Saturday, 21 May 2016

திருநெல்வேலி சீமைச் சரித்திரம்

வாஜ்பாய் அரசு அணுகுண்டு வெடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்த ஒரே விஷயம், மருத நாயகம் படத்தை கமல்ஹாசன் எடுக்க முடியாமல் போனதுதான்.

வீரபாண்டிய கட்டபொம்மன், திரைப்படம் என்ற வகைக்கு நல்ல படம்தான். என்றாலும் இன்னொரு வீரபாண்டிய கட்டபொம்மன் உருவாவதில் எனக்கு உவப்பில்லை. உண்மையில் கட்டபொம்முவின் வாழ்க்கையை விட பன்மடங்கு சாகசமும், வஞ்சகத்தால் வீழ்ந்த அதீத சோகமுமாக முழு திரைக்கதைக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியது அவனது தம்பி ஊமைத்துரை மற்றும் யூசுப்கான்(மருதநாயகம்), மருது சகோதரர்கள் ஆகியோரது வாழ்க்கை.

ஆனால் கட்டபொம்மன் திரைப்படம் நம் எண்ணங்களை ஆக்கிரமித்ததில் மற்றவர்களின் சாகசங்களை அறிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டோம்.

கிஸ்தி கொடுக்காமல் ஆங்கிலேயருக்கு டிமிக்கி கொடுப்பதில் கட்டபொம்முவோடு சேர்ந்து ஆங்கிலேயர்களின் கோபத்துக்கு முதலில் ஆளாகினாலும், பின்னர் அந்த துஷ்ட புத்தியை நீக்கிவிட்டு ஸுபுத்தி கொண்டு அவர்களுக்கு உதவியதால் சலுகைகளைப் பெற்று நீடித்த எட்டயபுர ராஜாவின் அவையில் பணியாற்றியவர் எஸ்.குருகுஹதாசப் பிள்ளையவர்கள். அவர் 1931ம் ஆண்டில் எழுதிய திருநெல்வேலி சீமைச் சரித்திரம் என்ற நூல், காவ்யா வெளியீடு. நூலகராக இருக்கும் நண்பர் அளித்தார்.

பிஷப் கால்ட்வெல்லின் திருநெல்வேலிச் சரித்திரம் உட்பட பல நூல்கள்/ஆவணங்களின் அடிப்படையில் பாளையக்காரர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும், குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கும் இடையேயான உறவுகளும் உரசல்களும் வேகவேகமாக கூறிச் செல்லப்பட்டாலும் இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி சண்டைகளையும் கட்டபொம்மன் மீதான விசாரணையையும் விரிவாக விவரிப்பதோடு முடிகிறது.

பிரிட்டிஷ் ராஜவிஸ்வாசம் மிகுந்த முப்பதுகளின் தமிழை சகிக்கப் பழகிக் கொண்டால், கிடைக்கும் அரிய பல தகவல்கள் இதையெல்லாம் போய் சொல்ல யாராவது உடனடியாக கிடைக்க மாட்டார்களா? என்று இருக்கும்.

முதலில் திருநெல்வேலி ஜில்லா என்றழைக்கப்பட்டது இராமநாதபுரம், மதுரை ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்ததாம். பின்னர் மதுரையை உள்ளடக்கி இராமநாதபுரம் ஜில்லா உருவாக்கப்பட்டு அடுத்தபடியாகத்தான் இராமநாதபுரத்திலிருந்து மதுரை ஜில்லா தனியே பிரிக்கப்பட்டதாம்.

என்னதான் நவாபுகளும், விஜயநகரபேரரசும் ஆட்சி நடத்தினாலும் மதுரைக்குத் தெற்கே அரசு அதிகாரம் முழுமையாக செலுத்த முடியாதலால் சீர் குலைந்து போன சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கிபி 1500 வாக்கில் பாளையங்கள் ஏற்ப்படுத்தப்பட்டாலும், பாஞ்சாலங்குறிச்சி 1700களின் தொடக்கத்தில் ஏறக்குறைய அதாகவே உருவாக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி சண்டைகளுக்குப் பின்னர் ஆங்கிலேயர்களால் வரைபடத்திலிருந்தே அழிக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் காரணமும், கட்டபொம்மு வம்சத்தவர்கள் பாண்டிய என்ற பட்டத்தை தங்களுக்காக்கியதும் சுவராசியம்.

