Monday, 15 June 2015

சகாயத்துக்கான நீதி?

சகாயம் பிரான்ஸ் எப்படியிருந்திருப்பார் என்று எனக்குத் தெரியாது. புகைப்படத்தில் கூட பார்த்ததில்லை. ஆனால் இன்று வரை சகாயத்தை என்னால் மறக்க முடிந்ததில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது 42வது வயதில் செத்துப் போன சகாயம் விட்டுச் சென்ற மனைவிக்கும் நான்கு குழந்தைகளுக்கும், ஒரு வழக்குரைஞராக எனது கடமையை செய்ய தவறி விட்டேனோ’ என்ற உறுத்தல்தான் சகாயத்தின் நினைவுகளாக என்னில் தங்கி விட்டன போலும்.

கூடங்குளத்திலோ அல்லது இந்தியாவின் பிற எந்தப் பகுதியிலோ, அணு மின்நிலையம் அமைப்பது குறித்து, இருபுறமும் எடுத்து வைக்கப்படும் வாதங்களால் எனக்கு எவ்விதமான எதிர்ப்போ அல்லது ஆதரவோ இல்லை. 2012 செப்டம்பரில் நடைபெற்ற ‘ஜல்சத்யாகிரக' போராட்டத்தை அடக்க காவலர்கள் அத்துமீறியதாக தாக்கல் செய்த வழக்கில் நான் ஆஜரானதும் தற்செயலானதுதான்.

அப்போதுதான் சகாயத்தின் பிரேதபரிசோதனை அறிக்கையை பார்க்க நேரிட்டது. அவரது உடலில் முக்கியமாக தலையில் எவ்விதமான வெளிக்காயமோ அல்லது உட்காயமோ இல்லை. ஆயினும் மூளையில் ரத்தக்கசிவால் இறந்திருந்தார். ஆனால் ஊடகங்களில் கடல் போராட்டம் நடந்த போது அவர் ஒரு பாறை மீதி நின்று கொண்டிருந்ததாகவும், தாழப்பறந்து வந்த விமானத்தைப் பார்த்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாகவும் செய்தி வந்திருந்தது. சில பத்திரிக்கைகளில் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும் கூட புனையப்பட்டிருந்தது.

நரம்பியல் மருத்துவ நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டதில், திடீரென தாழப்பறந்து வரும் விமான சத்தத்தால் ஏற்ப்படும் அதிர்ச்சி கூட மரணத்தை விளைவிக்கலாம் என்றார்.

கடலுக்குள் போராட்டம் நடத்தப் போனவர்களை கண்காணிக்க அல்லது கைது செய்ய கடலோரப் பாதுகாப்பு படகுகளை ஈடுபடுத்துவதில் அர்த்தமுண்டு. விமானத்திற்கு அன்று தேவை என்ன, யார் அதற்காக உத்தரவிட்டது என்ற கேள்வி எழுப்பினால், அரசிடமிருந்து அதற்கு பதிலே இல்லை. மாறாக கமாண்டரின் அறிக்கையோ ‘அன்று விமானம் பறந்தது என்றும் போல வழக்கமான ஒன்றுதான், போராட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்ற ரீதியில் இருந்தது.

முக்கியமாக, ‘மிகவும் தாழ்வாக எல்லாம் பறக்கவில்லை. 300 அடி உயரம் வரைதான் சென்றோம்’ என்று இருந்ததைப் பார்த்து, ‘இது போதும், சகாயத்தின் மனைவி வழக்கு தாக்கல் செய்தால் அரசிடம் இருந்து நஷ்ட ஈடு பெற முடியும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் கூறினேன். வழக்கு தாக்கல் செய்தார்களா என்று தெரியவில்லை.

