Sunday 14 February 2016

ஒன்லி காட் பர்கிவ்ஸ் (2013) ஆங்கிலம்

‘மிஸ்டர் பீன்’ஸ் ஹாலிடே’ என்ற படத்தைப் பார்த்திருக்கலாம். அதில் கார்ஸன் க்ளே என்ற இயக்குஞர் ஒரு கதாபாத்திரம். அவர் இயக்கிய ‘ப்ளேபாக் டைம்’ என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும். படத்தின் மொத்த காட்சியிலும் இயக்குஞர், பின்னணியில் அமானுஷ்ய இசையில் நடந்து வந்து கொண்டேயிருப்பார். விருது வாங்கவென்றே தயாரிக்கப்படும் திரைப்படங்களை கிண்டலடிக்கவே அந்தக் காட்சியிருக்கும்.

கல்லூரியில் படிக்கையில் மலையாள விருதுப் படமான ‘சிதம்பரம்’ பார்க்க சென்றிருந்தோம் மதுரையில் சக்தி தியேட்டர் என நினைக்கிறேன், மெல்ல நகரும் ஒவ்வொரு காட்சியிலும் மதுரை ரசிகர்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர், காலைக் காட்சி வேறு. ஒரு காட்சியில் ஸ்மிதா பாட்டீல் புழக்கடையில் பாத்திரங்களைப் போட்டு கழுவுவார். தியேட்டரே நிசப்தமாக இருக்க இருட்டிலிருந்து ஒரு குரல், ‘நல்ல வேளை கொஞ்சம் பாத்திரங்கதான் இருக்கு. சீக்கிரம் கழுவி முடிச்சுருவா’

‘ப்ளேபாக் டைம்’ ரோவன் அட்கின்ஸனின் கிண்டல் என்றாலும் அதைப் போலவே ஆனால் சீரியஸான படத்தில் ஞாயிறு இரவு மாட்டிக் கொண்டேன். ரியான் கோஸ்லிங், க்றிஸ்டின் ஸ்காட் தாமஸ் என்ற பெயர்களைப் பார்த்து ஏதோ ஹாலிவுட் சண்டைப்படம் என்று நினைத்து விட்டேன்.

போஸ்டரில் கோஸ்லிங் முஷ்டியை மடக்கிக் கொண்டு நிற்கிறாரே என்று பார்க்காதீர்கள், முஷ்டியை உயர்த்துவதோடு சரி, ஒரு அடி கூட அடிக்க முடியாமல், நடுத்தர வயது தாய்லாந்து போலீஸ்காரர் ஒருவரிடம் நாயடி பேயடி பட்டு மூஞ்சியெல்லாம் ரத்தக் களறியாகிவிடுகிறது. அந்தப் போலீஸ்காரர் படம் முழுக்க ஏதும் பேசாமல் மெல்ல நடந்தபடியே வருகிறார். பட்டாக்கத்தியை உருவி பார்ப்பவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுகிறார். படத்தைப் பார்க்கிறேன் என்று கிளம்பி யாரும் அவரிடம் சிக்கி விட வேண்டாம் என்று எச்சரிக்கவே இப்பதிவு.

பார்த்துதான் தீர வேண்டுமென்றால், படத்தை அணைத்து விட்டு பின்னணி இசையை மட்டும் தரமான ஹெட்ஃபோனில் கேட்கவும்.

சமீபத்தில் தாய்லாந்துக்கு குடும்பத்துடன் போய் வந்த வக்கீல் நண்பர் ஒருவர், ‘சார், தாய்லாந்து ஃபேமிலியோட போற ஊர் சார்’ என்றார். அப்புறம் ஏன் படங்களில், இப்படியே காண்பிக்கிறார்கள்?

மதுரை
11/02/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....