Showing posts with label Hollywood Film. Show all posts
Showing posts with label Hollywood Film. Show all posts

Saturday, 18 June 2016

The Bourne Triology (English)

These are testing times, I am torn between my loyalties; my love for football impeding my craving for films and in between my jealous mistress trying to catch up with renewed vigor, the days lost during summer vacation!


Life is difficult but still I could manage to see the Bourne Trilogy back to back. The screenplay is based on the novels written by Robert Ludlum, who I ignored for no reason during my college days when I was chasing James Hadley Chase, Irving Wallace, Sidney Sheldon etc., Ludlum I am told, known for his thrillers on international conspiracies and of course these three films are about a renegade CIA spy, who couldn’t remember his past and the events that unfold one by one brings in the memories bit by bit and the agency which created him into a killing machine by wiping his past is now trying to eliminate him.


Matt Damon, with very ordinary looks and physique hardly be a choice to don the role of an action hero, particularly when he has to emerge unscathed out of every action scene however much difficult the situation be, with the ease of a superman; But he dispelled my doubts with a convincing effort, may be due to the deft editing with jump-cuts and shaky camera. Our film-makers use a crude version of this technique to make our heroines do Bharathanatyam!


It was only when I was watching through the third film, I understood that that it was the editing with shaky camera ably complemented by background music, I was ‘illusion’ed to believe as if the trilogy was a fast paced edge of the seat thriller. As hero jumps from one city to another all around the globe including our own Goa as if he was in a constant hurry to catch a train, even when there isn’t anything worry about, little we realize that it a spell cast by the director; that is the uniqueness in which these films stand apart.



I must admit that at the end of this ‘filmathon’ exercise, I thought of our own Billa, which Suresh Krishna successfully passed off here as a thriller with Ajith walking in slow-motion even while drawing his guns and pumping bullets!

(From Facebook 18/06/14)

Tuesday, 26 April 2016

ஸ்பாட்லைட் (ஹாலிவுட்) 2015

“ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. . ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்”
I கொரிந்தியர் 7:1&2

புனித பவுல் மெத்தப் படித்தவர். மார்க்க அறிஞர். இயேசுவைப் பார்த்திராதவர். இயேசுவின் மரணத்திற்கு, சரி உயிர்த்தெழுதலுக்கு பின்னர் கிறிஸ்தவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடியவர். ஒரு தருணத்தில் அவரே கிறிஸ்தவராக மாறி பல நாடுகளுக்கும் பயணமாகி ஆங்காங்கே சபைகளை ஏற்படுத்தி கிறிஸ்தவத்தை நிறுவனப்படுத்தியவர்.

மத அறிஞர் என்று அறியப்படும் எவருக்கும் உள்ள பிரச்னைகள் பவுலுக்கும் இருந்தது; எளிமையாக உருக்கொண்டிருக்கும் எந்த நம்பிக்கையிலும் தங்களது அறிவைக் கொட்டி குழப்பியடிப்பது.

மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பல அறவுரைகளைக் கூறிய கிறிஸ்து, தாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு அதைப் போதிக்கவில்லை.

ஆனால் பிரமச்சாரியாகிய பவுலோ, கிறிஸ்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்பட்ட எளிய கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து தனது தர்க்க அறிவு முழுவதையும் மேற்கண்ட கடிதம் முழுவதும் கொட்டிக் குழப்பியதில் கிறிஸ்தவ சபைக்கு ஆரம்பித்த பிரச்னை இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்று வரை தொடர்கிறது.

பாஸ்டன் நகர் சர்ச்’சில் பணியாற்றும் பாதிரி, வசதி வாய்ப்பற்ற சிறுவர்களின் நிர்கதியான நிலையை சாதகமாக்கி அவர்களுடன் தவறாக நடந்து கொண்டது தெரிந்தும் கத்தோலிக்க சபையின் பாஸ்டன் நகர அர்ச் பிஷப் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கிடைத்த ஒற்றை வரி தகவலைப் பிடித்து தொடர்ந்து புலனாய்வு மேற்கொள்கிறார்கள், பாஸ்டன் க்ளோப் என்ற பத்திரிக்கையின் நிரூபர்கள் சிலர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்ட புலனாய்வில் ஒன்றல்ல, பதிமூன்றல்ல குறைந்தது 87 பாதிரிகள் அதாவது 6% சதவீத பாதிரிகள் அவ்வாறு நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது பெரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தாலும், வழக்கு விசாரணைக்கு முன்னரே வக்கீல்கள் துணையுடன் ‘பேசி’ முடிக்கப்பட்ட விபரமும் தெரிய வருகிறது.

பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கை தனது புலனாய்வு முடிவுகளை பல்வேறு கட்டுரைகளாக தொடர்ந்து எழுதியது. தொடர்ந்து கத்தோலிக்க சபை பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தது என்று நீங்கள் நினைத்தால் தவறு.

ஏதுவும் இல்லை.

தவறுகளை கண்டும் காணாது இருந்த அர்ச் பிஷப் சிறிது காலம் பணியிலிருந்து விலகியிருந்தாலும், பின்னர் ரோம் நகரில் அதை விட பெரிய பொறுப்பு வகிக்க அனுப்பப்பட்டார்.

பொது சேவைக்காக புலிட்ஸர் விருது கிடைத்த பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கையின் புலனாய்வை ‘ஸ்பாட் லைட்’ என்ற பெயரில் திரைக்கதையாக்கி சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கின்றனர்.

பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில் தண்டனை பெற்ற இந்திய பாதிரி ஒருவரை ஊட்டி சபை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளதாக கடந்த வாரம் எழுந்த குற்றச்சாட்டில், நேற்றுப் பார்த்த இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

Sunday, 14 February 2016

ஒன்லி காட் பர்கிவ்ஸ் (2013) ஆங்கிலம்

‘மிஸ்டர் பீன்’ஸ் ஹாலிடே’ என்ற படத்தைப் பார்த்திருக்கலாம். அதில் கார்ஸன் க்ளே என்ற இயக்குஞர் ஒரு கதாபாத்திரம். அவர் இயக்கிய ‘ப்ளேபாக் டைம்’ என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும். படத்தின் மொத்த காட்சியிலும் இயக்குஞர், பின்னணியில் அமானுஷ்ய இசையில் நடந்து வந்து கொண்டேயிருப்பார். விருது வாங்கவென்றே தயாரிக்கப்படும் திரைப்படங்களை கிண்டலடிக்கவே அந்தக் காட்சியிருக்கும்.

கல்லூரியில் படிக்கையில் மலையாள விருதுப் படமான ‘சிதம்பரம்’ பார்க்க சென்றிருந்தோம் மதுரையில் சக்தி தியேட்டர் என நினைக்கிறேன், மெல்ல நகரும் ஒவ்வொரு காட்சியிலும் மதுரை ரசிகர்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர், காலைக் காட்சி வேறு. ஒரு காட்சியில் ஸ்மிதா பாட்டீல் புழக்கடையில் பாத்திரங்களைப் போட்டு கழுவுவார். தியேட்டரே நிசப்தமாக இருக்க இருட்டிலிருந்து ஒரு குரல், ‘நல்ல வேளை கொஞ்சம் பாத்திரங்கதான் இருக்கு. சீக்கிரம் கழுவி முடிச்சுருவா’

‘ப்ளேபாக் டைம்’ ரோவன் அட்கின்ஸனின் கிண்டல் என்றாலும் அதைப் போலவே ஆனால் சீரியஸான படத்தில் ஞாயிறு இரவு மாட்டிக் கொண்டேன். ரியான் கோஸ்லிங், க்றிஸ்டின் ஸ்காட் தாமஸ் என்ற பெயர்களைப் பார்த்து ஏதோ ஹாலிவுட் சண்டைப்படம் என்று நினைத்து விட்டேன்.

போஸ்டரில் கோஸ்லிங் முஷ்டியை மடக்கிக் கொண்டு நிற்கிறாரே என்று பார்க்காதீர்கள், முஷ்டியை உயர்த்துவதோடு சரி, ஒரு அடி கூட அடிக்க முடியாமல், நடுத்தர வயது தாய்லாந்து போலீஸ்காரர் ஒருவரிடம் நாயடி பேயடி பட்டு மூஞ்சியெல்லாம் ரத்தக் களறியாகிவிடுகிறது. அந்தப் போலீஸ்காரர் படம் முழுக்க ஏதும் பேசாமல் மெல்ல நடந்தபடியே வருகிறார். பட்டாக்கத்தியை உருவி பார்ப்பவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுகிறார். படத்தைப் பார்க்கிறேன் என்று கிளம்பி யாரும் அவரிடம் சிக்கி விட வேண்டாம் என்று எச்சரிக்கவே இப்பதிவு.

பார்த்துதான் தீர வேண்டுமென்றால், படத்தை அணைத்து விட்டு பின்னணி இசையை மட்டும் தரமான ஹெட்ஃபோனில் கேட்கவும்.

சமீபத்தில் தாய்லாந்துக்கு குடும்பத்துடன் போய் வந்த வக்கீல் நண்பர் ஒருவர், ‘சார், தாய்லாந்து ஃபேமிலியோட போற ஊர் சார்’ என்றார். அப்புறம் ஏன் படங்களில், இப்படியே காண்பிக்கிறார்கள்?

