Tuesday 31 May 2016

அந்தமான், இந்தியாவின் பாவம்...

அந்தமானுக்கு சி(சு)ற்றுலா சென்றவன் போர்ட் ப்ளேரிலிருந்த மானுடவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கக் கூடாது. அப்படியே போயிருந்தாலும்தி ஜரவாஸ் ஆஃப் அந்தமான்என்ற புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடாது. வாங்கியிருந்தாலும் மதுரை திரும்பும் வழியில் கிடைத்த நேரத்தில் அதைப் படித்திருக்கக் கூடாது.

பணிச்சுமையை தளர்த்த சுற்றுலா போன இடத்திலிருந்து பெரும் சுமை ஒன்றை சுமந்து கொண்டு வந்ததைப் போல் இருக்கிறது, இந்தப் புத்தகத்தால் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்ட குற்ற உணர்வு.

இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்தோ வந்த ஏலியன்ஸ் உலகை ஆக்கிரமிக்கிறார்கள். ‘நமக்குத்தான் அவ்வளவு பெரிய உலகம் இருக்கிறதே. நம்மை விட இரண்டாயிரம் ஆண்டுகள் அறிவிற் குறைந்த மனிதர்கள் வசிக்கும் இப்பூமி நமக்குத் தேவையாஎன்ற கேள்வி அவர்களிடம் எழவில்லை. மாறாகநம் குடியிருப்பை எதிர்க்கும் மனிதர்களை கொன்று தீர்ப்போம். மற்றவர்கள் ஒரு பக்கமாக வசித்துக் கொள்ளட்டும்என்றுதான் நினைக்கிறாரகள்.

அவர்களும் நம்முடன் இணைந்து வசிப்பதற்கு முதல்படியாக அவர்களுக்கு தனி முகாம்களை அமைப்போம்என்று சிலர் கருதினாலும்இணைத்த பின்னர் நம்முடன் சரிக்குச் சரியாக நின்று போட்டி போட அவர்களுக்கு இன்னமும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கலாம்என்பது ஒரு பிரச்னையாக எழுகிறது. இறுதியில் ஒன்றும் பிடிபடாமல், ‘சரி அப்படியே விட்டு விடுவோம்என்று முடிவாகிறது.

அவர்களுக்கு ஒவ்வாத நம் உணவுப் பழக்கமும், நோய்களும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை அழித்து விடும்என்று எச்சரிக்கிறார்கள் சிலர்.

வேறு வழியில்லை. நாம் இங்கு வந்து பலகாலமாகி விட்டது.. இந்தப் பூமியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை. இனி நாமாக கொல்லப் போவதில்லை. அவர்களாக கொஞ்சம் கொஞ்சமாக செத்தால் நாம் என்ன செய்ய முடியும்? அதற்காக காத்திருப்போம்என்று மனதில் எழும் குற்ற உணர்வை வெளியில் சொல்ல யாருக்கும் தைரியமில்லை.

இந்தியர்களாகிய நாமும் காத்திருக்கிறோம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமானின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் ஜரவாஸ் இனத்தவரின் கடைசி மனிதன் எப்போது சாகப் போகிறான் என்று.

கற்கால இனத்தவர் என்று வர்ணிக்கப்பட்டிருந்ததை வைத்து எவ்வித நாகரீக உணர்வும் அற்றவர்கள் என்றுதான் அந்தமான் பழங்குடிகளைப் பற்றிய எனது எண்ணம் இருந்தது.

ஆனால், அவர்களிடையே மருத்துவராக சேவை செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் ரத்தன் சந்திர கர் என்ற மருத்துவர் ஜரவாஸ்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தொகுத்தவற்ற ஏதோ கதை போல சுவராசியமாக உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் என் எண்ணங்களை சிதற அடித்து இதைப் படிக்காமிலிருந்தால் நன்றாயிருந்திருக்குமோ என்றிருக்கிறது.

