Saturday 27 June 2015

எமர்ஜென்ஸிக்கு எதிரான சின்னப் போராட்டம்

பள்ளிக்கூடம் வீட்டிற்கு மிக அருகில்தான். நடந்து சென்று விடலாம். இரு அண்ணன்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். பள்ளிக்கு அருகில் எங்களை வழிமறித்த இருவர் மூத்த அண்ணனிடம், ‘டேய், நீ வீட்டில் எத்தனையாவது பிள்ளை?’

‘இரண்டாவது’ என்றவுடன் ‘சரி நீ போகலாம் என்றனர்

அடுத்த அண்ணனிடம், ‘நீ?’

‘மூன்றாவது’

‘சரி, நில்லு’ என்று என்னைப் பார்த்தவர்கள், ‘நீ நாலாவதா’ என்றார்கள். நான் தலையசைத்ததும் எங்கள் இருவரையும் கூட்டிச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த நாய் வண்டி போன்ற வண்டியில் ஏற்றினார்கள். உள்ளே ஏற்கனவே எங்களை மாதிரி நிறைய பையன்கள். சிலர் அழுது கொண்டிருந்தனர்.

வண்டி கிளம்பி எங்கெங்கோ போய் ஒரு மலையடிவாரத்தில் நின்றது. எங்களை வண்டியிலிருந்து இறக்கி அங்கிருந்த அறைக்குள் அடைத்தார்கள்.

என்ன நடக்கிறது என்று விளங்கும் முன்னே மேலிருந்து ஏதோ புகை அறை முழுவதும் பரவ, மூச்சு முட்ட பயத்தில், ‘அம்மா’ என்று அலறினேன்.

‘என்னடா, என்னாச்சு?’ என்று பக்கத்திலிருந்து அம்மாவின் குரல் கேட்டதும்தான் பகலிலேயே தூங்கியிருக்கிறேன் என்பது புரிந்தது. கண்களைக் கசக்கி விட்டு பார்த்தால், அருகிலிருந்து செய்தித்தாளில், ‘இரண்டு குழந்தைகளுக்கு மேலே பெற்றால் தண்டனை’ என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி!

இந்தக் கதை எழுதப்பட்ட 1976ம் ஆண்டில், அரசின் கொள்கையை விமர்சிக்கும் கதையை எழுதுவதே குற்றம் என்பது தெரியாமலேயே, நான் எழுதிய முதல் கதை.

படித்து விட்டு அப்பா அம்மாவைப் பார்த்து சிரித்தார்.

‘ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு இன்ஸ்பெக்டர் வரப்போறாராம். வகுப்பில் புத்தகம் மாதிரி நாங்களே செய்யணும். அதுக்கு நான் பொறுப்பு என்று க்ளாஸ் வாத்தியார் சொல்லியிருக்கிறார்’

அந்த 7இ வகுப்பு மாணவர்களின் கையெழுத்து புத்தகத்தில் இக்கதையும் சேர்க்கப்பட்டு யாராலும் படிக்கப்படாமலேயே போனாலும், எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆயிற்று என்று இரண்டு நாட்களாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கையில், ‘அட, இந்தக் கதை எமர்ஜென்ஸிக்கு எதிரான என்னுடைய சின்ன முயற்சி’ என்று ஏதோ எனக்குத் தோன்றுவதைச் சொன்னால், அடிக்க வருகிறார்கள்…

Sunday 21 June 2015

மாண்டி'யில் மாண்டவர்கள்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், ஐஐடி நுழைவுத் தேர்வில் தேறிய இரு உத்தரபிரதேச சகோதர்களைப் பற்றி செய்தி நேற்று முன்தினம் வெளியானது. முக்கியமாக அவர்களது பெற்றோர்களுக்கு ஐஐடி கட்டணத் தொகையை கட்ட இயலாது என்பது தெரிந்ததும், மனித வளத்துறை அமைச்சரே தலையிட்டு அரசே அவர்களது கல்விக் கட்டணத்தை செலுத்தும் என்று நேற்று அறிவித்துள்ளார்.
                                                                                                                                          வாழ்த்துக்கள்!

இவ்விரு சகோதரர்களுக்கான கட்டணச் செலவை முழுவதுமாக அரசு ஏற்றுக் கொண்டாலும், இவர்கள் மட்டுமல்லாமல் ஐஐடியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் கட்டணச் செலவில் ஒரு பகுதியினை ஏற்றுக் கொள்பவர்களைப் பற்றியும் இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகிய செய்தி பலராலும் கண்டு கொள்ளப்படவில்லை.

