Sunday, 22 November 2015

கர் வாப்ஸி...

இன்று காலை கோர்ட்டுக்கு போனவன், போன இடம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்.

சீனியர் யாரிடமோ கோவிலுக்குப் போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். சில நாட்களாகவே ஏதோ சஞ்சலமாக உணர்ந்து கொண்டிந்ததால் ஒரு மாறுதலுக்கு, ‘சார், நான் கூட்டிப் போகிறேன்’ என்று கிளம்பி விட்டேன்.

கோவில்களுக்கு போவதிலோ அல்லது பூஜைகளில் கலந்து கொள்வதிலோ எனக்குள்ள பிரச்னை, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமலிருப்பதுதான்.

கடந்த மாதம் தெருமுனை ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய ஆயுத பூஜையில் கலந்து கொண்ட போதும் அப்படித்தான், எதையாவது தவறுதலாக செய்து அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தி விடுவேனோ என்றிருந்தது.

ஆனால் சீனியர் கூட செல்லும் போது பிரச்னையிருக்காது. நம் கையைப் பிடித்தபடி அப்படியே கூட்டிப் போய்விடுவார். அப்படியும் ஒரு கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே வரும் போது வெண்கல தகடு வேய்ந்த படி மீது ஏறியிறங்கியதில் ஏற்ப்பட்ட சத்தத்தில் ‘படி மீது ஏறாமல் தாண்டி வர வேண்டுமோ’ என்று பயந்து கொண்டிருந்தேன். சீனியர் அருகிலிருந்ததாலோ அல்லது கெத்’தாக தீபாராதனை தட்டில் நான் போட்ட நூறு ரூபாயாலோ குருக்கள் ஏதும் சொல்லவில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு சந்நியாகப் போய் அங்கும் பூஜை தட்டில் பணம் என்று சீனியர் போட்ட போதுதான் ‘அடடே மொத்தமாகப் ஒரே இடத்தில் போட்டு விட்டோமோ’ என்றிருந்தது. ஆனால், பூஜை செய்த மாலை, பூக்கள் நிரம்பிய தட்டினை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டதால் கைகளை எப்படி வைத்துக் கொள்வது என்ற பிரச்னையும் இல்லை. இவன் காசும் எடுக்க மாட்டான் என்று அவர்களாகவே புரிந்து கொண்டது போலவும் இருந்தது.

அடுத்த சங்கடம் சீனியர் அவருடைய நட்சத்திரம் எல்லாம் சொல்லி மந்திரம் சொன்ன பின்னர் என்னுடைய நட்சத்திரம் என்ன என்று கேட்டு நான் தயங்கும் அந்த ஒரு வினாடி நேரம். சீனியரின் கண்களிலேயே புரிந்து கொண்டது போல தொடர்ந்து எனக்கும் நடந்த பிரார்த்தனையில் ‘சுப மங்களம் உண்டாகட்டும்’ என்ற வார்த்தையில் சற்று குழம்பிப் போனேன். ஏனெனில், எங்களுக்கு முன்னதாக வந்த சின்னப் பெண்ணை ‘சீக்கிரம் விவாகம் நடக்கும்’ என்ற முறையில் வாழ்த்தி பிரகாரத்தை 12 முறை சுற்றி வாருங்கள் என்று சொன்னதில் அந்த பெண்ணின் முகத்தின் தோன்றியிருந்த வெட்கத்தையும் புன்னகையையும் காண கண் கோடி வேணடியிருந்தது
.
சார், ‘மங்களம் உண்டாகட்டும் என்றால், எல்லாம் சுபமாக நடக்கும் என்று அர்த்தம்’ என்றார்.

சொன்னது மாதிரி ‘இன்று என்னை வறுத்து எடுக்கப் போகிறார்’ என்று நினைத்துக் கொண்டிருந்த வழக்கில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மத்தியானம் எதுவுமே கேட்காமல் ஸ்டே கொடுத்து விட்டார்.

ஆஞ்சநேயர் சந்நிதியில் தமிழிலேயே விளக்கமெல்லாம் கூறி தமிழிலிலேயே அர்ச்சனை செய்தது கேட்க நன்றாக இருந்தது. பூஜை செய்த மாலையை சார் எனக்கு போடச் சொன்னார். அப்பவும் மாலையை போட்டுக்கணுமா, அல்லது அரசியல்வாதிங்க மாதிரி போடுறதுக்கு முன்னாலேயே லாவகமா கையில வாங்கிக்கணுமாங்கற குழப்பம். கண்ணப்ப நாயனாரை மனசுல நினைச்சுகிட்டு அப்படியே போட்டுக்கிட்டேன்.

கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரிருவரைத் தவிர வேறு பக்தர்கள் இல்லை. கோவிலும் அவ்வளவு சுத்தம். அதுவும் வெளியே இருந்த தெப்பக்குளமும் அதற்கு அப்பால் தெரிந்த யானை மலையும் கொள்ளை அழகு.

கோர்ட்டிலிருந்து பத்து நிமிட தூரத்தில் இவ்வளவு ரம்மியமும் அழகும் முக்கியமாக அமைதியும். இந்து நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.

சாருக்கு க்ளாஸ் மேட் இல்லாத ஊரே இருக்காது. ‘இங்க ஒரு ப்ரண்ட் இருக்காண்டா, இந்தக் கோவில் பேஷ்கர். பாத்துட்டு போயிருவோம்’ என்றதால் அவரை வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டு காரை திருப்பிக் கொண்டு வந்து நிறுத்தினேன்.

மிகவும் பலவீனமாக இருந்த நண்பனிடம் சார் சத்தமாக ‘டேய் எதாவது வேணுமாடா……நான், ஏதாவது உனக்கு பண்ணணுமாடா’ என்று கேட்டுக் கொண்டிருந்தது வெளியே தெரு வரை கேட்டது.

‘எனக்கு என்னடா வேணும். உன் அன்பு இருந்தா போதும்டா’

ஆமா, இல்ல...

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...