Friday, 21 October 2016

சிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 1

சல்லிக்கட்டு நடத்த அனுமதித்த  நமது உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன்னர் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை உத்தரவும் அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கி வந்ததால் தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு தரப்பினர்களுக்காக இந்தியாவின் சிறந்த வழக்குரைஞர்களால் தலைமை நீதிபதி முன்பு வாதங்கள் நடந்தது.

இறுதியில் தடை உத்தரவை நீக்க முடியாது என்று நீதிபதிகள் கூற பலருக்கும் அதிர்ச்சி. தலைமை நீதிபதி அவரது உத்தரவை டிக்டேட் செய்து முடித்தவுடன் நீதிமன்றத்தின் ஏதோ மூலையிலிருந்து ஒரு குரல், ‘மை லார்ட், எங்களது மனுவில் ரேக்ளா ரேஸ் நடத்தத்தான் அனுமதி கேட்டுள்ளோம்

உடனே தலமை நீதிபதி அது என்ன என்று கூட கேட்காமல், ‘ரேக்ளா ரேஸ் நடத்த தடையில்லைஎன்று கூறி அதையும் உத்தரவில் சேர்த்து விட்டார்.

விலங்குகளைப் பயன்படுத்தி நடக்கும் பல விளையாட்டுகளைப் பற்றி அந்த வழக்கிற்காக ஆராய்ந்த நான், ‘ரேக்ளா ரேஸில்தான் காளைகள் அவைகளின் உச்சபட்ச வேகத்தை எட்ட முடுக்கி விடப்படுவதில் களைப்படைந்து, காயமுமடைகிறதுஎன்று படித்திருந்ததில்என்னடா இதுஎன்று கூட வந்த நண்பரைப் பார்க்க அதற்குள் அடுத்த வழக்கு எடுக்கப்பட்டு விட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இப்படித்தான், இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்கள் பல ஜூனியர்களின் உதவியோடு வாதம் செய்தாலும், கண நேர கவனக்குறைவில் இவ்வாறு சில நிகழ்ந்து விடுகின்றன.

பிரச்னை என்னவென்றால், தீர்க்கப்பட்ட ஒரு வழக்கில் கூறப்பட்டவை மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்ய ஏதுவாகி விடுகின்றன.

நேற்று இந்திய தலைமை நீதிபதி வழக்குகளின் தேக்கம், அவற்றின் காரணம் குறித்து சென்னையில் பேசியதாகப் பத்திரிக்கைகளில் படித்த போது, என் நினைவுக்கு வந்து போனது மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டம் பற்றிய வழக்கு!

-oOo-

மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் அரசு வேறு பல காரணங்களுக்காக ஊடகங்களால் முன்னிருத்தப்பட்டது என்றாலும், இந்திய சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்திய மூன்று சட்டங்கள் அதே ஊடகங்களால் தவிர்க்கப்பட்டன என்றாலும் முக்கியமானவை.. .

அவை வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், தகவல் அறியும் சட்டம் மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை சட்டம்.

மூன்றாவதாகக் கூறப்பட்ட (Right of Children to Free and Compulsory Education Act’2009) சட்டம் ஆசிரியர்களின் தகுதி, பள்ளியிலிருக்க வேண்டிய அடிப்படை வசதிகள், தேர்வு முறை, குழந்தைகள் மீதான வன்முறை என்று பலவற்றைப் பற்றி கூறினாலும் பள்ளிச் சேர்க்கையில் 25 சதவீத இடங்கள் ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம், தனியார் பள்ளி நிர்வாகங்களை அதிர வைத்தது.

அந்தக் குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றாலும், அரசிடம் கட்டணத்தைப் பெறுவது கடினம் என்ற போதும் விளிம்புநிலைக் குழந்தைகளை மற்ற வசதி படைத்த குழந்தைகளுடன் சேர்ந்து அமர வைப்பதில் உள்ள ஒவ்வாமைதான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

இதன் சங்கடங்களைமச்சுக்காஎன்ற சீலே நாட்டு படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கலாம்.

இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று பல பள்ளி நிர்வாகங்கள் வழக்கு தாக்கல் செய்து, இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் விசாரிக்கப்பட்டது. (Society for Un-aided Private Schools of Rajasthan Vs Union of India 2012 (3) MLJ 993 SC)

பல்வேறு வாத பிரதிவாதங்களுக்குப் பின்னர் கல்வி உரிமை சட்டமானது செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.

