Wednesday, 18 March 2015

'ஸ்ரீப்'... 'ஸ்ரீப்'...


விடுமுறை தின மத்தியான வேளையில் ஏதாவது வேலை விஷயமாக வீட்டை விட்டு கிளம்புவதைப் போல துன்பம் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. நெஞ்சு நிறைய எரிச்சலுடனும் உடல் முழுவதும் அசதியுடனும், இறுதியாக கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டு உள்ளறையிலிருந்து வெளியேறிய போதுதான், வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த சிறு சத்தங்கள் என்னை ஒரு முறை எல்லாவற்றையும் மறந்து ஒரு கணம் அப்படியே நிற்க வைத்து விட்டது.

"ஸ்ரீப்" "ஸ்ரீப்"

சத்தம் வந்த பக்கம் முகத்தை பாதி திருப்புகையிலையே மீண்டும் "ஸ்ரீப்" "ஸ்ரீப்".

எனக்குப் புரிந்து போனது. கண்ணாடி வைத்த அந்த பீரோவுக்கு மேலே நெருக்கமாக மேற்கூரை வரை அடுக்கி வைக்கப்பட்ட பயணப் பெட்டிகளுக்கு பின்னே சில நாட்களுக்கு முன்னர் பொரித்த புறாக்குஞ்சுககளின் சத்தம்தான் அது.

அதற்கு மேலும் முகத்தை திருப்பவில்லை. கால்கள் என்னையறியாமல் வெளியே செலுத்த படியில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதுவரை என்னை நிறைத்திருந்த எரிச்சலும், அசதியும் பற்றிய நினைப்பே இல்லாமல், 'நான் ஏன் இப்படி அசடு போல புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று வியப்பாக இருந்தது. தொடர்ந்து சாலையில் நடக்கையிலும், ஆட்டோவில் பயணிக்கையிலும், ரயிலின் நெரிசலிலும் ஏதோ சந்தோஷமாகவே உணர்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மும்பை வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும் இருந்து மனதை பிசையும் சில காட்சிகள் எதுவும் அன்று எதுவும் கண்ணில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. என்ன வேலை விஷயமாக அன்று வெளியே போனேன் என்று கூட இப்போது ஞாபகம் இல்லை. மேலே இருந்து வந்த அந்த சிறு சத்தம் இன்னும் மனதில், மிட்டாயை தின்ற பிறகும் நாவில் ஒட்டியிருக்கும் இனிப்பினைப் போல சந்தோஷத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறது.

வீட்டிற்கு திரும்பியபின்னர் முதலில் நான் சென்றது பீரோவுக்கு அருகில்தான். ஆனால் சத்தம் ஏதும் கேட்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே அந்த பீரோவுக்கும் ஜன்னலுக்குமாக பறந்து கொண்டிருந்த புறாக்கள்தான் எங்களுக்கு வேடிக்கை. எனக்கு புறாக்கள் மீது அதிக பிரியம் இருந்ததில்லை. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, 'கொஞ்சம் இங்கே வந்து கேளுங்களேன் என்று எனது மனைவி ரகசியமாக குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்க அழைத்த போது, 'ஹாங்' என்று அசிரத்தையாக மறுத்தேன். மும்பையில் அங்கிங்கெனாதபடி எங்கும் புறாக்கள் நிறைந்திருப்பதால் இருக்கலாம். அல்லது ஜன்னலை ஒட்டிய மரம் முழுவதும் நிறைந்த காகங்கள் மீது நான் கொண்ட அபரிதமான காதலும் காரணமாக இருந்திருக்கலாம். பெரும்பாலான மக்களின் அன்பு புறாக்கள் மீதும் வெறுப்பு காகங்கள் மீதும் படிந்திருந்தது எனக்கு வழக்கம் போலவே ஒரு வேறுபட்ட நிலையை எடுக்க வைத்திருந்தது. சில நாட்கள் முன்பு ‘புறாக்கள் காகங்களை விட வன்முறை விரும்பிகள்’ என்று வேறு படித்துத் தொலைத்து விட்டேன்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜன்னலை அடுத்து இருந்த மரத்தில் இரண்டு காகங்கள் குஞ்சு பொரிப்பதற்க்காக கட்டிய ஒரு கூடு எங்கள் பொழுது போக்காக இருந்தது. தினமும் குஞ்சுகள் பொரிப்பதற்காக காத்திருந்தோம்.