நேரில் பார்த்தவர்கள் விமானம் 100 அடி வரை தாழப்பறந்தது என்று கூறினாலும், விமான கமாண்டர் ஒத்துக் கொண்ட 300 அடியே அனுமதிக்கப்படாத உயரம் என்பதை அவர் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை. உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நமது நாட்டு சட்டங்களின்படியும் வகுக்கப்பட்டுள்ள ஆகாய விதிகள் (Rules of Air) படி போராட்டத்திற்காக கூடியுள்ள மக்கள் மீது விமானம் 1000 அடிக்கு குறைவாக பறக்க கூடாது. எந்நிலையிலும் 500 அடிக்கு கீழே பறக்க முடியாது.


4.6 Except when necessary for take-off or landing, or except by permission from the Director General, a VFR flight shall not be flown: a) over the congested areas of cities, towns or settlements or over an open air assembly of persons at a height less than 300 m (1000 ft) above the highest obstacle within a radius of 600 m from the aircraft; b) elsewhere than as specified in 4.6 a), at a height less than 150 m (500 ft) above the ground or water.


அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட தாழப்பறப்பதற்கான அனுமதியை பெற்றதாகவோ அல்லது அவ்வாறு பறப்பதற்கான தேவை என்ன என்பதைப் பற்றியோ அரசிடம் பதிலில்லை.                                                                                                
ஆகாய விதிகளின் பிரிவு 3.1.1 Negligent or reckless operation of aircraft An aircraft shall not be operated in a negligent or reckless manner so as to endanger life or property of others என்று கூறுவதும் ஆகய விமான விதிகள்’1937ல் பிரிவு 21ல் Dangerous flying - No person shall fly any aircraft in such circumstances as, by reason of low altitude or proximity to persons or dwellings or for other reason, to cause unnecessary danger to any person or property என்று இருப்பதும், அன்று விமானி அவர் கூறியபடியே 300 அடி உயரத்திற்கு விமானத்தை கீழிறக்கியது சட்டத்திற்கு புறம்பானதும், கவனக்குறைவானதுமான செயல் என்பதை உறுதிப்படுத்தும்.

இடிந்தகரையில் விமானம் பறந்தது அவ்வாறு கவனக்குறைவான அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதை நிறுவி வழக்கு தாக்கல் செய்திருந்தால், சகாயத்தின் மனைவி குழந்தைகளுக்கு கண்டிப்பாக நட்ட ஈடு கிடைத்திருக்கும். இடிந்தகரையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு கூட அரசு நட்ட ஈடு கொடுத்தது. சகாயத்துக்கு கிடைக்கவில்லை.

அது மட்டுமல்ல. போராட்டமானது அணு உலையில் கதிரியக்க எரிபொருளை நிரப்பியதால் நடந்தது. அவ்வாறான அணு உலை இருக்கும் இடத்தின் அருகில் விமானம் அதுவும் தாழ்வாக பறப்பது என்பது மிகவும் அபாயகரமான செயலாகும். கல்பாக்கம் அணு உலைக்கு பத்து கிமீ தொலைவுக்குள் எந்த ஒரு விமானமும் 10000 அடி உயரத்திற்கும் குறைவாக பறக்க தடை உள்ளது.
கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை இம்மாதம் 25ம் தேதி முதல் இந்தத் தடை அமுலுக்கு வருகிறது என்றாலும், இன்றுள்ள அதே அபாயம் 2012 செப்டம்பரிலும் இல்லை என்று கூற முடியாது. ஆனால் விமானி எவ்வித அச்ச உணர்வுமின்றி அணு உலைக்கு 100 மீட்டர் தூரத்தில் 300 அடியில் பறந்துள்ளார்.

எவ்வாறாயினும், பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்கள் மீது காரை ஓட்டியதற்கும் இவ்வாறு மக்கள் கூட்டமிகுந்த பகுதியில் விமானத்தை தாழ்வாக பறக்கவிட்ட செயலுக்கும் வித்தியாசமில்லை.                                                      
மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த அந்த விபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்தால், இடிந்தகரையில் ஒன்றல்ல, பல கல்லறைகள் தோண்ட வேண்டியிருந்திருக்கும்


No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...