ஜரவாஸ்களுக்கு நாடில்லை. மதமில்லை. கடவுளுமில்லை முக்கியமாக ஜான் லென்னன் கனவு கண்டபடி உடமையும் (possession) இல்லாதிருந்தது. ஆனால் காதல் இருக்கிறது. திருமணம் இருக்கிறது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறம் இருக்கிறது. பகலில் வேட்டையும் மாலையில் விளையாட்டும், பாடலும் ஆடலுமான கொண்டாட்டம் இருக்கிறது.

இறந்து போனால் சுவர்க்கம் இருக்கிறது. அந்த சுவர்க்கத்தில் ஜரவாஸ் மட்டுமல்ல அவர்களால் கொல்லப்படும் மிருகங்களும் கூடவே 'நாகரீக' மனிதர்களுக்கும் இடம் கொடுக்கும் பெருந்தன்மை இருக்கிறது.

இப்போது நம்மவர்கள்நாகரீககைக்கடிகாரத்தையும் உபகரணங்களையும் பரிசளிக்க முதன் முறையாகஉடமைஎன்ற எண்ணம் தோன்றி மற்றவர்கள் காட்டில் குடியமர்த்தப்பட்டுள்ள நம்மவர்களின் வீடுகளில் கூட்டமாக வந்து திருடுவதை தடுப்பதில் பிரச்னையாகிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேக வைக்கப்பட்ட அரிசியாலும் தேங்காயாலும், வாழைப்பழங்களாலும் இதே பிரச்னையாகி அவர்களை திருடர்களாக்கியிருக்கிறோம்.

எவ்வித தொலைநோக்குமின்றி பிரிட்டிஷார் குற்றவாளிகளை குடியமர்த்தும்பீனல் காலனியாக அந்தமானை பயன்படுத்தினர். சுதந்திரத்திற்குப் பிறகு குற்றவாளிகளை மீளக்குடியமர்த்தி அந்தமானை வெறுமே ராணுவ தளமாக மட்டும் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், நாமோ பர்மா, வங்களாம், இலங்கை என்று அகதிகளையும் குடியமர்த்தி, அதற்கு மேலும் இந்தியர்களை பஞ்சம் பிழைக்கவும் அனுமதித்து காவலர்களுடன் (Bush police) குடியேறியவர்களும் இணைந்து ஜரவாஸ்களை வேட்டையாடி அவர்களின் குடியிருப்புகளை அழித்திருக்கிறோம். அவர்களும் பதிலுக்கு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நம்மவர்கள் எவரையும் கொன்று இறுதியில் திருடும் போது காயமடைந்து நம்மால் காப்பாற்றப்பட்ட சிறுவன் ஒருவன் மூலமாக 1996 முதல் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது.

ஜரவாஸ் வசிக்கும் காட்டுப் பகுதியும் சரி. இன்னமும் நம்மை கொஞ்சமும் நெருங்க விடாது செண்டினலீஸ் என்பவர்கள் வசிக்கும் செண்டினலீஸ் தீவும் சரி இந்தியாவின் எந்த சட்டமும் அரசு இயந்திரமும் செல்லுபடியாகாத பகுதிகள். அவர்களைப் பொறுத்தவரை அப்பகுதிகள் இந்தியாவும் இல்லை. அவர்களும் இந்தியர்கள் இல்லை.

எனவேதான் பல்லாயிரம் ஆண்டுகளாக அந்தமானில் பிழைத்திருந்து வெறும் இருநூறே ஆண்டுகளில் ஆங்கிலேயரக்ளாலும் தொடர்ந்து நம்மாலும் அழிக்கப்பட்ட அந்தமானீஸ் நடத்தியபேட்டில் ஆஃப் அபர்தீன்என்று வர்ணிக்கப்படும் சண்டை இந்தியாவின் சுதந்திரப் போராக நம் வரலாற்றில் எழுதப்படவில்லை.

ஜரவாஸ் மொழி நமக்கு இன்னமும் முழுவதும் புரிபடவில்லை. புரிந்திருந்தால் இனிமையான குரலில் அவர்கள் பாடும் பாடலுக்கிடையேஆயிரம் உண்டிங்கு ஜாதி. இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதிஎன்ற வரிகளும் இருப்பது தெரிய வந்திருக்கலாம்.


No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....