Sunday, 1 May 2016

நான் முதல்வரானால்...

“என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால் மாதாமாதம் உங்கள் வீட்டிற்கே வந்து பத்து கிலோ அரிசி கொடுக்கப்படும். ஐந்து கிலோ சீனி........அதோடு வீட்டிற்கு ஒரு சைக்கிளும் வழங்குவேன்...” தூத்துக்குடியிலிருந்து பாளையங்கோட்டை நோக்கி தூக்க கலக்கத்துடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவனை சமாதானபுரம் நிறுத்தத்தில் எழுப்பியது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து வந்த கணீரென்ற குரல். வருடம் 1989.

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரிக்க, தொடர்ந்து ‘ஏன்யா நான் சொன்னா ஏமாத்து. அந்தம்மா சொன்னா வாக்குறுதியா?’ என்று அழுத்தம் திருத்தமாக வந்து நிறுத்திய போதுதான் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் ஜெயலலிதா அள்ளி வீசிய வாக்குறுதிகளை அந்த சுயேட்சை வேட்பாளர் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

ஹுசேன்!

ஐம்பது வயது கடந்த பாளையங்கோட்டை வாசிகளுக்கு மறக்க முடியாத நபர் ஹூசேன். திமுகவை சேர்ந்தவர். ஆனால் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ரசிக்கும் கிண்டல் மேடைப் பேச்சுக்கு பேர் பெற்றவர்.

அலுவலகத்தின் முன்னறையில் அமர்ந்திருக்கிறேன். உள்ளே சீனியரிடம் பேசிக் கொண்டிருந்தவர் ஹூசேன் என்பது புரிந்து போனது. சீனியரோ பழுத்த காமராஜ் பக்தர். சீனியரிடம் ஏதோ உதவி கேட்டுதான் வந்திருக்க வேண்டும். பேசி முடித்து வெளியே போனவர் என்னருகே வந்து ஒரு நிமிடம் என்னைப் உற்றுப் பார்த்து விட்டு, ‘காந்திராஜ் மகனா நீ….எப்பேர்ப்பட்ட திமுககாரன் மகன் இந்த ஆபீஸில் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கு’ என்று விருட்டென்று கடந்து போய் விட்டார்.

சீனியர் சொல்வார். பொதுக் கூட்டத்தில் ஹூசேன் பேசுவாராம், ‘நமது ஹைகிரவுண்டில் ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இருக்கிறது. பாளையங்கோட்டைக்கு வந்த .........கொண்டு சென்றார்கள். உயிரை எடுத்துக் கொண்டு உடலை மட்டும் கொடுத்து விட்டார்கள். அடுத்து ........வந்தார். அவரையும் கொண்டு சென்றார்கள். உயிரை எடுத்துக் கொண்டு உடலை மட்டும் கொடுத்து விட்டார்கள். நம்ம தலைவர் மஹராஜபிள்ளையையும் கொண்டு சென்றார்கள்.’ என்று நிறுத்துவாராம்.

மஹாராஜபிள்ளை பாளையங்கோட்டையில் அனைவராலும் மதிக்கப்பட்ட காங்கிரஸ்காரர்; மற்றும் ஹூசேனும் கவுன்ஸிலராக இருந்த பாளை நகராட்சியின் சேர்மன். பேச்சின் விபரீதத்தை உணர்ந்த கூட்டம் ஹோ ஹோ எனக் கத்த ஹூசேன் சாவகாசமாக, ‘மூளையை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை மட்டும் கொடுத்து விட்டார்கள்’ என்று முடிப்பாராம்.

வேடிக்கை என்னவென்றால் கூட்டம் முடிந்த கையோடு ஹூசேன் மஹாராஜ பிள்ளையின் வீட்டுக்குப் போய் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு, அவரிடமிருந்தே செலவுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவாராம்.

ஹூசேன் இப்போது இறந்திருக்கலாம். இருந்திருந்தால் அவர் கிண்டலாக உதிர்த்த வாக்குறுதிகளை எல்லாம் மிஞ்சி இப்போது ரொம்ப சீரியஸாகவே சீமான், மக்கள் நலக்கூட்டணி என்று அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்.

சீமான் சொல்றதைக் கூட ஏத்துக்கலாம். இருபத்தைந்து தொகுதியில் நிற்கும், அதிலும் ஒன்றில் வேண்டுமானால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் ஜி.கே.வாசன் கூட வாக்குறுதி அளிப்பதுதான் ‘தன்னம்பிக்கை என்றால் இதுதான்’ என்று பாராட்டத் தோன்றுகிறது.

முன்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது, ‘நான் முதல்வரானால்...’ என்று கட்டுரை எழுதச் சொல்வார்கள். ஏழாவது எட்டாவது படிக்கையில் சக மாணவர்களின் விடைத்தாள்களை நான்தான் திருத்துவேன். அப்போது விரும்பிப் படிப்பது இந்தக் கட்டுரைதான். ரொம்ப வருடம் கழித்து அந்த மகிழ்வை சீமான், அன்புமணி, மநகூ அப்புறம் வாசன் போன்றவர்கள் மீண்டும் தந்ததற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...