மதுரை
11/02/15

Thursday, 5 November 2015

தி விசில் ப்ளோயர் 2010

ஆப்கானிஸ்தான் அதிபர் ‘ஹமீது கர்சாய்’க்கு பாதுகாப்பளிப்பது, ‘டின்கார்ப்’ என்ற அமெரிக்க நிறுவனம். ஏதோ தேச சேவையல்ல. டின்கார்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சேவையளிக்கும் அமெரிக்க நிறுவனம். வருட வருமானம் 3 பில்லியன் டாலர்களைத் தாண்டும்.

ஈராக் காவலர்களுக்கு பயிற்சியளிப்பதும் டின்கார்ப்தான். மொத்தத்தில் அமெரிக்க ராணுவத் தொடர்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம், டின்கார்ப்பின் ஒப்பந்த சேவையிருக்கும்.

போஸ்னியா!

அங்கில்லாமலா? போஸ்னிய யுத்தத்திற்கு பின்பு அங்கு பணிபுரிய சென்ற காத்தரீன் போல்காவோச் என்ற அமெரிக்க பெண் காவலர், அங்கு டின்கார்ப் நிறுவன ஊழியர்கள் இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தும் human traffickingக்கு துணை போவதையும் ஈடுபடுவதையும் கண்டு புகார் கூறியதால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். பின்னர் அவர் பிபிசி நிறுவனம் மூலம் இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தாலும்….சில ஊழியர்கள் திருப்பி அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டதைத் தவிர வேறு பலன் இல்லை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ட்ராபிக்கிங் பற்றி படமெடுக்க வேண்டும் என்று நினைத்த லாரீஸா கோண்ராக்கி என்ற பெண்மணி எப்படி எடுப்பது என்று திகைத்து காத்தரீன் அனுபவத்தை எடுக்கலாம் என்று எடுத்த படம் நேற்று பார்த்த ‘தி விசில் ப்ளோயர்’

பல விருதுகளை அள்ளிக்குவித்தாலும் ட்ராமாட்டிக்கான முடிவு இல்லாமல், ஏதும் இல்லாமல், வெறுமே முடிந்து போனதானாலோ அல்லது வேறு வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்ததாலோ, இப்படத்தை பார்த்துதானாக வேண்டும் என்று கூற மாட்டேன்.

மதுரை
05/11/2013

Thursday, 17 September 2015

கெட் ஆன் அப் 2014

பிரபலமானவர்களின் வாழ்க்கைச் சரிதமாக (Biopic) எடுக்கப்படும் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்திலும், முக்கிய பாத்திரமாக நடிப்பவர் நம்மை ஏமாற்றுவதேயில்லை. அலி (2001) படத்தில் முகமது அலியாக வில் ஸ்மித்’தா என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பொழுது வில் ஸ்மித்’தை மறந்து போனேன் என்பதுதான் உண்மை!

ஏதோ ஒன்றிரண்டு தடவை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும், ஜேம்ஸ் ப்ரவுன் இப்படித்தான் பேசியிருப்பார், இப்படித்தான் ஆடியிருப்பார் என்று தெரியாது. ஆனால், சாத்விக் போஸ்மென் என்ற இளம் நடிகர் படத்தில் நாம் காணும் ஜேம்ஸ் ப்ரவுன் என்ற ஆளுமை இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று நம்மை முழுக்க நம்ப வைக்கிறார். இவரது மற்ற படங்களைப் பார்த்தாலோ, இயல்பாக இருக்கும் இவரது புகைப்படத்தைப் பார்த்தாலோ ஜேம்ஸ் ப்ரவுனாக நடித்தது இவரா என்று நம்புவது சிரமம். ஒப்பனை, வசன உச்சரிப்பு, நடனம், முகபாவனை என்று படம் முழுக்கவும் நம்மை ஆக்கிரமிக்கிறார்.

வாழ்க்கை சரிதம் என்றாலும், நான் லீனியர் முறையில் கதை முன்னும் பின்னும் ஊசலாடி அழகிய கொலாஜ் சித்திரம் போல நம்முன் விரிகிறது. படத்தைப் பார்க்கவும் பிடித்துப் போகவும், ஜேம்ஸ் ப்ரவுன் யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை...

மதுரை
23/12/2004

Thursday, 3 September 2015

பெஸ்ஸீ 2015

கி.ராஜநாராயணன், கோபல்லபுரம் நாவலில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தாலுகா தலைமையகம் ஏன் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது என்பதை சுவராசியமாகக் கூறியிருப்பார்.

