Thursday 13 October 2016

மருத்துவன் தன்னை குணமாக்கட்டும்...

சில வருடங்களுக்கு முன்பு மூத்த நீதிபதி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தோம்.

ஆமாம், அவரை முதலில் நீதிபதியாக நியமித்து விட்டோம். ஆனால் பின்னர் மிகவும் சிரமப்பட்டுவிட்டார். முக்கியமாக வழக்குரைஞர்கள் பலர் புகார் செய்தார்கள். ஆவணங்களைப் படிப்பதில், வரைபடங்களை பார்வையிடுவதில் பிரச்னைகள் இருந்தன. கடைசியில் வேறு வழியின்றி நீதிபதி பணியிலிருந்து அவரை விடுவித்து, சட்ட சஞ்சிகை அலுவலகத்தில் பணியமர்த்த நேரிட்டது

நீதிபதியால் குறிப்பிடப்பட்ட அந்த இளநிலை சிவில் நீதிபதி பார்வைத் திறன் குறைவுற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் (எண் 1 /1996) அனைத்து அரசு நிறுவனங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதாவது அந்த நிறுவனத்தில் மொத்தம் 100 பணியிடங்கள் இருப்பில் 3 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மற்ற ஒதுக்கீடுகளைப் போல அனைத்து பதவிகளுக்கும் இல்லாமல், மொத்தத்தில் மூன்று சதவீதம் இருந்தால் போதுமானது.

உதாரணமாக போக்குவரத்து துறையை எடுத்துக் கொண்டால் ஓட்டுநர் பணியில் நியமிக்க முடியாது. மாற்றுத் திறனாளிகளால் இயலக் கூடிய பிற பணிகளில் ஒதுக்கீடு அளித்து அந்த துறையின் மொத்த பணியிடங்களில் 3 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இதை ஒரு சலுகையாக எடுத்துக் கொண்டு கடைநிலை ஊழியர் பணியிடங்களில் அனைத்து 3 சதவீத ஒதுக்கீட்டினையும் அளித்துவிட்டு மாற்றுத் திறனாளிகளால் இயலக்கூடியது என்றாலும் அலுவலக மேலாளர் போன்ற மேல்நிலை பணியிடங்களில் இட ஒதுக்கீட்டினை மறுத்தால் அச்செயலை மத்திய அரசு சட்டத்தின் உயரிய நோக்கத்தினை சிதைக்கும் மோசடி என்றே நான் கருதுவேன்.

அப்படியான, ஒரு முயற்சி நமது நீதித்துறையிலேயே எடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவிட்டது என்பதுதான் இங்கு வேதனையான விடயம்.


-oOo-


இட ஒதுக்கீட்டினைப் பொறுத்து பார்வைதிறன், பேச்சு/செவித்திறன், இயக்கத்திறன் குறைவு என்ற மூன்று வகையாகப் பிரித்து இவர்களால் செய்யக் கூடிய பணிகள் எவை எவை என்று கண்டறியப்படுகிறது.

மூன்று வகைப் பிரிவினராலும் நீதிபதி பணிபுரிய இயலும் என்ற நோக்கத்தோடு 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நீதிபதிகள் பணி நியமன விதிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீடானது இளநிலை நீதிபதிகள் பணியிடங்களில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் மாவட்ட நீதிபதிகள் பணி நியமனத்தில் இல்லை என்பதை எவரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

அது ஏன் இளநிலை நீதிபதி பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு. மாவட்ட நீதிபதிகளுக்கு இல்லை என்ற கேள்வியும் எழவில்லை.

தற்பொழுது பார்வை, செவி/பேச்சுத்திறன் குறைந்தவர்களால் நீதிபதி பணி புரிவது இயலாது என்ற நடைமுறைச் சிக்கல் தோன்றியுள்ள சூழ்நிலையில் இயக்கத் திறன் குறைந்தவர்களுக்கு மட்டுமாவது அதை நீடிப்பதுதான் நியாயமாக இருக்கும்.