பிரச்னை என்னவென்றால், அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டனர். அதுவும் தனியார் பாதுகாப்பு காவலர்களால் சுடப்பட்டும், அதனால் எழுந்த கலவரத்தில் மலையிலிருந்து விழுந்தும்.
                                                                                                                                                   
அவர்களது குற்றம்; அந்த ஹிமாச்சலப் பிரதேச குளிரிலும், பனியிலும் வாடியபடி அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் புதிய ஐஐடி (மாண்டி) யில் செய்த வேலைக்குறிய கூலியை கேட்டதும், அவர்களது போராட்டத்தை தனியார் பாதுகாவலர்களைக் கொண்டு அடக்க முயன்றதைக் கண்ட வெறுப்பில் கலவரத்தில் ஈடுபட்டதும் என்கிறார்கள்.

கூலி உயர்வு கூட இல்லை. கூலிதான்!

ஐஐடி பட்டாதாரிகளுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் இருக்கும் டிஎன்ஏவுடைய வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான் என்று கூறப்படுகிறது. அப்படியாயின் மிகமிகச் சிறிய மயிரிழையில்தான் ஒருவன் ஐஐடி பட்டாதாரியாகவும், மற்றவர்கள் கட்டிட தொழிலாளியாகவும் மாறுவதும் நடக்கிறது.

ஆனால் அவர்களுக்கிடையான கூலி வித்தியாசம்?

என்னைக் கேட்டால், ராஜு மற்றும் பிரிஜேஷ் சகோதரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஐஐடி மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பகுதியை மாண்டி’யில் நேற்று மாண்டவர்களும் காயமடைந்தவர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்றே சொல்வேன்...

Monday 15 June 2015

சகாயத்துக்கான நீதி?

சகாயம் பிரான்ஸ் எப்படியிருந்திருப்பார் என்று எனக்குத் தெரியாது. புகைப்படத்தில் கூட பார்த்ததில்லை. ஆனால் இன்று வரை சகாயத்தை என்னால் மறக்க முடிந்ததில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது 42வது வயதில் செத்துப் போன சகாயம் விட்டுச் சென்ற மனைவிக்கும் நான்கு குழந்தைகளுக்கும், ஒரு வழக்குரைஞராக எனது கடமையை செய்ய தவறி விட்டேனோ’ என்ற உறுத்தல்தான் சகாயத்தின் நினைவுகளாக என்னில் தங்கி விட்டன போலும்.

கூடங்குளத்திலோ அல்லது இந்தியாவின் பிற எந்தப் பகுதியிலோ, அணு மின்நிலையம் அமைப்பது குறித்து, இருபுறமும் எடுத்து வைக்கப்படும் வாதங்களால் எனக்கு எவ்விதமான எதிர்ப்போ அல்லது ஆதரவோ இல்லை. 2012 செப்டம்பரில் நடைபெற்ற ‘ஜல்சத்யாகிரக' போராட்டத்தை அடக்க காவலர்கள் அத்துமீறியதாக தாக்கல் செய்த வழக்கில் நான் ஆஜரானதும் தற்செயலானதுதான்.

அப்போதுதான் சகாயத்தின் பிரேதபரிசோதனை அறிக்கையை பார்க்க நேரிட்டது. அவரது உடலில் முக்கியமாக தலையில் எவ்விதமான வெளிக்காயமோ அல்லது உட்காயமோ இல்லை. ஆயினும் மூளையில் ரத்தக்கசிவால் இறந்திருந்தார். ஆனால் ஊடகங்களில் கடல் போராட்டம் நடந்த போது அவர் ஒரு பாறை மீதி நின்று கொண்டிருந்ததாகவும், தாழப்பறந்து வந்த விமானத்தைப் பார்த்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாகவும் செய்தி வந்திருந்தது. சில பத்திரிக்கைகளில் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும் கூட புனையப்பட்டிருந்தது.

நரம்பியல் மருத்துவ நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டதில், திடீரென தாழப்பறந்து வரும் விமான சத்தத்தால் ஏற்ப்படும் அதிர்ச்சி கூட மரணத்தை விளைவிக்கலாம் என்றார்.

