Saturday, 29 August 2015

தீர்ப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

உச்ச நீதிமன்றத்திற்கு இது போறாத காலம் போல. பின்னர் இப்படியா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அதன் மூன்று தீர்ப்புகள் நாடு தழுவிய அளவில் விவாதத்தினை ஏற்ப்படுத்தும்?

சமீப காலங்களில் நீதிமன்ற தீர்ப்பானது இவ்விதம் மக்களிடையே விவாதத்திற்குள்ளாவது பெருகி வருகிறது. மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையினை குலைக்கும் வண்ணம் மோசமான விளைவுகளுக்கு இவ்விதமான விவாதங்கள் இட்டுச் செல்லலாம் என்று கூறப்பட்டாலும், இது ஒரு நல்ல சமிக்கையே என்றே நான் கருதுகிறேன்.

நீதிமன்ற தீர்ப்பினைk குறித்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், விமர்சனங்களை வைப்பது நீதி பரிபாலன முறையின் முன்னேற்றத்திற்குதான் வழிகோலுமே தவிர வீழ்ச்சிக்கல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் பல குறைபாடுகளை மீறியும், மக்களுக்கு நமது நாட்டில் நம்பிக்கையளிக்கும் வெகு சில அரசு துறைகளில் நீதித்துறையும் ஒன்று. மோசடித்தனமான பழிகூறுதல்கள் (malafide or frivolous allegations) கேட்பவர்களாலேயே நிராகரிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

உதாரணமாக அப்சல் வழக்கினை எடுத்துக் கொண்டால், அப்சலை குற்றவாளி என்றது தவறு என்ற விமர்சனம் ஏதும் வைக்கப்படவில்லை. அவ்வாறான விமர்சனங்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கே இயலும். அவற்றின் பலன் ஒரு சட்ட மாணவருக்காகத்தானேயொழிய (academic interest) மற்றவர்களுக்கல்ல. விவாதங்கள் அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்தே.

இங்கு நாம் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நீதிபதி தனிப்பட்ட வகையில் மரண தண்டனையினை எதிர்ப்பவராக இருக்கலாம். ஆனால், சட்டம் மரண தண்டனை அளிக்கக் கூறும் ஒரு வழக்கில் அவர் மரண தண்டனையினை அளித்தலே சரியான தீர்ப்பாக இருக்க முடியும். மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது பாராளுமன்றத்தின் பணி. அவற்றில் நீதிபதி தனது சொந்தக் கருத்தினை நுழைத்தல், நீதித்துறையின் சமநிலையினை (consistency) பாதிக்கும் என்பது எனது எண்ணப்பாடு.

சொந்தக் கருத்து என்பது பொதுக்கருத்தினை உள்வாங்கி உருவாக்கப்படும் உணர்வு. பொதுக்கருத்து (Public Opinion) என்பதனை மக்களாட்சியின் ஒரு தூணாகவே அரசியல் வல்லுஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பொதுக்கருத்து என்பது பத்திரிக்கைகளில் ‘ஆசிரியருக்கு கடிதம்’ கூறப்படும் கருத்துகளின் தொகுப்பு என்பதாகவே ஒரு தோற்றம் எடுத்து வைக்கப்படுகிறது. அதாவது படித்த நடுத்தர வர்க்க மக்களின் பொதுவான எண்ணப்பாடு. ஆனால் இதையும் கடந்து மக்கள் சமுத்திரத்தின் ஆழத்தில் யாரும் அறியாமலேயே பொதுவான கருத்து பல சமயங்களில் உருப்பெறுகிறது. இது வெளித்தெரிவதில்லை. ஆனால் பல அரசாங்கள் வீழ்ந்ததற்கும், எழுந்ததற்கும் இவ்வகையான பொதுக்கருத்துகளே காரணமாக இருந்துள்ளன.

அவசரநிலைக்குப் பிறகு இந்திரா காந்தி தோற்றதற்கும், எண்பதில் எம்ஜிஆர் ஜெயித்ததற்கும், இந்தியா ஒளிர்ந்ததற்கு பிறகும் வாஜ்பாய் வீட்டுக்கு போனதற்கும் வெளித்தெரியா பொதுக்கருத்தே காரணம்.

ஆக, ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் கருத்துகளையும் மீறி யாரும் உணராமலேயே சமுதாயத்தின் ஆழத்தில் உருப்பெரும் கருத்தும் இருக்கலாம். நீதிபதிகள் ‘படித்த நடுத்தர வர்க்கத்தை’ (educated middle class) சேர்ந்தவர்கள். எனவே ‘நடுத்தர வர்க்கத்து கருத்தோடு’ இசைவான அவர்களும் கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறான நிலையில் தங்களது சொந்தக் கருத்தினை பொதுக்கருத்து என்று அவர்கள் நம்புவதே தவறான ஒரு முடிவு. அதனை அடிப்படையாக வைத்து வழக்கினை தீர்க்க நினைத்தால், அது சரியான நீதிபரிபாலன முறையாக இருக்காது.