மொழிவாரி மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்கள் நிறுவி நடத்துவது அடிப்படை உரிமையாக அளிக்கப்பட்டிருப்பதால், மேற்படி சட்டம் அந்த உரிமைய பாதிக்கிறதா என்பது வழக்கில் தனியே ஆராயப்பட்டது.

தீர்ப்பில் சட்டத்தின் மற்ற பல பிரிவுகளைப் பற்றி விவாதிக்காமல், ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு மட்டுமே ஆராயப்பட்டுஇவ்வாறு வெளி மாணவர்களை கட்டாயமாக சேர்க்க கூறுவது சிறுபான்மையினரின் மொழி, எழுத்து, கலாச்சார உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் நிறுவப்படும் கல்வி நிறுவனங்களின் தன்மையை மாற்றி விடும்என்ற காரணத்தை வைத்து இவ்வாறு இட ஒதுக்கீடு செய்வது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், அதே காரணம் அல்லது லாஜிக் அரசு உதவி பெறும் சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும், அவர்களைப் பொறுத்து சட்டம் செல்லும் என்று கூறப்பட்டது. (ஐந்து நீதிபதிகள் அடங்கிய வேறு ஒரு பெஞ்சில் பின்னர் நடைபெற்ற வழக்கில் அவர்களுக்கும் பொருந்தாது என்று கூறப்பட்டது)

இப்போது பிரச்னை, மாணவர் சேர்க்கையில் இவ்வாறு கட்டுப்படுத்துவது சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கிறது என்றால் அந்த ஒரு பிரிவை மட்டும் அவர்களுக்கு செல்லாதது என்று கூறியிருக்கலாம் என்பதில் உள்ளது.

அல்லது சட்டத்தின் வேறு எந்த எந்த பிரிவு அவர்களது உரிமையை பாதிக்கும் என்று ஆராய்ந்திருக்கலாம். ஏற்கனவே தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் நமது உயர்நீதிமன்றத்தால் தனித்தனியே ஆராயப்பட்டு அவற்றில் எவை எவை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் உச்ச நீதிமன்றம் எவ்விதமான விவாதமும் இல்லாமல் ஒரே வரியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு 12(1)(c) அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று கூறிய அதே கையோடு ஆர் எம் டி சமர்பாக்வாலா (1957 SCR 930) வழக்கில் கூறப்பட்ட பிரித்துப் பார்க்கும் கொள்கையின் அடிப்படையில் 2009ம் ஆண்டு கல்வி உரிமைக்கான சட்டம் அரசு உதவி பெறாத மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்து விட்டது.

வேடிக்கை என்னவென்றால் சுட்டிக்காட்டப்பட்ட சமர்பாக்வாலா வழக்கில் சம்பந்தப்பட்ட பிரிவை நீக்கிய பின்னர் அந்த சட்டத்தை மற்ற பிரிவுகளின் அடிப்படையில் செயல்படுத்த இயலுமாயின் குறிப்பிட்ட அந்தப் பிரிவை மட்டும் செல்லாது என்று அறிவிக்க இயலும் என்றுதான் உள்ளது.

தீர்ப்பு கூறிய இரு நீதிபதிகளிடம் இருந்து வேறுபட்ட மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் இதே சட்டத்தின் சில பிரிவுகளை மட்டும் குறிப்பிட்டு அவை அனைத்து பள்ளிகளைப் பொறுத்தும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். அவ்வாறு கூறப்பட்டதைக் கூட மற்ற இரு நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆரம்பக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் அறிவுத்திறன் தற்போது மிகுந்த கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஓரளவிற்கு நிலைமையை சீராக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தொடர்ந்து வந்த மற்றொரு தீர்ப்பின் அடிப்படையில்சிறுபான்மை நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்ற வாதம் வைக்கப்பட்டு, நியமனங்களும் நடைபெற்று வருகின்றன.

நாளை கல்வி நிறுவனங்களுக்கு இச்சட்டம் வரையறுத்துள்ள அடிப்படை வசதிகளும் சிறுபான்மை பள்ளி நிறுவனங்களுக்கு தேவை இல்லை என்றும் கூறலாம்.


சிறுபான்மை பள்ளியோ மற்ற பள்ளிகளோ, மாணவர் நலன் என்பது ஒன்றுதானே!

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...