Sunday, 14 February 2016

பெங்களூர் நாட்கள்

மூஞ்சிப் புத்தகம் முழுக்க ‘விசாரணை’யின் வெப்பத்தில் எரிந்து கொண்டிருக்க, நான் நேற்று 'பெங்களூர் நாட்க’ளைப் பார்த்தேன் என்பதை சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டுதான் இதுவரை சொல்லவில்லை.

இரண்டு நாட்களாக மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கும் தீவிர சினிமா ரசிகர்கள் ‘அற்பப் பதரே’ என்று என்னை ஒதுக்கி வைத்து விடுவாரகளோ என்று வேறு பயமாக இருக்கிறது.

அலுவலகத்தில் இரவு மணி ஒன்பதைத் தாண்டி ஒன்பதரையை நெருங்கவும், ‘போதும் இன்றைக்கு’ என்ற அசதியில், படத்துக்குப் போனால் என்ன என்று இணையத்தில் தேடினால் ‘விசாரணை’க்கு டிக்கட் இருந்தது.

‘படத்துக்குப் போலாமா?

‘ஓ’ அம்மா, மகள் இருவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்ப்; வீட்டுத் தியேட்டரில் அப்படி என்னத்தான் இல்லையோ?

‘சரி, கிளம்புங்க’

‘என்ன படம்?’ மகள், அவளுக்கு பொறி தட்டி விட்டது; அவ்வளவு நம்பிக்கை!

ஏற்கனவே பார்த்து விட்ட பசங்க2 மூலம் அவளது இந்த வார ‘கோட்டா’ முடிந்து போன தைரியத்தில், ‘உனக்குத் தெரியாது. உலகப்படம் மாதிரி இருக்கும்’ என்றேன். முகம் சுருங்கி விட்டது.

திரும்பி அலுவலக அறைக்கு வந்து இணையத்தில் புகுந்தால் விசாரணை ஸ்டில்களில் சட்டையில்லாத உடம்புகள் பயமுறுத்தின. சக ஊடகவியலாளர்களிடம் படம் ஏற்ப்படுத்தியிருந்த அதிர்வலைகள் வேறு ‘சோளகர் தொட்டி’யை நினைவுபடுத்தியது.

ஒன்றுக்கு மூன்று தடவை புக் பண்ணுவதற்கு இறுதி வரை போனாலும் மகளுடைய முகமே மானிட்டரில் தெரிய, ஜாலியாக என்ன இருக்கும் என்று மறுபடியும் பார்த்ததில், ‘பெங்களூர் நாட்க’ளுக்கு கண்ணை மூடிக் கொண்டு ‘க்ளிக்’கியாகி விட்டது.

கிளம்ப மனமில்லாமல் ‘உர்’ரென்று இருந்த மகளை ஓங்கி அதட்டியதில் தியேட்டர் வரும் வரை காரின் பின் சீட்டில் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது.

‘அடடா, இது என்ன வேறு படத்துக்கு டிக்கட் எடுத்து விட்டோம்’ என்று தியேட்டருக்குள் நுழையும் போது நான் காட்டிய ஆச்சரியத்திலிருந்த பொய்’யை கண்டு பிடித்து விட்டாள். சிவந்திருந்த கண்களில் இன்னமும் கோபம் மிச்சமிருந்தது.

பெங்களூரை கடந்து எவ்வளவு தடவை போயிருக்கிறேன். தூசியும் டிராபிக் ஜாமும்தான் நினைவுக்கு வரும். கல்லூரிக் காலத்தில் போன போதுதான், படத்தில் வருவது போல அழகாயிருந்தது. அல்லது படத்தில் வருவது வேறு பெங்களூரா ஒருவேளை எனக்கு வயதாகியிருக்கலாம்...

‘படம் எப்படி?’

அது யாருக்கு வேணும்; திரும்பி வரும் போது இரவு ஒன்றரையை கடந்து விட்டிருந்தாலும், ‘அப்பா உன்னை ஏமாத்தியிருக்காங்கடா’ என்ற கிண்டலிலும் சிரிப்பிலும், கார் ஓட்டுவதே சுகமாக இருந்தது.

‘சனிக்கிழமை இரவுக்கு இது போதும். உங்க விசாரணையை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாமே, மிஸ்டர் வெற்றி மாறன்’ என்று நினைத்துக் கொண்டேன்.

மதுரை
07/02/16

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...