Thursday 3 September 2015

பெஸ்ஸீ 2015

கி.ராஜநாராயணன், கோபல்லபுரம் நாவலில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தாலுகா தலைமையகம் ஏன் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது என்பதை சுவராசியமாகக் கூறியிருப்பார்.

ஜமாபந்தி. கலெக்டர் உட்பட அனைவரும் வந்து விட்டாலும், தாசில்தாரைக் காணோம். வியர்க்க விறுவிறுக்க பின்னர் வந்து சேரும் தாசில்தாரைப் பார்த்து கலெக்டர் கடும் கோபமாக, ‘ஜமாபந்தியன்று ஊரிலிருக்காமல் எங்கு போனீர்’ என்பதற்கு. தாசில்தாரோ, ‘எங்கும் போகவில்லை ஐயா. கோவில்பட்டியில் வீடு. அங்கிருந்து வர நேரமாகிவிட்டது’. என்பார் அப்பாவியாக.

கலெக்டரோ, ‘அது இன்னமும் மோசம். தாசில்தார் தாலுகா தலைநகரில் இல்லாமல் வேறு ஊரில் எப்படி வசிக்கப் போயிற்று’ என்று விளக்கம் கேட்பார். தாசில்தார், ‘ஐயா, நான் தாழ்ந்த சாதி. எனக்கு ஓட்டப்பிடாரத்தில் யாரும் வீடு கொடுக்க மாட்டார்கள்’ என்றவுடன் கலெக்டர், ‘தாலுகா தாசில்தாருக்கு வீடு கொடுக்காத ஊரில் தலைமையகமா, மாத்து உடனே தாலுகா ஆபீசை கோவில்பட்டிக்கு’ என்று உத்தரவிட்டாராம்.

அந்தக் கலெக்டர் மணியாச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ் என்று யாரோ ஒருவர் அவரது முகநூலில் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை தங்களது கணீரென்ற பாடல்களால் கட்டிப் போட்ட ‘மா ரெய்னி’யும் பெஸ்ஸி ஸ்மித்’தும் அவர்களும் அவரவர் குழுவினரும் பயணம் செய்வதற்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் விஞ்சும் வகையில் பிரமாண்ட வசதிகளோடு சொந்தமாக ரயில் பெட்டிகளையே வைத்திருந்தாரக்ள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் வெளிப்படுத்த விரும்பிய ஆடம்பரம் மட்டுமல்ல.

மாறாக, கறுப்பின பெண்கள், அதுவும் இனவெறி கொடி கட்டிப் பறந்த தென்மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், சாலைகளில் பயணம் செய்வதால் சந்திக்க நேரிடும் நிறவெறி சீண்டல்களைத் தவிர்க்கவும் பிற நகரங்களில் தங்குவதற்கு விடுதிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களாலும்தான் என்ற காரணங்கள் பெஸ்ஸியின் வாழ்க்கைச் சரிதப் படமான இப்படத்தில் கிடைக்காது.

ஆனால், பெஸ்ஸி ஒன்றும் நிறவெறி தாக்குதலுக்கு பயந்தவரல்ல. யாரிடமும் அவருக்கு பயமில்லை என்றாலும், பாடல் நிகழ்ச்சியில் கலாட்டா செய்ய வரும் கூ க்ளக்ஸ் க்ளான் இயக்கத்தவரைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பயந்து கிடக்க தைரியமாகச் சென்று விரட்டியடித்தவர்தான். க்ளான்’காரர்கள்தான் என்றில்லாமல் அவரைச் சீண்டும் அனைத்து ஆண்களும் அவரிடம் உதைபடுகிறார்கள்.

அந்த தைரியத்தையும் தாண்டி பெஸ்ஸியின் வாழ்க்கையில் சிறு வயது முதலே துன்பமும் இன்பத்தோடு தொடர்கிறது. நாற்பத்து மூன்று வயதிலேயே சாலை விபத்தில் முடிந்து போன பெஸ்ஸியின் குறுகிய வாழ்க்கை எங்கும் பரவிக்கிடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், ஏற்றத் தாழ்வுகளும் அருமையான திரைக்கதைக்கான வடிவம்தான் என்றாலும் அதற்காக இருபது வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இங்கு எப்படி கொல்லங்குடி கருப்பாயி’யுடன் துணைக்கு பாடிய பரவை முனியம்மா பின்னர் தனியாக பயணித்து அவரையும் விஞ்சினாரோ அதே போன்று புகழில் உச்சியிலிருந்த மற்றொரு ப்ளூஸ் ரக பாடகியான மா ரெய்னி’யிடம் வாய்ப்பு கேட்டு துணையாகப் பாடிய பெஸ்ஸி பின்னர் தனியே சென்று 'ப்ளூஸ் பேரரசி’ என்று வர்ணிக்கப்பட்டார்.

ப்ளூஸ் ஆப்ரிக்க அமெரிக்க இசையைக் கலந்து பொதுவாக காதல் ஏக்கத்தில் பாடப்படும் பாடல்கள். பெஸ்ஸி படம் பார்த்ததிலிருந்து நானும் ப்ளூஸ் ரசிகனாகி விட்டேன். இரு நாட்களாக ப்ளூஸ்’தான்.

கே.ஆர்.விஜயா கூட சொந்தமாக விமானம் வைத்திருந்தார் என்று முன்பு கூறுவார்கள். பறந்தாரா என்று தெரியவில்லை...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....