Saturday 23 May 2015

செல்மா (2014)

‘பார்ப்பதற்கு ஏதாவது ஹாலிவுட் படம் சொல்லுங்க, சார்’ என்று இளம் வழக்குரைஞர்கள் என்னை கேட்கும் போது எல்லாம், ‘தி க்ரேட் டிபேட்டர்ஸ்’ என்பதுதான் எனது முதல் பதிலாக இருக்கும்.

பலதடவை பார்த்து விட்டாலும், இன்னமும் அந்த இறுதிக் காட்சியின் பேச்சுப் போட்டியில் டென்ஸில் விட்டேகர் தனது உரையினை முடிக்கும் பொழுது உறைந்து போய் விடுவேன்.

அடுத்த படம் டென்ஸில் வாஷிங்டன்’னின் ‘மால்கம் எக்ஸ்’. இன்றிலிருந்து நேற்றுப் பார்த்த ‘செல்மா’வையும் சேர்த்துக் கொள்வேன். இந்தப் படங்களை பரிந்துரைப்பதற்கு ஏதோ ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் போராட்டத்தின் தார்மீக நெறி காரணமல்ல.

மாறாக, இப்படங்களின் பாத்திரங்கள் தங்களது மேடைப் பேச்சுகளில் எப்படி பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, எளிய வாக்கியங்களாக அவற்றை அழகுற கோர்க்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் காரணம். முக்கியமாக, அப்படி கோர்க்கப்பட்ட வாக்கியங்களை ஏற்ற இறக்கமாக பேசுவதன் மூலம் தம்முன் இருப்பவர்களை அவர்களால் வசியப்படுத்தவும், கிளர்ந்தெழவும் செய்ய முடிகிறது என்பதை தெரிந்து கொள்ளவும்தான்.

மால்கம் எக்ஸும் சரி, மார்ட்டின் லூதர் கிங்’கும் சரி தங்களது மேடைப்பேச்சுகளை தங்களுக்குள்ளாவது ஒரு முறை பேசிப் பார்க்காமல் மேடையில் பேசுவதில்லை என்பது அவர்களது மேடைப் பேச்சுகளை கேட்டால் புரியும். இந்தப் படத்தில் கூட சில காட்சிகளில், எப்படி கிங்’ தனது முக்கியமான பேச்சுகளுக்கு முன்னிரவே, அதற்காக மெனக்கெடுகிறார் என்பது தெரியும்.

சிறிய கல்லானது கவணைச் சுழற்ற சுழற்ற வேகம் பிடிப்பதைப் போல போல சாதாரணமாக இருக்கும் வாக்கியத்தினை மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி தங்களது உரையில் பயன்படுத்துவதன் மூலம் முழுச்சக்தியுடன் அந்த வார்த்தைகளை கூட்டத்தில் அவர்களால் பிரயோகிக்க முடிந்தது.
ரஜினிகாந்த்’தின் பஞ்ச் டயாலாக்’குகளுக்கும் ஏறக்குறைய இதே அடிப்படைதான்.

கலைஞர் கருணாநிதி கூட தனது உரைகளுக்காக தன்னை முன்பாகவே தயார் செய்து கொள்வார் என்று படித்திருக்கிறேன். ஆனால், ஜவகர்லால் நேரு தனது சுதந்திர தின உரையை எவ்வித தயாரிப்பும் இல்லாமல் பேசினார் என்று யாரோ கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேடைப்பேச்சுகளை மட்டுமல்ல நீதிமன்ற வாதுரைகளையும் பேசிப்பார்த்துக் கொள்வதும், தயார் செய்து கொள்வதும் நீதிமன்றத்தில் நீதிபதியை என்பதை விட சக வழக்குரைஞர்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் பொது மக்களையும் கவர மிக்க உதவியாக இருக்கும்.

படங்களைப் பார்க்க இயலாதவர்கள், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் உரைகளை யூ ட்யூபில் ஹெட்ஃபோன் உதவியுடன் கேட்டுப் பார்க்கலாம்...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....