிறேன் யுவர் ஆனர், அந்தப் பெண் சொல்கிறாள் ‘என் மாமா என்னை தீய வழிக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது...’


நீதிபதி மேலும் கேட்க விரும்பாமல், பிராஸிகியூட்டரை ‘இது என்ன’ என்பது போல பார்த்தார்.


அரசு வழக்குரைஞர் சற்று குழப்பத்துடன் எப் ஐ ஆரைப் பார்த்தவர் பின்னர் எழுந்து, ‘யுவர் ஆனர், நான் வாசிக்கிறேன் ‘என் மாமா என்னை தீபாவளிக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்’ என்று இருக்கிறது’ எனவும் நீதிபதி வக்கீலைப் பார்த்த பார்வையின் வெறுப்பில் அவரை பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்பதை விட ராமாயணம், மகாபாரதம் என்று கதாகாலாட்சேப கூட்டங்களில்தான் பார்க்க முடிந்ததாம்...

Thursday 5 November 2015

தி விசில் ப்ளோயர் 2010

ஆப்கானிஸ்தான் அதிபர் ‘ஹமீது கர்சாய்’க்கு பாதுகாப்பளிப்பது, ‘டின்கார்ப்’ என்ற அமெரிக்க நிறுவனம். ஏதோ தேச சேவையல்ல. டின்கார்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சேவையளிக்கும் அமெரிக்க நிறுவனம். வருட வருமானம் 3 பில்லியன் டாலர்களைத் தாண்டும்.

ஈராக் காவலர்களுக்கு பயிற்சியளிப்பதும் டின்கார்ப்தான். மொத்தத்தில் அமெரிக்க ராணுவத் தொடர்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம், டின்கார்ப்பின் ஒப்பந்த சேவையிருக்கும்.

போஸ்னியா!

அங்கில்லாமலா? போஸ்னிய யுத்தத்திற்கு பின்பு அங்கு பணிபுரிய சென்ற காத்தரீன் போல்காவோச் என்ற அமெரிக்க பெண் காவலர், அங்கு டின்கார்ப் நிறுவன ஊழியர்கள் இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தும் human traffickingக்கு துணை போவதையும் ஈடுபடுவதையும் கண்டு புகார் கூறியதால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். பின்னர் அவர் பிபிசி நிறுவனம் மூலம் இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தாலும்….சில ஊழியர்கள் திருப்பி அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டதைத் தவிர வேறு பலன் இல்லை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ட்ராபிக்கிங் பற்றி படமெடுக்க வேண்டும் என்று நினைத்த லாரீஸா கோண்ராக்கி என்ற பெண்மணி எப்படி எடுப்பது என்று திகைத்து காத்தரீன் அனுபவத்தை எடுக்கலாம் என்று எடுத்த படம் நேற்று பார்த்த ‘தி விசில் ப்ளோயர்’

பல விருதுகளை அள்ளிக்குவித்தாலும் ட்ராமாட்டிக்கான முடிவு இல்லாமல், ஏதும் இல்லாமல், வெறுமே முடிந்து போனதானாலோ அல்லது வேறு வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்ததாலோ, இப்படத்தை பார்த்துதானாக வேண்டும் என்று கூற மாட்டேன்.

மதுரை
05/11/2013

நானும் ரவுடிதான் (தமிழ்) 2015

‘நானும் ரவுடிதான்’ நல்ல காமெடின்னு கேள்விப்பட்ட தைரியத்தில் போனால், ஏமாற்றமில்லை. இறுதிக் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தாலும் முதல் பாதியில் தியேட்டரில் சுற்றியிருந்த அனைவரும் குலுங்கிச் சிரித்த சில காட்சிகளில் அசட்டுத்தனமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.


குழந்தைகள் அசட்டுத்தனங்களை உணர்வதில்லை. அவர்களது சிரிப்பில் எனக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும், அவ்வப்போது தலைகாட்டிய வசனங்கள் சிலவற்றின் ‘இரண்டாவது’ அர்த்தத்தை புரிந்து கொண்டதால் சிரிக்கிறார்களோ என்று பயமாக இருந்தது.


அதுவும் கடைசிக்காட்சியில், யாருமே வசனத்தின் விபரீதத்தில் நெளிந்ததாகத் தெரியவில்லை.


தமிழில் எனக்குத் தெரிந்து, இரட்டை அர்த்த வசனங்களுக்காக தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது எஸ் ஜே சூர்யாவின் ‘நியூ’ படத்திற்குத்தான்.


நியூ பட தீர்ப்பில் அந்தப் படத்தை தடை செய்வதற்கான காட்சிகளை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் நீதிபதிகள் விளக்குவதைப் படிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வைரமுத்து பாடல் ஒன்றின் வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்த்தம் கொள்கையில், வாலி பாடல்கள் சிலவற்றையும் இப்படி மொழி பெயர்த்தால் எப்படியிருக்கும் என்றிருக்கிறது.


