Tuesday 17 May 2016

வெறும் வார்த்தை ஜாலமா?

அரசியலமைப்பு சட்டத்தின் 84ம் பிரிவு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவருக்கான அடிப்படை தகுதிகளை (Qualifications) கூறுகிறது.

அதாவது அவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தவிர வேறு தகுதிகளை பாராளுமன்றம் சட்டமியற்றுவதன் மூலம் நிர்ணயிக்கலாம்.

அதே போல பிரிவு 102 பாராளுமன்ற உறுப்பினரின் தகுதியிழப்புகளை (Disqualification) பற்றி கூறுகிறது.

அதாவது அரசிடம் சன்மானம் பெறும் வேறு பதவி வகித்தல். மனநிலை பாதித்தவர். நொடித்தவர் (Insolvent) மற்றும் இந்திய குடிமகனாக இல்லாதிருத்தல். இவை தவிர வேறு தகுதியிழப்புகளையும் பாராளுமன்ற சட்டம் மூலம் நிர்ணயிக்கலாம்.

இவ்விரு பிரிவுகளையும் படிக்கும் எனக்கு எவ்வித குழப்பமும் இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பொழுது 25 நிரம்பிய ஒருவரின் வயது பின்னர் குறைய வாய்ப்பில்லை. ஆனால் இந்திய குடிமகனாக இருக்கும் ஒருவர் பின்னர் அதை துறந்து வேறு ஒரு நாட்டின் குடிமகனாக மாறலாம். அவ்வாறு மாறிய அக்கணம் அவர் தகுதியிழக்க நேரிடும்.

மனநிலை பாதிக்கப்படுதலும், நொடிப்பு நிலையும் அப்படித்தான்.

இவ்வாறு தகுதியையும் தகுதியிழப்பையும் தனித்தனி பிரிவுகள் மூலம் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டதற்கு அர்த்தம் இருக்கிறது. இவ்விரண்டு காரணிகளால் எழக்கூடிய சாத்தியக் கூறுகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அதிலும் குடிமகன் என்பது ஏன் இரண்டிலும் இடம் பெறுகிறது என்பதை சிந்தித்தால் இவ்வாறு இரண்டு தனித்தனி பிரிவுகளுக்கான காரணம் புலப்படும். ‘For being chosen’ என்று கூறப்படுவது எந்தக் கணத்தை என்பதிலிருந்து அவற்றை விரிவாக விவாதிக்க முடியும். அதற்கான நேரமும், இடமும் இங்கில்லை.

ஆனால், எந்தவித ஆழமான சிந்தனைக்கும் ஆட்படாமல், ரொம்ப எளிதாகஇவ்விரண்டு பிரிவுகளின் அடிப்படையில் தகுதிக்கும் தகுதியிழப்புக்குமான வித்தியாசம் சற்றுக் குழப்பமாக இருக்கிறது (little intriguing). இவ்வாறு தனித்தனியே கூறப்படுவதலில் ஏதேனும் தர்க்கரீதியான ஒழுங்கு (logical pattern) இருப்பதாகவும் தோன்றவில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றம் ராஜ்பாலா எதிர் ஹரியானா அரசு (Rajbala and others vs. State of Haryana, (2016) 2 SCC 445) என்ற வழக்கில் கூறியுள்ளது சற்று வியப்பாக உள்ளது.

தொடர்ந்துஅதுவும் 84ம் பிரிவில் குடியுரிமை என்பதை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கட்டாயமாக்கி விட்டு மீண்டும் 102ம் பிரிவில் குடியுரிமை இல்லை என்றால் தகுதியிழப்பார் என்று கூறப்படுவதன் பின்னணியிலுள்ள காரணம் ஏதும் எங்களுக்கு புலப்படவில்லை. இரு தரப்பு வழக்குரைஞர்களும் அதை ஆமோதிக்கின்றனர். எனவே தகுதி தகுதியிழப்பு இரண்டிற்குமான வேறுபாடு என்பது வெறும் வார்த்தை ஜாலமே (We are, therefore, of the opinion that the distinction between qualifications and disqualifications is purely semantic) என்று கூறியுள்ளதும் அவ்வளவு சரியான கருத்தா என்பது சந்தேகமே.

இரண்டு பதங்களுக்குமான வேறுபாடு அந்த வழக்கின் முடிவை பாதிக்கப் போவதில்லை. அப்படியான நிலையில் நீதிமன்றத்திடம் இருந்து வரும் கேள்விக்கு வழக்குரைஞர்கள் பெரிய ஆராய்ச்சியில் எல்லாம் இறங்காமல் நீதிமன்றத்திற்கு என்ன பதில் பிடிக்குமோ அதை சொல்வது வழக்கம்தான். அதை எல்லாம் ஆமோதிப்பதாக எடுத்துக் கொள்வது தவறான முடிவிற்கு இட்டுச் சென்று விடும்.


தகுதி’ ‘தகுதியிழப்புஆகிய இரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளதா, இவற்றிற்காக ஏன் தனித்தனி பிரிவுகள் என்ற கேள்விகள் இந்த வழக்கில் எழவில்லை. எனவே அதை முழுமையாக ஆராய சந்தப்பம் இல்லாத சூழ்நிலையில் தேவையின்றி அரசியலமைப்பு சட்டம் வரையப்பட்ட தன்மையில் குறைகாணும் கருத்துகளை உச்ச நீதிமன்றம் தவிர்த்திருக்கலாம்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....