ஒரு நாள் என் மனைவி, "அந்த கூட்டில் பார்த்தீர்களா என்னவென்று?"

"என்ன குஞ்சு பொரித்து விட்டதா?"

"இல்லை. அங்கே பாருங்கள்"

கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அந்தக் கூட்டினை கட்ட உபயோகப்பட்ட மரக்குச்சிகளிடையே எனது அலுமினிய சட்டை தொங்க போடும் ஹாங்கர்!

"அட! இந்த ஜன்னல் கம்பி வழியா எப்படி எடுத்துட்டுப் போயிருக்கும்" என்று நான் வியந்து கொண்டிருந்ததில் அந்த திருட்டுக் காகங்களின் மீதும் கோபம் வரவில்லை.

ஆனால் தினமும் கவனித்துக் கொண்டிருந்தாலும் குஞ்சு பொரித்து விட்டதா இல்லையா என்று கணிக்க முடியவில்லை. எங்கள் திருட்டுப் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கையில் மிகவும் கவனமாக இருந்து விட்டன அந்தக் காகங்கள். எனக்கும் காக்கா முட்டை எத்தனை நாளில் பொரிக்கும் என்ற விபரமெல்லாம் தெரியாது. விரைவில் கூடு கூட மெல்ல மெல்ல சிதிலமாகி வர, ஒரு நாள் அடித்த பெரிய காற்றில் அந்தக் கூட்டின் வடிவம் கூட மாறிப் போனது.

'என்னப்பா! குஞ்சு பொரிச்சுதா இல்லையா. என்ன பண்ணுது அந்தக் காக்கா?"

சற்றே கூட்டை உற்றுப் பார்த்த என் மனைவி, 'இல்லப்பா, அந்தக் காக்காதான் குஞ்சுன்னு நினைக்கிறேன். நல்லா வளர்ந்துட்டுது"

"என்ன சொல்ற அது ஏதோ கோழி சைசுக்கு இருக்குது" என்று சொன்னாலும் கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அதுதான் பொரித்த குஞ்சுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. வெட்கம்! கடைசியில் ஏற்கனவே குஞ்சு பொரித்து அதுவே பெரிய காக்கா மாதிரி எங்களுக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட விஷயத்தை என் மகளிடம் சொல்ல தைரியம் இல்லை. அது வரை 'எங்கள் வீட்டில் எப்படி கோழிக்குஞ்சு பொரித்தது என்பதிலிருந்து காக்காக் குஞ்சு பொரிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்களை' அவளிடம் மேதாவி போல அளந்து வைத்திருந்தேன்.

இப்போது அந்தக் கூட்டின் ஏதோ ஒன்றிரண்டு குச்சிகளே மரத்தில் எஞ்சியிருக்கிறது. எனது ஹேங்கரை கூட காணவில்லை. நைசாக மீண்டும் எனது வீட்டிலேயே, அந்த காகங்கள் கொண்டு வந்து வைத்து விட்டதா என்பது தெரியவில்லை. திருப்பித் தரவிட்டாலும் பரவாயில்லை. அந்த ஹாங்கரை கூட்டில் பார்த்த போது மனதில் வந்து பரவிய ஒரு சந்தோஷ அலைக்கு என்ன விலை குடுத்தாலும் தகும்.

இந்த சந்தோஷமோ கஷ்டமோ நம் மனதில்தான் இருக்கிறது போல. குளத்தில் எறிந்த கல் முழுகிப் போனாலும் அலை வளையங்கள் மெல்லத்தான் ஓய்ந்து போகின்றது. ஆனாலும் அலை ஓய்ந்த பின்னரும் மனதுக்குள் கற்பனைக் கல்லை எறிந்து அலைகளை அவ்வப்போது பரவச் செய்வதும் சாத்தியமே.