ஜமாபந்தி. கலெக்டர் உட்பட அனைவரும் வந்து விட்டாலும், தாசில்தாரைக் காணோம். வியர்க்க விறுவிறுக்க பின்னர் வந்து சேரும் தாசில்தாரைப் பார்த்து கலெக்டர் கடும் கோபமாக, ‘ஜமாபந்தியன்று ஊரிலிருக்காமல் எங்கு போனீர்’ என்பதற்கு. தாசில்தாரோ, ‘எங்கும் போகவில்லை ஐயா. கோவில்பட்டியில் வீடு. அங்கிருந்து வர நேரமாகிவிட்டது’. என்பார் அப்பாவியாக.

கலெக்டரோ, ‘அது இன்னமும் மோசம். தாசில்தார் தாலுகா தலைநகரில் இல்லாமல் வேறு ஊரில் எப்படி வசிக்கப் போயிற்று’ என்று விளக்கம் கேட்பார். தாசில்தார், ‘ஐயா, நான் தாழ்ந்த சாதி. எனக்கு ஓட்டப்பிடாரத்தில் யாரும் வீடு கொடுக்க மாட்டார்கள்’ என்றவுடன் கலெக்டர், ‘தாலுகா தாசில்தாருக்கு வீடு கொடுக்காத ஊரில் தலைமையகமா, மாத்து உடனே தாலுகா ஆபீசை கோவில்பட்டிக்கு’ என்று உத்தரவிட்டாராம்.

அந்தக் கலெக்டர் மணியாச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் என்று யாரோ ஒருவர் அவரது முகநூலில் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை தங்களது கணீரென்ற பாடல்களால் கட்டிப் போட்ட ‘மா ரெய்னி’யும் பெஸ்ஸி ஸ்மித்’தும் அவர்களும் அவரவர் குழுவினரும் பயணம் செய்வதற்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் விஞ்சும் வகையில் பிரமாண்ட வசதிகளோடு சொந்தமாக ரயில் பெட்டிகளையே வைத்திருந்தாரக்ள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் வெளிப்படுத்த விரும்பிய ஆடம்பரம் மட்டுமல்ல.

மாறாக, கறுப்பின பெண்கள், அதுவும் இனவெறி கொடி கட்டிப் பறந்த தென்மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், சாலைகளில் பயணம் செய்வதால் சந்திக்க நேரிடும் நிறவெறி சீண்டல்களைத் தவிர்க்கவும் பிற நகரங்களில் தங்குவதற்கு விடுதிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களாலும்தான் என்ற காரணங்கள் பெஸ்ஸியின் வாழ்க்கைச் சரிதப் படமான இப்படத்தில் கிடைக்காது.

ஆனால், பெஸ்ஸி ஒன்றும் நிறவெறி தாக்குதலுக்கு பயந்தவரல்ல. யாரிடமும் அவருக்கு பயமில்லை என்றாலும், பாடல் நிகழ்ச்சியில் கலாட்டா செய்ய வரும் கூ க்ளக்ஸ் க்ளான் இயக்கத்தவரைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பயந்து கிடக்க தைரியமாகச் சென்று விரட்டியடித்தவர்தான். க்ளான்’காரர்கள்தான் என்றில்லாமல் அவரைச் சீண்டும் அனைத்து ஆண்களும் அவரிடம் உதைபடுகிறார்கள்.

அந்த தைரியத்தையும் தாண்டி பெஸ்ஸியின் வாழ்க்கையில் சிறு வயது முதலே துன்பமும் இன்பத்தோடு தொடர்கிறது. நாற்பத்து மூன்று வயதிலேயே சாலை விபத்தில் முடிந்து போன பெஸ்ஸியின் குறுகிய வாழ்க்கை எங்கும் பரவிக்கிடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், ஏற்றத் தாழ்வுகளும் அருமையான திரைக்கதைக்கான வடிவம்தான் என்றாலும் அதற்காக இருபது வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இங்கு எப்படி கொல்லங்குடி கருப்பாயி’யுடன் துணைக்கு பாடிய பரவை முனியம்மா பின்னர் தனியாக பயணித்து அவரையும் விஞ்சினாரோ அதே போன்று புகழில் உச்சியிலிருந்த மற்றொரு ப்ளூஸ் ரக பாடகியான மா ரெய்னி’யிடம் வாய்ப்பு கேட்டு துணையாகப் பாடிய பெஸ்ஸி பின்னர் தனியே சென்று 'ப்ளூஸ் பேரரசி’ என்று வர்ணிக்கப்பட்டார்.

ப்ளூஸ் ஆப்ரிக்க அமெரிக்க இசையைக் கலந்து பொதுவாக காதல் ஏக்கத்தில் பாடப்படும் பாடல்கள். பெஸ்ஸி படம் பார்த்ததிலிருந்து நானும் ப்ளூஸ் ரசிகனாகி விட்டேன். இரு நாட்களாக ப்ளூஸ்’தான்.

