Sunday 7 June 2015

காக்கா முட்டை

நடிகர் சிம்பு, லிட்டில் சூப்பர்ஸ்டார் அல்லது எஸ்டிஆர் என்று சொல்ல வேண்டுமோ? எந்தப் பெயரிலும் சரி, எனக்குப் பிடிக்காத நடிகர்கள் என்று பட்டியலிட்டால் முதலிடத்தில் கூட இருப்பார். ஆனால் இனி பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. தனுஷ் கூட அவ்வப்போதுதான் பிடிக்கும். இனி அடிக்கடி பிடிக்கும் போல இருக்கிறது.

நேற்றுப் பார்த்த படம் அப்படி.

காக்கா முட்டை!

படத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட இவர்களை விடுங்கள். படம் முடிந்து எழுத்து போடும் போதே தூத்துக்குடியில் சொல்வது போல ‘எதற்குள்ளோ அருவாளை வைத்துக் கொண்டு வந்ததைப் போல’ ‘தடதட’வென எழும் முன்னிருக்கை ரசிகர்கள்களின் அவசரத்தைக் கூட நேற்று வழக்கமான எரிச்சல் இன்றி ரசிக்க முடிந்தது.

நேரம், சூது கவ்வும், மூடர் கூடம், ஜிகர்தண்டா, பண்ணையாரும் பத்மினியும், ந.கொ.ப.காணோம், சதுரங்க வேட்டை என ‘ஜிவ்’வென்று மேலே ஏறிக் கொண்டிருந்த தமிழ்ப்படங்களை ‘காக்கா முட்டை’ க்ரூயூஸிங் உயரத்தில் சென்று நிறுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இயக்குஞர், ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர், நடித்த வாண்டுகள், அவர்களின் நாய், பிற நடிகர்கள், முக்கியமாக ‘மம்மி’ என்று நாங்கள் அழைத்த எனது பாட்டியை நினைவுபடுத்திய தோசைக்கல்லில் பீட்சா வார்த்த, ஆம் ‘வார்த்த’தான் அந்த குப்பத்து ஆச்சி என்று அனைவரின் இயல்பான நடிப்பும் இனி சிலாகிக்கப்படலாம். ஆனால், கண்டு கொள்ளப்படாமல் போகப் போவது, பீட்சா கடை மேலாளர் அந்தப் பையனை அறைந்ததும், கடைக் காவலாளி கொடுக்கும் வினாடி நேர ‘ரியாக்க்ஷன்’ என்று அஞ்சுவதால், இங்கு சொல்லி வைக்கிறேன்.

கடைசியில் ‘காக்கா முட்டை’களின் அம்மாவாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாள் என்று எதிர்பார்த்து ‘டேய்’ என்பதோடு நிறுத்திக் கொள்வதால் அவர்களின் பெயர் தெரியாமலேயே போவதின் யுக்தி, பழரசம் பிடித்து வைத்திருக்கும் தவளையின் குறியீடு என்று பலவும் விவாதிக்கப்படலாம். ஆனால், அரசதிகாரம், ஊடகங்கள் போன்றவற்றின் நிறுவப்பட்ட கட்டமைப்பை அசைக்கும் அதே வேகத்தில் சமூக ஊடகங்கள் தமிழ் திரைப்படத்துறையையும் பிடித்து உலுக்கிக் கொண்டிருப்பதையும் பேச வேண்டும். முகநூல் இல்லை என்றால் நான் நேற்று இந்தப் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சூப்பர், டூப்பர், தல, புயல், தளபதி, புரட்சி, இமயம், சிகரம் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது, ‘பீட்சா சமயத்துல நல்லா இருந்தாலும், ‘கொள’’கொள’ன்னு எப்பதான் தின்னு முடிக்கிறதுன்னு ஆயிடுது. ஆனால் ஆச்சி சுட்ட தோசை இன்னும் நல்லாருக்குது’

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....