Friday, 22 April 2016

பயணம் ஒண்ணு போதாது?!..,

எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை என்று கூட வைத்துக் கொள்ளலாம் கம்யூனிஸம், சே குவாரா, கூட்டுப்பண்ணை என்பவை கல்லூரி, முக்கியமாக தொழிற்கல்லூரி அல்லாத கலைக் கல்லூரி மாணவர்களால் கவர்ச்சிகரமான பதங்களாக பிரயோகிக்கப்பட்டன.

சோவியத் குடியரசின் வீழ்ச்சி, தாராளமயம் புதிய வாய்ப்புகள் தொடர்ந்த ஐ டி துறையின் வளர்ச்சியில் கம்யூனிஸம் அடித்துச் செல்லப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் மந்த நிலையில் வேறு பல புதிய பிரயோகங்கள் முன்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இன அழிப்பு என்பது கூட அவற்றில் இருப்பினும் முக்கியமும் முதலுமானது இயற்கை வேளாண்மை!

மோட்டார் பைக்’கிலேயே இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வேளாண்மை பண்ணைகளைக் கண்டு விவசாயம் கற்று வரப் போகிறோம் என்று கோவையிலிருந்து கிளம்பிய இரு இளைஞர்களில் ஒருவரான தீபன் தங்களது அனுபவங்களை சுமார் 300 பக்கங்களில் எழுதியுள்ள புத்தகம்தான் ‘பயணம் ஒண்ணு போதாது?!..,’

பயணம் ஒண்ணு போலத் தெரியவில்லை. தொடங்கிய வேகத்திலேயே திரும்பி கோவை வந்து பின்னர் மீண்டும் கிளம்பி மீண்டும் வந்து கிளம்பி என்று எவ்வித திட்டமிடலும் இன்றி ‘ஏனோ தானோ’ என்று இருப்பதைப் போல அவரது மொழிநடையும் ஜாலியாக நண்பர்கள் பேசி கொண்டிருப்பதைப் போல ஆரம்பித்தாலும் அதிலும் ஏதோ ஒரு ‘மெத்தட் இன் மேட்னஸ்’ போல ஒழுங்கு இருப்பதை விரைவிலேயே உணரத் தொடங்குவோம்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் பின்னர் தொடர்ந்து லே’ வை நோக்கிய பயணம் பாதியில் கார்கிலுக்கு முன்பாகவே  அதி உயர சுகவீனத்தால் முடிந்து போனதைப் படிக்கையில் கார்கிலையும் தாண்டி லே வரை நான் போயிருக்கிறேனே என்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் சென்ற பொழுது என்னுடன் வந்த நண்பருக்கும் கார்கிலில் இந்தப் பிரச்னை ஏற்ப்பட்டதால் சாலை வழியாக லே செல்பவர்கள் முன்பாகவே தகுந்த ஆலோசனை பெற்றுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

திருமணமாகியும் எவ்வித உறவுமின்றி வெறும் நட்பாகவே தீபன் மனைவியை நடத்தினாலும், இரண்டு மூன்று நான்கு என்று அடுத்தடுத்து பார்க்கும் பெண்களிடம் தொடரும் ‘ப்ளாட்டோனிக் காதல்’, தோல்வியடையும் சொந்த பண்ணை முயற்சி, கடன் சுமை என்று வர வர சவ்வு மிட்டாய் மாதிரி எப்படா படித்து முடிப்போம் என்று ஆகி விட்டது.

தமிழ் சினிமா அப்பாக்கள், ஏன் நிஜ அப்பாக்களும் எப்படிப்பட்ட செயல்பாடுடைய பிள்ளைகளை ‘உதவாக்கரை’ என்ற வார்த்தையில் அடக்குவார்களோ, அந்த செயல்பாடுகளை எவ்வித தயக்கமுமின்றி கூறிக் கொண்டே போய் அந்த வாழ்க்கை தந்த அனுபவத்தில் தற்போது இயற்கை வேளாண்மையை ஓரம் கட்டி வைத்து விட்டு ‘கிரியேட்டிவ் டைரக்டர் (வேகபாண்ட் மூவீஸ்) என்று ஒதுங்கி விட்டார் தீபன்…

வேலை வெட்டி ஏதும் இல்லை என்றால், அவ்வப்போது பளிச்சிடும் ப்ரில்லியன்ஸுக்குக்காக படிக்கலாம்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...