கே.ஆர்.விஜயா கூட சொந்தமாக விமானம் வைத்திருந்தார் என்று முன்பு கூறுவார்கள். பறந்தாரா என்று தெரியவில்லை...

Monday, 10 August 2015

நிகழ்காலத்திலேயே நின்று விடுவதன் அச்சம்!

பத்லாபூர். ஹிந்தி திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் என்ற தமிழர் இயக்கியது. அதனாலோ என்னவோ தமிழில் பேசும் பாத்திரமும் உண்டு. சிறந்த திரைப்பட ரசிகர் ஒருவரின் சிபாரிசால் பார்த்தாலும் திரைக்கதை பல திசைகளிலும் பயணித்ததால் கொஞ்சம் இழுவையாகி விட்டது.

ஆனால், நவாசுத்தீன் சித்திக் என்று ஒருவர் வில்லனாக வருகிறார். செய்த தவறுகளுக்கு கடைசி வரை மனம் திருந்தாமலிருப்பதைத் தவிர பெரிய வில்லத்தனம் ஏதும் செய்யவில்லை என்றாலும், அவர் வரும் காட்சிகளில் ஏறக்குறைய ஹன்னிபல் லெக்டர் அளவிற்கு நம் மனதை ஏதோ விரும்பத்தகாத உணர்வில் சில்லிட வைக்கிறார். அந்தக் காலத்தில் நம்பியார் எதற்கு கைகளைப் போட்டு அப்படி பிசைந்தார் என்றிருக்கிறது. வடநாட்டு பிரகாஷ்ராஜான நானா பட்டேகர் கூட சிறந்த ‘நடிகர்’தான்.

நான் சொல்ல வந்தது கதாநாயகனான வருண் தவானைப் பற்றி. பெரிதாக ஒன்றும் இல்லை. அடிக்கடி லேசாக தலையை வலப்பக்கம் சாய்த்து கூர்மையாகப் பார்க்கும் போதெல்லாம், வேறு யாரையோ நினைவு படுத்தினார். இறுதியில் கண்டு பிடித்து விட்டேன். க்யானு ரீவ்ஸ்.

அது என்னமோ அடிக்கடி இப்படி நடக்கிறது. இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை சுவராசியமான திரைக்கதையாக்கியுள்ள ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ என்ற அருமையான படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ள ஃபெலிஸிடி ஜோன்ஸ் திவ்யஸ்ரீயை ஞாபகப்படுத்தினார்.

ஹாக்கிங்’கின் வாழ்க்கை கற்பனைக் கதையை விட அதிக உணர்வலைகளால் நிரம்பியிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதுவும் ஹாக்கின்ஸாக நடித்துள்ள எட்டி ரெட்மெய்னின் நடிப்பும் ஒப்பனையும், பார்த்து அனுபவிக்க வேண்டும்.

நேற்றுப் பார்த்த ‘த ஏஜ் ஆஃப் அடலைன்’ என்ற படத்தில் ‘யார் இது அமிதாப் பச்சன் மாதிரி’ என்று பார்த்தால் கல்லூரிக் கால ஹீரோ ஹாரிஸன் ஃபோர்ட்.

ஏதோ அசந்தர்ப்பமான நிலையில் விபத்துக்குள்ளாகும் கதாநாயகி அடலைன் மொண்ணையான விஞ்ஞான விளக்கத்தில் வயதாகும் தன்மையை இழந்து 29 வயதிலேயே அவரது 107ம் வயது வரை நின்று விடுகிறார். அதனால் ஏற்ப்படும் பிரச்னையை அழகிய காதல் கதையாக்கியிருக்கிறார்கள். வயதாகாமல் போவதில் என்ன பிரச்னை என்று ‘If I had your looks and energy, I’d fall in love tomorrow’ என்று கூறும் அடலைனின் அறுபது வயது மகளைப் போல நினைக்கலாம்.

ஆனால் ‘It’s not the same when there’s no future’ என்று தனது காதலுணர்வைப் பற்றி அடலைன் கூறுவதில் பிரச்னை புரியும். இனிமையாக முடியும் சாதாரண காதல் கதைதான். அசாதாரண பிரச்னையால் வித்தியாசமாக இருந்தது.

எதிர்காலத்திற்குள் பயணிப்பது அச்சமூட்டுவதாயிருப்பினும் நிகழ்காலத்திலே நின்று விடும் உணர்வுதான் உண்மையிலேயே அச்சமூட்டுகிறது. ஹாக்கிங்’கிடம் அடைக்கலம் தேடினாலும், எதிர்காலம் என்ற ஒன்றே ஒருநாள் இல்லாமல் போகப் போகிறது என்று விஞ்ஞானத்தாலும் அச்சமூட்டுகிறார்.

