Tuesday 17 March 2015

ஓட்டுநர் உரிமம், வாகன ஆவண சோதனை?

பள்ளி மாணவர்கள் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதை காவலர்கள் எவ்வாறு தடுக்கலாம் என முகப்புத்தகத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டாலும், இராமநாதபுரத்தில் பணிபுரியும் சிவா என்ற இளநிலை வழக்குரைஞர் சரியான பதிலைக் கூறியிருந்தார்.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 4(2)ன் படி பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்ட இயலாது என்பதால், பள்ளி மாணவர்கள் உரிமம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் சிறார்கள் (Juvenile) என்பதால், அவர்கள் மீது வழக்கு பதியும் சிக்கல் ஏன் என காவலர்கள் நினைக்கலாம். மேலும், மாணவர்கள் மீதான கரிசனையும் அவர்களைத் தடுக்கலாம்.

ஆனால், சட்டத்தில் வழியில்லாமலில்லை. எப்படி மோட்டார் வாகன சட்டப்பிரிவு 181 உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாதம் தண்டனை என்று கூறுகிறதோ, அதே போல பிரிவு 180 அவ்வாறு உரிமம் இல்லாதவரை வண்டியோட்ட அனுமதித்த அதன் உரிமையாளரையோ அல்லது வண்டியை கைவசம் வைத்திருப்பவரையோ 3 மாத காலம் தண்டிக்கலாம் என்று கூறுகிறது.

எனவே மாணவரை விட்டு விட்டு பிரிவு 180ன் கீழ் வண்டி உரிமையாளர் அல்லது அதனை பராமரிப்பவர் மீது குற்ற வழக்கு தொடருங்கள் என்பதே காவலர்களுக்கு ஒரு வழக்குரைஞரின் ஆலோசனையாக இருக்க முடியும்.

தொடர்ந்து மோட்டார் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் ஓட்டுநர் உரிமம், வண்டி பதிவு மற்றும் காப்பீடு சான்றிதழ் ஆகிய ஆவணங்களை வாகன சோதனையின் பொழுது காவலர்களின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களை தண்டிக்க முடியுமா என்ற இரண்டாவது கேள்விக்கும், வழக்குரைஞர் சிவா தகுந்த பதிலைக் கூறி அறிவிக்கப்பட்ட பரிசினைத் தட்டிச் சென்றார்.

பிரிவு 130(1)ன் படி காவலர் கேட்கையில் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் பிரிவு 177படி முதல் தடவை ரூ.100ம் பின்னர் ரூ.300ம் அபராதம் கட்ட வேண்டும். பதினைந்து நாட்களுக்குள் காண்பிக்கிறேன் என்பதெல்லாம் கிடையாது.

மற்ற ஆவணங்களைப் பொறுத்தவரை பிரிவு 130(3)ன் படி மோட்டார் வாகனத்துறை அதிகாரி கேட்கையில் அளிக்க வேண்டும். இதே 130(3) பிரிவின் இரண்டாம் பாகத்தில் இந்த ஆவணங்கள் கைவசம் இல்லையெனில் 15 நாட்களுக்குள் அவற்றின் சான்றிட்ட நகலை (attested copy) பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று இருப்பது மற்றொரு கடமை. எனவே, சோதனையின் பொழுது ஆவணங்கள் இல்லை என்றால் மேலே கண்டபடி பிரிவு 177ன்படி அபராதம் கட்ட வேண்டும். பின்னர் அனுப்பி வைக்கவில்லை என்றால் அதற்கும் தனியே அபராதம் கட்ட வேண்டி வரும்.

பதினைந்து நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தால் அபராதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது தவறு என்பதை பிரிவு 130(4)லிருந்து அறிய்லாம். ஏனெனில் இந்தப் பிரிவு மத்திய அரசு அதற்கான தகுந்த உத்தரவு பிறப்பித்தாலே அவ்வாறு கருத முடியும் என்று கூறுகிறது. ஆனால், கவலை வேண்டாம். மத்திய மோட்டார் வாகன விதிகள் விதி 139ல் இவ்வாறு பதினைந்து நாட்களில் அனுப்பலாம் என்று கூறியிருப்பதை மைய அரசின் உத்தரவாக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே ஓட்டுநர் உரிமத்தை பின்னர் கொடுப்பதால் அபராதத்திலிருந்து தப்பிக்க இயலாது. மற்ற ஆவணங்களை பின்னர் அனுப்பலாம்.

அப்படியென்றால் இனி சோதனையின் பொழுது துணிந்து, ‘மற்ற ஆவணங்களை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்கிறேன் சார்’ என்று சொல்ல முடியுமா? முடியும், ஆனால், காவலர், ‘உங்களிடம் வண்டிக்குறிய ஆவணங்கள் இல்லை என்று நான் சந்தேகிக்கிறேன். எனவே, பிரிவு 207ல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வண்டியை பறிமுதல் செய்கிறேன். ஆவணங்களைக் காட்டியபின் வண்டியை எடுத்துச் செல்லலாம்’ என்றும் சொல்லலாம்.


எதுக்கு வம்பு?

மதுரை
10/12/14

1 comment:

  1. (சட்டத்தில் காவலர்களுக்கு உள்ள அதிகாரம் மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 428ன் கீழும் ஆவணங்களைக் கேட்கும் அதிகாரம் காவலர்களுக்கு விதி 374ன் கீழும் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏறக்குறைய இருவரும் ஒன்றுதான்)

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....