Thursday 15 September 2016

மீண்டும் மீண்டும் சூடு!

‘முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்ட 48 மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த வாரத்தின் ஏதோ ஒரு நாளில் பத்திரிக்கைகளிலும், காட்சி ஊடகங்களிலும் இப்படி ஒரு தலைப்புச் செய்தி சூடு பறந்தது. இரு நாட்களுக்கு முன்னர் சிபிஐ முன்னாள் இயக்குஞர் ஆர்.கே.ராகவன் மற்றும் மஹாராஷ்டிர முன்னாள் டிஜிபி டி.சிவானந்தன் ஆகியோர் இந்த உத்தரவு பற்றி கூட்டாக ‘தி இந்து’வில் கட்டுரை ஒன்று கூட எழுதியிருந்தார்கள்.

ஊடகங்கள் பெரிதாக பரபரத்தாலும், இந்த உத்தரவால் பெரிதும் பயனடைய இருக்கும் வழக்குரைஞர்களிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் இல்லை. உற்சாகமும் இல்லை.

இவ்வாறு ஒரு உத்தரவு கூறப்பட்டுள்ளது என்ற பிரக்னை கூட யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம், ஜெனரல் இன்ஸூரன்ஸ் கவுன்ஸில் எதிர் ஸ்டேட் ஆஃப் ஆந்திர பிரதேசம் (2007 ACJ 2006) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு!

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 158(6) மற்றும் மத்திய அரசு விதி 150 ஆகியவற்றின் அடிப்படையில் ‘மோட்டார் வாகன விபத்தினை புலனாய்வு செய்யும் காவல் நிலைய அதிகாரி விபத்து பற்றிய அனைத்து விபரங்களையும் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயம் மற்றும் காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் விபத்தில் இழப்பீடு பெறத் தகுதியான நபர்கள் வேண்டினால் அவர்களுக்கும் வழங்க வேண்டும்’ என்று 2007ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

வழக்கம் போலவே ‘இந்த உத்தரவானது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு அவை தொடர்ந்து நிறைவேற்றப்படுவது கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வண்ணம் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்’ என்றும் எச்சரிக்கப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகன தீர்ப்பாய விதி 4Aல் இதை விடவும் விரிவான கடமைகள் காவலர்களுக்கு உண்டு.

அவை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏனோ கொண்டு வரப்படவில்லை. முக்கியமாக இந்த விதியின் அடிப்படையில் 2003ம் ஆண்டிலேயே யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி எதிர் ஆர்.வெங்கடேசன் (2003 (1) MLJ 268) என்ற வழக்கில் நமது உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தமிழக அரசின் உள்துறைக்கு ‘விபத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் காவலர்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதும் எடுத்துக் காட்டப்படவில்லை.

அப்படி எடுத்துரைக்கப்பட்டிருந்தால் உச்ச நீதிமன்றம் மீண்டும் இப்படி உத்தரவிடுவது கதைக்காகாது என்று தனது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்.

ஏனெனில் உயர்நீதிமன்ற உத்தரவு கூறப்பட்டு 12 ஆண்டுகளும் உச்ச நீதிமன்ற உத்தரவு கூறப்பட்டு 9 ஆண்டுகளும் கடந்து போனாலும், இன்று வரை நான் அறிந்த வரை ஒரு விபத்தில் கூட விபத்து விபரங்கள் காவலர்களால் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில்லை.

உச்ச நீதிமன்றம் கடந்த வார உத்தரவு மூலம் பழைய வரலாறு தெரியாமல் மீண்டும் விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளது. அதன் மானம் காப்பாற்றப்படுமா அல்லது கப்பலேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘பல்வேறு பிராந்தியங்களிலுள்ள காவல்துறை அதிகாரிகளுடன் பேசியதில் இந்த உத்தரவை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிய அவநம்பிக்கை இருப்பதை உணரமுடிந்தது’ என்று ஆர்.கே.ராகவனும் டி.சிவானந்தனும் தங்களது கட்டுரையில் கூறியிருப்பதை வைத்து முடிவை என்னால் ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது.

அந்த யூகம் அவ்வளவு நம்பிக்கை தருவதாயில்லை……

2 comments:

  1. கார்ட்டூன் புகைப்படம் உதவி : தி இந்து

    ReplyDelete
  2. http://www.thehindu.com/opinion/lead/on-the-sc-order-for-quick-uploading-of-firs-by-police/article9104526.ece

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....