Sunday, 19 July 2015

கான் கேர்ல் 2014

குழந்தைகள் பேசும் பொழுது தவறுகளைத் திருத்தாதீர்கள் என்று படித்திருக்கிறேன். அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் பேசும் வார்த்தையின் உச்சரிப்பையோ அல்லது இலக்கணத்தையோ திருத்தினால், அடுத்த முறை அதைப் பேசும் பொழுது கவனியுங்கள், சிறிய இடைவெளியும் தயக்கமும் இருக்கும்.

இடையில் பல திரைப்படங்கள் பார்த்தாலும், எழுதாததற்குக் காரணம் ‘ஊர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் பொழுது இவர் சினிமா பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்று படித்த முன்னிகை அல்ல. வேலைப்பளுவும், வேறு பலவும்தான் என்பதற்கு படங்களை மட்டும் நான் போடுவதை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும், ‘கான் கேர்ல்’ படம் பற்றிக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாக ஆரம்பித்து ஏறக்குறைய ‘பேஸிக் இன்ஸ்டிக்ண்ட்’ மாதிரி உணர்வுகளை ஏற்ப்படுத்துகிறது. அதுவும் சில வசனங்கள் நிறுத்தி மீண்டும் ஒரு முறை படித்து கடக்க வேண்டியிருக்கிறது.

“You're delusional. I mean, you're insane, why would you even want this? Yes, I loved you and then all we did was resent each other, try to control each other. We caused each other pain”

“That's marriage”

கான் கேர்ல்’ த்ரில்லர் என்று வகைப்படுத்தப்பட்டாலும், த்ரில்லிங் மிஸ்ஸிங். அதை ஈடு செய்தது மைக்கேல் டக்ளஸ் கிழவனாக, ஆனால் படு பயங்கர கிழவனாக நடித்த பியாண்ட் த ரீச்’. ஏற்கனவே பல திரைப்படங்களில் கையாளப்பட்ட ‘டாம் அண்ட் ஜெரி’ வகை ஓட விட்டு வேட்டையாடும் கதைதான். ஆனால் வித்தியாசமாக, அமெரிக்கவின் வறண்ட பாலைவனமான மேஹேய் வனாந்திரத்தில்.

அல் பசினோ ரசிகர்கள் கோபிக்க வேண்டாம். சாரி, ரொம்ப எதிர்பார்த்து பார்த்த ஸ்கார்ஃபேஸ் சுவராசியமாக இருந்தாலும் இறுதியில் ஹிந்திப் படம் போல முடிந்து போனது.

மதுரை
10/07/15

மாகி 2015

‘பள்ளிகளில் தவறிழைக்கும் சிறார்களை ஒழுங்குபடுத்த காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் தண்டனை முறைகள் அவர்களை திருத்துவதற்குப் பதிலாக மேலும் மேலும் தண்டனைக்கு பழக்கப்படுத்துகின்றன எனவும் அதற்கான மாற்று முறைகளை சிந்திக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று டைம்ஸில் செய்திக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க மனோதத்துவ நிபுணரான ரோஸ் கிரீன் ‘த எக்ஸ்போஸிவ் சைல்ட்’ ‘லாஸ்ட் அட் ஸ்கூல்’ என்ற தனது புத்தகங்களில் இந்தப் பிரச்னையை எப்படிக் கையாளுவது என்பதை அலசுகிறாராம்.

நமது கல்வியியல் (பி.எட்., டி.டி.இ) மாணவர்கள் மாற்று முறைகளைப் பற்றி சிந்திக்கிறார்களா என்பது தெரியாவிட்டாலும், சீனியாரிட்டி லிஸ்ட், புரோமஷனல் பேனல், இன்கிரிமெண்ட், லீவ் சாலரி, டிரான்ஸ்பர், மைக்ரேஷன், க்ராஸ் டிகிரி பற்றி சிந்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சிந்திக்க நேரமில்லாதவர்கள், குறைந்த பட்சம் நானும் ரான்யாவும் நேற்று இரவு பார்த்த ஆர்னால்டு ஸ்வார்ட்ஸ்நேகரின் ‘மாகி’ என்ற படத்தையாவது மாற்றுத் தண்டனையாக யோசிக்கலாம்.

உத்தம வில்லனை’யே கடைசி வரை பார்த்த ரான்யா கூட பாதியில் தூங்கி விட்டாள்.

‘மாகி’ குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது உண்மைதான் போல...

