Wednesday 11 May 2016

வாத்ஜா (சவூதி அரேபியா) 2012

பொருட்களை அரசாங்கம் இலவசமாக அளிப்பதற்கு எதிராக சமூக ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் இந்த தேர்தலில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினாலும், இதுவரை கொடுத்தவற்றில் ஒன்று, அதுவும் ஜெயலலிதா அரசு அளித்தது, சவூதி அரேபியாவில் அளிப்பதாக வாக்கு கொடுத்தால் பள்ளிச் சிறுமிகளின் வாக்குகளை எல்லாம் அப்படியே அள்ளி விடலாம்.

சைக்கிள்!

யார் ஓட்டுப் போடுகிறார்களோ இல்லையோ, ‘பூம்! இறந்து போனால் 70 கன்னியர்கள் காத்திருப்பார்கள்’ என்று சொல்லும் தோழன் அப்தல்லாவிடம் ‘பூம்! எழுபது சைக்கிள்கள்’ என்று மலர்ந்து சிரிக்கும் குட்டிப் பெண் வாத்ஜா கண்டிப்பாக ஓட்டுப் போடுவாள்.

‘வாத்ஜா கற்பனைப் பாத்திரம். அதனால் ஓட்டுப் போட முடியாதா?’

‘ஓ! சாரி, அதை மறந்தே விட்டேன். நாம் சந்தித்த நபர்களையும் அனுபவதித்த உணர்வுகளையும் நமக்கு நினைவுபடுத்துகிற மாதிரி சில இயக்குஞர்கள் படங்களை இயக்கித் தொலைக்கிறார்களா, அதனால் படம் பார்த்த பின்னரும் ஏதோ நிசத்தில் நாம் பார்த்தது மாதிரியே இருக்கிறது.

ஆண்கள் இருக்கும் இடத்தில் பெண்களைப் புழங்கவே அனுமதிக்காத சவூதி அரேபிய சூழலில், சிறுமி வாத்ஜா’வின் ஒரே கனவு பள்ளிக்குச் செல்லும் மற்ற சிறுவர்களைப் போல தானும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதுதான்.

பள்ளி செல்லும் வழியிலுள்ள கடையில் தான் பார்த்து வைத்திருந்த சைக்கிளை ‘வேறு யாருக்கும் குடுத்துடாதீங்க’ என்று சொல்லி விட்டு பெரிய மாணவியின் காதல் கடிதத்தை அவளது காதலனுக்கு கொடுப்பதில் கமிஷன் அடிப்பது உட்பட பல வழிகளிலும் பணம் சேர்க்கிறாள்.

புனித குரான் சம்பந்தப்பட்ட போட்டி அறிவிக்கப்பட பரிசுப் பணத்திற்காக அதில் சேர்ந்து இறுதியில் அதில் ஜெயித்தும் விட்ட பிறகு தலமை ஆசிரியை பரிசுப் பணத்தை என்ன செய்யப் போகிறாய் என்று மேடையில் கேட்க ‘சைக்கிள் வாங்கப் போகிறேன்’ என்று வாத்ஜா சொல்வதைக் கேட்ட அனைத்து மாணவிகளும் சிரிக்கிறார்கள். அதிர்ந்து போன தலைமை ஆசிரியை சுதாரித்துக் கொண்டு ‘பாலஸ்தீனத்தில் துயரப்படும் நமது சகோதரர்களுக்கு நன்கொடையாக பரிசினை அளித்த வாத்ஜா’வுக்கு நன்றி’ என்று சமாளிக்கிறார்.

உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக மனிதனின் முக்கியத் தேவை நகர்தல் (mobility). அந்த வகையில் பெண்களின் விடுதலைக்கான முதல் ஆயுதம் நகர்தலுக்கான சைக்கிள் அல்லது ஸ்கூட்டர்தான். ஆனாலும் முழுக்கவும் சவூதி அரேபியாவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரமான சைக்கிள் ஒரு குறியீடுதான். பெண்கள் மீதான கட்டுப்பாடு, உடை, ஆண்கள் எளிதில் மற்றொரு திருமணம் செய்து கொள்தல், திருமணத்திற்கு முந்தைய காதலை மறுத்தல் என்று பல விடயங்களை இயல்பான பாத்திரப் படைப்புகள் மூலம் இப்படம் பேசுகிறது.

சவூதி அரேபியாவில் இந்தப் படத்தை எப்படி எடுக்க விட்டார்கள் என்றால் இயக்குஞர் ஒரு பெண் என்பது மேலும் ஆச்சரியமளிக்கலாம். சவூதி சாலைகளில் நிகழ்த்தப்பட்ட படப்பிடிப்புகளில் எல்லாம் இயக்குஞர் தனியே ஒரு வேனில் மறைவாக இருந்து வாக்கி டாக்கி மூலம் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஆணைகள் கொடுத்து இயக்க வேண்டியிருந்ததாம்.

இவற்றை எல்லாம் தாண்டி சவூதி அரசு இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பியதில்தான் இயக்குஞரின் சாமர்த்தியம் இருக்கிறது. அழகான கதை, இயல்பான பாத்திரங்கள், மெல்லிய நகைச்சுவை உடாக பெண்களின் பிரச்னைகளைப் பேசுகிறதே அல்லாமல் உரத்த குரலில் எதையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

பள்ளியில் கொஞ்சம் ரிபலாக இருக்கும் இரு பெரிய மாணவிகளுக்கு இடையே இருக்கும் உறவைக் கூட ஒரே ஒரு வரி வசனத்தில் நம் யூகத்துக்கு விட்டு, ஆனால் ஸிஸ்டம் அவர்களை எப்படி அவர்களை பொதுவில் அவமானப்படுத்துவதில் திருப்தியடைகிறது என்பதை போகிற போக்கில் தொட்டுச் செல்வதால், ஆட்சேபம் எழுப்பக்கூடியவர்களின் கவனத்திலிருந்து இயக்குஞர் படத்தை தப்ப வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.


இறுதியாக ஈரானில்தான் குட்டிக் குழந்தைகளை இயல்பாக நடிக்க வைப்பார்கள் என்ற கருத்தை நான் மாற்றி கொண்டேன். சவூதி அரேபிய குழந்தைகள் ஈரானியர்களுக்கு சவால் விடுகிறார்கள். வாத்ஜா’வும் அவளது குட்டி நண்பன் அப்துல்லாவும் படம் முழுக்க ஆக்கிரமிப்பது போலவே நம் மனதையும் ஆக்கிரமிக்கிறார்கள்…

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....