Tuesday 3 March 2015

உரிமையியல் வழக்கு விசாரணைகளை முடக்கும் தீர்ப்பு


உரிமையியல் வழக்குகளை விரைவாக எவ்வாறு நடத்தி முடிப்பது என்று அனைவரும் மூளையை கசக்கிக் கொண்டிருக்கையில், நமது உயர்நீதிமன்றம் சமீபத்தில் The Home Missionary Society of India Vs Vepery Auxiliary (2015 (2) MLJ 42) என்ற வழக்கில் கூறியுள்ள தீர்ப்பு வழக்குகளை மேலும் தாமதப்படுத்தும் என்பதோடு, கீழமை நீதிமன்றங்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் உள்ளது.

வழக்கில் வாதிக்கு ஆதரவான ஆவணம் ஒன்றின் அசல் பிரதிவாதி வசம் இருப்பதாகக் கூறி அந்த ஆவணத்தின் ஒளிநகலை (Photocopy) வாதி தாக்கல் செய்துள்ளார். சாட்சி விசாரணையின் பொழுது, பிரதிவாதியின் ஆட்சேபணையை குறித்துக் கொண்டு அதனை நீதிபதி மார்க் (mark) செய்கிறார். அதனை எதிர்த்து பிரதிவாதி தாக்கல் செய்த சீராய்வு மனுவில்தான் மேற்கண்ட தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிலையில், ஆவணத்தை ஆஜர்படுத்துமாறு முதலில் பிரதிவாதிக்கு வாதி சான்றியல் சட்டம் பிரிவு 66ல் அறிவிப்பு கொடுக்க வேண்டும். பிரதிவாதி அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், ஒளிநகலை இரண்டாம்தர சான்றாக பிரிவு 65 (a) படி ஏற்றுக் கொள்ளலாம். பின்னர் அதை நம்புவதும் நம்பாதததும் பிற சாட்சிகளைப் பொறுத்தது. தெளிவாகவே இந்த நடைமுறை D.Sarasu Vs Jeyalakshmi (2001 (4) CTC 266) என்ற வழக்கில் கூறப்பட்டுள்ளது. Jansirani Vs G.Loganathan (2007 (4) MLJ 485) என்ற வழக்கில் நீதிபதி நாகமுத்து அசல் ஆவணம் தன்னிடம் இல்லை என்று பிரதிவாதி ஏற்கனவே கூறியுள்ள சூழ்நிலையில் தனியாக பிரிவு 66ல் அறிவிப்பு கொடுக்க தேவையில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால், மேற்கண்டவழக்கில் இதுவரை பின்பற்றப்படும் நடைமுறையை கருத்தில் கொள்ளாமல், இவ்விதம் ஒளிநகலை இரண்டாம்தர ஆவணமாக ஏற்றுக் கொள்ள பிரிவு 65(a)ன் கீழ் வாதி மனு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவிற்கு பிரதிவாதி எதிருரை தாக்கல் செய்து அந்த மனுவை பின்னர் நீதிபதி விசாரித்து அதன் மீது உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சீராய்வு என்பதை சொல்லத் தேவையில்லை.



முக்கியமாக Bipin Shantilal Panchal vs State Of Gujarat AIR 2001 SC 1158 என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், ஆவணங்களை குறியீடு செய்கையில் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற ஆட்சேபணகள் கூறப்பட்டால், அந்த ஆட்சேபணையின் அடிப்படையில் அதனை குறியீடு செய்து பின்னர் இறுதி விசாரணையில் அதனை பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அத்தீர்ப்பு குற்றவியல் வழக்கில் கூறப்பட்டிருந்தாலும், உரிமையியல் வழக்குகளிலும் அதன் அடிப்படையில் நமது உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. (முத்திரைக் கட்டண குறைபாடு சம்பந்தமாக எழும் ஆட்சேபணைகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது). ஆயினும் உரிமையியல் வழக்குகளில் ஆட்சேபணைகள் மீதான உத்தரவுகளை தள்ளிப் போடுவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

எது எப்படியாயினும், சான்று சட்டம் பிரிவு 65(a) எந்த மனுவையும் தாக்கல் செய்வதற்கான பிரிவு அல்லாத பட்சத்தில் இவ்வாறு மனு தாக்கல் செய்யக் கூறுவது சரியான நடைமுறை இல்லை என்பது மட்டுமல்ல, கீழமை நீதிமன்ற வழக்கு சாட்சி விசாரணையில் தினந்தோறும் எழுப்பப்படும் ஆட்சேபணைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மனு செய்து, அதன் மீது உத்தரவிட்டு உரிமையியல் விசாரணைகள் முடங்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த உத்தரவு மறுஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றத்திற்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

4 comments:

  1. Thank you Sir but it is welcome back!

    ReplyDelete
  2. in that case, welcome BACK to blogosphere

    ReplyDelete
  3. This paucity of civil practical knowledge is attributable to the short comings in legal services as lawyers in civil areas have become a endangered specie, those practice outside civil areas alone make it to the top of profession they even become law ministers and bring in law to amend the civil law without addressing or knowing real cause of malady

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....