அப்சல் வழக்கில், ‘அப்சலுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவது மூலமே சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மனவோட்டத்தினை திருப்திப்படுத்த இயலும்’ என்று நீதிபதிகள் கூறியது தீர்ப்பினை விமர்சிக்க விரும்பும் எவரும் அடிக்கக்கூடிய ‘weak link’. தீர்ப்பானது சட்ட வினாக்களுக்கு உட்பட்டு அமைந்திர்ந்தால், அதில் தவறிருந்தாலும் சட்ட புத்தகங்களில் மட்டுமே விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்திருக்கும். அப்சலுக்கு மரணதண்டனை கூடாது என்ற ஆர்ப்பாட்டங்களும் அரசினை நோக்கிய குரலாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் மரண தண்டனையின தளர்த்துவது அரசுக்கு இயலக்கூடிய காரியம். ஆனால், நீதிபதிகள் பொதுக்கருத்தினை தங்களது தீர்ப்புக்கு துணையாக அழைத்துள்ளதால், சட்ட வல்லுஞர்களையும் தாண்டி பொது மக்களும் தங்களது விமர்சனத்தினை எடுத்து வைக்க முன் வருவது இயற்கையே!

அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம், பொதுக்கூட்டம் போன்றவை பொதுக்கருத்தினை உருவாக்கும் கருவிகள். பல்வேறு வகையான பொதுக்கருத்தினை உருவாக்க இயலும் பல்வேறு மக்கள் குழுக்களைப் போலவே, மரண தண்டனை எதிர்ப்பு என்ற பொதுக்கருத்தும் உருவாக்கப்பட இவ்வகையான சாதனங்கள் கூடாது என்று கூறுதல் இயலாது.


இந்திய மக்கள் தொகை 100 கோடி! இதில் எத்தனை நபர்களுடைய எண்ணப்பாட்டினை நீதிபதிகள் தங்களது ‘collective conscience’ கருத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது மக்களுடைய ஒருங்கிணைந்த கருத்து அப்சலுக்கு மரணதண்டனை அளிக்க விரும்புகிறது என்பதற்கு நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியம் என்ன?

எனவே, நீதிமன்றத்திற்கு வெளியில் நடப்பதை தங்கள் கருத்தில் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள முயலுகையில், வெவ்வேறு எண்ணம் கொண்ட மக்கள் குழுக்கள் தங்களது கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று ஆர்ப்பாட்டம். அவ்வளவே!

-oOo-

பொதுக்கருத்து தங்களது தீர்ப்பினை வழிநடத்தி விடக்கூடாது என்பதற்கு சில நீதிபதிகள் செய்தித்தாள்களை படிப்பதை கூட நீதிபதிகளாக இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்தனராம். சமுதாய நிகழ்வுகள் மீது தன்னுடைய தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு ஒரு முற்றும் துறந்த முனிவரின் (heretic) மனநிலையில் வாழ்ந்த நீதிபதிகளுமுண்டு. ஆனால், உலகம் சுருங்கி வரும் விஞ்ஞான யுகத்தில் இவ்வாறான வாழ்க்கை சாத்தியமல்ல. எனவே நீதிபதிகள் முற்றிலும் சார்பற்ற நிலை கொண்டவர்களாக இருத்தல் என்பது இயலாத ஒன்று.

இயற்பியல் விதிகளின் படியே முழுமையான ஒரு நிலை (absolute state) என்பது சாத்தியமல்லாதிருக்கும் பொழுது, ஒர் கட்டுக்குள் அடக்க முடியாத (unpredictable) மனித மனங்களை ஆராயும் நீதி பரிபாலனம் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றில்லாமல் அதன் பயணம் அவ்வாறான நிலையினை நோக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அளவோடு நமது எதிர்பார்ப்புகள் திருப்தியுற வேண்டும்.

ஆனால் அந்த பயணத்தை வழிநடத்துவதற்கு பொதுக்கருத்துகள் பயன்படுகையில், பொதுக்கருத்தின் பல்வேறு வகையான வெளிப்பாடுகள் தேவையான ஒன்றுதான்.

நீதிமன்றங்கள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகளில் தீர்ப்பு கூறுகின்றன. மிக அரிதான தீர்ப்புகளைத் தவிர மற்றவை இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாவதில்லை. நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் முன் வைக்கப்படும் பொருட்களையும் தாண்டி வெளியில் நடப்பதையும் நீதிபதிகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ கவனத்தில் கொள்கையில் விவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தவிர்க்கப்பட முடியாதவை.