வெள்ளிக்கிழமை, பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்குவதில் பெண்களுக்கும் எஸ்ஸி எஸ்டி பிரிவினருக்கும் உள்ள ஒதுக்கீட்டினை வாபஸ் பெற்றது பற்றிய வழக்கு. வாதத்தின் இடையில் வழக்குரைஞர் மோகன் தற்செயலாகக் கூறிய பதிலின் மற்றொரு விபரீதமான அர்த்தத்தை அந்த நீதிமன்றத்தில் புரிந்து கொண்டது, அதைப் பற்றி உடனடியாக கமெண்ட் அடித்த நீதிபதியும், சத்தமாக சிரித்த நானும்தான். எதிர் வழக்குரைஞர் ஜிஆர்எஸ் வழக்கமாக மிஸ் பண்ண மாட்டார். மோகன் மீது அதீத கோபத்திலிருந்தார். அதனாலோ என்னவோ, முகத்தில் புன்னகை இல்லை.


எப்படியோ, நியூ படம் தடை செய்யப்பட்ட 2005லிருந்து வெகுதூரம் பயணித்து விட்டோம் என்று நேற்று படம் பார்க்கும் போது நினைத்தேன்.


அப்புறமும் ஏன் பாடகர் கோவனை சிறையிலடைக்கிறார்கள்?

பாபநாசம் (தமிழ்) 2015

‘பாபநாசம்’ படத்தில் அதி தீவிர திரைப்பட ரசிகரான கமல்ஹாசன் ஒரு திரைக்கதையைப் போலவே ஆகஸ்ட்  2ம் தேதி என்ற நாளைச் சுற்றி கற்பனையாக நிகழ்ச்சிகளை உருவாக்கி காவலர்களை நம்ப வைத்துள்ளார் என்று காவல் அதிகாரியாக வரும் ஆஷா சரத் கூறுவார்.


ஹாலிவுட்டின் சிறந்த பத்து படங்கள் என்று பட்டியலிட்டால், பல திரைப்பட ரசிகர்களின் பட்டியல் இடம் பெறக்கூடிய படம் ’12 ஆங்ரி மென்’ என்ற பெயரில் 1957ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம்.


கொலை வழக்கு ஒன்றின் சாட்சி விசாரணை முடிந்து, முடிவெடுப்பதற்காக பன்னிரண்டு ஜூரர்கள் அறைக்குள் செல்வதோடு ஆரம்பிக்கும் படம் ‘குற்றவாளி இல்லை’ என்ற முடிவோடு அறையிலிருந்து வெளிவருவதோடு முடியும். படத்தின் 99 சதவீத நேரமும் அந்த அறைக்குள் மட்டும் நிகழ்வதுதான் சிறப்பு.


ஆனாலும் படம் முழுவதும் விறுவிறுப்பாகவே இருக்கும்.


‘குற்றவாளி இல்லை’ என்று முதலிலேயே நம்பும் ஒரே ஒரு ஜூரர் மற்ற ஜூரர்கள் அனைவரின் மனதை எவ்வாறு மாற்றுகிறார் என்பதுதான் திரைக்கதை. படம் முழுக்க அவர் பேசிக் கொண்டே இருந்தால் எப்படி விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்தால், அவர் பேசுவது வெறும் விவாதமல்ல. மாறாக குறுக்கு விசாரணை.


ஆம். நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் நடந்திருக்க வேண்டிய குறுக்கு விசாரணையை அவர் ஜூரர்களிடம் நடத்துவார்.


வெறும் ‘கோர்ட் ரூம் ட்ராமா’வாக பத்தோடு பதினொன்றாக இருந்திருக்க வேண்டிய ஒரு படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் ஜூரர்கள் அறைக்குள் நடத்தி ஏதோ வித்தியாசமான படம் போல ஒட்டு மொத்த ரசிகர்களையும் நம்ப வைத்துள்ளார்கள் என்று படம் பார்த்த எனக்குத் தோன்றியது.


பாபநாசம் படம் முடிந்த பின்னர் எனக்கு ஆஷா சரத் சொன்னதும், 12 ஆங்ரி மென் படமும் ஞாபகத்துக்கு வந்தது. ஏனென்றால் பாபநாசத்திலும் தேவையில்லாத ஒன்றைச் சுற்றி புத்திசாலித்தனமான திரைக்கதையை உருவாக்கி நம்மை நம்ப வைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.


அவ்வளவு ரிஸ்க் எடுத்து, இறந்தவனின் காரைக் கொண்டு எங்கோ தள்ளுவதைக் கூட விடுங்கள், ஏன் அப்படி மெனக்கெட்டு அக்டோபர் 2ம் தேதி ஊரில் இல்லாதது போல ஆவணங்களைத் திரட்டி காவலர்களோடு கண்ணாமூச்சி ஆட வேண்டும் என்ற கேள்வி எழுவது எனக்கு மட்டும்தானா?


இந்தக் கேள்வி புடிக்காத கமல் ரசிகர்களுக்கு.


பேருந்து நடத்துநர் காசு வாங்க மறுத்து பணத்தை கமலிடமே திருப்பிக் கொடுக்கும் காட்சியில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கெளதமி முகத்தில் தோன்றும் பெருமித உணர்வையும் சிறு புன்னகையையும் பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. விநாடி நேரம்தான், அதுவும் அவர் முகம் சற்று அவுட் ஆஃப் போகஸில் தெரியும். இயக்குஞர் கூட ‘நீங்க அதுக்கு இப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க’ன்னு சொல்லியிருப்பாரான்னு தெரியல.


உண்மையாகவே மனைவியாக இருப்பவருக்குத்தான் அப்படி ஒரு இயல்பான ரியாக்க்ஷன் சாத்தியம்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....