Sunday, 21 February 2016

மோஜின் : த லாஸ்ட் லெஜண்ட் (சீனா) 2015

டாவின்ஸியின் மோனாலிஸா’வை அச்சு அசலாக அதே போல அல்லது அதை விட சிறப்பாக வரைய நூற்றுக்கணக்கான ஓவியர்கள் உண்டு. ஆனால் ஒரு மோனாலிஸாதான் இருக்க முடியும்.


ஆயிரம் மம்மிகள் ரிட்டனாகலாம், ஏன் இந்தியானா ஜோன்ஸ் கூட மீண்டும் மீண்டும் வரலாம். ஆனால் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் ஒன்றுதான் ஒரிஜினலாக இருக்க முடியும் என்று நான் நினைப்பதை இளைஞர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.


எண்பதுகளில், சட்டக்கல்லூரி நாட்களில் மதுரை அமிர்தம் தியேட்டர் என் திரைப்பட மெக்கா; எனது மதுரை வருகையை எதிர்பார்த்தோ என்னவோ, அமிர்தமும் புதிய சவுண்ட் சிஸ்டங்களுடனும் அகலத்திரையுடனும் தன்னை நவீனப்படுத்திக் கொண்டு என்னை வரவேற்கத் தயாராக இருந்தது. அமிர்தம் தந்த திரைப்பட அனுபவங்கள் அனைத்துமே மறக்க முடியாதவை என்றாலும் அதன் உச்சம் இரண்டு முறை பார்த்த ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்’தான்.


என்னவோ தெரியவில்லை ஹாரிசன் ஃபோர்ட் முகத்தைத்தான் நான் ஸ்பீல்பெர்க் என்று மனதில் இருத்தியிருந்தேன். ஜேம்ஸ் பாண்ட்’டை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஸ்பீல்பெர்க்’கும் ஜார்ஜ் லூகாஸும் கதாநாயகர்கள் போல என்னில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.


கால ஓட்டத்தில் அவர்கள் பின்னர் கரைந்து போனாலும், நேற்று தற்செயலாகப் பார்க்க நேரிட்ட ‘மோஜின் த லாஸ்ட் லெஜண்ட்’ என்ற சீனப்படம் ஸ்பீல்பெர்க்’கும் லூகாஸும் எவ்வளவு பெரிய திரை மேதைகள் என்பதை மீண்டும் உணர்த்தியது. புரதான கலைச்செல்வங்களுக்காக கல்லறைகளுக்குள் புகும் கதாநாயகர்களைப் பற்றிய புகழ்பெற்ற சீன தொடர் நாவல்களில் ஒன்றைப் படமாக்கியுள்ளனர்.


க்ரொவ்சிங் டைகர் அண்ட் த ஹிட்டன் டிராகன் போல கவித்துவமான சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று நினைத்து ஏமாற்றமாகி விட்டது.


ஆசிய தரத்திற்கு மிகப்பிரமாண்டமான படம் என்றாலும், ஹாலிவுட் தரத்திற்கு சாதாரணம் என்பது போல தோற்றம் தந்ததற்கு, 30 வருடங்களுக்கு முன் என்னை வியப்பிலாழ்த்திய இந்தியானா ஜோன்ஸ் கூட காரணமாயிருக்கலாம். ஆயினும் வார இறுதியில் குடும்பத்துடன் ரசிக்கத் தகுந்த படம்.


உலகப்படங்களை, அது பிரெஞ்ச், ஜெர்மனியப் படங்களாக இருந்தாலும் அதே மொழியில்தான் என்னால் பார்க்க இயலும். ஆங்கிலத்தில் பார்த்தால், ஹிந்தி டிவி சீரியல்களைப் தமிழில் பார்ப்பது போல இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் முதல் அரை மணி நேரத்திற்கு பாத்திரங்கள் பேசிய சீன மொழி உறுத்தலாக இருந்தது.


சீனப்படம் என்றால் நமக்கு குங்ஃபூ படங்கள்தாம். ‘மாஸ்டர் மாஸ்டர்’ என்று அந்தப்படங்களில் பேசும் ‘சீனிஷ்’தான் சீன மொழி என்று மனதில் அழுத்தமாக பதிந்து விட்டதோ என்னவோ?

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...