உதாரணமாக, டெல்லியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நாளிதழ் செய்தியினை ஒரு பொது நல வழக்கின் மனுவாக ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை (summons) அனுப்புகிறது. புதிதாக உருவாகியுள்ள சட்டவியலில் இது முறையான ஒன்றுதான். ஏனெனில் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் மறுக்கப்படுவது அவர்கள் ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life) என்ற அடிப்படை உரிமையினை மீறியதாகும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன. பின்னர் அரசு எந்த எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகையில், அரசுப் பணியினை (executive functions) நீதிமன்றம் மறைமுகமாக கையிலெடுக்கிறது. அவ்வாறான நிலையில் அந்த தீர்ப்பின் மீதான விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுவதை தேவையில்லை என்று கூற இயலாது.

ஏனெனில் அரசியல்வாதிகளைப் போலன்றி பிரச்னையின் அனைத்து பரிமாணங்களையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளுதல் இயலாது. ஒருவேளை பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது நோய் பரவ காரணம் என்று கூறப்பட்டு, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். டெல்லியிலுள்ள குடிசைவாசிகள், கழிப்பிடமே இல்லாத பொழுது நாங்கள் எங்கே செல்லுவோம் என்று ஆர்ப்பாட்டம்தான் நடத்த இயலும். செய்தித்தாளின் செய்தியினைப் போல ஆர்ப்பாட்டமும் நீதிமன்றத்திற்கு ஒரு செய்திதான்.

மீண்டும் கூறுவதனானால், அப்சல் வழக்கில் கூட அவர் குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பெழுத வேண்டும் என்று கூறுவது சரியானதாயிருக்காது. யார் யாரோ நகர்த்திய காய்களில், வேறு வழியின்றி பங்கு கொண்ட பகடைக்காயாக அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக மரண தண்டனை அளித்திருக்க வேண்டுமா என்பது ஒரு விவாதம். தீர்ப்பில் மரண தண்டனைக்கான காரணங்களை நீதிபதிகள் அடுக்கியதில் பொதுக்கருத்தினை கருத்தில் கொண்டதில் இவ்வகையான விவாதம் எழுவது இயல்பே!

அடுத்த விவாதம் மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து. இதற்கு பதில் கூற வேண்டியது அரசாங்கமே தவிர நீதிமன்றங்கள் இல்லை.

நீதிபதிகள், தங்கள் முன் வைக்கப்படும் வழக்குரைஞர்களின் வாதங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே வழக்குகளை, முக்கியமாக பொது நலன் சார்ந்த வழக்குகளை தீர்ப்பது இல்லை என்பது, ஏதாவதொரு பிரச்னையில் பல்வேறு காலகட்டங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் புரியும்.

உதாரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னையில் 1972, 1996, 2002 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை ஆராய்ந்தால் எப்படி கால ஓட்டத்திற்கு ஏற்ப நீதிபதிகளும் தங்களது கருத்துகளை வடிவமைத்துக் கொள்கின்றனர் என்பதை உணரலாம். கவனிக்க வேண்டியது இந்த மூன்று தீர்ப்புகளுக்கும் அடிப்படையான அரசியலமைப்பு சட்டபிரிவுகளில் ஏதும் மாற்றமில்லை. மாறியது நீதிபதிகளின் மனப்போக்கு, அதாவது பொது மக்களின் மனப்போக்கு!

எனவே, இட ஒதுக்கீடு பிரச்னையிலும் நீதிபதிகள் நீதிமன்றத்தில் வைக்கப்படும் வாதங்களையும் தாண்டி தாங்களறியாமலேயே, பொதுக்கருத்துகளாலும் தங்களை வசப்படுத்திக் கொள்வது எதிர்பார்த்ததுதான். நீதிபதி திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் மண்டல் கமிஷன் வழக்கு என்று அழைக்கப்படும் இந்திரா சஹானி வழக்கில் (Indra Sawhney Vs Union of India AIR 1993 SC 477) ‘இட ஒதுக்கீடு 100% அளவிற்கு இருக்க இயலாது எனினும் அதிகபட்சம் 50%தான் என்ற கட்டுப்பாடும் விதிக்க இயலாது என்றும் ‘க்ரீமி லேயர்’ என்ற பெயரில் நீதிமன்றம் சமூக கொள்கை முடிவில் தலையிடுதல் கூடாது என்றும்’ தனியே தீர்ப்பு எழுதியதற்கு அவர், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகிய தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாயிருக்குமா என்று ஒரு கேள்வியினை எழுப்பினால், இல்லை என்று ஆணித்தரமாக மறுப்பது கடினமான காரியம்.

(இட ஒதுக்கீடு க்ரீமி லேயர் மற்றும் அப்சல் குரு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து 28/10/06 அன்று எழுதப்பட்ட கட்டுரையின் முதல் பகுதி)

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...