மதுரை
12/07/15

Friday, 17 July 2015

வுமன் இன் கோல்ட் 2015

“ஏதாவது ஒரு கேஸுல மொத்தமா சம்பாதிச்சுட்டு வாழ்க்கையில செட்டிலாயிரணும்’ சில சமயம் வழக்குரைஞர்கள் தங்களுக்குள் கிண்டலடித்துக் கொண்டாலும், அமெரிக்காவில்தான் அது சாத்தியம்.
வழக்குரைஞர் தொழிலில் தடுமாறிக் கொண்டிருந்த ராண்டால் ஷூன்பெர்க்’குக்கு அவரது நாற்பதாவது வயதில் ஒரே வழக்கில் கிடைத்த வருமானம் 120 மில்லியன் டாலர்கள்!

மாரியா அல்ட்மான்’னுக்கு திருமணமான அதே நேரத்தில், ஹிட்லர் ஆஸ்திரியா’வை நாஜிக்களின் பிடியில் இணைத்துக் கொண்டிருந்தார். மரியாவின் குடும்பம் வியான்னாவில் பெரும் செல்வந்தர்கள். ஆனால் யூதர்கள். விரைவிலேயே நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பி மரியா அமெரிக்காவில் குடிபுக வேண்டியிருந்தது. மரியா குடும்பம் சேர்த்து வைத்திருந்த கலைப்படைப்புகள் முக்கியமாக ஆஸ்திரிய ஓவியரான கஸ்டவ் க்ளிம்ட் என்பரின் ஓவியங்கள் நாஜிக்களால் திருடப்பட்டு இறுதியில் போருக்குப் பின்னர் ஆஸ்திரிய அருங்காட்சியகத்திலேயே தஞ்சமடைந்தன. அந்த ஓவியங்களிலேயே முக்கியமானது ‘ஆஸ்திரிய மோனாலிசா’ என்று கருதப்பட்ட ‘அடேலே’. க்ளிம்ட் 1907ம் ஆண்டு மரியாவின் அத்தையாகிய அடேலே’வை தங்கத்தாலேயே உருவாக்கிய ஓவியம்.

ஓவியத்தை திரும்பப் பெற ஆஸ்திரிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் நீதிமன்ற கட்டணமே 1.5மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். மரியாவிடம் அவ்வளவு தொகை இல்லை.

சரி, அமெரிக்காவிலேயே வழக்கு தொடர்ந்தால், ஆஸ்திரிய அரசாங்கம் முதல் நிலையிலேயே வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. உச்ச நீதிமன்றம் தனது 2004ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றங்களுக்கு அந்த வழக்கை விசாரிக்க ஆள்வரை (Jurisdiction) உண்டு என்று தீர்ப்பளிக்க ஆஸ்திரிய அரசாங்கம் வேறு வழியின்றி ஆர்ப்பிட்டிரேஷன் மூலம் ஆஸ்திரியாவில் தீர்த்துக் கொள்ளலாம் என்று சமரசத்துக்கு வர, வழக்கு ஆஸ்திரியாவில் நடைபெற்றது.

இறுதியில் தீர்ப்பு மரியாவுக்கு சாதகமானது. 2006ம் ஆண்டில் அடேலே உட்பட மற்ற மரியா குடும்ப ஓவியங்கள் அமெரிக்காவிற்கு பயணமாயின.

பரமபத விளையாட்டு போல வெற்றியும் தோல்வியுமான மரியாவின் இந்தப் போராட்டம் ‘வுமன் இன் கோல்ட்’ என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதையும், இசையும், காட்சியமைப்புகளுமாக சுவராசியமாகத்தான் உள்ளது என்றாலும், இனம்புரியா உணர்வுகளைத் தூண்டும் வண்ணம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏற்கனவே கிழவியான ஹெலன் மிர்ரன் கொஞ்சம் வயதாகத் தோன்றுவது அதிசயமில்லை. ஆனால், கொஞ்சமே வயதான கேட்டி ஹோம்ஸ் ஏன் இப்படி கிழவி மாதிரி ஆகிவிட்டார். டாம் க்ரூஸ் ‘ஸைன்டாலஜி’ மூலம் சூனியம் கீனியம் வைத்து விட்டாரா?

எப்படியோ, இந்தப் படத்தில் நமது வழக்குரைஞர்களுக்கு ஒரு பாடம் உள்ளது. ஒரே வழக்கில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று அல்ல. அமெரிக்கா மாதிரி 40% அல்ல 10% கட்டணம் பேசினாலே இங்கு குற்றம்.