பொதுவாக தாய்நாடு, நாட்டுப் பற்று என்பதெல்லாம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. பாளைய சைனியங்கள் ஏறக்குறைய கூலிப்படைகள் (mercenaries) போல சம்பளத்திற்கு கூப்பிட்ட இடங்களில் சண்டையிட்டாலும் ஐபிஎல் டீம் அபிமானம் போல பாளையங்கள் மீதும் சண்டைத் தலைவர்களான (war lords) பாளையக்காரர்கள் மீது பற்றுதலைக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சண்டையில் காயமடைந்து கிடக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரனை தூக்கிச் செல்ல வருகிறாள் அவனது தாய். அவனோ அருகில் கிடக்கும் ஊமைத்துரையை தூக்கிச் செல்லுமாறு வேண்டுகிறான். அவளும் மகனை விடுத்து ஊமைத்துரையை தூக்கிச் சென்று காப்பாற்றியதால் எட்டயபுரத்தார்கள் கையில் அவன் சிக்காமல் அடுத்த போரினையும் நடத்தியது உட்பட தங்களுக்காக போரிட்ட ஆங்கிலேய மற்றும் 'நேட்டிவ்' வீரர்களின் சாகசங்களையும் பதிவு செய்துள்ளனர்.

இன்று ஆங்கிலேயர்கள் பொது எதிரியாக அறியப்படுவதால், எட்டயபுரத்தார் துரோகத்துக்கு உதாரணமாகக் கொள்ளப்பட்டாலும், பிடிபட்ட எட்டயபுர வீரன் ஒருவனை ஊமைத்துரையை அஞ்சலி செய்யுமாறு வாய்ச்சியாடல் என்ற சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் எட்டனைத் தொழுதகை கட்டனைத் தொழாது என்று மறுத்து உயிர்விட்டானாம்.

ஆங்கிலேயர்கள் என்னதான் கட்டபொம்மு, ஊமைத்துரை, யூசுப்கான், மருது சகோதரர்கள் ஆகியோரை கொன்றொழித்தாலும், அவர்களது தீரத்தையும், அடங்கிப் போகாத குணத்தையும் வியப்புடன் மேலிடத்துக்கு அனுப்பிய ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் கூட எதிரியை வியக்கும் இவ்விதமான பதிவுகள் ஏற்ப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.

சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்து கட்டபொம்மனையும் முக்கியமாக அவனது துர்மந்திரி சுப்பிரமணியபிள்ளையும் தூக்கிலிட்டது அதற்கு முன்னதான விசாரணை ஆகியவற்றைப் படித்தால் அப்படியே சதாம் மீதான ஈராக் யுத்தம், தொடர்ந்த விசாரணை மற்றும் தண்டனை நினைவுக்கு வரும்.

தூக்கிலிடப்படுவதற்காக கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றம், நான் முன்பு நினைத்தது போல இராமநாதபுரத்தில் கலெக்டர் ஜாக்ஸனை பேட்டி கண்டபின் தப்பியோடும் பொழுது ஆங்கிலேய வீரனை கொன்றது அல்ல. மாறாக கலெக்டரின் சம்மன்களை தவிர்த்ததும், கிஸ்தி கொடுக்காமல் நாள் கடத்தியதும்தான். முதல் விசாராணை மட்டுமே. கட்டபொம்மன் அவை எவற்றையும் மறுக்கவில்லை என்பதால் குறுக்கு விசாராணை எதுவும் நடைபெற்றதாக குறிப்பு இல்லை. அப்படி ஒரு நடைமுறை இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. முடிவு அவனுக்குத் தெரிந்திருந்தது என்பதால், என்ன ஐயா சொல்லக் கிடக்கிறது. சும்மா இருங்கள் என்று அடக்கி விட்டானாம்.

பிடிபட்டு தூக்கிலடப்பட்ட பொழுது கட்டபொம்மனின் வயது முப்பது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே எட்டயபுரத்தாரை கவிழ் கண் பார்வையி'லும் சிவகிரியாரை சீறிய பார்வையிலும் அடிக்கடி நோக்கிக் கொண்டும், தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகையில் இருபுறமும் நிற்க வைக்கப்பட்டிருந்த மற்ற பாளையக்காரர்களை பூ கிடக்கிறார்கள் என்ற அலட்சியத்துடன் கட்டபொம்மன் பார்த்துக் கொண்டே சென்றதையும் எட்டயபுர அரண்மனையின் விசுவாசமிக்க ஊழியர் ஒருவர் மறுபதிவு செய்வதுதான் இப்புத்தகத்தின் சிறப்பு.

ஸ்ரீவைகுண்டம் அணை வேலை நடக்கையில் கிடைத்த புதையலை பங்கு வைத்தவர்களைப் பிடித்து ஓரளவுக்கு கைப்பற்றியதில் கிடைத்த கிபி 1200ம் காலத்திய அரேபிய நாணயங்கள், தமிழை கற்கத் தடுமாறிய பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் பிற மிஷனரிகள் என்று இன்னும் சொல்ல பல விஷயங்கள் இப்புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

ஆனால் பாரஸ்ட் கார்டாக இருந்த வாஞ்சி என்ற பாதகன் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றது சுருக்கமாக கூறப்படினும், அதற்கான காரணத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை.


இப்போது என் கவலை எல்லாம், இந்தப் புத்தகத்தை நூலகத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...