ஆனால் மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் கடந்த முறையும் வழங்கப்படவில்லை. இந்த முறையும் இல்லை. கேட்டால், விதிகள் இளநிலை நீதிபதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு குறிப்பிடப்படுகிறது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளால் இயலக்கூடிய பணியில், சட்ட ரீதியில் அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஒதுக்கீட்டினை மறுக்கும் விதி மத்திய அரசு சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது என்று வாதிட முடியும் என்று ஆலோசித்து வரும் வேளையில் முதலுக்கே மோசமாக மற்றொரு தகவல்.

தமிழக அரசு ஆணை எண். 25 (மாற்றுத்திறனாளிகள் நலத்துறை) 14/03/13யில் இளநிலை நீதிபதிகளுக்கான நியமனத்திலும் இட ஒதுக்கீட்டினை எடுத்து விட்டார்களாம். ஆனால் இந்த அரசாணையை விட மோசம், அதைக் குறித்து உயர்நீதிமன்றம் எடுத்துள்ள நிலை!

நீதித்துறை பணி நியமனங்களைப் பொறுத்தவரை எங்களை கலந்து ஆலோசிக்காமலும், இளநிலை பணியிடங்களில் எங்களது விதிகளில் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டிற்கு விரோதமாகவும் எவ்வாறு நீங்கள் அரசாணை வெளியிட முடியும் என்று அரசை உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்க வேண்டும்.

மாறாக, அட, இளநிலை நீதிபதிகளுக்கான இட ஒதுக்கீட்டையே அரசு ரத்து செய்துள்ளதே என்ற ரீதியில் சுதந்திரமாக இயங்க அரசியலமைப்புச் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தில் அரசு தலையிட்டது கூடப் புரியாமல் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் மெத்தப் பெருமையாக உயர்நீதிமன்ற பதிவாளர் பதிலுரை தாக்கல் செய்துள்ளார்.

வேண்டுமென்றால், பொதுப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்களைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்து்க் கொள்ளலாமாம்


-oOo-


இட ஒதுக்கீட்டினால் பணியாளியை விட பல சமயங்களில் பணியளிப்பவருக்குத்தான் அதிக பலன் என்பதை நாம் உணர்வது இல்லை.

நீதிபதியாக பணியாற்றுவதற்கு ஒருவருக்கு உள்ள அதிகபட்ச தகுதியை மூன்று மணி நேர எழுத்துத் தேர்விலும் முப்பது நிமிட நேர்முகத் தேர்விலும் கண்டு கொள்ள முடியும் என்று என்னால் ஏற்றுக் கொள்ளவியலாதது.

நீதிபதிகளைப் பொறுத்தவரை சட்ட அறிவை விட அனுபவம், அதுவும் வாழ்க்கை அனுபவம் முக்கியத் தேவை.

பல்வேறு வாழ்க்கைச் சூழல்களிலும் பிறந்து வளர்ந்தவர்களும் நீதித்துறையில் வாய்ப்பளிப்பதன் மூலம் நீதிபரிபாலனத்தில் பன்முகத் தன்மையும், உத்வேகமும் (pluralism and dynamism) இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்விதமான வாழ்க்கைச் சூழல்களை இடம், சாதி, மதம், பாலினம், பொருளாதரம் ஆகியவற்றோடு உடல்ரீதியில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் தீர்மானிக்கும்.

மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்ச அடிப்படையில் வாய்ப்பளிப்பது நீதித்துறையின் வளர்ச்சிக்குத்தான் உகந்தது.

அதற்கு சுலபமான வழி, நீதிபதி பணி செய்வதறு இயலக்கூடிய இயங்குதிறன் குறைபாடு உள்ளவர்களுக்காவது, இட ஒதுக்கீட்டினை இளநிலை நீதிபதிகள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் வரை செயல்படுத்துவதுதான்.


மருத்துவன் தன்னை குணமாக்கட்டும்...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....