“செம்பியின் கைகள் அவளின் உடலில் ஊடுருவி அடி வயிற்றில் இறங்கும் போது ஏதோ ஒரு நடுக்கம்,
……………………………………………………………………………………………………………………… சற்று நடுக்கமும், வியர்வையும் மேலிட்டது” என்ற வரிகளைப் படிக்கையில் ‘தடுக்காதே பெண்ணே, இணங்கிப் போ’ என்று உங்கள் மனதில் தோன்றுவதற்கு நீங்கள் ஒரு போர்னோ கதையைப் படிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும் என்பது இல்லை. சக மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமை கண்டு இரங்கும் மனிதம் கொஞ்சமேனும் ஒட்டிக் கொண்டிருக்கும் மனம் இருந்தாலே போதுமானது.
“பாருடா உன் பொண்டாட்டியே பார்க்கணுன்னையே” என்று வள்ளி பார்க்கவே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவளது கணவன் கூட ஒருவேளை செத்த பின்னர் அவளை பேயாய் சுற்றி வந்திருந்தால் ‘அன்றிரவாவது அவளால் வெகு நேரம் தூங்க முடிந்ததற்காக’ உங்களையும் என்னையும் போலவே செம்பியின் அரவணைப்பிற்கு வள்ளி இணங்கிப் போக வேண்டுமென நினைத்திருப்பான்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்களின் முகாம்களில் வள்ளி கடந்து வந்த வலிகளும் வேதனைகளும் அப்படிப்பட்டது.
ஏற்கனவே ‘சோளகர் தொட்டி’ நாவல் மூலமாக சிவண்ணா அவன் மனைவி மாதி மூலமாக, முகாம்களின் அநீதியை இலக்கியத்தரத்துடன் ஆவணப்படுத்தியுள்ள ச.பாலமுருகன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ள ‘பெருங்காற்று’ என்ற புத்தகத்தின் தலைப்புக் கதையின் முக்கிய பாத்திரம்தான் வள்ளி.
ச.பாலமுருகன் இளைஞர். வழக்குரைஞர். முக்கியமாக மனித உரிமை செயற்பாட்டாளர்; செய்ற்பாட்டாளர் என்றால் உண்மையிலேயே களத்தில் இறங்கி பணியாற்றுபவர். அந்தப் பணிகளால் அவர் மண்டபம் அகதிகள் முகாமிலும், பஞ்சாபிலும், காஷ்மீரத்திலும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நடத்தப்பட்ட விசாரணைகளிலும் அடைந்த வேதனைகளும், வலிகளும் அவரே நேற்று கூறியபடி ஒரு பேய் போல நிழல் போல அவரைத் துரத்த அந்த பாரத்தை சற்று இறக்கி வைக்கும் ஒரு கருவியாக எழுத்தைத் தேர்ந்தெடுத்து இக்கதைகளை எழுதியுள்ளார்.
இயற்கை உபாதைகளைக் கழிக்க மற்றவரின் துணை வேண்டியிருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு உணவே உட்கொள்ளாமல் இருக்கும் அகதியான மலர் மற்ற செயற்பாட்டாளர்களுக்கு ஒரு ஆவணம். பாலமுருகன் துயரமிக்க அவளது கண்களினூடாக அவளது கதையைத் தேடுகிறார். அது போலவே பஞ்சாபில் ‘காணாமல் போன’ மனித உரிமை ஆய்வாளர் அல்லது காஷ்மீரத்தில் கடத்தப்பட்டு எங்கோ புதைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் போன்றவர்கள் நமக்கு ஒரு செய்தி. ஆனால் பாலமுருகன் அவர்களது தாயின் தேடலை புனைவாக்கியுள்ளார்.
இவை மட்டுமல்லாது மற்ற பல கதைகளைப் பற்றியும் எவ்வளவோ பேச முடியும். பாலமுருகன் இறக்கி வைத்த பாரம் நம்மைத் தொற்றிக் கொள்வதை நம்மாலும் எவ்வளவுதான் சுமக்க முடியும்?
‘வலியைப் பற்றி எழுதியிருக்கிறேன். வேதனையைப் பற்றி எழுதியிருக்கிறேன்’ என்று கடந்த வருடங்களில் சிலர் தமிழ் இணையப் பக்கங்களில் பீற்றிக் கொண்டிருந்தார்கள். ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல் மற்றும் பெருங்காற்று சிறுகதைகளைப் படித்தால் ‘அடேய் உண்மையான வலிகளும் வேதனைகளும் தினம் தினம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்க வேறு எந்த வலியைப் பற்றியடா எழுதிக் குவிக்கிறீர்கள்?’ என்று கேட்கத் தோன்றும்…