Thursday 26 March 2015

தி இமிடேஷன் கேம்



இன்று காலை, ‘ஐக்கிய நாடு சபையில் வேலை செய்யும் ஒரே பாலின தம்பதிகளுக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்படும் பேறுகால சலுகை உட்பட அதே சலுகைகளை அளிப்பதை ரத்து செய்ய வேண்டும்’ என்று ரஷ்யா கொண்ர்ந்த தீர்மானம் தோற்க்கடிக்கப்பட்டது’ என்ற செய்தியை படித்த பின் மதியம் ‘இமிடேஷன் கேம்’ படம் பார்க்க நேரிட்டது தற்செயலானதா என்பது தெரியாது. ஆனால், படம் பார்த்த பாதிப்பில், ரஷ்யாவின் தீர்மானத்துக்கு பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவும் ஆதரவாக ஓட்டளித்ததில், இந்திய வெளியுறவுத்துறை மீது நேற்றுப் பார்த்த ‘டைம்ஸ் நவ்’ செய்தி ஆசிரியர்களைப் போலவே கோபம் வந்தது.

ஒரே பாலின உறவு என்பது இந்தியாவில் குற்றமாக இருக்கையில், இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததில் வியப்பில்லை. மிகமிகச் சிலரைத் தவிர ஏறக்குறைய அனைவருமே இங்கு ஒரே பாலின உறவினை வெறுத்து ஒதுக்கும் சூழலில், ‘இமிடேஷன் கேம்’ போன்ற படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆலன் டூரிங். செயற்கை அறிவின் (Artificial Intelligence) தந்தை. அதோடு கணணியின் முன்னோடி என்று புகழப்படும் கணித மேதை. 1952ம் வருடம் பிரிட்டிஷ் அரசால் ஓரினச் சேர்க்கைகாக குற்றம்சாட்டப்பட்டார். இரண்டு வருடம் சிறை அல்லது பாலுணர்வை மழுங்கடிக்கும் மருந்தை ஏற்றுக் கொள்ளல் என்ற முடிவு அவர் முன் வைக்கப்பட்டது (Chemical castration). ஆலன் இரண்டாவதை ஏற்றுக் கொண்டார். மருந்தின் வீரியம் அவரைக் கடுமையாகத் தாக்க இரண்டே ஆண்டுகளில் ஆலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு 42 வயது கூட ஆகவில்லை.

கொடூரமான சட்டம் மூலம் ஆலன் டூரிங்’கின் உயிரைப் பலி வாங்கிய பிரிட்டிஷ் மக்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ‘இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றிக்கு ஆலன் முக்கியப் பங்காற்றி வடிவமைத்த கருவியும் ஒரு காரணம்’ என்பது. ஆலன் முக்கியப் பங்காற்றிய பிரிட்டிஷ் குழு ஜெர்மனியர்களின் சங்கேத மொழியான எனிக்மா’வை உடைத்து அவர்களது செய்திப் பறிமாற்றத்தை தொடர்ந்து கண்காணித்திருக்காவிட்டால் உலகப் போர் முடிவடைய மேலும் சில ஆண்டுகளாகி பல மில்லியன் மக்களைப் பலிவாங்கியிருக்கும் என தற்பொழுது கணிக்கப்படுகிறது.

கணணி அறிவியலின் முன்னோடியான ஆலன் டூரிங்’கிற்கு ஆதரவாக இணையம் முலம் உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு பணிந்து இங்கிலாந்து அரசாங்கம் 2009ம் ஆண்டில் ஆலனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொது மன்னிப்பு கோரியது. 2013ம் ஆண்டில் அரசி ஆலனின் ‘குற்றத்தை’ மன்னிப்பளித்தார்.

2014ல் ஹாலிவுட் சற்று சினிமாத்தனத்துடன், டூரிங்’கின் கருவியை மையமாக வைத்து ‘இமிடேஷன் கேம்’ படத்தை தயாரித்து விருதுகளை அள்ளியுள்ளது. முக்கியமாக, ஆலன் டூரிங்’காக நடித்துள்ள ‘பெனிடிக்ட் கம்பர்பேட்ச்’ என்ற நடிகரின் நடிப்பைக் குறிப்பிட வேண்டும்……அப்புறம் வழக்கம் போல, வசனம்

"மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசும் பொழுது, அவர்கள் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ அதைப் பேசுவதில்லை………………….அவர்கள் எதையோ சொல்லி அவர்கள் சொல்ல நினைப்பதைத்தான் சொல்வதாக மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

இணைய விவாதங்களில் எப்போதும் நடப்பது அதுதானே!

மதுரை
26/03/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....