Thursday, 8 October 2015

மீறுதல்களும் கருணையும்

உயர் நீதிமன்றம்.

திடீரென சில கல்லூரி மாணவ, மாணவிகள் நீதிமன்றத்திற்குள் நுழைந்து தங்கள் தாய்மொழியைப் போற்றி கோஷங்களை எழுப்பினார்கள். ஆங்கில ஆதிக்கத்தை ஒழிப்போம் என்றார்கள், பாடல்களைப் பாடினார்கள், துண்டுப் பிரசுரங்களை வீசினார்கள்.

நீதிபதிக்கு வழக்கை நிறுத்தி விட்டு தனது அறைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒருவழியாக ஆர்ப்பாட்டக்கார்களை அப்புறப்படுத்தி ஒழுங்கு ஏற்ப்படுத்தப்பட்டது. மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி முன் பதினொன்பது பேர் நிறுத்தப்பட்டனர். நீதிபதி அவர்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாயில் அபராதத்தோடு விட்டு விடுவதாகக் கூறினார். சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.

மற்றவர்கள் ‘எங்களுக்காக ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சிகள் கூட ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா?. எங்கள் மொழி என்ன அவ்வளவு கேவலமா. நாட்டின் கவனத்தைக் கவரவே இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. எங்களால் கொள்கை ரீதியில் வருத்தம் தெரிவிக்க முடியாது’ என்றனர். நீதிபதி அவர்களுக்கு வேறு வழியின்றி மூன்று மாத காலம் சிறைத் தண்டனை விதித்தார்.
நடந்தது பிப்ரவரி’4 1970ல் இடம் இங்கிலாந்து. தண்டிக்கப்பட்ட மாணவர்கள் வேல்ஸ் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள்.

அடுத்து நடந்தது முக்கிய திருப்பம்.

தண்டிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்தனர்.

அவர்கள் அதிஷ்டம், குயின்ஸ் பெஞ்ச் எனப்படும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி வேல்ஸ் மொழி, கலாச்சாரம் மீது பரிவு கொண்டவர். தன்னுடன் வெல்ஷ் மொழி அறிந்த நீதிபதி ஒருவரையும் மற்றொருவரையும் துணைக்கு வைத்து கொண்டு ஒரே வாரத்தில் வாதங்களைக் கேட்டு தீர்ப்பினைக் கூறினார்.

‘மொழிக்காக போராடுவதில் தவறில்லை. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்திற்குள்ளா வந்து போராடுவது, இதற்கெல்லாம் தண்டனை மூன்று மாதமல்ல ஆறு மாதமே சரியானதாயிருக்கும், இனி போராட்டமென்று இங்கு வந்தால் தொலைத்து விடுவேன், என்றெல்லாம் கண்டித்தாலும் சரி, இதுவரை இருந்த ஒரு வார காலத்தோடு விடுகிறேன்’ என்று விடுதலை செய்தார்.

இங்கு போலவே நீதிபதியை பல்வேறு வார்த்தைகளில் திட்டி மொட்டைக் கடிதங்கள்.

ஆயினும் தனது இந்த தீர்ப்புக்காக மெத்த திருப்தியுற்றதற்காக தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீதிபதி உலகின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவராக மதிக்கப்படும் லாட்ர் டென்னிங்!
கதை இத்துடன் முடியவில்லை.

மோரிஸ் எதிர் க்ரவுண் ஆஃபீஸ் (1970 1 All ER 1079) என்ற வழக்கில் லார்ட் டென்னிங் கூறியுள்ள கருத்துகளை நமது உச்ச நீதிமன்றம் சந்தீப் குமார் ((2011) 4 MLJ 1006 (SC)) என்ற வழக்கில் எடுத்தாண்டது. தொடர்ந்து நமது உயர்நீதிமன்றத்தின் இளம் வயதில் ஏதாவது குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை வைத்தே காவலர் பணி மறுக்கப்பட்டவர்களுக்கான மணிகண்டன், அலெக்ஸ் பொன்சீலன் வழக்கு உட்பட அனைத்து வழக்குகளிலும் இந்த வழக்கு பற்றிய குறிப்பினைக் காணலாம்.

எங்கோ என்றோ போராடிய வேல்ஸ் மாணவர்களின் செயல், தமிழகத்தில் சிலருக்கு காவலர் வேலை கிடைக்கச் செய்துள்ள அதிசயம்தான் ‘பட்டர்ஃப்ளை எஃபக்டோ?’

சிலருக்கு வேலை பெற்றுத் தந்தது மட்டுமல்ல இனி, சில சட்டக் கல்லூரி மாணவர்களின் படிப்பையும் காப்பாற்றப் போகிற லார்ட் டென்னிங்’கின் மனித நேயம் மிகுந்த வார்த்தைகள், ஏதோ தமிழில் மொழி பெயர்க்க முடியாது என்பதால் அல்ல. நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே:

They have already served a week in prison. I do not think it necessary to keep them inside it any longer. These young people are no ordinary criminals. There is no violence, dishonesty or vice in them. On the contrary, there was much that we should applaud. They wish to do all they can to preserve the Welsh language. Well may they be proud of it. It is the language of the bards - of the poets and the singers - more melodious by far than our rough English tongue. On high authority, it should be equal in Wales with English. They have done wrong- very wrong - in going to the extreme they did. But, that having been shown, I think we can, and should, show mercy on them. We should permit them to go back to their studies, to their parents and continue the good course which they have so wrongly disturbed.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...