கடலுக்குள் போராட்டம் நடத்தப் போனவர்களை கண்காணிக்க அல்லது கைது செய்ய கடலோரப் பாதுகாப்பு படகுகளை ஈடுபடுத்துவதில் அர்த்தமுண்டு. விமானத்திற்கு அன்று தேவை என்ன, யார் அதற்காக உத்தரவிட்டது என்ற கேள்வி எழுப்பினால், அரசிடமிருந்து அதற்கு பதிலே இல்லை. மாறாக கமாண்டரின் அறிக்கையோ ‘அன்று விமானம் பறந்தது என்றும் போல வழக்கமான ஒன்றுதான், போராட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்ற ரீதியில் இருந்தது.

முக்கியமாக, ‘மிகவும் தாழ்வாக எல்லாம் பறக்கவில்லை. 300 அடி உயரம் வரைதான் சென்றோம்’ என்று இருந்ததைப் பார்த்து, ‘இது போதும், சகாயத்தின் மனைவி வழக்கு தாக்கல் செய்தால் அரசிடம் இருந்து நஷ்ட ஈடு பெற முடியும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் கூறினேன். வழக்கு தாக்கல் செய்தார்களா என்று தெரியவில்லை.

நேரில் பார்த்தவர்கள் விமானம் 100 அடி வரை தாழப்பறந்தது என்று கூறினாலும், விமான கமாண்டர் ஒத்துக் கொண்ட 300 அடியே அனுமதிக்கப்படாத உயரம் என்பதை அவர் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை. உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நமது நாட்டு சட்டங்களின்படியும் வகுக்கப்பட்டுள்ள ஆகாய விதிகள் (Rules of Air) படி போராட்டத்திற்காக கூடியுள்ள மக்கள் மீது விமானம் 1000 அடிக்கு குறைவாக பறக்க கூடாது. எந்நிலையிலும் 500 அடிக்கு கீழே பறக்க முடியாது.


4.6 Except when necessary for take-off or landing, or except by permission from the Director General, a VFR flight shall not be flown: a) over the congested areas of cities, towns or settlements or over an open air assembly of persons at a height less than 300 m (1000 ft) above the highest obstacle within a radius of 600 m from the aircraft; b) elsewhere than as specified in 4.6 a), at a height less than 150 m (500 ft) above the ground or water.


அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட தாழப்பறப்பதற்கான அனுமதியை பெற்றதாகவோ அல்லது அவ்வாறு பறப்பதற்கான தேவை என்ன என்பதைப் பற்றியோ அரசிடம் பதிலில்லை.                                                                                                
ஆகாய விதிகளின் பிரிவு 3.1.1 Negligent or reckless operation of aircraft An aircraft shall not be operated in a negligent or reckless manner so as to endanger life or property of others என்று கூறுவதும் ஆகய விமான விதிகள்’1937ல் பிரிவு 21ல் Dangerous flying - No person shall fly any aircraft in such circumstances as, by reason of low altitude or proximity to persons or dwellings or for other reason, to cause unnecessary danger to any person or property என்று இருப்பதும், அன்று விமானி அவர் கூறியபடியே 300 அடி உயரத்திற்கு விமானத்தை கீழிறக்கியது சட்டத்திற்கு புறம்பானதும், கவனக்குறைவானதுமான செயல் என்பதை உறுதிப்படுத்தும்.

இடிந்தகரையில் விமானம் பறந்தது அவ்வாறு கவனக்குறைவான அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதை நிறுவி வழக்கு தாக்கல் செய்திருந்தால், சகாயத்தின் மனைவி குழந்தைகளுக்கு கண்டிப்பாக நட்ட ஈடு கிடைத்திருக்கும். இடிந்தகரையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு கூட அரசு நட்ட ஈடு கொடுத்தது. சகாயத்துக்கு கிடைக்கவில்லை.

அது மட்டுமல்ல. போராட்டமானது அணு உலையில் கதிரியக்க எரிபொருளை நிரப்பியதால் நடந்தது. அவ்வாறான அணு உலை இருக்கும் இடத்தின் அருகில் விமானம் அதுவும் தாழ்வாக பறப்பது என்பது மிகவும் அபாயகரமான செயலாகும். கல்பாக்கம் அணு உலைக்கு பத்து கிமீ தொலைவுக்குள் எந்த ஒரு விமானமும் 10000 அடி உயரத்திற்கும் குறைவாக பறக்க தடை உள்ளது.
கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை இம்மாதம் 25ம் தேதி முதல் இந்தத் தடை அமுலுக்கு வருகிறது என்றாலும், இன்றுள்ள அதே அபாயம் 2012 செப்டம்பரிலும் இல்லை என்று கூற முடியாது. ஆனால் விமானி எவ்வித அச்ச உணர்வுமின்றி அணு உலைக்கு 100 மீட்டர் தூரத்தில் 300 அடியில் பறந்துள்ளார்.

