Friday, 15 April 2016

தேர்தல் ஸ்பெஷல்

நண்பர். சீனியர் வழக்குரைஞர். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் மதுரையில் நடந்த ஏதோ ஒரு இடைத் தேர்தல். காலையில் எழுந்ததும் செய்தித்தாளைத் தேடியவர், கதவிடுக்கில் வைக்கப்பட்டிருந்த கவரிலிருந்த இரண்டு ஆயிரம் ரூபாய்த் தாள்களைப் பார்த்து கொதித்துப் போனார்.

கொதித்துப் பொங்கிய நண்பரின் மனதை ஆற்றியது, தொடர்ந்து ‘மக்களோடு மட்டுமே கூட்டணி’ அமைச்சு வாக்கு கேட்டு வந்த தேதிமுக கட்சியினர்.

‘சார், தப்பா நினைச்சுக்காதீங்க. எங்களால இப்ப ஒன்னும் செய்ய முடியாது. கொஞ்ச வருசத்தில நாங்க ஆட்சிக்கு வந்துருவோம். அப்ப நாங்களும் அவங்கள மாதிரி செய்வோம்’

-oOo-

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் மட்டும் அல்லாமல் மற்றவர்களிடமும் கூட்டணி அமைப்பது என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்த விஜயகாந்த் சொன்னதாக வந்த தகவல், ‘அம்மாவுடன் சேர்ந்தால் மானம் இருக்காது. ஐயாவுடன் போனால் கட்சியே இருக்காது’

இரண்டுமே அடுத்தடுத்து நடந்து விட்டது.

-oOo-

சொல்லக் கேள்விப்பட்ட செய்திதான். ஆனால், சொன்னவர் சம்பந்தப்பட்டவருக்கு நெருக்கமானவர். ஒரு வழியில் உறவினர்.

அந்த இளைஞருக்கு கல்லூரிக் காலத்திலிருந்தே இந்திய ஆட்சிப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று தணியாத ஆசை. கடுமையாக உழைத்தார். அதோடு பேச்சுப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளினார்.

அன்றைய கால இளைஞர்களைப் போல அதீத தமிழார்வம். அதை ஒட்டிய அரசியல் பார்வை.

ஐஏஎஸ் முக்கிய தேர்விலும் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பு ஆலோசனை வேண்டி கல்லூரி நாட்களில் அவரைக் கவர்ந்த அரசியல் தலைவரை சந்தித்தார்.  தமிழர்களும் தமிழ்நாடும் வஞ்சிக்கப்படுவதாகவும், அந்த இளைஞரைப் போன்றவர்கள் ஆட்சிப் பணிக்குள் நுழைந்து அதை மாற்ற வேண்டும் என்றும் மேலும் உசுப்பி கொம்பு சீவினாராம்.

அதே வேகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர், தேர்வு அதிகாரிகளிடம் தமிழின் தொன்மை, தமிழர்களின் கலாச்சாரப் பெருமை என்று போட்டுத் தாக்கியதில் பயந்து போன அந்த வட இந்திய அதிகாரிகள் ‘இவன் ஆபத்தான ஆசாமியாக இருப்பானோ’ என்று முடிவு கட்டியதில் இளைஞரின் ஐ ஏ எஸ் கனவு சிதைந்து போனதாம்.

ஆயினும் மனம் தளராத அந்த இளைஞர் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் நடத்தும் க்ரூப் 1 தேர்வு எழுதி அதன் மூலம் தமிழக ஆட்சிப் பணிக்குள் நுழைந்தாராம். தற்போது கன்பர்ட் ஐ ஏ எஸ் அதிகாரிதான் என்றாலும், தனது நிர்வாகத் திறமையாலும், நேர்மையாலும் தமிழகத்தின் அனைத்து நேரடி ஐ ஏ எஸ் அதிகாரிகளையும் புகழில் ஓரம் கட்டி விட்டார்.

அந்த இளைஞர் உ.சகாயம்.

அரசியல் தலைவர்?

வேறு யார், வைகோ’தான்!

-oOo-

“தாத்தா மாதிரி வராதுங்க…” திமுக தலைவர் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார் அந்த நண்பர். இரண்டு வருடங்கள் இருக்கும்.

‘தலைவரைப் பார்க்க வரச் சொல்லியிருந்தாங்க. என்னைப் பாத்தவுடனே தளபதி ‘இவர் கட்சியிலே இருந்துக்கிட்டே கூடங்குளம் போராட்டத்திலே தீவிரமா ஈடுபட்டுக்கிட்டு இருக்காரு. கட்சிக்கு விரோதமா செயல்படுராறுன்னு கம்ப்ளெயிண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு’

‘நானும் அத மறுக்கல. ஆனா தலைவர் கண்டுக்கவேயில்லை. என்னை பக்கத்துல கூப்பிட்டு ‘உதயகுமார் எப்படியா இருக்காரு. போராட்டமெல்லாம் எப்படி நடக்குன்னு உதயகுமார் சாரைப் பத்தியே விசாரிச்சுட்டு அனுப்பிட்டார். ஒன்னும் சொல்லல’

நண்பர் ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்கு பேசக் கூடியவர். பொது அறிவும் சமூக சிந்தனையும் நிரம்பியவர் என்பதோடு முக்கியமாக களத்தில் இறங்கிப் பணியாற்றக் கூடியவர். முழுக்கவும் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் நானறிந்தவரையில் நேர்மையானவர். ‘இவரைப் போன்றவர்களை எல்லாம் டெல்லிக்கு அனுப்பக் கூடாதா?’ என்று நான் ஆதங்கப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை அவருக்கு வாய்ப்பு நழுவிப் போனது. ஆனாலும், ‘அடுத்த முறை எப்படியும் கிடைச்சுடும்’ என்று அதே உற்சாகத்துடன் பேசுவார். எனக்கு நம்பிக்கையில்லாமல்தானிருந்தது.

இப்போது கிடைத்து விட்டது. பொறுமை; அரசியலில் முக்கியம்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...