சில வருடங்களுக்கு முன்னர் கூட இது போலத்தான். அப்போது வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அதன் ஜன்னலருகே இப்போது உள்ளது போல மரம் இல்லை. ஆனாலும் அருகிலிருந்த சுவற்றின் கீரலில் இருந்து முளைத்து போதிய பின்பலம் இல்லாதலால் அரையடி நீளத்துக்கு மேல் வளரவே முடியாமல், என்றும் பதினாறாக விளங்கிய ஒரு செடி ஜன்னலருகே நான் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்து புன்னகைக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, எழும்ப மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது கேட்ட "தட்" என்ற சத்தம் என்னை அதிர்ந்து எழ வைத்தது. என்னவென்று புரிபட சிறிது நேரம் பிடித்தது. ஜன்னல் கம்பி வழியே வீட்டினுள் பாய்ந்த ஒரு சிட்டுக்குருவிதான் மின்விசிறியில் அடிபட்டு மூலையிலிருந்த மேஜைக்கு அடியில் தூக்கியெறிப்பட்டுக் கிடந்தது. அருகே சென்று பார்த்ததில் அதற்கு உயிர் இருந்தது புரிந்தது. என்னைப் பார்த்து பயந்து ஒரு மூலைக்குள் ஒதுங்க முயன்று தோற்றுப் போனதைப் பார்த்து ஒரு பெரிய நிம்மதி எனக்குள்.

மகளை வேகமாக எழுப்பினேன். கண்களை திறக்க முடியாமல் இருந்தவள் விஷயம் தெரிந்தவுடன் மிகவும் உற்சாகத்துடன் என்னுடன் சேர்ந்து கொண்டாள். மெல்ல அதன் அருகில் சென்று எனது கைகளில் அதை பதவிசாசக எடுத்தேன். உடல் முழுவதும் ஜன்னி கண்டது போல நடுங்கிக் கொண்டிருந்தது. எனக்கு புரிந்து போனது. அடி ஏதும் படவில்லை. அதிர்ச்சிதான் அதனை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது என்று.

மகள் வேகமாக உள்ளே போய் நீர் எடுத்து வந்தாள். மெல்ல அதற்கு ஊட்ட வேகமாக குடித்தது. உடல் நடுக்கம் நின்ற மாதிரி இருந்த போது அதனை கீழே விட்டால் அதற்கு நிற்க முடியவில்லை. 'பொத்' என்று விழுந்து கிடந்தது. இறக்கைகளை அடிக்கக் கூட அதற்கு தைரியமில்லை. மகளுடைய பிஞ்சுக்கைகளில் பின்னர் தஞ்சமாக, அதற்கு இதமாக இருந்திருக்க வேண்டும் போல. நன்றாக பொதிந்து அமர்ந்து கொண்டது.

இது வரை மரத்திலும் ஆகாயத்திலுமே பார்த்து வியந்திருந்த சிட்டுக்குருவியை கைகளில் கண்ட மகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவள் முகம் அப்படி மலர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் மெல்ல எழ முயன்ற அந்த சிட்டுக்குருவி சடாரென் எழும்பிப் பறந்து டி.விக்கு பின்னே மறுபடியும் விழுந்து ஒளிந்து கொண்டது.

பறக்க முடியவில்லையோ என்று அருகே சென்று பார்த்தால், மீண்டும் அங்கிருந்து ஒரு எம்பு எம்பி ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து சில விநாடிகளில் வெளிக்காற்று பட்ட உற்சாகத்தில் எதுவுமே நிகழாதது போல ‘ஜிவ்’ என்று பறந்து போனது.

மகளுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தது. 'ஏம்பா, அது இங்கருந்து போயிருச்சு' என்று கேட்டபடி இருந்தாள். பின்னர் அதையே ஒரு 'இப்படி அடிபட்டு அவளால் காப்பாற்றப்பட்ட ஒரு ஆண்குருவி தனது பெண்குருவியுடன் இணைந்த கதையாக' நான் சொல்ல புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.


எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும், 'என்ன நடந்தது. ஏன் இப்படி மனம் லேசாக ஏதோ சந்தோஷமாக உணர்கிறேன்' என்று வியந்தவாறே இருந்தேன்...

1 comment:

  1. 10/02/02 அன்று எழுதிய மும்பை அனுபவம்

    ReplyDelete

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...