Monday 23 November 2015

ஸோசைட் சீச்சி நி நாரு (ஜப்பான்) 2014

“நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அப்பாதான் பட்டம் செய்வார். மூங்கில் குச்சிகளை வெட்டி, அவற்றை கயிற்றால் கட்டி அதன் மீது காகிதத்தை ஒட்டுவார். செய்தித்தாளின் காகிதத்தைத்தான் வெட்டி வாலாக வைப்பார். அந்தப் பட்டங்களை பறக்க விடுவதே சிரமம். இப்போது பட்டங்கள் அப்படியே கிடைக்கிறது. உடனடியாக பறக்கவும் செய்கிறது”

நேற்றுப் பார்த்த ஸோசைட் சீச்சி நி நாரு (Like Father, Like Son) என்ற ஜப்பானியப் படத்தில் இயல்பாக நடக்கும் இந்த உரையாடல், சின்ன வயதில் அண்ணன் செய்த பட்டங்களைப் பற்றி நானே பேசியது போல இருந்தது. ஏதோ தேர்ந்த சர்ஜன் போல அண்ணன் கையை நீட்டும் போதெல்லாம் அதில் கோந்தும் கயிறும் பிளேடும் வைப்பது மட்டும்தான் என் வேலை என்பதால், பட்டம் செய்யும் நுணுக்கம் தெரியாமலே போய் விட்டது.

இன்னமும் இரு நாட்கள் தங்கிப் போக முடியாதா? என்று கேட்கும் மகளிடம், “இங்கு இருப்பது ஏதோ ஹோட்டலில் இருப்பது போல இருக்கிறது” என்று நகரின் முக்கியப் பகுதியில் அமைந்த மருமகனின் நவீன ப்ளாட்’ பற்றி மாமியார் கூறுவதும் சென்னையில் தங்க நேரிடும் உறவினரின் குடியிருப்பைப் பற்றி நான் கூறியது போலவே இருந்தது.

மற்றபடி படம், தங்களது மகன்கள் பிறந்தவுடன் மருத்துவமனையில் மாறிப் போனது, ஆறு வருடங்கள் கழித்து தெரியவரும் இரு பெற்றோர்களைப் பற்றியது. பெர்பக்ஷனுக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்களின் மருத்துவமனையில் குழந்தைகள் மாறிப் போவதா, என்றால் இறுதியில் நீதிமன்றத்தில் மருத்துவமனை செவிலி தனது கணவருடனான சண்டையின் வெறுப்பில் குழந்தைகளை வேண்டுமென்றே மாற்றி வைத்து விட்டதாக சாட்சி சொல்வதும் நடக்கிறது.

பாடல்கள் இல்லை, மெல்ல நகரும் கதை என்பதை தவிர்த்து விட்டால் மணிரத்தினம், வஸந்த் படம் பார்ப்பது போல இருக்கலாம். வணிகச் சமாச்சாரங்களைத் எடிட் செய்து ‘விருது’க்காக தனியே ஒரு வெர்ஷன் தயாரிக்க முனைந்திருந்தால் மகேந்திரன், பாலுமகேந்திராவிலிருந்து தொண்ணூறுகளின் மற்ற சில தமிழ்ப்பட இயக்குஞர்கள் உலக அளவில் பெயர் வாங்கியிருக்கலாம்.

விருதுகளால் பலன் என்னவா, இந்தப் படத்தைப் பார்த்த ஸ்பீல்பெர்க்கின் பரிந்துரையில் ட்ரீம்வொர்க்ஸ் இதன் ஹாலிவுட் உருமாற்ற உரிமைகளை வாங்கியுள்ளது.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....