Tuesday 26 April 2016

ஸ்பாட்லைட் (ஹாலிவுட்) 2015

“ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. . ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்”
I கொரிந்தியர் 7:1&2

புனித பவுல் மெத்தப் படித்தவர். மார்க்க அறிஞர். இயேசுவைப் பார்த்திராதவர். இயேசுவின் மரணத்திற்கு, சரி உயிர்த்தெழுதலுக்கு பின்னர் கிறிஸ்தவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடியவர். ஒரு தருணத்தில் அவரே கிறிஸ்தவராக மாறி பல நாடுகளுக்கும் பயணமாகி ஆங்காங்கே சபைகளை ஏற்படுத்தி கிறிஸ்தவத்தை நிறுவனப்படுத்தியவர்.

மத அறிஞர் என்று அறியப்படும் எவருக்கும் உள்ள பிரச்னைகள் பவுலுக்கும் இருந்தது; எளிமையாக உருக்கொண்டிருக்கும் எந்த நம்பிக்கையிலும் தங்களது அறிவைக் கொட்டி குழப்பியடிப்பது.

மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பல அறவுரைகளைக் கூறிய கிறிஸ்து, தாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு அதைப் போதிக்கவில்லை.

ஆனால் பிரமச்சாரியாகிய பவுலோ, கிறிஸ்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்பட்ட எளிய கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து தனது தர்க்க அறிவு முழுவதையும் மேற்கண்ட கடிதம் முழுவதும் கொட்டிக் குழப்பியதில் கிறிஸ்தவ சபைக்கு ஆரம்பித்த பிரச்னை இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்று வரை தொடர்கிறது.

பாஸ்டன் நகர் சர்ச்’சில் பணியாற்றும் பாதிரி, வசதி வாய்ப்பற்ற சிறுவர்களின் நிர்கதியான நிலையை சாதகமாக்கி அவர்களுடன் தவறாக நடந்து கொண்டது தெரிந்தும் கத்தோலிக்க சபையின் பாஸ்டன் நகர அர்ச் பிஷப் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கிடைத்த ஒற்றை வரி தகவலைப் பிடித்து தொடர்ந்து புலனாய்வு மேற்கொள்கிறார்கள், பாஸ்டன் க்ளோப் என்ற பத்திரிக்கையின் நிரூபர்கள் சிலர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்ட புலனாய்வில் ஒன்றல்ல, பதிமூன்றல்ல குறைந்தது 87 பாதிரிகள் அதாவது 6% சதவீத பாதிரிகள் அவ்வாறு நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது பெரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தாலும், வழக்கு விசாரணைக்கு முன்னரே வக்கீல்கள் துணையுடன் ‘பேசி’ முடிக்கப்பட்ட விபரமும் தெரிய வருகிறது.

பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கை தனது புலனாய்வு முடிவுகளை பல்வேறு கட்டுரைகளாக தொடர்ந்து எழுதியது. தொடர்ந்து கத்தோலிக்க சபை பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தது என்று நீங்கள் நினைத்தால் தவறு.

ஏதுவும் இல்லை.

தவறுகளை கண்டும் காணாது இருந்த அர்ச் பிஷப் சிறிது காலம் பணியிலிருந்து விலகியிருந்தாலும், பின்னர் ரோம் நகரில் அதை விட பெரிய பொறுப்பு வகிக்க அனுப்பப்பட்டார்.

பொது சேவைக்காக புலிட்ஸர் விருது கிடைத்த பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கையின் புலனாய்வை ‘ஸ்பாட் லைட்’ என்ற பெயரில் திரைக்கதையாக்கி சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கின்றனர்.

பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில் தண்டனை பெற்ற இந்திய பாதிரி ஒருவரை ஊட்டி சபை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளதாக கடந்த வாரம் எழுந்த குற்றச்சாட்டில், நேற்றுப் பார்த்த இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....