Saturday, 17 September 2016

உலகப் 'புகழ்' பெற்ற கோவில்

நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம்.

“என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க”

கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திருப்தியில் அருகில் வந்த நண்பரிடம் கிண்டலாக கேட்டேன்.

“ஐயா வழியில இப்படியா சொல்லியிருக்கு” என்று அடுத்து கேட்டவுடன் நண்பர், “நோ, நோ…. நாங்கள் ரோமன் காத்தலிக்” முகத்தில் விளையாட்டுத்தனமிக்க பெருமிதம் பொங்க கூறினார்

மனைவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘வா, சொல்கிறேன் என்று அழைத்துப் போன இடம், அருகிலேயே இருந்த மாதா கோவில்.

ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த வடக்கன்குளம் கிறிஸ்தவ கோவில் எனது எதிர்பார்ப்புகளை மீறி பிரமாண்டமாக இருந்தது.

கோவிலுக்குள் நுழைந்து ‘புகழ்’ பெற்ற அந்தச் சுவர் இருந்த அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று கண்கள் தேடிய சில நிமிட நேரத்திற்குள்ளாகவே கிடைத்து விட்டது. வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத வகையில் அதன் பிரதான கதவுக்கு நேராக ‘ஆல்டரை’ மறைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக இரு பெரிய தூண்கள். இரண்டு தூண்களிலும் அதன் நடுப்பகுதி குடையப்பட்டு அதன் வழியாக நேராகப் பார்த்தால் ஆல்டரின் மையத்தில் உள்ள இயேசு படம் முழுவதுமாகத் தெரிந்தது.

ஆல்டரும் வித்தியாசமாக ஆங்கில ‘வி’வடிவில் அந்த நடுத்தூணுக்கு இரண்டு புறமும் விரிந்திருக்க கொஞ்சம் கொஞ்சமாக கோவிலின் வடிவம் புலப்பட்டது.

ஒரே கோவிலை இரண்டாக அல்லது இரண்டு கோவில்களை ஒன்றாக கட்டியிருக்கிறார்கள்.

கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1872.

“வடக்கன்குளத்தில் பெருவாரியாக இருந்தாலும் கீழ்சாதியாக கருதப்பட்ட நாடார்களுடன் கோவிலில் பிள்ளைமார் வகுப்பினர் அமர விரும்பவில்லை. நாடார்களுக்கு கோவிலில் பாடல்களைப் பாடுவதற்கு கூட உரிமை கிடையாது. அதனால் ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக நடுவில் ஒரு சுவற்றுடன் கட்டப்பட்ட கோவில் அந்த விநோதமான வடிவத்திற்காக ‘டவுசர் கோவில்’ என்ற பட்டப்பெயரை பெற்றது”

“சுவருக்கும் உங்க ஃப்ரண்ட் சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”

“நாடார்கள் பெருவாரியாக இருந்ததால் அவர்கள் பகுதி நிரம்பி வழிந்தாலும் காலியாக இருக்கும் பிள்ளைமார் பகுதியில் நுழைய அவர்களுக்கு அனுமதியில்லை. எனவே, போங்கடா நீங்களும் உங்க கிறிஸ்துவும் என்று சொல்லிவிட்டு நாடார்களில் சிலர் திரும்பவும் இந்து மதத்திற்குப் போய் கட்டியதுதான் இப்ப கல்யாணம் நடந்த கோவில்”

“அந்தச் சுவர்?”

“திருச்சபைக்கு அந்தச் சுவர் பெரிய அவமானமாக இருந்தது. ஒவ்வொன்றாக முயன்று 1910ல் பிஷப் உத்தரவில் அந்தச் சுவர் உடைக்கப்பட்டது. சுவர் உடைக்கப்பட்டதை எதிர்த்து பிள்ளைமார்கள் போட்ட கேஸ் கீழ் கோர்ட்டில் அவர்களுக்கு சாதகமானது. ஆனால் அப்பீலிலும் பின்னர் உயர்நீதிமன்றத்திலும் ‘சுவர் உடைக்கப்பட்டது தவறல்ல’ என்று தீர்ப்பு வர பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28

1 comment:

  1. வடக்கன்குளம் 'டவுசர் ஆலய' உயர்நீதிமன்ற தீர்ப்பினைப் படிக்க சுட்டியை சொடுக்கவும் https://indiankanoon.org/doc/593155/

    ReplyDelete

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...