பாடம், ஆர்பிட்டிரேஷன் பற்றியது. சொத்து வாங்க ஒப்பந்தம் எழுதுகையில், வாங்குபவர் உங்கள் கட்சிக்காரர் என்றால், ‘ஒப்பந்தத்தில் எழும் பிரச்னைகளை ஆர்பிட்டிரேஷன் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுத கோரவும்’. ஒப்பந்தப்படி சொத்தினை கிரயம் பெற தாக்கல் செய்யப்படும் ஏற்றதை ஆற்றும் (Specific Performance) வழக்குகளுக்கு தடையாக இருப்பது 7.5% என்ற நீதிமன்ற கட்டணம்தான். ஆர்பிட்டிரேஷன் என்றால் அந்தப் பிரச்னை அல்ல.

‘ஆர்பிட்டிரேஷன் க்ளாஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நானும் இரண்டு மூன்று கட்சிக்காரர்களிடம் கூறிப்பார்த்து விட்டேன். ‘அது எதுக்கு சார்?’ என்கிறார்கள்...

Saturday, 23 May 2015

செல்மா (2014)

‘பார்ப்பதற்கு ஏதாவது ஹாலிவுட் படம் சொல்லுங்க, சார்’ என்று இளம் வழக்குரைஞர்கள் என்னை கேட்கும் போது எல்லாம், ‘தி க்ரேட் டிபேட்டர்ஸ்’ என்பதுதான் எனது முதல் பதிலாக இருக்கும்.

பலதடவை பார்த்து விட்டாலும், இன்னமும் அந்த இறுதிக் காட்சியின் பேச்சுப் போட்டியில் டென்ஸில் விட்டேகர் தனது உரையினை முடிக்கும் பொழுது உறைந்து போய் விடுவேன்.

அடுத்த படம் டென்ஸில் வாஷிங்டன்’னின் ‘மால்கம் எக்ஸ்’. இன்றிலிருந்து நேற்றுப் பார்த்த ‘செல்மா’வையும் சேர்த்துக் கொள்வேன். இந்தப் படங்களை பரிந்துரைப்பதற்கு ஏதோ ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் போராட்டத்தின் தார்மீக நெறி காரணமல்ல.

மாறாக, இப்படங்களின் பாத்திரங்கள் தங்களது மேடைப் பேச்சுகளில் எப்படி பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, எளிய வாக்கியங்களாக அவற்றை அழகுற கோர்க்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் காரணம். முக்கியமாக, அப்படி கோர்க்கப்பட்ட வாக்கியங்களை ஏற்ற இறக்கமாக பேசுவதன் மூலம் தம்முன் இருப்பவர்களை அவர்களால் வசியப்படுத்தவும், கிளர்ந்தெழவும் செய்ய முடிகிறது என்பதை தெரிந்து கொள்ளவும்தான்.

மால்கம் எக்ஸும் சரி, மார்ட்டின் லூதர் கிங்’கும் சரி தங்களது மேடைப்பேச்சுகளை தங்களுக்குள்ளாவது ஒரு முறை பேசிப் பார்க்காமல் மேடையில் பேசுவதில்லை என்பது அவர்களது மேடைப் பேச்சுகளை கேட்டால் புரியும். இந்தப் படத்தில் கூட சில காட்சிகளில், எப்படி கிங்’ தனது முக்கியமான பேச்சுகளுக்கு முன்னிரவே, அதற்காக மெனக்கெடுகிறார் என்பது தெரியும்.

சிறிய கல்லானது கவணைச் சுழற்ற சுழற்ற வேகம் பிடிப்பதைப் போல போல சாதாரணமாக இருக்கும் வாக்கியத்தினை மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி தங்களது உரையில் பயன்படுத்துவதன் மூலம் முழுச்சக்தியுடன் அந்த வார்த்தைகளை கூட்டத்தில் அவர்களால் பிரயோகிக்க முடிந்தது.
ரஜினிகாந்த்’தின் பஞ்ச் டயாலாக்’குகளுக்கும் ஏறக்குறைய இதே அடிப்படைதான்.

கலைஞர் கருணாநிதி கூட தனது உரைகளுக்காக தன்னை முன்பாகவே தயார் செய்து கொள்வார் என்று படித்திருக்கிறேன். ஆனால், ஜவகர்லால் நேரு தனது சுதந்திர தின உரையை எவ்வித தயாரிப்பும் இல்லாமல் பேசினார் என்று யாரோ கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேடைப்பேச்சுகளை மட்டுமல்ல நீதிமன்ற வாதுரைகளையும் பேசிப்பார்த்துக் கொள்வதும், தயார் செய்து கொள்வதும் நீதிமன்றத்தில் நீதிபதியை என்பதை விட சக வழக்குரைஞர்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் பொது மக்களையும் கவர மிக்க உதவியாக இருக்கும்.

படங்களைப் பார்க்க இயலாதவர்கள், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் உரைகளை யூ ட்யூபில் ஹெட்ஃபோன் உதவியுடன் கேட்டுப் பார்க்கலாம்...

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....