Sunday 15 March 2015

டிராஃபிக் ராமசாமி, இதுதாண்டா போலீஸ்...

சமீபத்தில்தான், அதாவது போன வருடம்தான் உச்ச நீதிமன்றம் அர்னேஷ் குமார் வழக்கில் (Arnesh Kumar vs. State of Bihar and Another reported in (2014) 3 MLJ (Crl) (SC) ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனையுள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யும் முன்பு காவலர்கள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 41(1)(b)(ii)ல் கூறப்பட்டுள்ள காரணங்கள் உள்ளனவா என்பதைக் குறித்து உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.

காவலர்கள் மட்டுமல்ல, கைது செய்யப்பட்டவரை ரிமாண்ட் செய்யும் முன் நீதித்துறை நடுவரும் கைது செய்ய வேண்டிய தேவை மற்றும் காரணங்கள் அடங்கிய காவலரின் அறிக்கையை நன்கு பரிசீலிப்பதோடு, அதனை தானும் ஏற்றுக் கொள்ளும் காரணத்தையும் சுருக்கமாகவேனும் குறிப்பிட்ட பின்னரே ரிமாண்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. பிரிவு 167ல் இவ்வாறு ரிமாண்ட் செய்யும் நடுவரின் பணியை இயந்திரத்தனமாக அல்லாமல் அதற்குறிய மரியாதையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

The power to authorise detention is a very solemn function. It affects the liberty and freedom of citizens and needs to be exercised with great care and caution. Our experience tells us that it is not exercised with the seriousness it deserves. In many of the cases, detention is authorised in a routine, casual and cavalier manner

உச்சநீதிமன்றத்தின் கட்டளையினை நிறைவேற்றும் வண்ணம் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் பிரிவு 41(1)(b)(ii)ல் கூறப்பட்ட காரணங்கள் அடங்கிய கையேட்டினை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதற்குள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை காலில் போட்டு மிதித்த வண்ணம், ஸ்காட்லாண்ட் யார்ட்’டுக்கு இணையான தமிழக காவல்துறை 82 வயது முதியவரை அதிகாலை நான்கு மணிக்கு அவர் தனது சட்டையை கூட அணிந்து கொள்ள அவகாசமளிக்காமல் கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டார்கள். குற்றம்? கொலை மிரட்டலாம்…

நடந்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். ஆனால், ஊடகங்களின் அமைதிதான், செய்யப்பட்ட கைதினை விட அச்சமளிப்பதாக உள்ளது. ஒரே திருப்தி, முன்பு செரினா என்ற இளம்பெண் பத்து கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட பொழுது டீக்கடையில் அரசியல் பேசும் கூலித்தொழிலாளி முதல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வரை அவ்வழக்கு போலியானது என எவ்வித சந்தேகமுமின்றி தெரிந்திருந்தாலும், காவலர்களோடு ஊடகங்களும் ‘செய்தி விழா’வென அக்கைதை கொண்டாடி மகிழ்ந்ததைப் போல இந்த முறை இல்லை. ஊடகங்களுக்கு, இளம்பெண்ணின் முகத்தைப் போல அல்லாமல் முதியவரின் மூஞ்சி அழகாக இல்லாமலிருப்பதன் வருத்தம் போல…

மற்றொரு அச்சம், நிர்பயா வழக்கு குற்றவாளி தரப்பு வழக்குரைஞர்களைப் போல சிலர் கிளம்பி ‘இவரே போஸ்டரைப் போய் கிழிக்கப் போனால், அப்படித்தான்’ என்று கிளம்பி வருவதுதான். போஸ்டரை கிழிப்பது என்ன பயங்கரவாத குற்றமா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பிரச்னை ஒருவரை பழிவாங்குவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கைது செய்து சிறையிலடைக்க காவலர்களால் இயலும் என்ற யதார்த்தம் தரும் அச்சம்தான். நாளை நம் வீட்டுக் கதவுகளும் தட்டப்படலாம் என்ற பயம்தானேயொழிய முதியவர் விளம்பரப் பிரியர் எனபதிலில்லை.

நம்மால், இந்திய சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு படிப்பதற்கான உழைப்பு இல்லையே என்று வருந்தியிருக்கிறேன். இப்போது இல்லை. 82 வயது முதியவரை அதிகாலை 4 மணிக்கு கைது செய்து சிறையிலடைத்த வீர தீர பராக்கிரம செயலைச் செய்து விட்டு நமது காவல்துறை ஆணையரைப் போல அன்று இரவு நிம்மதியாக உறங்கியிருக்க முடியாது… 

மதுரை
15/03/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....