Friday, 20 May 2016

தாழப் பறக்காத பரத்தையர் கொடி

பதினெட்டாம் நூற்றாண்டு.

பிரஞ்சுக்காரர்கள் வசம் இருந்த புதுச்சேரியை முற்றுகையிட்டிருந்தார் மராத்திய தளபதி ரகோஜி போஸ்லே.

முற்றுகை படைகளின் எண்ணிக்கையோ புதுச்சேரி ஜனத்தொகையை விட அதிகம்.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்த சாந்தா சாகிப்பின் மனைவியும் மகனும் மற்றும் அவர்கள் கொண்டு வந்திருந்த ஆபரணங்கள் குதிரைகள், யானைகள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று செய்தி அனுப்பினார் ரகோஜி போஸ்லே

பிரஞ்சு கவர்னர் தூய்மா (Dumas) ஆபத்துக் காலத்தில் எங்களிடம் தஞ்சம் புகுந்த நண்பர்களை வெளியேற்றுவது மனித தர்மம் இல்லை. கடைசிப் பிரஞ்சுக்காரன் இருக்கும் வரைக்கும் அடைக்கல மனிதர்களை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்று துணிவாக பதில் அனுப்பினார்.

கோபமடைந்த போஸ்லே, சாந்தா சாகிப்பின் குடும்பத்தோடு கூடுதலாக ஆறு கோடி ரூபாய் அபராதமும் அதோடு, ஆண்டுதோறும் கப்பமும் செலுத்த வேண்டும் என்று இறுதித் தூது அனுப்பினார்.

போஸ்லேவின் தூதுவருக்கு பிரஞ்சு படைகளை காண்பித்த தூய்மா அவர் திரும்பிச் செல்கையில் போஸ்லேவுக்கு பரிசாக 10 ஐரோப்பிய மது பாட்டில்களையும் கொடுத்தனுப்பினார்.

பேரழகி என்று வரலாற்றில் வர்ணிக்கப்பட்ட தன் மனைவியுடன் போஸ்லே அந்த மதுவை அருந்தினானாம். அனைத்தையும் குடித்து முடித்த அவளோ இன்னமும் வேண்டும் என்றாளாம்.

என்ன செய்வது என்று குழம்பித் தீர்த்த போஸ்லே கடைசியில் வேறு வழியின்றி இன்னமும் கொஞ்சம் மது பாட்டில்களை அனுப்ப முடியுமா என்று  வெட்கத்தை விட்டுக் கேட்க, கவர்னர் தூய்மா புன்னகையுடன் மேலும் முப்பது பாட்டில்களை அனுப்பி வைக்கவும் போஸ்லே தொடர்ந்து முற்றுகையை விலக்கிக் கொண்டாராம்.

எண்பதுகளில் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை கொதித்துக் கொண்டிருந்த வேளையில் ஜியா-வுல்-ஹக் அல்போன்ஸா மாம்பழங்களை நம் பிரதமருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து மாம்பழ சீசனில் பாகிஸ்தானின் பிரதமர்களும், ஜனாதிபதிகளும் இந்தியாவுக்கு மாம்பழங்களை அனுப்புகிறார்கள். நம்மவர்கள் வாங்கித் தின்பதோடு சரி. பாகிஸ்தானின் மாங்கோ டிப்ளமஸியால் ஒரு பிரயோசனம் இல்லை.

வரலாற்றை ஒழுங்காகப் படித்திருந்தால், ஜியா-வுல்-ஹக் மாம்பழங்களுக்குப் பதிலாக ஹராமாக இருப்பினும் மதுவை ட்ரை செய்திருப்பார்.

வரலாறைப் படிக்க நேரமில்லாதவர்கள், உயிர்மையில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து தாழப் பறக்காத பரத்தையர் கொடி என்ற புத்தகத்தைப் படித்தாலாவது இக்குறிப்பை அறியலாம்.

தமிழில் மீண்டும் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்த போது, இணையத்தில் கேள்விப்பட்ட எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகளாக வாங்கிக் குவித்தேன். அது தவறு என்று பின்னர் புரிந்தது. மாத வாரப் பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகளை அவ்வப்போது படிப்பது மட்டுமே அவற்றின் சாரத்தை இலகுவாக உள்வாங்க ஏதுவாக இருக்கிறது. மற்றபடி பிரபஞ்சனைக் கூட விடுங்கள், சுஜாதாவைப் (கற்றதும் பெற்றதும்) புத்தகமாக படிப்பது கூட திகட்டி விடுகிறது.

ஒரே வழி. அவ்வப்போது எடுத்து ஒரு கட்டுரையோடு மூடி வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதுவே இப்படி என்றால், சொற்பொழிவுகளின் தொகுப்பு எனக்கு ஆகவே ஆகாது. அதற்கென்று தனி மொழி. அதை எழுத்தில் மாற்றுவது ஜெனிடிக் பரிசோதனை போன்றது.

மற்றபடி பிரபஞ்சன் வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவரது எண்ணங்களும் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களும் கூடவே சங்ககால வாழ்க்கைச் சூழலும் கட்டுரைகளில் பரவிக் கிடக்கின்றன.

மேற்கண்ட வரலாற்றுக் குறிப்பை உள்ளடக்கிய மது நமக்கு உலகெலாம் என்ற கட்டுரையை நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் படித்தார்களோ இல்லையோ, வைகோ படித்திருப்பார் போல.


புதுச்சேரிக்காரர்களாகிய நாங்கள் மது அருந்துபவர்கள். குடிகாரர்கள் அல்ல என்ற பெருமையோடு பிரபஞ்சன் மது ஒழிப்பெல்லாம் ஆகாத காரியம் என்ற ரீதியில் எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்ததால் மனது மாறி, டாஸ்மாக் எல்லாம் ஒழிக்க முடியாது. ஜெயலலிதாவே ஜெயித்து விட்டுப் போகட்டும். குடியா முழுகிப் போய் விடும் என்று மக்கள் நல கூட்டணியை ஆரம்பித்திருக்கலாம்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...