Friday 5 February 2016

வயலட்டா வென்ட் டு ஹெவன் (சீலே) 2011

மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களால் கொண்டாடப்பட்ட முதல் பொங்கல் விழா என்று நினைக்கிறேன். லா சேம்பர் புல்வெளியில் கலை நிகழ்ச்சிளும் பரிசளிப்பு விழாவும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘தப்பாட்டம் இருக்கு. நல்ல பெரிய ட்ரூப்’ என்று நண்பர் சொல்லியிருந்தார். தப்பாட்டம் பார்த்தது எனக்கும் அதுதான் முதன்முறை. வழக்குரைஞர்கள் சிலரும் அவர்களது தாளத்திற்கு ஏற்ப ஆடினர்.

அதற்குள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த நீதிபதிகள் ஒவ்வொருவராக வர, நீதிமன்ற பதிவாளர் தனது அதீத உற்சாகத்தில் அந்தக் குழுவினரை லா சேம்பர் வாசலுக்கு கூட்டிச் சென்று நீதிபதிகளின் இருமருங்கிலும் இருந்தவாறு தப்பை அடித்தவாறு விழா நடந்த புல்வெளிக்கு அழைத்து வரச் செய்தார். நண்பருக்கு வந்ததே கோபம்...

பதிவாளராவது பரவாயில்லை. வரலாறு அறியாதவர். பிரபல தவில் வித்துவான் கூடவா, அவரது மூத்த கலைஞர்கள் கடந்து வந்த பாதையை மறந்து போவார்?

பல ஆண்டுகளுக்கு முன்னர் கானாடுகாத்தான் என்ற ஊரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நாதஸ்வரம் வாசிக்க அழைக்கப்பட்டிருந்த சிவக்கொழுந்து என்ற புகழ்வாய்ந்த கலைஞர், வியர்வையை துடைக்க வைத்திருந்த சிறு துணியானது தோளில் போடும் துண்டு என்று குற்றம்சாட்டப்பட்டு நாதஸ்வரம் வாசிக்க விடாமல் தடுக்கப்பட்டார். அந்தக் கச்சேரிக்கு சென்றிருந்த ‘உண்மையான’ அஞ்சா நெஞ்சன் அழகிரி(சாமி) மாப்பிள்ளை ஊர்வலத்தை அங்கேயே நிறுத்தி வைத்து ‘சிவக்கொழுந்து இங்கேயே உட்கார்ந்து வாசியுங்கள். நான் இருக்கிறேன்’ என்று சவால் விட பின்னர் சிவக்கொழுந்து 'துண்டு'டன் நாதஸ்வரம் வாசிக்க அனுமதிக்கப்பட்டார். கச்சேரி முடியும் வரை அழகிரிசாமி அவருக்கு விசிறிக் கொண்டே துணைக்கு நின்றாராம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. கடந்த மாதம் கலை இரவு ஒன்றில் கச்சேரி நடத்த அழைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற தவில் கலைஞர் ஒருவர், விளம்பரத்தில் அவரது படத்துடன் தப்புக்கலைஞர்களின் படத்தையும் பார்த்ததும், கோபத்தில் கச்சேரியை ரத்து செய்து விட்டாராம்.

இங்கு என்று இல்லை. உலகம் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிலை அதுதான் போல.

சீலே நாட்டின் இரண்டாவது தேசிய கீதம் என்று போற்றப்படும் ‘க்ராஸியஸ் எ லா விடா’ (வாழ்க்கைக்கு நன்றி) என்ற பாடலை இயற்றிப் பாடிய ‘வயலட்டா பரா’ என்ற பெண்மணியின் வாழ்க்கைச் சரிதப்படமான ‘விண்ணுக்குச் சென்ற வயலட்டா’ (Violeta se fue a los cielos 2011) பார்க்கையில் எனக்கு அப்படித்தான் தோன்றியது. இசைக்குடும்பத்தில் பிறந்தவர். சிறுமியாய் இருக்கையிலேயே தந்தையை இழந்து அவர் விட்டுச் சென்ற கிடாரை மற்றும் வைத்துக் கொண்டு குடும்பத்தை தாங்கியவர். ஆனாலும் சீலே நாடு முழுவதும் அலைந்து நாட்டுப்புற பாடல்களை சேகரித்து அவற்றை இசைவடிவமாக்கித் தந்ததால்தான் சீலேவின் புதிய பாடல்கள் என்ற பெயரில் அதன் நாட்டுப்புறப் பாடல்கள் அழியாமல் மறுவடிவம் பெற்றன என்று கூறப்படுகிறது.

அநேக பாடல்களையும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் தந்திருந்தாலும், ஓவியம், எம்ப்ராயிட்டரி அடுத்து மண்பாண்டக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரது கலைப்படைப்புகள் ஐரோப்பா சென்றிந்த பொழுது பாரீஸில்ன் புகழ்பெற்ற கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இருந்த போதிலும் ஐரோப்பாவில் செல்வந்தர்கள் கூடிய கூட்டம் ஒன்றில் பாட அழைக்கப்படும் வயலட்டா, பாடி முடித்ததும் நிகழ்ச்சி நடத்துபவர் அங்கிருப்பவர்களை உணவுக்காக விருந்து அறைக்கு செல்லும்படி வேண்டிய பின்னர் வயலட்டாவிடம், அவளுக்கு தனியே சமயலறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியதும் வெகுண்டு எழுந்து அவரை ஒன்று இல்லை என்று கேட்டு விட்டு கூடியிருக்கும் ஒவ்வோரு முகத்திற்கு முன்பும் ‘செவிடு’ ‘செவிடு’ என்று கோபத்தில் உறுமிக் கொண்டு செல்லும் காட்சியைத்தான் சொன்னேன்.

சீலேவில் சர்க்கஸ் கூடாரம் போன்று தனது இருப்பிடத்தைக் கட்டி அதை அனைத்து நாட்டுப்புற இசைக்கலைஞர்களும் இசைக்கும் கலைக்கூடமாக உருவாக்கினாலும் தொடர்ந்து வறுமையும் வெறுமையும் துரத்த ‘எனக்கு எவ்வளவோ அள்ளித்தந்த வாழ்க்கைக்கு நன்றி’ என்று பாடிய வயலட்டா 1967ம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் அதே கூடாரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

படத்தை இயக்கியவர் ஆந்த்ரே உட். சீலே நாட்டு சோஷலிஸ ஆட்சியாளரான அலெந்தே காலத்து நிகழ்வுகளின் பின்னணியில் ‘மச்சுக்கா 2004’ என்ற படத்தை இயக்கி நம்மில் பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தாம். இந்தப் படம் ஆஸ்கருக்கு சீலே நாட்டிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. பரிசு பெறவில்லை.

வயலட்டாவின் பாடல்கள் இன்றும் பல்வேறு வடிவங்களில், பல இசைக்கலைஞர்கள் மூலமாக புதுப்புது வடிவங்களில் உயிர்த்திருக்கின்றன...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....