Thursday 5 November 2015

நானும் ரவுடிதான் (தமிழ்) 2015

‘நானும் ரவுடிதான்’ நல்ல காமெடின்னு கேள்விப்பட்ட தைரியத்தில் போனால், ஏமாற்றமில்லை. இறுதிக் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தாலும் முதல் பாதியில் தியேட்டரில் சுற்றியிருந்த அனைவரும் குலுங்கிச் சிரித்த சில காட்சிகளில் அசட்டுத்தனமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.


குழந்தைகள் அசட்டுத்தனங்களை உணர்வதில்லை. அவர்களது சிரிப்பில் எனக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும், அவ்வப்போது தலைகாட்டிய வசனங்கள் சிலவற்றின் ‘இரண்டாவது’ அர்த்தத்தை புரிந்து கொண்டதால் சிரிக்கிறார்களோ என்று பயமாக இருந்தது.


அதுவும் கடைசிக்காட்சியில், யாருமே வசனத்தின் விபரீதத்தில் நெளிந்ததாகத் தெரியவில்லை.


தமிழில் எனக்குத் தெரிந்து, இரட்டை அர்த்த வசனங்களுக்காக தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது எஸ் ஜே சூர்யாவின் ‘நியூ’ படத்திற்குத்தான்.


நியூ பட தீர்ப்பில் அந்தப் படத்தை தடை செய்வதற்கான காட்சிகளை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் நீதிபதிகள் விளக்குவதைப் படிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வைரமுத்து பாடல் ஒன்றின் வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்த்தம் கொள்கையில், வாலி பாடல்கள் சிலவற்றையும் இப்படி மொழி பெயர்த்தால் எப்படியிருக்கும் என்றிருக்கிறது.


வெள்ளிக்கிழமை, பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்குவதில் பெண்களுக்கும் எஸ்ஸி எஸ்டி பிரிவினருக்கும் உள்ள ஒதுக்கீட்டினை வாபஸ் பெற்றது பற்றிய வழக்கு. வாதத்தின் இடையில் வழக்குரைஞர் மோகன் தற்செயலாகக் கூறிய பதிலின் மற்றொரு விபரீதமான அர்த்தத்தை அந்த நீதிமன்றத்தில் புரிந்து கொண்டது, அதைப் பற்றி உடனடியாக கமெண்ட் அடித்த நீதிபதியும், சத்தமாக சிரித்த நானும்தான். எதிர் வழக்குரைஞர் ஜிஆர்எஸ் வழக்கமாக மிஸ் பண்ண மாட்டார். மோகன் மீது அதீத கோபத்திலிருந்தார். அதனாலோ என்னவோ, முகத்தில் புன்னகை இல்லை.


எப்படியோ, நியூ படம் தடை செய்யப்பட்ட 2005லிருந்து வெகுதூரம் பயணித்து விட்டோம் என்று நேற்று படம் பார்க்கும் போது நினைத்தேன்.


அப்புறமும் ஏன் பாடகர் கோவனை சிறையிலடைக்கிறார்கள்?

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....