எவ்வாறாயினும், பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்கள் மீது காரை ஓட்டியதற்கும் இவ்வாறு மக்கள் கூட்டமிகுந்த பகுதியில் விமானத்தை தாழ்வாக பறக்கவிட்ட செயலுக்கும் வித்தியாசமில்லை.                                                      
மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த அந்த விபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்தால், இடிந்தகரையில் ஒன்றல்ல, பல கல்லறைகள் தோண்ட வேண்டியிருந்திருக்கும்


Sunday 7 June 2015

காக்கா முட்டை

நடிகர் சிம்பு, லிட்டில் சூப்பர்ஸ்டார் அல்லது எஸ்டிஆர் என்று சொல்ல வேண்டுமோ? எந்தப் பெயரிலும் சரி, எனக்குப் பிடிக்காத நடிகர்கள் என்று பட்டியலிட்டால் முதலிடத்தில் கூட இருப்பார். ஆனால் இனி பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. தனுஷ் கூட அவ்வப்போதுதான் பிடிக்கும். இனி அடிக்கடி பிடிக்கும் போல இருக்கிறது.

நேற்றுப் பார்த்த படம் அப்படி.

காக்கா முட்டை!

படத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட இவர்களை விடுங்கள். படம் முடிந்து எழுத்து போடும் போதே தூத்துக்குடியில் சொல்வது போல ‘எதற்குள்ளோ அருவாளை வைத்துக் கொண்டு வந்ததைப் போல’ ‘தடதட’வென எழும் முன்னிருக்கை ரசிகர்கள்களின் அவசரத்தைக் கூட நேற்று வழக்கமான எரிச்சல் இன்றி ரசிக்க முடிந்தது.

நேரம், சூது கவ்வும், மூடர் கூடம், ஜிகர்தண்டா, பண்ணையாரும் பத்மினியும், ந.கொ.ப.காணோம், சதுரங்க வேட்டை என ‘ஜிவ்’வென்று மேலே ஏறிக் கொண்டிருந்த தமிழ்ப்படங்களை ‘காக்கா முட்டை’ க்ரூயூஸிங் உயரத்தில் சென்று நிறுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இயக்குஞர், ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர், நடித்த வாண்டுகள், அவர்களின் நாய், பிற நடிகர்கள், முக்கியமாக ‘மம்மி’ என்று நாங்கள் அழைத்த எனது பாட்டியை நினைவுபடுத்திய தோசைக்கல்லில் பீட்சா வார்த்த, ஆம் ‘வார்த்த’தான் அந்த குப்பத்து ஆச்சி என்று அனைவரின் இயல்பான நடிப்பும் இனி சிலாகிக்கப்படலாம். ஆனால், கண்டு கொள்ளப்படாமல் போகப் போவது, பீட்சா கடை மேலாளர் அந்தப் பையனை அறைந்ததும், கடைக் காவலாளி கொடுக்கும் வினாடி நேர ‘ரியாக்க்ஷன்’ என்று அஞ்சுவதால், இங்கு சொல்லி வைக்கிறேன்.

கடைசியில் ‘காக்கா முட்டை’களின் அம்மாவாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாள் என்று எதிர்பார்த்து ‘டேய்’ என்பதோடு நிறுத்திக் கொள்வதால் அவர்களின் பெயர் தெரியாமலேயே போவதின் யுக்தி, பழரசம் பிடித்து வைத்திருக்கும் தவளையின் குறியீடு என்று பலவும் விவாதிக்கப்படலாம். ஆனால், அரசதிகாரம், ஊடகங்கள் போன்றவற்றின் நிறுவப்பட்ட கட்டமைப்பை அசைக்கும் அதே வேகத்தில் சமூக ஊடகங்கள் தமிழ் திரைப்படத்துறையையும் பிடித்து உலுக்கிக் கொண்டிருப்பதையும் பேச வேண்டும். முகநூல் இல்லை என்றால் நான் நேற்று இந்தப் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சூப்பர், டூப்பர், தல, புயல், தளபதி, புரட்சி, இமயம், சிகரம் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது, ‘பீட்சா சமயத்துல நல்லா இருந்தாலும், ‘கொள’’கொள’ன்னு எப்பதான் தின்னு முடிக்கிறதுன்னு ஆயிடுது. ஆனால் ஆச்சி சுட்ட தோசை இன்னும் நல்லாருக்குது’

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....