Monday 9 May 2016

எவ்ரி செயிண்ட் ஹேஸ் அ பாஸ்ட்

இந்திய நீதிமன்ற வரலாறில், மறக்க முடியாத சில நிகழ்வுகள் நடைபெற்றதுண்டு. தில்லி உயர்நீதிமன்றத்தில் 1990ம் வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியும் அப்படிப்பட்டதுதான்.

இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட அதிமுக்கியமான முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) ஒன்று போபார்சு பீரங்கி ஊழல் சம்பந்தமான அறிக்கை. அதனைத் தொடர்ந்து விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த வேளையில், அந்தக் குற்றம் சம்பந்தமாக தேடப்பட்டவரான வின் சாத்தா (Win Chada) தாக்கல் செய்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முதஅ (FIR) தாக்கல் செய்த மைய அரசின் கூடுதல் சொலிசிட்டர் செனரல் எழுந்து, ‘முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் எவ்வித குற்றமும் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை. எனவே முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி (quash) செய்து விடலாம்என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக கூற நீதிமன்றமே அதிர்ந்தது.

அரசு வழக்குரைஞரின் இந்த ஒப்புதலில் அனைவரும் உறைந்து நிற்க, வழக்குரைஞர் அல்லாதவர் ஒருவர் எழுந்து, ‘நான் இந்த மன்றத்தில் ஒன்றைக் கூற விரும்புகிறேன்என்றார்.

நீதிபதி புருவத்தை உயர்ந்தவே எழுந்த நபர், ‘நான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி (investigating officer)’ என்று கூறவும் நீதிபதி, ‘நீங்கள் எதைக் கூறுவது என்றாலும் உங்கள் அரசு வழக்குரைஞர் மூலமே கூற வேண்டும். உங்களுக்கு பேச உரிமையில்லைஎன்றார்.

எழுந்த நபரோ, ‘இல்லை, அரசு வழக்குரைஞர் எங்களுக்கு எதிராக பேசுகிறார். அவரை நாங்கள் அவ்வாறு பேசுவதற்கு பணிக்காமலே அவராகவே பேசுகிறார். எனவே என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்என்றார் பயப்படாமல்.

ஆனால், நீதிபதி அவரை மேலும் பேச அனுமதிக்கவில்லை.

இவ்வளவு துணிச்சலாக, நீதிமன்றத்தில் அரசின் நலனைக் காக்க போராடிய அந்த அதிகாரியை பின்னர் மத்திய சட்ட அமைச்சர் கூப்பிட்டு அனுப்பினார். போனவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. ‘உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. நீதிமன்றத்தில் என்ன கூற வேண்டுமென்று அரசு வழக்குரைஞர் பார்த்துக் கொள்வார். நீங்கள் பேசாமல் இருந்தால் போதும்என்ற வசவுதான்.

பின்னர் சில காலம் கழித்து, அந்த அதிகாரி போபார்ஸ் ஊழல் விசாரணையிலிருந்தே தூக்கப்பட்டார். மேலும் சில மாதம் கழிந்து, பங்குச் சந்தை வழக்கில் அவரது விசாரணை மேலிடத்திலிருந்த சிலரை நெருங்கவும், அந்த விசாரணையிலிருந்தும் கழட்டி விடப்பட்டார். மனம் வெறுத்த அந்த அதிகாரி, பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் சிபிஐயின் இணை இயக்குஞராக பணியாற்றிய கே.மாதவன். தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்.

அரசு வழக்குரைஞர் கே.டி.எசு.துல்சி.

கடமையை செய்த அதிகாரியை கடிந்து கொண்ட சட்ட அமைச்சர் முனைவர்.சுப்பிரமணிய சுவாமி!

போபர்சு விசாரணையை தாமதப்படுத்தி, இன்று ஒன்றுமில்லாமல் போகச் செய்ய காங்கிரசு அரசுகளால் போடப்பட்ட முக்கியமான முட்டுக்கட்டைகளில் ஒன்றாக இதனையும் பாரதீய சனதா கட்சியின் அருண் ஜெட்லி தனது 12.01.06 அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்த முட்டுக்கட்டையினை செயல்படுத்தியது, காங்கிரசு அரசு இல்லை. வெறும் 60 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவை சில மாதம் காங்கிரசின் பினாமியாக ஆண்ட சந்திரசேகர் அரசின் சட்ட அமைச்சரான சுவாமி.

சட்ட அமைச்சராக பதவியேற்றதும் சுவாமி செய்த மற்றொரு முக்கிய விடயம், திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சன் சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கியதில் நடைபெற்ற அந்நியச் செலவாணி (FERA) மீறல் குறித்த வழக்கினை வாபஸ் பெற்றது. அமிதாப் அந்த சமயத்தில் ராசீவ் குடும்பத்துக்கு நெருக்கமானவர். இதற்காக சுவாமியை கடிந்து கொண்டு இந்தியன் எக்சுபிரசு (Indian Express) காட்டமாக ஒரு தலையங்கம் எழுதியது. ஆயினும் தனது இந்த முடிவால்ராசீவ், சோனியா, அமிதாப் ஆகியோர் மெத்த திருப்தியடைந்தார்கள்என்று சுவாமி, சந்திரசேகர் பற்றிய தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மற்றொரு காரியம், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீதானபதவிநீக்க தீர்மானம்’ (impeachment motion) பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், காலாவதியாகிவிட்டது என்ற கூறி ஆய்வு குழுமம் (inquiry committee) தனது பணியினை தொடங்குவடதற்கு வேண்டிய அறிக்கையினை வெளியிடாமல் தடுத்தது. பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆய்வு குழுமம் அமைக்கப்பட்டது செல்லும் எனக்கூறிய பின்னரே, அது தனது பணிகளை தொடர முடிந்தாலும் பதவிநீக்க தீர்மானம் வெகுவாக காலதாமதப்படுத்தப்பட்டது (பிரசாந்த் பூஷன் எழுதிய A Historic Non-Impeachment என்ற புத்தகத்திலிருந்து)

வி.ராமசாமிக்கு எதிரான பதவிநீக்க தீர்மானமானது, ஆர் எஸ் எஸ்பிஜேபியின் கூட்டுச் சதி என்றும் சட்ட அமைச்சராக இருந்த சுவாமி குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா எம் பி சமீபத்தில் நியமிக்கப்பட்டு, சோனியா மீதான ஊழல் புகார்களால் சபையை கலக்கிக் கொண்டிருக்கும் சுப்ரமணியன் சுவாமிக்கும் ஊழலைப் பாதுகாத்த கடந்த காலம் இருக்கிறது.

Every saint has a past…


No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....